திரு.ஞானவெட்டியான் அவர்களின் நினைவு வந்தது. இருப்பினும் தொடர்புக் குறிப்புகள் ஏதும் இல்லாததால், அங்கே இறங்கி இரண்டு வெள்ளரிக்காய்களை மட்டும் வாங்கிக் கொண்டு பயணம் தொடர, வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி வழியாக பேருந்தில் கம்பம் சென்று சேர்ந்தேன். ஏறத்தாழ ஐய்ந்தரை மணி நேரப் பேருந்துப் பயணம்.
வத்தலகுண்டு வரை ஏற்கனவே சென்றுள்ளேன்; கோடை போகும்பொருட்டு. வழியில் கண்ட நஞ்சை புஞ்சை மற்றும் இயற்கை வளங்கள் என்னை மிகவும் ஆட்கொண்டது.
இத்தனை இயற்கை வளங்களைக் கொண்ட நம்மால் நம்மை, ஒழுக்கத்திலும் உணர்விலும் பொருளாதாரத்திலும் சீரமைத்துக் கொள்ளவியலவில்லையே என்ற உணர்வு ஏற்படாமல் இல்லை.
ஒட்டிக் கிடக்க, அந்த அறக்கட்டளையின் அலுவலகமும் 10 நொடி தூரத்தில் இருக்க எனக்குத் தேவையான தொடர்புகள் அனைத்தும் உடன் கிடைத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. உடனே அங்கு சென்று கண்ணகிக் கோயிலுக்கு எப்படிச் செல்வது என்று வினவ, அங்கு அறக்கட்டளையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் 'வாங்க வாங்க' என்று வாஞ்சையுடன் என்னை வரவேற்றது என்னால் என்றும் மறக்க இயலாது. முன் பின் அறியாதிருந்தாலும் ஒத்த கருத்துகளும் உணர்வுகளும் அரை நொடியில் உறவை ஈட்டிக் கொடுத்து விடுகின்றன.
நான் போன தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் ஏதோ நான் இதழாளன் என்று
நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. என்னைக் கேட்க, நானும் டமால் என்று "ஆமாம், தமிழ்-உலகச் சேதியாளன்" என்று சொல்ல மேலும் வரவேற்பு பலம் :-)
ஆமாம் தமிழ் உலகம் யார் வெளியிடுகிறார்கள் என்று சொல்ல, நான் இணையம் பற்றி விளக்கி, அதில் உலகம், மின்னிதழ்கள் சிங்கை இணையம் மற்றும் பல பற்றிக் கூற, அவர்கள் பார்த்த பார்வை "ஏதும் புரியாததாகவோ, அல்லது தமிழக தனியார் நிதி நிறுவனக்காரர்களைப் பார்க்கும் சந்தேகப் பார்வையாகவோ இருந்தது" :)
இணையத்தில் தமிழ் வளர்ச்சி, மின்னஞ்சல்கள் இவற்றிற்கு மிகவும் தொலை தூரத்தில் இருக்கும் பகுதியாக கம்பம் எனக்குப் பட்டது.
ஆயினும் சிறிது நேரத்தில் "ஏதோ இவனும் கோயிலுக்கு வந்திருக்கிறான்; வழி சொல்வோம்" என்றவாறு இல்லாமல் ஒரு அருமையான நட்பு மலர்ந்தது, அந்த அறக்கட்டளையின் தலைவர் தமிழாதவன் என்பவரோடும், அதன் உறுப்பினர்களோடும். அதோடு அப்பகுதியின் தி.மு.க முன்னால் ஒன்றியத் தலைவரும் கண்ணகி விழாவிற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்க, ஒரு ஏழெட்டுப் பேர் என்னோடு உரையாடினார்கள், தங்கள் வேலைகளெல்லாம் மறந்து விட்டு. இலக்கியம், சிலம்புச் சான்றுகள் குறித்து எனக்குத் தெரிந்த சிலவற்றை நான் பகிர்ந்து கொண்டது அவர்களை மேலும் உற்சாகப் படுத்த ஒரு இரண்டு மணி நேரம் அவர்கள் வேலையைக் கெடுத்து விட்டேன். என் சிலம்பு மடல் நூலொன்றை கையோடு எடுத்துச் சென்றிருந்தேன்;
பேர்கள் ஓரளவு படித்து விட்டுப் பாராட்டினார்கள். அனைவரும் அந்நூலை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ள உறுதி கூறி வந்தேன்.
அவர்களோடு நான் மிகவும் விரும்பும் கம்பங்கூழை குடித்தது மிகச் சுவையான ஒன்று.
எல்லாப் பேச்சுக்களும் இனிமையாக இருக்க, கண்ணகி கோயிலுக்கு இன்று
போக முடியாது, விழா நாளான நாளைதான் போக முடியும் என்று அவர்கள் சொன்ன காரணம் தமிழ் என்ற வகையில் சினத்தையும், ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டதே; திருச்சியில் மறுநாள் சில தமிழாளர்களை பார்ப்பதாக இருந்த திட்டம் வீணாகி விட்டதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.
அப்புறம் என்ன செய்வது; நேரே உலவகம் ஒன்றுக்கு அறக்கட்டளை நண்பர் வழக்குரைஞர் சரவணக் குமார் இட்டுச் சென்று அறிமுகப் படுத்த, பா.தா விழா மடல்களைப் பார்க்கவும், என் அஞ்சல் ஒன்றை உலகத்திற்கு அனுப்பவும் 2,3 மணி நேரப் போராட்டம் :-(
தங்கல் ஒன்று ஏற்பாடு செய்து விட்டு அன்றைய மாலைப் பொழுதை, தமிழாதவனோடு ஒரு நேர்காணலுக்கும், பல தரப்பட்ட மக்களோடு உரையாடவும் வைத்துக் கொண்டேன்.
எழுத நிறைய சேதிகள் இருப்பினும், உலவக வேலை நேரம் முடிகிறதாலும்,
சிறு தொடராக கண்ணகி கோயில் அனுபவங்களை எழுதி விடுகிறேன். நண்பர்கள் பொறுத்தருளவும். நிறைய புகைப்படங்கள் மற்றும் தொடர்படங்கள் எடுத்து வந்துள்ளேன்.
விரைவில் அவற்றை தமிழ் உலகிற்கு அறியத் தருகிறேன். நண்பர் ஞா.வெ அவர்களை வரும் வழியில் திண்டுக்கல்லில் சந்தித்தது மிக அருமையான வாய்ப்பு. அது பற்றியும் வரும் மடல்களில் எழுதுகிறேன்.
நாக.இளங்கோவன்
No comments:
Post a Comment