Pages

Thursday, October 22, 2015

Shift என்பதற்கு தமிழில்

Shift என்பதற்கு தமிழில் சொல்லென்ன என்று கேட்டிருந்தார் நண்பர் தமிழ்நாடன்.
Shift என்ற சொல், ஒரு குறிப்பிட்ட காலப்பொழுதையும், காலப்பொழுதின் மாற்றத்தையும்
தனது குணங்களாக கொண்டுள்ளது. தமிழில் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற
பகுப்புகள் இருப்பினும், அவை காலப்பகுப்பாக மட்டுமே காணப்படுகின்றன.
பணிக்காலத்தையும் அதன் மாற்றத்தினையும் உள்ளடக்கிய சொல்லை அவற்றிற்கு
வெளியேதான் தேடவேண்டியிருக்கிறது என்று கருதுகிறேன்.

தமிழிலே சாரி, சாரிகை என்ற சொற்கள் உண்டு. சாரி என்ற சொல்லிற்கு
மூன்று விதமான பொருள்கள் உண்டு. ஒன்று - அணி/வரிசை,
இரண்டு - பக்கம் (வலது சாரி, இடது சாரி என்ற தற்காலச்சொற்கள்.
அந்தரசாரி என்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்லுகின்றன)
மூன்று - வட்டமாக நகர்தல் (circular movement) என்று செ.ப.பேரகராதி கூறுகிறது.
காலத்தின் நகர்வு வட்டத்துள்தானே இருக்கிறது! ஒரு நிறுவனம், மூன்று Shift
ஓட்டுகிறது என்றால், அதனை 24-மணி வட்டத்துள் மூன்று சமபாகமாக (120 திகிரியில்)
பிரிக்கலாமல்லவா? ஆக, சாரி என்ற சொல் ஆழ்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று.
சாரிகை என்ற சொல்லை சேக்கிழார் பெருமான் ஆளுவார்.
"...வன்றுணை வாளேயாகச் சாரிகை மாறி வந்து
        துன்றினர் தோளுந் தாளும்..." என்று இயற்பகை நாயனார் புராணத்தில்
இயற்பகை நாயனாரின் வாளாற்றலை சிறப்பித்துச்சொல்லுவார் சேக்கிழார்.
இங்கே சாரிகை, என்பது இட-வல, வல-இட நிலைமாற்றங்களைக்குறிப்பிடுகிறது.
வலமாக நகர்ந்தவர், மின்னலைப்போல இடமாக திரும்பி வாள்வீசுதலைக்குறிப்பிடுகிறது.
சாரி என்றால் மாறுதல், கை என்பது இடத்து நிலை என்று சொல்வர் உரைகாரர்.
சாரியை என்ற கூறு புணர்ச்சியிலக்கணத்தில் வரும். ஒன்றனை
(விகுதியையோ, வேற்றுமையையோ சார்ந்துவருவதால் அது சாரியை
எனப்படுகிறது என்பர் புலவர். ஆனால், சாரியை செய்யும் வேலையைப்பார்த்தால்
அது சொல்லில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. (மரம் + ஐ = மரமை என்பது
பொருள் தராது என்பதால் அதனுடன் அத்து என்ற சாரியை சேர்த்து,
மரத்தை என்று பொருள்படவைக்கிறது. மரமை என்று இயல்பாக வரும் சொல்
பொருளுணர்த்தாது என்பதால் அத்து என்ற சாரியை சேர்ந்து சொல்லை மாற்றி
பொருளுளர்த்துகிறது, ஆகவே, சாரி என்ற சொல்லிற்கு மாற்றுந் தன்மை
உளதாகிறது.

ஆகவே, கால எல்லையையும், அதன் மாற்றத்தையும் குறிக்கின்ற ஆங்கிலச்சொல்லான
Shift என்பதனை, தமிழிலே, சாரி/ சாரிகை என்றே சொல்லலாம்.
சாரி = Shift, சாரிகை = Shift System என்று சொல்லலாம்.
ஆயினும், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஏற்படுத்தியிருக்கும் எண்ணப்பதிவுகளினால்,
சாரி என்ற சொல்லை விடுத்து சாரிகை என்பதனை மட்டும் புழக்கலாம்.
Shift, Shift System என்ற இரண்டிற்குமே சாரிகை பொருந்திவரும் சொல்லாகும்.
முதற்சாரிகை - 1st Shift
பகற்சாரிகை  - day shift
இராச்சாரிகை  - night shift
எண்மணிச்சாரிகை - 8 hour shift
பதுமணிச்சாரிகை - 10 hour shift
பன்னீர்ச்சாரிகை - 12 hour shift
நெடுஞ்சாரிகை - long shift / big shift (in driving profession or in process plants )
சிறுசாரிகை/குறுசாரிகை - small shift ( in part time jobs)
(அல்சாரிகை, எல்சாரிகை என்று சொன்னாலுந் தகும்)
புதிய அறிவியற்சொற்களுக்குத்தேவை இருக்கிறதென்றாலும்,
பல பொதுவான சொற்களை தொன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
மீட்டெடுக்க வேண்டிய சொற்கள் பல்லாயிரமாய் எண்ணிக்கையில்
கிடக்கின்றன.
அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: