Pages

Sunday, May 05, 2002

கண்ணகி கோயில் - மடல் 2 - பாதை

கம்பத்திற்கு கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றில் கண்ணகிக் கோட்டம்
அமைந்துள்ளது.

இதற்கு இரண்டு பாதைகள் உள்ளன.
ஒன்று வாகனங்கள் செல்லக்கூடிய ஓரளவே கடினமான
கேரள மலைப்பாதை.

மற்றொன்று ஒற்றையடி தமிழக மலைப்பாதை.

கேரளப்பாதையில் பாதையின் கடுமையைவிட
கேரள அரசின்/காவற்துறையின் கெடுபிடிகள் மிக அதிகம்.

வருடத்தில் சித்திரை முழு நிலவின் மறுநாள்,
*மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நாள்*;
அந்த நாளில் மட்டுமே கண்ணகி கோயில் செல்ல
அனுமதி அளிக்கப்படுகிறது. 2/3 ஆண்டுகட்கு முன்னர் வரை
சித்திரை முழுநிலவு விழாவிற்காக மூன்று நாட்கள் திறப்பார்களாம்.
தற்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது.

கம்பத்திலிருந்து பேருந்தில் 17 கி.மீ தொலைவுள்ள
குமுளிக்கு செல்ல வேண்டும். குமுளி என்ற ஊர் கேரள
எல்லைக்குட்பட்டது. அங்கு சோதனைச்சாவடி உள்ளது.
சோதனைச்சாவடிக்கு அந்தப்பகுதி கேரளாவைச் சேர்ந்திருக்க (குமுளி),
தமிழக எல்லையாக கூடலூர் என்ற ஊர். இரண்டுக்கும் நடுவே ஒரு சவுக்குக் குச்சி :-)

அந்தக் குச்சிக்கு (தடுப்பு மரம்) 10/15 அடிகள் யிந்தப்புறம்,
அதாவது தமிழக எல்லைக்குள், புரட்சி நடிகர் மா.கோ.இரா அவர்களின்
திருவுருவச் சிலையை நிறுவியிருக்கின்றனர் தமிழர்கள். கேரளாவை விட்டு
தமிழகம் வந்ததற்கு நன்றி சொல்லி வால் ஆட்டியிருந்தது போல் எனக்குத் தெரிந்தது.

ஒரு காமராசருக்கோ அண்ணாவுக்கோ அங்கே நினைவு கூரப்படவில்லை.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்றாலிதுதானோ என்று நினைத்துக்
கொண்டேன்.

கம்பத்திலிருந்து கூடலூர் வழியே குமுளிக்குப் போகும்
அந்தப் பாதை மிக எழில் வாய்ந்தது. காலை 6.30 பேருந்தேறி
முக்கால் மணிநேர அந்தப் பயணம் மிகயினிமையான குளு குளுவென்ற
பயணம். நினைக்கவே நெஞ்சம் குளிர்கிறது.

மருத நிலங்கள் சூழ்ந்த கம்பத்திலிருந்து தொடங்கிய பயணம்
மெதுவே தேக்கு நிறைந்த முல்லை நிலங்களைக் கடந்து
சீராக, குறிஞ்சியும் முல்லையும் கலந்த, மலை நடுவுள்ள குமுளி நகரை
அடைகிறது.

அடிப்பகுதியில் கிடந்த மருத நிலங்களில் நெல், வாழை
போன்ற வயல்களில் கிடந்த பயிர்களின் கரும்பச்சை நிறம்
அந்நிலங்களின் வளமை கூறின. (மலையடிவார நிலங்கள்
வளமிகுந்தனவோ?! அப்படித்தான் இருக்கவேண்டும்; கொல்லிமலை
அடிவாரத்துக்கும் சென்றிருந்தேன். அங்கிருந்த நெற்பயிர்களின்
அடிக்கட்டுகள் என்னை அயரவைத்தன. அத்தனை திரட்சி மற்றும் பசுமை காவேரி ஆற்று வளம் கொண்ட எங்கள் ஊர் நெற்பயிர்கள் கூட அவற்றின் பக்கம் நிற்க ஏலாது)

வயல் வளங்களைப் பார்த்துக் கொண்டே மெதுவே மலையேறினால்,
பெரியாறு நீர்மின் நிலையம் கண்ணில் பட்டது. ஈராயிரம் அடிக்குக்
குறையாத உயரத்திலிருந்து நீரைக் குழாய்களின் வழியாக
மின் நிலையத்திற்கு வேகமாகக் கொண்டுவரும் அமைப்பைப்
பார்த்து வியந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த மரங்களின் பெயர்கள்
எனக்குத் தெரியவில்லை.

அப்பொழுது எனக்கு முனைவர் இராம.கி அவர்களின் நினைவு
வந்தது. "நம் மண்ணில் விளையும் மரங்களின் பேர்களைக் கூட
நாம் ஒழுங்காகக் கற்கவில்லை; அல்லது கற்றுக் கொடுக்கப் படவில்லை"
என்று அடிக்கடி அவர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நமது பாடங்கள்
அயல்நாட்டு மரங்களின் பெயர்களை போதிப்பதாக இருக்கிறது என்று
அதன் மேல் பழியைப் போட்டு விட்டு பயணம் தொடருகையில்,
ஆங்காங்கு பெருமரக் கிளைகளில் தொங்கிக் கிடந்த தேன்கூடுகளும்,
அந்தத் தேன்கூடுகள் மனிதர்கள் தீண்டமுடியாத அமைப்பில் இருப்பதையும்
பார்த்து, அத்தேனீக்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விட்டு
திரும்பியபோது பக்கத்தில் அமர்ந்திருந்தவர் பீடியை பற்றைவைத்து
என் முகத்தில் வெளிவிட, கிடைத்த காலை மகிழ்ச்சி சற்று
பாதிப்புக்குள்ளானது. கீழே இறங்கி ஊதுங்களேன் என்று
நான் முறைக்க, கொஞ்சநேரந்தேன் என்று சொல்லிக் கொண்டே..ஈஈஈ என்று அவர் இளித்துவிட்டு மீண்டும் பிடிக்க, "சரி தொலை" என்று சொல்லிவிட்டு நானும் என் மூக்கைத் தூக்கி சன்னலுக்கு வெளியே வைத்து விட்டு அமைதியடைந்த சில நிமிடங்களில் குமுளி வந்து சேர்ந்தது.

விழா நாள் என்பதால் வழக்கத்திற்கு அதிகமான காக்கி சட்டைகள்.
தமிழகப் பகுதியில் தமிழகக் காவற்துறையினர்; அந்தப்பக்கம்
ஒவ்வொருவரையும் கூரிய கண்களால் பார்க்கும் கேரளர்.

எல்லைக் கோட்டைத் தாண்டிய 20/30 அடி தொலைவிலேயே
கண்ணகி கோயிலுக்கு கேரள மலைப்பாதை வழியே செல்ல உரிமம்
பெற்ற சீப்பிகள்(Jeep).

விழாவிற்காக சிறப்பு ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் நடத்தும்
வாகன வசதியாதலால், ஒவ்வொரு சீப்பியிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அடைத்துக் கொள்ளலாம். ஆளுக்கு 30 உரூவாய் ஒருவழிக்கு.

அந்த சீப்பியில் ஓட்டுனர்க்குப் பக்கத்தில் என்னையும் சேர்த்து நால்வர்.
பின்னால் 9 அல்லது 10 பேர்.

14 கி.மீ வனமலைப்பயணம் தொடங்கியவுடன் சிறிது தொலைவிலேயே,
பெரியாறு புலிகள் பாதுகாப்பகம் வந்தது. காவற்துறையினர் (கேரளர்)
வனக்காரணங்களுக்காகவும், பொதுப் பாதுகாப்பிற்காகவும், அரசியல்
காரணங்களுக்காகவும் நிறைய இடங்களின் சோதனை செய்தனர்.

ஒரு சாவடியில் "நிங்கள்....மலையாளம்?" என்று எங்களைப் பார்த்துக்
கேள்வி கேட்கப் பட்டபோது, ஏன்யா நம்ம ஊர்ல மட்டும் "நான்/நாம் இந்தியன்"
என்று எல்லா இடத்திலும் சொல்லி அழவேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டே "இல்லை...தமிழ்" என்று மறுமொழி சொன்னோம் அவரிடம்.

பின்னர்தான் தெரிந்தது அவர்கள் கணக்கெடுக்கிறார்கள் என்று.
கண்ணகி கோயிலுக்கு (மங்கலதேவி கோயிலுக்கு) கேரளாவில் இருந்தும்
நிறைய பேர் வருவதால் கேரளர், தமிழர் எண்ணிக்கை விவரங்களுக்காக கேட்டிருக்கக் கூடும் என்று அறிந்தேன்.

வனப்பகுதியைக் கடந்து சீப்பி குதித்துக் கொண்டும்
ஆடிக்கொண்டும் ஆட்டிக் கொண்டும், குண்டும் குழியும் நிறைந்த
ஒரு வண்டி மட்டுமே போகக் கூடிய அந்தப் பாதையில் எதிர்
புறமும் வண்டிகள் இறங்கி வர, கடப்புகள் அய்யுற வைத்தன.

மூன்று/நான்கடி பள்ளங்கள் மேடுகள் பாதைகளில் ஏராளம்.
சற்றே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க,
அப்பாதையில் ஓட்டுவதில் வல்ல கேரள ஓட்டுனர்கள் சாகசம்தான்
செய்கிறார்கள். அவர்களின் ஓட்டுந்திறன் வேகம் பற்றி அப்பகுதிகளில்
தமிழர்களுக்குப் பொறாமை அதிகம்.

சற்றே சறுக்கினாலும் ஆயிரக்கணக்கான அடிகள் செங்குத்தான
மலைப்பகுதிகள் இருக்கும் இடங்களும் நிறைய.

சாலைகள் இந்தியாவின் கேடுகளில் தலையானது. ஊர்ப்புறங்களில்
இருக்கும் சாலைகள் மோசமாயிருக்க மலைப்புறங்களில் இருக்கும் பாதைகளைக் குறைசொல்லி என்ன பயன் என்று எண்ணிக் கொண்டே மேலே மேலே செல்ல கண்ணகி கோயிலும் அங்கு சென்று குழுமிக் கொண்டிருக்கும் மக்களும் கண்ணில் தெரிய ஆரம்பிக்க, பயண பயத்திலிருந்து முகம் மீண்டும் தெளிவடைய சற்று நேரத்தில் அந்த மலையுச்சியில் இறக்கிவிட்டார்கள்.
இறங்கி சற்றே வலப்பக்கம் திரும்பிப் பார்த்தால் *தேக்கடி நீர்த்தேக்கம்* கண்ணில் படுகிறது!.

மற்றொரு பாதையான நடைபாதை, கம்பத்தில் இருந்து பளியன்குடி என்ற
ஊருக்கு கிழக்கு நோக்கி செல்கிறது. பளியன்குடியில் இருந்து
நடைவழியாக மலைகளை ஏறி இறங்கி கண்ணகி கோயிலுக்கு செல்லவேண்டும்.

இப்பாதை தமிழக எல்லைக்குள் இருந்தாலும் மிகக் கடினமான பாதை என்று
சொல்லப்படுகின்றது. இப்பாதை வழியே செல்வோர் மிகக் குறைவு.

ஆக,

1) கம்பம் --> குமுளி --> சிறீ பூரணகிரி [கேரள வாகனப் பாதை]
(சிறீ பூரணகிரி இதுதான் கண்ணகி கோயில் இருக்கும் இடத்தின் ஊர்ப் பெயர்;
இராசராசன் வைத்தானாம்)

2) கம்பம்--> பளியன்குடி --> சிறீ பூரணகிரி [தமிழக நடைபாதை]


குறிப்பு: குமுளி --> கண்ணகி கோயில் 14 கி.மீ தொலைவுள்ள மலைப்பயணம்!


அன்புடன்
நாக.இளங்கோவன்
05-மே-2002

No comments: