Pages

Friday, April 21, 2006

எழிற் கொள்ளை! (செங்காந்தள் மலர்) - (உரை வீச்சு)

என் வீட்டு வாசலிலே என்னை வரவேற்கும்!
கொல்லையிலே கையும் குலுக்கும்.

உன் வீடு நான் வந்தால்,
அங்கேயும் என்னை வரவேற்கும்;

சாலையிலே நான் போயின், அங்கங்கே,
தன்னை என்னிடம் காட்டிக் கொள்ளும்;

கோயிலுக்குப் போயந்தக் குமரனைக் கும்பிட்டால்,
கும்பிட்ட கைகளில் குமரன் தருவான் அதை;
அது அவனுடையதாம்!

ஆறுமுகன் அள்ளித்தருவதில்
கொள்ளை ஆசை ஆருக்கில்லை?

இந்தக் கோடைகாலத்தில் கூதிர்கால நினைவுகள்!

கண் எட்டிய தொலைவு வரை ஒரே நிறம்.
காணும் திசைகளிலே பூரிப்பின் பொரிப்பு.

பச்சை வண்ணத்தின் மச்சியிலே செவ்வடுக்கு.
அதைக் கொஞ்சி விடத் துடிக்கின்ற என் குருதி!
அவற்றின் உச்சி முகர்கின்ற
உள்ளங்களின் முகங்களில் விதவிதமான ஒளி!

காலையில் பிறந்து மாலையில் மறைவதல்ல!
ஏழு மாலை மாறா வாழ்க்கை, மென்மை, உறுதி!

என் காதலியின் கண்வரிகளில் யான் கண்டு
கொள்ளை போன அதே நிறம்.
என் தாய் என்னைச் சிந்தியபோது சிந்திய அதே நிறம்.
என் மண்ணின் மைந்தர்கள், மண்ணில் கொட்டிய அதே நிறம்!

அழியாத வரலாற்றில்,

அத்தி சூடியவன் சோழன்;
பனை சூடிய சேரன்;
வேம்பு சூடிய பாண்டியன்;

"கார்த்திகை அழகன் காந்தள் சூடினன்!"

தமிழ்ப் பூவே! தமிழர்ப் பூவே!, தமிழ் நிலத்தின் பூவே!
செங்காந்தள் பூவே!
கவர்ந்திழுத்த கார்த்திகைப் பூவே!!

அன்றவள் கண்வரிகளில் கண்டபோது
களவு போய்த் தொலைந்தேன் - சொன்னேனன்றோ?!

"இன்றிவர் விதைத்ததெலாம் முளைப்பது" சொல்ல
ஏழு மாலை எழுந்து நிற்கும் இக்குலத்தின் பூவே!,
பூப்பது மென்மை! பூத்து நிற்பது வீரம்!

உன் எழிலை இன்று கொள்ளை கொள்கின்றேன் -
உன்னிடம் சொல்லிவிட்டே!

என் நெஞ்சள்ளும் கொள்ளையை எது தடுக்கும்?

"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே" என்றவன் பாவேந்தன்!

கார்த்திகை மலரே, காந்தள் குலமே,
"எங்கு பூப்பினும் எங்கும் நிறைகவே" என்றனன் கேள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏபரல்-2004

4 comments:

இராம.கி said...

அன்பிற்குரிய இளங்கோ,

பாவேந்தரை நினைவு கொள்ளுமாறு நீங்கள் இட்ட இடுகைகளுக்கு என் பாராட்டு. ஒரு அரசியல் தலைவராவது, குறிப்பாக இந்தக் கேடுகெட்ட கழகங்களாவது, நினைவு கூருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஏமாந்தது தான் மிச்சம்; தேர்தல் முழக்கத்தில் ஆழ்ந்து போன இவர்களா அதைச் செய்வார்கள்?

வேண்டும் போது பாவேந்தரை முழங்க மட்டும் செய்வார்கள். தமிழால் தங்களைக் கரை சேர்த்துக் கொண்டவர்கள் கெட்டொழிந்தால் நல்லது.

அன்புடன்,
இராம.கி.

nayanan said...

அன்பின் இராம.கி அய்யா,

நானும் அந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் தங்களோடு. தமிழண்ணல் அவர்களின் செவ்வி படித்தேன்.
பேராயக் கட்சி மட்டுமே, தேர்தல் அறிக்கையில் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழில் மட்டுமே கல்வி என்று
சொல்லியிருக்கிறது என்று ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார்.

கழகங்கள் கோழையர்கள் கூட்டமாகவேத் தெரிகிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பாரதிய நவீன இளவரசன் said...

ஐயா இளங்கோவன் அவர்களே,

பாவேந்தரை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் அறுகதை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்பதுதான் எதார்த்த நிலை. அவர்களுக்கு, சிம்ரன், விந்தியா, செந்தில், குண்டு கல்யாணம், நெப்போலியன், பாக்கியராஜ்.....போன்றோர் போதும்.

கழகங்கள் என்றவுடன் ஒரு விஷயத்தைச் சொல்ல விழைகிறேன்.

தற்போதைய தமிழீழ நிகழ்வுகள் குறித்து மௌனம் சாதிக்கும் போக்கையே கழகத்தார் கடைபிடித்தாலும், `விடுதலைப்புலியை அடக்கிவைக்க இந்திய அரசு இலங்கைக்கு உதவ வேண்டும்' என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்ப்யுனிஸ்ட் கட்சியின் முடிவைக் குறித்தும் மௌனம் சாதிப்பதை என்னென்பது?

பாவேந்தரின் படைப்புகளை நீங்கள் கொண்டு செல்லும் முறைதான் முறையானது; அதை செவ்வனே தொடர வாழ்த்துக்கள்!

nayanan said...

அன்பின் நண்பர் வெங்கட்்,

தங்கள் கருத்துக்களுக்கும், இடுகைக்கும் நன்றி.

பாவேந்தர் பாரதிதாசன் விழாக்கள் இணைய மடற்குழுக்களில் நிறைய நடந்ததுண்டு.

இராம.கி அய்யா அவர்களின் பங்களிப்பு அவ்விழாக்களிலே மிக உயர்ந்தது. அவரின்
நினைவு கூரும் பாவும் (வளவு) என்னை ஆட்கொண்டது.

இந்த இணையத்தில் பாவேந்தர் பாரதிதாசன்
விழாவிற்கு பங்களித்து, பாரதிதாசன் புகழ்பாடியவர்கள்
ஏராளமானவர்கள்.

கழகங்கள் எப்படி பாரதிதாசனை மறந்துவிட்டனவோ,
அப்படியே, இணைய மடற்குழுக்களிலும், இன்றைய
வலைப்பதிவுகளிலும் கொடி கட்டிப் பறக்கும்
பல தமிழர்கள், தமிழ் உணர்வாளர்களுக்குக் கூட
பாரதிதாசன் மறந்து போனது எனக்கு வருத்தத்தை
அளிக்கிறது.

குறைந்தது நினைவூட்டலுக்குப் பிறகாவது அவர்கள்
எங்கேனும் சில எழுத்துக்களை இடுவார்கள் என்று
எதிர்பார்த்தேன். அது இல்லை.

இவர்களும், அதாவது இணைய பா.தா விழாக்களிலே
பங்கு கொண்டு, நல்ல உணர்வு காட்டியோர் பலரும்
கூட வெறும் ஈசல் கூட்டம்தானோ என்று இன்று
எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் இதைப் படித்தால்
என்னுடன் நெருக்கமாகப் பழகிய நல் நண்பர்கள் ஆதலால் வருத்தப் படக் கூடும். எனினும் அவர்கள் வருந்தினால் நல்லது நடக்கக் கூடும் என்பதால்
அவர்களை வருத்துவதில் எனக்கு வருத்தமில்லை.

அதேபோல, ஈழ விதயம் என்பதும் தமிழ்நாட்டிலே
உணர்வுப் பொருளாக அல்லாமல், வியாபாரப்பொருளாக
ஆக்கிவிட்டார்கள்.

தமிழ் இனத்தின் தலைவர்களுக்கும் புரட்சிகளுக்கும்
பொழுதுபோக்கு அம்சமாக ஈழ விதயம் ஆகிப்போனது
கண்டு நாணத்தான் வேண்டும் நல்லோர்.

அன்புடன்
நாக.இளங்கோவன்