Pages

Sunday, May 05, 2002

கண்ணகி கோயில் - மடல் 3 - அமைப்பு

கண்ணகி கோயிலுக்கு செல்லும் பாதைகள்
மனதில் பதியவைத்த சேதிகள்,
மலரவைத்த சிந்தனைகள் அதிகம்தான்.

இளங்காலைப் பொழுதிலே சீப்பியில் இருந்திறங்கி
இடுப்பிலே கைகளைக் குத்திக் கொண்டு நின்று
வியந்து விரிந்த கண்களோடு
அகண்டு விரிந்து கிடக்கும் பசுமையான மலை உச்சியிலே
ஒருபுறம் சேரன் செங்குட்டுவன் மலைவளம் காண வந்த
சிலப்பதிகாரக் காட்சி மனதிலாட,
சாத்தனாரும் இளங்கோவடிகளும் என்னை ஆட்கொள்ள,
பாண்டியன் உயிர்துறந்ததும் தானும் உயிர்துறந்த
பாண்டிப் பெண்ணினும்,
உயிர்துறக்காது கடமை புரிந்து
சேரமண் வந்து வீழ்ந்த
சோழப்பெண்ணே சிறந்தவள் என்று சொன்ன
சேரப்பெண், சேரனின் பட்டத்தரசி வேண்மாளே என் நினைவில்
பெரிதும் நின்றாள்!

மலைக்குறவர்கள், பொங்கி வழிந்த சுனைகள்,
குன்றக்குரவை, குட்டுவன், வேண்மாள், இளங்கோவடிகளார்,
சாத்தனார், கனகவிசயன், ஈழக் கயவாகு, மாடலன்,தேவந்தி என்ற
அத்தனை பேரும் என மனதில் நிழலாட, அத்துனை பேரும் வந்தது
தமிழர்களின் உறவுக்காரி கண்ணகிக்காக என்று எண்ணியபோது
உணர்ச்சி மேலிட்டு என் கண்கள் பனித்தன.

"என்னேயிஃது என்னேயிஃது என்னேயிஃது என்னேகொல்,
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொன்தோட்டு நாவல்அம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்"

-சிலம்பு:வாழ்த்துக்காதை

செங்குட்டுவன் வியப்புற, கண்ணகி காட்சியளித்ததாக சிலம்பு கூறுமிந்த
வரிகள் என் நினைவுக்கு வந்து என்னை ஆட்கொண்டது.

கோயிலுக்கு சற்று தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன;
அங்கிருந்து ஒரு 100/200 மீட்டர் தொலைவு மெல்ல நடந்து கோயிலின்
தெற்கு வாயில் வழியே உள் நுழைந்தேன்.

கூடலூர்/குமுளி பகுதியிலிருந்து கிட்டத்தட்ட "ப" வடிவத்தில்
அமைந்திருக்கும் மலைத்தொடர்களில், மேற்குப்பகுதியில் குமுளி சார்
மலைத்தொடர்; கிழக்கே பளியன்குடியில் இருந்து வரும் மலைத்தொடர்,
அதற்கும் சற்று கிழக்கே "நெடுவேள் குன்றம்" என்ற மலைத்தொடர்.
யிவைகளை 'ப' வடிவிலிடைவெளி விட்டிணைக்கும் குறுக்கு மலைத்தொடரின் கீழ்பகுதியில் அமைந்துள்ளது கண்ணகி கோட்டம்.
(ஆங்கில "யு" வடிவம் என்று சொன்னாலும் பொருந்தும்.)

