Pages

Saturday, December 04, 2010

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-1/3

யுனிக்கோடுவை தமிழ்நாட்டரசு ஏற்றுக் கொண்ட
செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, உடனடியாக,
ஏறத்தாழ ஒரே நேரத்தில், கிரந்தம் தொடர்பான
மூன்று முயற்சிகள் நிகழ்ந்தன.

1) உலகளாவிய மொழிகளின் எழுத்துக்கள்
அத்தனைக்கும் குறியேற்றம் தருகின்ற
குறிக்கோளுடைய யுனிக்கோடு என்கின்ற
ஒருங்குறியில் 68 கிரந்தக் குறிகளைப்
புதியதாக தனியான இடத்தில் உருவாக்குவது.

2) இருக்கின்ற தமிழ்-யுனிக்கோடுவில்
68 கிரந்தக் குறிகளில் 27ஐக் கொண்டு வந்து நுழைப்பது.

3) புதிதாக உருவாக்கப் படுகின்ற கிரந்த-யுனிகோடுவில்
7 தமிழ் எழுத்துக்களையும் சேர்த்துவிடுவது.

இந்த மூன்று செய்திகளும் தமிழக அரசிற்குத்
தக்கவண்ணம் சென்று சேராதவாறு பார்த்துக்
கொள்ளப்பட்டது. அப்படி இருந்த போதும்,
கணித்தமிழ் ஆர்வலர்களின் முயற்சியாலும்,
நல்ல அறிஞர்களின் முயற்சியாலும்,
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழக
முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லியும்,
விடுதலையில் அறிக்கை விடுத்தும்
ஆற்றிய அரும்பெரும் தொண்டாலும்
தமிழக அரசு நிலைமையை அறிந்து
விரைந்து செயற்பட்டது.

இந்தச் செயற்பாடு ஒருபுறம் கிளர்ந்து எழ,
எதையும் நுட்பியல் ஏரணங்களோடு
முடிவெடுக்கும் பன்னாட்டுப் பெருங்கணி
நிறுவனங்களின் கூட்டுச் சேர்த்தியமான
யுனிக்கோடு சேர்த்தியத்தினர்க்கு (Unicode Consortium),
முன்மொழிவுகளை ஏற்கவோ தள்ளவோ
ஒவ்வொன்றிற்கும் நுட்பியல் ஏரணங்கள்
(Logical Technical Reasoning) தேவைப்பட்டது.

தமிழ்-யுனிக்கோடுவில் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்க வேண்டும் என்று மேலே
இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும்
திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு,
சரியான ஏரணம் முன்வைக்கப்படாவிட்டால்
ஏற்கப் பட்டிருக்கக் கூடிய நிலையில்,
யுனிக்கோடு அறிஞர்களான
திரு.முத்து நெடுமாறன் (மலேசியா),
திரு.மணி.மு.மணிவண்ணன் (தமிழ்நாடு)
ஆகியோரின் நுணுக்கமான,
ஆழ்ந்த நுட்பியற் கருத்துக்கள்
ஒருங்குறி சேர்த்தியத்திற்குத் தெளிவாகப் புரிந்தன.

தெளிந்த யுனிக்கோடு புலமை கொண்ட
அவர்கள் சொன்னது பெரிதாக ஒன்றுமில்லை.

"தமிழ்-யுனிகோடுவிற்குள் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்காமலேயே சிறீரமணசர்மா,
அவர் விரும்பும் வடமொழி நூல்களை எப்படி
எழுத, படிக்க இயலும்" என்பதே.

திரு.முத்து நெடுமாறன்,
இமைப்பொழுதிலா நொடிப்பொழுதிலா
என்று அறிய முடியாத விரைவில்
அக்கருத்தைச் செயலாக்கித் திரையிலும்
காட்டிவிட்டார். அதன் அடிப்படையை
உணர்ந்து கொண்ட ஒருங்குறி
சேர்த்தியத்திற்கு திரு.இரமணசர்மாவின்
முன்மொழிவை நிராகரிக்க அதிக நேரம்
பிடிக்கவில்லை.

மேலே கூறிய 3 கிரந்த முயற்சிகளில்
2ஆவது முயற்சி தமிழக அரசு, ஆசிரியர்.கி.வீரமணி மற்றும்
ஆர்வலர்கள், யுனிக்கோடு அறிஞர்கள் ஆகியோரின்
செயற்பாட்டால் தகர்ந்து போனது. (அல்லது தமிழ் தப்பித்தது).

இங்கே விதயத்தை நன்கு உள்வாங்கி ஒத்திசைவுடன்
அவரவர் ஆற்றிய பணிகள் தமிழைக் கரை சேர்த்தன.

ஆக ஒரு விதயத்தில் தமிழர்களால் தமிழைக் காக்க முடிந்தது.
ஆக, மீதி இரண்டு விதயங்கள்.

இவை எத்தகையன? அதில் நடப்பது என்ன?

(தொடரும்)

குறிப்பு: கிரந்த, தமிழ்க் கலவை பற்றிய சிக்கலான நுட்ப விதயங்களில் மேலும் தெளிய முனைவர் இராம.கி அவர்களின் http://valavu.blogspot.com/2010/11/1.html ல் அவர் எழுதியிருக்கும் கட்டுரைத் தொடரைப் படிக்கவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

Anonymous said...

யாரோ பெற்ற புள்ளைக்கு இன்னொருவன் தகப்பன் ஆனானாம். அது போல் ஒரு தமிழறிஞர் தடுத்து நிறுத்தியதை கலைஞரும், வீரமணியும் தடுத்ததாக கூறுகிறீரே ஞாயமா?

தமிழக அரசுக்கு தெரியாமல் நடக்கும் என்பது எவ்வளவு பெரிய பொய். செம்மொழி மாநாடு அப்போதுதான் நடத்தப்பட்டது. இந்த ஒருங்குறியை கூட ஆய்வு செய்யாமல் அந்த மாநாடை நடத்தியிருப்பார் என்று எண்ணுகிறீர்களா? 400 கோடி கொட்டி அழுது செம்மொழி மாநாடு நடத்த தெரிந்த அரசுக்கு வெறும் 4,500 ரூபாய் கொடுத்து அதில் உறுப்பினராக சேரத் தயாரில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளல்லாம். இது தமிழக அரசின் முயற்சியல்ல. இது தமிழறிஞர்களின் முயற்சி. அவர்களுடைய அழுத்தத்தினால் தற்காலிகமாக தடுத்து மட்டுமே நிறுத்தியுள்ளனர். வேறு எந்த முன்னேற்றத்தையும் தமிழக அரசு இதுவரையில் மேலும் செய்யவில்லை. அதுவும் தனி நபர்களின் தமிழ் அறிஞர்களின் அரும்பணியால் தான் முடியும். நிச்சயம் இந்த அரசியல் வாதிகளால் முடியாது.

தமிழால் வாழ்ந்தவர்கள் தமிழை வாழவைக்க மாட்டார்கள். ஆகையால் யாரொருவர் ஒரு மொழிக் கொள்கையை பேசுகிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையாக சாதிப்பார்கள். அந்தபுரமாக யார் ஆங்கிலத்துக்கு ஏங்குகிறார்களோ அவர்கள் உறுதியாக காலை வாரியே விடுவார்கள். தமிழர்கள் அனைவரும் எச்சரிக்கை!

nayanan said...

அநாநி அவர்களே:

வெகு காலமாக தமிழைக் குலைக்க நடக்கும் சதிகளையும், குறிப்பாகக் கடந்த செபுதெம்பெர் மாதம் முதல் இன்றுவரை இவ்விதயத்தை மட்டுமே தொடர்ந்து பார்த்தும் எழுதியும் வருகின்றவன் என்ற வகையில்,
கிரந்தக் கலவைச் சதி எப்படி நடக்கிறது, இது எதை நோக்கிப் போகிறது, வீரமணியின் பங்கு என்ன,
தமிழக அரசு என்ன செய்தது, தமிழக அரசை திசைதிருப்புபவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன? போன்றவற்றை முழுதும் இல்லாவிடிலும் மிகப் பெருமளவில் அடியேன் அறிவேன்.

அதுமட்டுமல்ல, நுட்பச்சிக்கலையும் அறிவேன். கிரந்தச் சிக்கலுக்கு யார் காரணம் என்று தெளிவாக அறிவேன். அதோடு கிரந்தத்தை எதிர்ப்பவர்களாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் கிரந்தத்தைத் திணிப்பவர்களுக்கும் இருக்கும் பல கள்ளத்தொடர்புகளையும் அறிந்திருக்கிறேன்.

கருணாநிதி என்ன செய்தார், செய்வார் என்பது எனக்குப் பொருட்டல்ல. ஆனால் தமிழக அரசு செயல்பட்டதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதேபோல ஆசிரியர் வீரமணி மேல் பல்வேறு விதயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. எனது 23/10/10 தேதியிட்ட பதிவு, அஞ்சல் கையில் கிடைத்தவுடன் அவரின் இயக்கத்தினர் அதனை எப்படி வீரமணியிடம் எடுத்துச் சென்றார்கள், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் யார் என்ற எல்லா விவரமும் என்னிடம் உள்ளது. அதன்பின்னர் வீரமணி அவர்களை சந்தித்தத் தமிழறிஞர்கள் யார் யார், வீரமணியார்
எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும்.

அது வரையில் வீரமணி அவர்களின் செயற்பாடுகள் நன்றா. அதைச் சொல்வதில் எனக்கு ஏதும் தடை இருக்க முடியாது.

நீங்கள் "ஒரு தமிழறிஞர் தடுத்து நிறுத்தியது" என்று கூறுகிறீர்கள்.
அதே நேரத்தில் உங்கள் பெயரையும்
வெளியிடவில்லை.

உண்மையில் ஒரு தமிழறிஞர் தடுத்த நிறுத்தினார் என்றால் அவ்வறிஞரின் பெயரை நீங்கள் வெளியிடலாமே! ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.

இப்பணியில் முனைப்பாக ஈடுபட்ட எல்லா அறிஞர்களையும் நான் அறிவேன். அதோடு எனது 23/10 தேதியிட்ட அஞ்சல் வெளியாவதற்கு முன்னர் எந்த ஒரு அறிஞரும் அரசிடம் எதுவும் செய்யவில்லை என்பதையும் நானறிவேன். பலரறிவார். இதனை எழுதுவது பீற்றிக்கொள்ளவோ மார்தட்டவோ இல்லவே இல்லை.
இன்று பலபேர் இவ்விதயத்தில் அரசியல் நடத்துகிறார்கள். அவ்வரசியலையும் பெருமளவு நான் அறிவேன்.

அரசியல்வாதிகளைப் பற்றி, குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்ல ஏதும் இருப்பதாக நான் கருதுவதில்லை.

என் வலைப்பதிவில் கடந்த 3/4 மாதக் கட்டுரைகளும் மடல்களும் உள்ளன. இதுவன்றி மடற்குழுக்களிலும் பல எழுதியுள்ளேன். ஒரு கட்டுரையைப் பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளாதீர்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்