இணையத்தால் ஆக்கப்பட்ட உயர்ந்த தமிழ்ப்பணிகளில்
ஒன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தால்
16-மே-10 அன்று செய்யப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில்
சொல்லப்படுகின்ற சீரழிப்பை மறுத்து சிறப்பான
மாநாடு ஒன்றினை நடத்தி பலநாட்டினரையும்,
செய்தியாளர்களையும் இணைத்து
தமிழகத்தின் கவனத்தையும்
அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்த
புதுச்சேரி வலைப்பதிவர்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்ள தமிழ் உலகம்
கடமைப்பட்டுள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றத்தில்
பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்
நடத்திய எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
மலேசியாவில் திரு.சுபநற்குணன் நடத்திய
எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
தமிழ்மணம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற
எழுத்து மாற்ற மறுப்பு விழிப்புணர்வு
ஆகியவற்றைத் தொடர்ந்து
புதுவையினர் ஆக்கிய இந்த மாநாடு
இணையத் தமிழ் உலகின் வீச்சினை
பல படிகள் உயர்த்திக் காட்டியுள்ளது.
வலைப்பதிவர்கள் பல நூறுகளாய்ப்
பெருகியிருக்கும் இணைய உலகின்
வலைப்பதிவர்கள் அடிக்கடிக் கூட்டுகின்ற
வலைப்பதிவர் சந்திப்பு தமிழ்ப்பணிக்காகவும்
நிறைய நிகழ்ந்து, தமிழ் மொழி சிதையாமல்
காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
மீண்டும் எனது நெஞ்சார்ந்த
பாராட்டுக்களையும் நன்றிகளையும்
நண்பர் திரு.இராச சுகுமாரனுக்கும்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தைச்
சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் உரித்தாக்குகிறேன்.
அவர்களின் தமிழ்ப்பணி மென்மேலும்
பெருகி உயர அனைவரும் வாழ்த்துவோம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
4 comments:
வணக்கம்,
உங்கள் பாராட்டுக்கு நன்றி! இந்த பாராட்டு புதுச்சேரி வலைப்பதிவர்களின் தனிப்பட்ட வெற்றி என பதிவு செய்ததைவிட நாம் எல்லோருக்கும், குறிப்பாக இது குறித்து குரல் கொடுத்த குறிப்பாக நீங்கள் (நாக.இளங்கோவன்), இளங்குமரனார், தமிழ்மணம், சங்கரபாண்டி, சுப.நற்குணன், திரு.இராம.கி, திரு.மணிவண்ணன், உள்ளிட்ட பலருக்கு கிடைத்த வெற்றி என்று பதிவு செய்வது தான் சரியானது.
சென்னையில் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள் நடத்திய நிகழ்வு சென்னையை மட்டும் பிரதிபலித்தது. தமிழ்மணம் தனியாக கருத்தை பதிவு செய்தது. அது இணைய தளம் தனிப்பட்ட கருத்தாக கருதப்பட்டது.
சுப.நற்குணன் தனியாக பதிவு செய்தார். ஆனால், நாங்கள் எல்லா எதிப்பையும் ஒன்று சேர்த்து உலகம் முழுவதும் உள்ள எதிர்ப்பை ஒரே இடத்தில் பதிவு செய்தோம். புதுச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், அமெரிக்கா, கனடா, மலேசியா, சவுதி அரேபியா என உலகமே எதிர்க்கிறது என பதிவு செய்தோம். அது தான் எங்கள் மாநாட்டின் வெற்றி.
அதில் உங்களுடைய பங்கு அதிகம். மிகவும் சிரமப்பட்டு அனுப்பி உரை போன்றவை அதை உறுதிப்படுத்துவதாய் அமைந்தது. எழுத்து மாற்றத்தை எதிர்த்து பணியாற்றிய அனைவருக்கும் எங்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த, குரல் கொடுத்த அனைவருக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நீங்கள் பரந்த மனம் படைத்தவர் என நினைக்கிறேன். எழுத்து மாற்றம் ஒரு மிகப் பெரிய பிரச்சனை அதை எதிர்த்து சாதித்த புதுச்சேரி வலைபதிவர் சிரகத்தை நீங்கள் மட்டுமே பாராட்டியுள்ளீர்கள். வேறு எந்த தமிழரும் பாராட்டியதாக இதுவரை இணையத்தில் தகவல் இல்லை. ஏன் இன்னும் ஒருவரும் தனது நன்றியை பதிவு செய்யவில்லை என்பது தான் கேள்வி.
நீங்கள் ஒருவர் தான் உணமை தமிழரா?
தமிழர்களின் இந்த மனப்பான்மை தான், தமிழன் இன்னும் பின்னடைவை சந்தித்து வருவதற்கு காரணங்கள்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தை இதன் மூலம் நான் மனமாற பாரட்டுகிறேன்.
அன்புடன்
தமிழ்மணி
// தமிழ்மணி said...
. எழுத்து மாற்றம் ஒரு மிகப் பெரிய பிரச்சனை அதை எதிர்த்து சாதித்த புதுச்சேரி வலைபதிவர் சிரகத்தை நீங்கள் மட்டுமே பாராட்டியுள்ளீர்கள்.
//
அன்பின் நண்பர் தமிழ்மணி அவர்களே, இந்த அரும்பணியை அதன் அருமை தெரிந்தவர் எல்லாருமே பாராட்டியுள்ளனர். குறிப்பாக இக்களத்தில் இருக்கின்ற பல அறிஞர்கள் இதனை மிக உயர்வாகக் கருதுகின்றனர்.
பதிவோ, மடலோ இல்லாமல் பலர் செயலில் இதனைப் போற்றுகின்றனர் என்பதை நானறிவேன்.
இருப்பினும், இணைய உலகில் இது போன்ற பணிகளை உணர்வோ மிகக் குறைவு என்ற எண்ணம் எழுவது இயல்பு.
நாம் போற்றுகின்ற பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற பெரியோர்கள் எல்லாம் மிகக் குறைவானவர்களால் மட்டுமே பாராட்டப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் செய்த பணிகள்தான் மிக உயர்ந்தன. பாவாணர் என்பார் யார், பெருஞ்சித்திரனார் என்பார் யார் என்பதே ஏறத்தாழ 90% பச்சைத் தமிழர்களுக்குத் தெரியாது. தமிழ் உலகம் தெரியவும் விடாது. கவலைவேண்டாம்.
குசுபு, சாதி, திரைப்படங்கள், வெட்டிக்கதைகள் நவீன இழக்கியங்கள் போன்றவற்றைப் பற்றிய கூட்டமாக இருந்திருந்தால் பலரும் பாராட்டியிருப்பர் :-)
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பர்களுக்கு வணக்கம்.
நாக.இளங்கோவன் ஐயா பதிவில் எழுதியுள்ளதை அப்படியே முழுமனதோடு வழிமொழிகிறேன்.
//நாங்கள் எல்லா எதிப்பையும் ஒன்று சேர்த்து உலகம் முழுவதும் உள்ள எதிர்ப்பை ஒரே இடத்தில் பதிவு செய்தோம்.//
இரா.சுகுமாறன் கருத்தும் முற்றிலும் உண்மை.
இதற்காகவே, பு.வ.சிறகத்தின் தமிழன்பர் அனைவருக்கும் உலகத் தமிழர்கள் கடமைபட்டுள்ளனர்.
எ.சீ குறித்த உலகத் தமிழரின் எதிர்ப்பு அலையை தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு சென்று, நல்ல தீர்வுக்கு வழியமைத்துள்ள பு.வ.சிறகத்தின் நற்பணி காலத்தால் போற்றத்தக்கதும்; வரலாற்றுப் பதிவுமாகும்.
//வேறு எந்த தமிழரும் பாராட்டியதாக இதுவரை இணையத்தில் தகவல் இல்லை. ஏன் இன்னும் ஒருவரும் தனது நன்றியை பதிவு செய்யவில்லை என்பது தான் கேள்வி. //
பலருக்கும் மொக்கை பதிவு போடவே நேரமில்லாமல் இருக்கும்போது இப்படி நாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான் ஐயா. என்ன செய்வது? தமிழ் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்பதே இன்று பலருடைய எண்ணமாக இருக்கிறது.
நான்கூட எ.சீ தடுத்து நிறுத்தும் உரிமையும் கடமையும் பதிவர்களுக்கு உண்டு என ஒரு பதிவு எழுதினேன்.
http://thirutamil.blogspot.com/2010/05/blog-post_09.html
எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இதற்கெல்லாம் நாம் வருந்திப் பயனில்லை. "யார் எனைத் தடுப்பினும்; என் இரு கை வீசி நடையிடுவேன்" என நாம் நமது வேலையைச் செய்வோம்.
பு.வ.சிறகத்தில் நல்ல உணர்வாளர்கள் உள்ளனர். உங்களுக்கு ஆதரவாக உலகம் பரவிய சிலர் இருக்கிறோம். இந்த ஆற்றலைக் கொண்டு இன்னும் என்ன செய்யலாம் எனச் சிந்திப்போம்; செயல்படுவோம்!
Post a Comment