இந்தயிணைப்பு மலைதொடரின் தென்புறத்தில் கேரளாவைச் சேர்ந்த
தேக்கடி நீர்த்தேக்கம்; வடபுறம் தமிழகம். அதுவே எல்லை மலை;
அதாவது, கோயிலின் வடபுறத்தில் நுழைவது தமிழகப் பகுதியான
பளியன்குடியிலிருந்து வரும் பாதையில்; தென்புற நுழைவாயில்
கேரளப் பாதையிலிருந்து வந்து நுழைவது போன்று உள்ளது.
கோவிலில் சரிபாதி தமிழகப்பகுதியாயும் சரிபாதி கேரளப்பகுதியாயும்
உள்ளது என்பாரும், அல்ல அல்ல முழுவதும் தமிழக எல்லையே என்பாரும்,
அல்ல அல்ல அல்ல கேரளாவிற்கு முழுவதுமாய் தானம் செய்தாகி
விட்டது என்பாரும் அங்கே கூடிக் கிடந்தனர்.

தோராயமாக எண்ணாயிரம் சதுர அடிகள் கொண்ட பரப்பளவில்
கோட்டம் உள்ளது. வடக்கு-தெற்கு நீளமாகவும், மேற்கு-கிழக்கு
அகலமாகவும் அமைந்துள்ளது.

நுழைவாயிலிலேயே, இடிந்து சிதைந்து கிடக்கும் கோயில் மண்டபங்கள்,
மதிற்சுவர்கள் எல்லாம் பல நூற்றண்டுகளை விழுங்கிவிட்ட கதைகளைச் சொல்லின.

பராமரிப்பின்றி வளர்ந்து கிடக்கும் புல் புதர்கள்,
வருடத்தில் ஒரு நாளில் மனிதர் வர,
ஏனைய நாட்களில் காட்டு யானைகள் வந்து தங்கிப் போவதற்கான
அடையாளமாய் கோயிலின் உட்பகுதிகள்
எங்கும் நிறைந்து கிடந்த
யானைச்சாணங்கள்!

யானைத் தந்தம் களவாட வரும் கள்ளர்களுக்கும்
அவ்விடம் உறைவிடமாம்!

ஏற்கனவே சொன்னதுபோல் யிரண்டு வாயில்கள் கோயிலுக்கு!
தமிழகப் பகுதியிலிருந்து வரும் பாதையிணையும் வடக்கு வாயிலே
முதன்மை வாயில். அந்த வாயிலின் நான்கு மூலைகளில் ஓங்கி உயர்ந்த
கற்தூண்கள்! அந்த வாயிலின் முன்னால் 'தீர்த்தச் சுனை' என்ற ஒரு சின்னஞ்சிறு
குளம்; கற்களால் உள்ளமைப்பு செய்யப் பட்டுள்ள அந்தக் குளத்தில்
மழைத்தண்ணீர் தேங்கி இருந்தது.

மலையில் ஏறி வருபவர்கள் அந்த சுனையைத் தாண்டி, அதற்குமேல்
சுமார் 25 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணக.஢க் கோட்டத்தின்
வடக்கு வாயிலில் கால் வைக்க வேண்டும்.

கோட்டத்தின் வடக்கு வாயில் ஓங்கி உயர்ந்திருக்க, மேற்கு மதில் சுவர்
முழுமையாய் நின்று கிடக்க (வாயில் ஏதும் இல்லை மேல் புறத்தில்),
கீழ்ச்சுவரும் தென்சுவரும் அடியோடிடிந்து சிதறிக் கிடக்கின்றன.

கீழ்புறத்தில் வாயில் இருந்ததா என்பது அறியமுடியவில்லை;ஆனால்
தென்புறத்தில் படிக்கட்டு அமைப்புகளிருந்தது, வாயிலிருந்திருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது.

இந்தப் பரப்புக்குள் 6 மண்டபங்கள்.

வடக்கு வாயிலில் நுழைந்தவுடன், கிழக்குப் பார்த்து நிற்கும் மண்டபம் யிருப்பவைகளில் ஆகப் பெரியது.

வாயிலில் இருந்து பார்த்தால் அம்மண்டபத்தின் சுவர்தான் தெரியும். அதன் மூல மண்டபத்தில் சிலை ஏதுமில்லை.ஆனால் அங்கே பெயர்ந்த கற்களும் மணலும் உள்ளன.

அங்கே வந்திருந்தோர் பலர் பல விதமாகச் சொன்னார்கள். அதைப் பின்வரும்
மடல்களில் விவரிக்கின்றேன். ஆனால், பெரும்பாலோனோர் சொன்னது
பெருங்கல்லொன்று பெயர்ந்து கிடந்தவிடத்தில் சுரங்கப்பாதை உண்டென்று!.
அச்சுரங்கம் எங்கு செல்கிறது என்று சொன்னவற்றில், கூடலூரில் உள்ள
அழகர் கோயிலுக்கு செல்கிறது என்று சொன்னது நம்பும் படியாக இருந்தது.

தெற்கு வாயிலில் நுழைந்தவுடன், அதே போன்று ஆனால் அமைப்பில், வடிவில்
சிறிய, கிழக்கு பார்த்த மண்டபம். அந்த மண்டபத்தின் உள்ளே சிவலிங்கம் நந்தி
வகையறாக்கள் சிறிய சிறிய அளவிலிருந்தனர்.

அந்த மண்டபத்தின் கிழக்கே, வடக்குப் பார்த்தார் போல் சிறு மண்டபம்.
அது மங்கலீசுவரி என்ற தெய்வம் என்று சிலர் சொன்னார்கள். ஆனால்
அது இளங்கோவடிகளாரின் சீவசமாதி என்று பலர் அடித்து சொன்னார்கள்!

தெற்கேயும் வடக்கேயும், கிழக்கு பார்த்து நிற்கும் மண்டபங்களின்
இடையே, தெற்கு பார்த்து இருக்கும் மண்டபம்தான் கண்ணகி கோயில்!
"மங்கலதேதி கண்ணகி கோயில்" என்று அட்டையில் எழுதப்பட்ட மண்டபம்தான்
கண்ணகி கோயில்! அந்த மண்டபத்தின் வெளியே எதிர்த்தாற்போல்
ஒரு அரங்கம் போன்ற சதுர அமைப்பு.

கண்ணகி கோயில் மண்டபத்தின் மேற்புறத்தில் ஒரு மண்டபம் இருந்து இடிபட்டு தரைமட்டமாகக் கிடந்தன.

அதேபோல இளங்கோவடிகளின் சீவசமாதி என்றுசொல்லப்படும் மண்டபத்தின்
எதிர்புறமும் ஒரு தரைமட்டமாகிக் கிடக்கும் மண்டபம்.

கண்ணகி கோயில் மண்டபத்தின் மேற்புறம், மதிற்சுவரில்
ஒரு கல்வெட்டு! அந்தக் கல்வெட்டு 300/400 ஆண்டுகளுக்கு முன்னர்
எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்குப்பகுதியிலிருக்கும் கிழக்கு பார்த்த மண்டபத்திலும் ஒரு கல்வெட்டு
சிதைந்து போய் படிக்க முடியாமலிருக்கிறது.

ஆக, யிடிபாடுகளுகளுக்கிடையே, யின்னும் முழுதும் யிடியாமல்
நிற்கும் 4 மண்டபங்கள், முழுதுமிடிந்தவிரண்டு மண்டபங்கள்,
சிதைந்து கிடக்கும் ஒரு அரங்கம், ஓங்கி நிற்கும் வடக்கு வாயில்,
அதன் முன்னாலிருக்கும் தீர்த்தச் சுனை, யிடிந்துமிடியாமலும்
கிடக்கும் மதிற்சுவர்கள், இரண்டு கல்வெட்டுகள்
(ஒன்று நிச்சயம் பிற்காலத்தையது) என்றயிவைதான் கண்ணகி கோட்டம்!

தொடரும் மடலில் வழிபாடு, கண்ணகி கோயிலிதுதான் என்பதற்கான
நானறிந்த வரையிலான சிலம்புச் சான்றுகள் போன்றவற்றை எழுதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
05/மே/02

No comments: