Pages

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html


3 comments:

Unknown said...

Very informative article. Vairamuthu is a cinematic poet, so he used such kind of language to provoke his audience

PV said...

ஐ டி யில வேலை பார்க்கிறவாக்கு எப்படி தமிழ் இலக்கிய் வரலாறு தெரிந்து வரலாற்றுப்பிழை என்று சொல்ல முடிகிறது?

//வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது//

சிறுபான்மையாக உலவி வந்தது என்று எதை வைத்துச்சொல்கிறீர்கள்?
பக்தி இயக்கம் எப்போது தோன்றி எப்போது முடிந்தது?
மணிமேகலை காலமெது?
சைவ, வைணவத்துக்கும் வைதீகத்துக்கும் தொடர்பில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

முதல் பத்தியே இப்படி முழுக்கட்டுரையையும் நான் வாசித்தால்?

nayanan said...
This comment has been removed by the author.