Pages

Monday, January 18, 1999

சிலம்பு மடல் 1

சிலம்பு மடல் - 1: தலைவன் தலைவி!
புகார்க்காண்டம்:
மங்கல வாழ்த்துப் பாடல்.

காப்பியத் தலைவன் கோவலனும் தலைவி கண்ணகியும் காவிரிப் பூம்பட்டினப் பெரும்வாணிகர் மரபில் தோன்றியவர்கள்.

நெடிய சுவர்க்கத்திற்கும் (நாகநீள்நகர்), நாகர் உலகிற்கும் (நாகநாடு) ஒப்பாக நீண்ட புகழும் இன்பமும் பொருந்தி விளங்கியதாம் புகார் நகரம்;

ஆங்கு, வான்மழைபோல் வள்ளல் தன்மை கொண்ட மாநாய்கன் மகளாகத் தோன்றியவள், மின்னற்கொடி
போன்ற பொலிவுடைய, பன்னிரண்டு வயதுடைய, செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி (போதில் ஆர்
திருவினாள்) யின் அழகொத்த பெண்குலம் போற்றக்கூடிய சிறந்த குணங்களால் நிறைந்த கண்ணகி;

அப்புகாரிலேயே, அரசனொடு ஒப்பக் கூடிய குடியில் பிறந்த, நாளும் பெருக்கின்ற ஒப்பற்ற செல்வம் பொருந்திய, ஈட்டும் பொருளை ஈந்து வாழும் "மாசாத்துவான்" என்ற செல்வந்தனுக்கு மகனாகப் பிறந்தவன்,
மதிமுகப் பெண்களால், 'அழகில் முருகனுக்கு ஒப்பாகக் கருதப்பட்டு', அவர்களின் காதற் கண்களால் போற்றத்தக்க பெருமையுடைய கோவலன்; வயது பதினாறாம்!

புகாரையும், இணையவிருக்கும் கோவலன் கண்ணகியையும் அவர்களின் பெற்றோர்களையும் அறிமுகஞ்
செய்கிறார் சிலம்பாசிரியர்.

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் *ஈராறுஆண்டு* அகவையாள்
அவளுந்தான்
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ;
ஆங்கு
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்;
அவனுந்தான்
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.

இரண்டு குடும்பங்களுமே பெரும் செல்வக் குடும்பங்கள். ஏழைக்காதலும், ஏழைக்கற்பும் அல்ல; இது பண
க்காரக் காதல் மற்றும் கற்பு.

ஒரு வேளை பணக்காரராக இல்லாதிருந்து, பெருங்குடி பிறந்து தாழாமல் இருந்திருந்தால் இவர்களின் கதை காப்பியமாகியிருக்குமா ?

ஏழைக்காதலுக்கும் ஏழைக்கற்பிற்கும் எத்தனை புலவர்கள் பாட்டெழுத வருவார்கள்?

மாநாய்கனையும், மாசாத்துவானையும் முறையே "வான்மழைபோன்ற வள்ளல்தன்மை கொண்டவன்",
"ஈட்டும் செல்வத்தை ஈந்து வாழ்பவன்" என்று சொல்கிறார் இளங்கோவடிகள்.

மேலும் வாணிகர் என்று சொல்கிறார் மற்றும் சுட்டுகிறார்;

இக்காலத்தில் ஈட்டிய செல்வத்தை ஈந்து வாழும் வாணிக குலத்தினர் எத்தனைபேர் ?

கோவலனுக்கு பதினாறே வயது; கண்ணகிக்கோ பனிரெண்டுதான் வயது; அக்காலத்தில் இந்த வயதுடையார் உடலால் முதிர்ச்சியடைந்து வலுவாக இருந்திருக்கக் கூடும்! ஆனால் அறிவால் 12 வயதுடைய கண்ணகிக்கும், 16 வயதுடைய கோவலனுக்கும் போதிய மனமுதிர்ச்சி இருந்திருக்குமா ?

அல்லது நடைமுறை வாழ்விலே, 20க்கும் மேற்பட்ட அனைவரும் குடும்பவாழ்விலே, சமூக சிந்தனைகளி
லும், வீரத்திலும் மனமுதிர்ந்துதான் இருக்கிறார்களா ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
18-சனவரி-1999

No comments: