Pages

Saturday, December 30, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.

பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.

14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.

அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.

தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.

மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.

இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.

96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே  ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில்,  ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை  காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?

ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.

ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?

எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!

நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான்.

"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!

தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிப்பது தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.

சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.

விதைப்பதுதானே முளைக்கும்?

இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

தமிழின் இயக்கம் இருப்பதாக தமிழியக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அதன் மனசாட்சிக்குத்தெரியும் பொய்யென்று.

No comments: