Pages

Friday, November 03, 2017

ஆர்வர்டு இருக்கையும் சிந்தனைமரபுகளும்

http://www.vikatan.com/news/tamilnadu/106688-these-tamil-teachers-gave-their-one-day-salary-for-harvard-tamil-chair.html

தாம்பரத்தில் ஒரு வேதபாடசாலை இருக்கிறது. திருச்சியில் எங்கள் ஊரில் உள்ள தெலுங்கு பிராமணர்கள் இங்குதான் அவர்களின் பிள்ளைகளை வேதபாடம் படிக்க வைப்பார்கள். படிப்பு முடிந்து கொஞ்சம் பயிற்சி கிடைத்ததும் கடவுச்சீட்டை எடுத்து தயாராகிவிடுவார்கள். அமெரிக்காவில் எங்கே கோயில் கட்டுகிறார்கள் - பரத்வாசர் மடம், சங்கர மடம் அல்லது அமெரிக்காவில் இருக்கும் தெரிந்தவர்கள் வழியே அமெரிக்க கோயில்களில் அருச்சகர் பணிக்கு போவதற்கு ஆளாய் பறப்பார்கள். அப்படியும் ஓரிருவர் தவிர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த ஊரில் அவா போயிருக்கா, இந்த ஊரில் இவா போயிருக்கா - அவாளுக்கும் இவாளுக்கும் சுலோகமே சொல்லத்தெரியாது - ஆனால் அவாளுக்கெல்லாம் கிடைச்சுடுத்து - எங்க சீதரன் நன்னா படிச்சுருக்கான் - ஆனா அவனுக்கு கிடைக்க மாட்டேங்குது. நல்லவாளுக்கு காலமே இல்லை;  ம்ம்ம்ம் என்று அவர்கள் அலுத்துக்கொள்வது என்னை சிந்திக்க வைத்ததுண்டு. இங்கிருப்பது போலத்தான் அங்கும் அவர்களுக்கு வருமான முறை; கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவ்வளவுதான். Jr. Archagar ஆக வேலை கிடைத்து அங்கே போய்விட்டால், தினமும் ஒரே மாதிரியான வேலை. பெயர் நட்சத்திரத்திற்கு அருச்சனை செய்வதும், இறைப்படிமங்களுக்கு செய்ய வேண்டிய தொண்டு, சிறப்பு பூசைகள், விழாக்கள் ஆகியனவற்றை தொடர்ந்து சுழற்சி முறையில் காலம் முழுக்க செய்து கொண்டிருப்பார்கள். இதைச்செய்வது அருச்சகர் மரபில் வருபவர்களின் ஈகை அல்லது தியாகம் என்று சொன்னால் மிகையன்று. தமிழ்த்துறையில் உள்ளவர்களும் பற்றாளர்களும் தமிழ் வாழ்க என்று சொல்லி பத்தியோடு அரைத்த மாவையே நிதமும் அரைக்கும் தமிழ் ஈகை, தொண்டு, தியாகத்தை போன்றதே அருச்சகர் பணியும்.

இது அருச்சகர் வேலைக்கு போவது பற்றியென்றால், அந்தக்கோயிலை கட்டுவது என்பது எப்படி என்று எண்ணிப்பார்த்தால், நம்மூரில் ஊர்க்கோயில் கட்டுவதற்கும் அமெரிக்காவில் கோயில் கட்டுவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஊர்ப்பெரியவர்கள் கூடி முடிவெடுப்பர். ஓரிருவர் பெருநிதியளிக்க, ஊரில் உள்ள எல்லாரின் பங்களிப்பும் சிறிதளவேனும் இருக்கவேண்டியது அவசியம் என்ற மரபின்படி எல்லாரிடமும் நிதி கேட்பார்கள்; எல்லாரும் நிதி அளிப்பார்கள்; செய்தியில் உள்ள தமிழாசிரியர்கள், ஒருநாள் ஊதியத்தை கொடுப்பதைப்போல.  கோயில் குடமுழுக்கு, முதல்மரியாதை, சிறப்பு வேள்விகள் எல்லாம் நடக்கும். கோயிலின் அளவைப்பொறுத்து, அரசு உயரதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் கலந்து கொண்டு, சாமியையும் கோயிலையும் ஆசீர்வதிப்பது வழமை; ஆர்வர்டு இருக்கைக்கு அரசு நிதியளித்து ஆசிகள் வழங்கியது போல.

பேராசிரியர் அரசு, முனைவர் இரவிக்குமார், திரு.ஒளிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணலிலும் தமிழ்மன்ற உரையாடல்களிலும் அனைவருமே ஆர்வர்டு இருக்கைக்கு ஆதரவாகவே கருத்தளித்தனர். ஆனால், 1) ஏற்றத்தாழ்வின்மை 2) ஆளுமைக்கட்டுப்பாடு என்ற இரண்டை வலியுறுத்துகிற இராசம் அம்மா, இரவிக்குமார், இராம.கி ஐயா, அடியேன் ஆகியோரின் கருத்துகளுக்கு எப்பொழுது விடைகிடைக்கும் என்பது இறைவனுக்குதான் வெளிச்சம்.

இரவிக்குமார், வெளிநாட்டார் புதுவையிலமைத்த பிரான்சிய நிறுவனத்தில் காணப்படுகிற ஊதிய/பணி ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார் என்றால், இராசம் அம்மா தமிழ்நாட்டார் முயன்று கலிபோர்னியாவில் பெர்கலியில் உருவாக்கிய இருக்கையிலும், பென்சில்வேனியாவிலும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார். நம்மூரிலும் அவர்களின் சட்டம், அவர்களூரிலும் அவர்கள் சட்டம் என்ற போக்கு நமக்கு துளியும் வருத்தமளிப்பதில்லை.

பேராசிரியர் அரசு ஒரு மதிக்கத்தக்க சிந்தனையாளர். திராவிட சிந்தனை மரபும் தனித்துவமும் கொண்டவர். Tamil Entertainers - ஐ மட்டுமே தமிழ்க்கல்வியுலகம் உருவாக்கியிருக்கிறது என்று அழுந்தச்சொல்லும் அவரும் முதலில் இருக்கையை உருவாக்குவோம் - பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றே சொல்கிறார். அவர் உரையின் சாரம் அதுதான். பலரின் கருத்தும் அதுதான்.

திராவிட ஆட்சிகளில் எத்தனையோ தமிழ்க்கல்விக்களங்களை உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஒன்றுகூட விளங்கவில்லை என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. அதாவது, சொல்லி பெருமைகொள்ளும்படியாக எதுவுமே இல்லை.

திராவிட சிந்தனைமரபு என்பது, ஆரவாரம் செய்யும், களப்பணிகளையும் திறம்பட செய்யும், கட்டடம் கட்டும், விழா எடுக்கும்; எடுத்தபின் பந்தியை போடும் - சாப்பிட்டுவிட்டு, நெற்றியில் வந்த சிறுவேர்வையை துண்டால் துடைத்துவிட்டு, வெற்றிலை பாக்கு போடும்; அப்புறம் அப்படியே தூங்கிவிடும். யாராவது இன்னுங்கொஞ்சம் செய்ங்கன்னு சொன்னால், சரி என்று, திண்ணையில் உட்கார்ந்து சீட்டாடும்.

இப்படித்தான் திராவிட சிந்தனைமரபு உருவாக்கிய திராவிட பல்கலைக்கழகம் தொடங்கி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வரை காட்சிகள் இருக்கின்றன. அதனால், வீ.டி.அரசின் கருத்துகள் அந்த சிந்தனைமரபின் தாக்கம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இப்படியே பேசி பழகிவிட்டார்கள். முதலில் கட்டடத்தை கட்டுல; அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிச்சுக்கலாம் - என்பதே இந்த சிந்தனை மரபின் போக்கு. ஆர்வர்டு இருக்கையும் இப்படித்தான் அமைகிறது என்று கருதலாம்.

ஒளிவண்ணன் பேசுவது சந்தை மரபு. அது தேவைதான். ஆனால் அடிக்கட்டமைப்பு வலுவாக இல்லாத ஒரு குமுகம் ஆர்வத்தில் செய்யும் உழைப்பு பெரிய சாதனையை கொண்டுவந்துவிடும் என்று அவர் கருதுவதை முழுமையாக நம்பமுடியவில்லை. உள்ளூரிலேயே எங்கள் தமிழ் உயர்வென்று பேசுகின்ற தமிழர்களுக்கு ஆர்வர்டில் மேடையமைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் எண்ணுவது போல நடந்தால் சரிதான்.

தமிழ்த்தேசிய சிந்தனை மரபினை பேசும் சீமானும் வெறும் அரசுநிதி வேண்டும் என்ற ஆதரவு கோரிக்கையோடு நிறுத்திக்கொண்டார். அவர்களும் மெதுவாக சிந்திக்கக்கூடும்,

தமிழியக்க, தனித்தமிழியக்க சிந்தனை மரபினரும் திராவிட சிந்தனை மரபால் மழுங்கடிக்கப்பட்டவர்கள்; சொல்லப்போனால் காயடிக்கப்பட்டவர்கள். அவர்கள் வாய் திறக்காததில் வியப்பொன்றுமில்லை. அவங்களுக்கு இன்னும் எதைப்பார்த்தாலும் வியப்பாகவே இருக்கிறது.

தமிழக அரசின் நிதிமரபு என்று ஒன்றுண்டு. தெற்காசிய நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு வருடாவருடம் படியளப்பது அந்த மரபு. அந்தமரபிலே ஆர்வர்டுக்கும் படியளந்து பெருமை சேர்த்துக்கொள்கிறது போல. தமிழக அரசின் வீட்டோ அதிகாரத்துடனான உறுப்பியம் வேண்டும் என்ற எனது கருத்திற்கு, பழனிச்சாமியின் பேத்தியை உறுப்பினராக போட்டால் என்ன செய்வது என்று கேள்வியை நண்பர் வேந்தர் வைத்தார் என்று கருதுகிறேன். பழனிச்சாமியின் பேத்தியானாலும் எனக்கு அது சரி; உலக மாகவிஞரும் தமிழ்ப்பேரறிஞருமான, முத்துவேலரின் பேத்தியாக இருந்தாலும் எனக்கு அது சரிதான். ஒருவேளை முறைகெட்டுப்போனால், இந்த உறுப்பியத்தின்வழியே அழுத்தம் கொடுக்க முடியும். ( all i need is a handle - thats all)

வடக்கத்தி மரபு என்று ஒன்றுள்ளது. அதன்படி, சமற்கிருத இருக்கைகள் தொடங்கும்போது கம்மையாக, வலுவான நிதியோடு அவை துவக்கப்படுகின்றன. அது தெளிவாக சமற்கிருதத்தை முன்வைத்து அமோகமாக ஆராய்ச்சி செய்கின்றது என்பது உண்மைதான். தமிழர்களோ நிதிவலு சற்று குறைவாக, ஆனால் பெரிய ஆரவாரத்தோடு, புனிதப்பணியாக செய்கின்ற தமிழ் இருக்கைகளும் சமற்கிருத இருக்கைகளை வழிமொழியும் இருக்கைகளாக உருவாகிவிடுகிற வாய்ப்புகளைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்றளவோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் தாண்டி, பிரபாகர மரபு என்ற ஒன்று உள்ளது. பிரபாகரத்தை சுற்றியுள்ள அரசியலை, போரை விட்டுவிடுவோம். ஆனால், பிரபாகரன் என்ற சிந்தனையாளரை சிங்களர்கூட மதிப்பார்கள். தெளிவான சிந்தனை, நிதானம், செயலுறுதி, எங்கேயும் தமிழ், தமிழரின் தாழ்வை ஏற்றுக்கொள்ளாத போர்க்குணம், பேசாமல் பேசவைப்பது, எண்ணித்துணிதல், ஆளுமை போன்ற அவர் காட்டிய சிந்தனை மரபு உயர்ந்தது என்பதை தமிழ்ப்பற்றாளர்களும், காழ்ப்பின்றி ஆயுநரும் ஒத்துக்கொள்வர். மேதகு பிரபாகரன் ஒரு கல்வித்தளத்தை, ஆய்வுத்தளத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவர் எப்படி செய்திருப்பார் என்று ஒருகணம் சிந்தித்துப்பார்க்கிறேன்.

அவர், 1) உலகத்தமிழ் நிலையில் தமிழறிஞர்கள், ஆசிரியர்களுக்கு வெளிநாட்டவரைவிட ஊதியத்தாழ்வு தரும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார். 2) வெறும் துபாசிகளாக அவர்களின் நிலையை ஆக்கியிருக்க மாட்டார். 3) தனது அரசு வீட்டோ அதிகாரத்துடன் உறுப்பியம் பெறாத எந்த ஒன்றையும் தமிழ்மொழிக்காக முன்னிறுத்த மாட்டார். 4) தமிழர் தலைமையில்லாத அமைப்பை தன்னமைப்பாக கருதவே மாட்டார். 5) சிறு அமெரிக்க வெள்ளிக்கும் ஐரோப்பிய ஐரோவிற்கும் தலையாட்டும் தமிழ்ப்பணிகளை பாராட்டமாட்டார். 6) உள்நாட்டில் இருக்கும் தமிழ்க்கல்வி, ஆய்வுக்களங்கள் அழுகிப்போக விட்டிருக்க மாட்டார். 7) உருமீன் வரும்வரை காத்திருப்பார்.

இவைதான் நான் அவரிடம் கற்றுக்கொள்ள முயலும் கைமண்னளவு.

கோயில்கட்டும் பணி புனிதமானது. அதேபோல ஆர்வர்டு இருக்கை உருவாக்குவதும் புனிதமாகவே கருதுவதில் தவறில்லை. ஆனால், கோயிலில் செய்யும் பணியும் கல்வித்தளத்தில் செய்யும் பணியும் மிக மாறுபட்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளும் அதேவேளையில், கோயிலில் ஒரேசுழற்சியாக செய்யும் பணியில் கூட ஆளுமை இருக்கிறது என்பதும் அதைவிட சிறந்த ஆளுமை தமிழ் ஆய்வுத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானவையாக படுகின்றன. இருக்கையமைக்க இமைமூடாது உழைப்பவர்களை வாழ்த்துகின்ற அதேவேளை, தற்போது விட்டாலும், ஆர்வர்டிலும் பிறவெங்கும் துபாசி வேலைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி தமிழாளுமைகள் உருவாக நீங்களே வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

தொடர்புள்ள நேர்காணலின் காணொளி:
https://www.youtube.com/watch?v=zHRC0lLVECw&feature=youtu.be






















No comments: