இன்று "சர்வ பள்ளி" ஆசிரியர் நாள் என்று ஒரே விழாக்கோலம். எனக்கு சங்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வந்தனர். கூடவே கண்ணன் பிறந்த நாள். சங்கப்பாடல்களை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களைப்பார்த்தால், கண்ணன் என்ற பெயரையோ, கண்ணன், கண்ண (கண்ணகன்) என்ற சொற்களை உள்ளடிக்கிய பெயர்களைத்தான் அதிகம் காணமுடிகிறது. என் தரவகத்தில் உள்ள ஆசிரியர்ப்பெயர்த்திரட்டு இன்னும் நிறைவடையாவிட்டாலும் சங்க, சங்க மருவிய காலப்புலவர்களின்... சுமார் 515 பெயர்கள் உள்ளன. இன்னும் சில திருத்தாமலும், கூடகுறையவோ இருக்கின்றன. ஆயினும் இதனை tentative analysis எனலாம். இந்த எண்ணிக்கையில், 49 பெயர்கள் கண்ணனை உள் வைத்து இருக்கின்றன. (இதற்கு அடுத்தபடியாக கீர, கீரன் என்ற சொற்களை உள்ளடக்கிய பெயர்கள் 27 ஆகும்.) கிழார் என்ற பெயர் பெயரல்ல. அது அடை. அதனால் அதனை எண்ணிக்கை முதல் 5 இடத்தில் வந்தாலும் தவிர்த்துவிட்டேன். கண்ணன் என்ற பெயரைக்கொண்ட புலவர்களின் அப்பாக்களையும் கணக்கிலெடுத்தால் 60 பெயர்கள் (சுமார் 12%) வருகின்றன. கண்ணி என்ற பெயருடைய பெண்பாற்புலவர்கள் 7 பேர் வேறு இருக்கிறார்கள். இத்தனைப்பெயர்களில் கண்-ணன் ஏன் ஆட்சிசெய்கின்றான். மதுராபுரி கிருட்டிணன் எப்படி, எப்பொழுது தமிழ்நாட்டு கண்ணனானான்? என்ற கேள்வி எழவே செய்கிறது. கண்ணகியை அகண்ட கண்ணுடையவள் என்று சொல்வார்கள் (கண் + ண்+அகி?) கண்ணுக்கு, கண்ணனுக்கு சங்கத்தில் அதிக இடம் இருந்திருக்கிறது. கண்ணனுக்கும் சங்க ஆசிரியர்களுக்கும், அவர்களின் அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
(படத்தில் ஒட்டியிருக்கும் கண்ணன் படத்தை வரைந்தவர் கேசவ். இரவிக்குமார் முகநூலில் எடுத்தது)
அன்புடன்
நாக.இளங்கோவன்
No comments:
Post a Comment