Pages

Thursday, September 23, 2021

கண்ணப்பநாயனாரும் கந்தசட்டி நோன்பும்

நில்லு கண்ணப்ப! என்வலம் நில்லு கண்ணப்ப, என்று இறைவன் திண்ணப்பரை தனதடியிலேயே இருத்தி காட்சிதர அருளினன் என்றால், கண்ணப்பிய திண்ணப்பரின் குலம் செய்தவம் பெரிதன்றோ!. அன்றைய அகண்ட தமிழ்நாட்டில், திருக்காளத்திக்கு வடக்கே கிழக்குத்தொடர் மலைகளின் பேரெழிலையும் வளத்தையும் அரணாகக்கொண்ட பொத்தப்பி நாட்டில் மலைசார்ந்த உடுப்பூர் என்பது ஊர். அதன் தலைவன் வேட்டுவக் குன்றவர் குலத்தைச் சேர்ந்த நாகன். நாகனைப்பற்றிச் சொல்லும்போதே, "பெற்றியால் தவமுன் செய்தான்" என்பார் சேக்கிழார் பெருமான். உயர்ந்த மறவர் தாயத்தின் தொல்குடியில் பிறந்த தத்தை என்ற தலைவியொடு, வெஞ்சின சிங்கம் போல, வில்லாற்றலில் மிகுவலி கொண்ட நாகன், சிறந்த காதல் வாழ்க்கை வாழ்ந்தான். ஊராரைக் காத்து நின்ற நாகனையும் தத்தையையும் ஊரார் போற்றி நின்றனர், ஆயினும், மணமாகி நெடுங்காலம் ஆகியும் மகப்பேறில்லை என்ற பெருங்குறை அவரை வாட்டிக்கொண்டே இருந்தது. "இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே அரியதென்று எவருங் கூற" என்று கண்ணப்ப நாயனார் புராணத்தில் (பாடல்-10) சேக்கிழார் பெருமான் கூறும்போது, "முற்பிறப்பில் அரிய தவம் செய்திருந்த நாகன் மக்கட்செல்வமின்றி தவித்தது ஏனோ என்று கேள்வியும் எழுகிறது. உயர்ந்த பேற்றைத்தர, கந்தனருள் காக்க வைத்ததோ? நாகனும் தத்தையும், கவலை தீர, முருகனின் கால்களைக் கெட்டியாகப் பற்றினர். பிள்ளை வேண்டி, கந்த நோன்பு இருக்கத் துவங்கினர்!. "முருகவேள் முன்றிற் சென்று பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்" – (க.நா.பு-10). இன்றைக்கும் பிள்ளைவரம் வேண்டி, கந்தவாறு நோன்பு என்கிற கந்த சட்டி நோன்பு ஒரு மண்டிலக் காலம் கடைபிடிப்பது வழக்கமாக இருக்கிறது. கந்த நோன்பின்போது, நாகனும் அவன் மனைவி தத்தையும் நிதமும் முருகன் கோயிலுக்குச் சென்று பிள்ளை வேண்டி வழிபட்டு நின்றார்கள். "எனக்கு பிள்ளை கொடு, உனக்கு இன்னின்ன செய்கிறேன்" என்றும் நேர்ந்து கொள்கிறார்கள். இதை பராய்க்கடன் என்று பெரியபுராணம் சொல்கிறது. சேவற்கொடியானும் மயிலை ஊர்தியாகக் கொண்டவனுமான தங்கள் குலதெய்வம் முருகனுக்கு, தம்முடையது என்று இல்லத்தில் வளர்த்த காப்புச்சேவல்களையும், வண்ண வரிகளும் ஏழுநிறங்களும், கண்போன்ற அழகிய சித்திரங்களும் அழகு செய்யும் மயில்களை “இவை இனி எமதல்ல, உனது” என்று முருகனின் கோயிலில் சேவலையும் மயிலையும் காணிக்கையாக விட்டனர். "வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டு.." (க.நா.பு 11). இன்றைக்கும் முருகன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கும் காணிக்கை செலுத்துவது மிகப்பரவலான பழக்கம். 2000 ஆண்டுத் தொன்மம். காணிக்கையாகத்தான் விட்டார்களே தவிர, வேட்டையாடி விலங்குகளைக் கொல்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்கள், முருகன் கோயிலில் உயிர்ப்பலியிடவில்லை என்பது நம்மை உற்று நோக்க வைக்கிறது. முருகன் கோயிலின் ஒரு பகுதியிலோ, சுற்றியோ ஒலி இசைக்கும் மணிகளை தோரணமாகக் கட்டிவிடுகிறார்கள் நாகதத்தையர். காற்றில் அந்த மணிகள் தானாக ஆடி ஒலிக்கையில் எவ்வளவு இதமாக இருக்கும்? முருகனுக்கு, மணித்தோரண ஓசை, நாகதத்தையரின் வேண்டுகோளைச் சொல்லிக்கொண்டே இருக்கும் என நினைத்தார் போல!. இன்றைக்கும், கோயிலுக்கு, ஒலிக்கும் மணியை காணிக்கை செலுத்துவதும், அந்த மணிகள் கோயிலில் எண்ணிக்கையில் மிகுந்து தொங்குவதும் எளிதில் காணக்கூடிய ஒன்று. ஈராயிரமாண்டுத் தொன்மத் தொடர்ச்சி. நித்தலும் கோயிலைத் தூய்மை செய்து, மணமிகுந்த கடம்ப மலர்களால் முருகனையும் கோயிலையும் அழகு செய்துகொண்டே இருந்தனர் நாகதத்தையர். "தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றி.." (க.நா.பு-11). முருகனே கதி என்று கிடக்கும் நாகதத்தையர்க்கு ஊர்ப் பெண்டிரெல்லாம், ஒன்றுகூடி, குரவையாடி முருகனிடம் வேண்டுகிறார்கள். முருகனின் வீரத்தையும், காதலையும், அருளையும் வியந்து புகழ்ந்து பாடி ஆடி போற்றுவது குரவையாகும். மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் தொன்மம் குரவைக்கூத்தாகும். மகளிர் எழுவர் முதல் ஒன்பதுபேர் வரை கைகோர்த்து, முருகனைப் புகழ்ந்து, தொழுது, அவனை வரச்சொல்லி, வேண்டுதலைச் சொல்லி, பாடி ஆடும்போது அருகிருப்போர் உடுக்கு, பறை போன்ற தாளங்களை முழக்கி, கொம்பினை ஊதி, மணியோசை எழுப்பியும் குரவைக்கு பின்புலமாயிருப்பர்; முருகனுக்கு பூ சாற்றி நறுமண தூபம் இட்டு, தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். இன்றைக்குக் கோயிலில் ஓரமாக நடன நிகழ்ச்சி எப்போதோ நடத்துகிறார்கள். சாமிக்கு நேரே மக்களின் குரவைப்பாடல் இடம்பெற்ற இடத்தில் சமற்கிருதப் பாடல்கள் கடவுளையும் மக்களையும் பிரிக்கின்றன. நமது தொன்மம் இங்கே கெட்டுப்போய்க் கிடக்கிறது கேட்பாரின்றி. “கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்" என்ற வள்ளுவம் போல, ஊரார், நாகதத்தையரின்மேல் இருந்த அன்பினாலும், அவர்கள் நித்தலும் செய்துவந்த கடுமையான முருக நோன்பாலும், ஈர்ப்புற்று, அவர்களுக்குப் பிள்ளைவேண்டி, முருகவிழாவே எடுத்தனர். ஊரின் மதிப்பு மிக்க தேவராட்டியை சிறப்பித்து, வேலனுக்கு உகந்த இசைக்கருவிகளை இசைத்தும் முழங்கியும், தேவராட்டியின் மேல் வேலனை அழைத்து வரவைத்து, கந்தனின் அருளை நாகதத்தையர் பெறவைத்தனர் ஊரார். ஆறுமுகங்களை வருணிக்கும் திருமுருகாற்றுப்படை, அவற்றில் ஒரு முகத்தை வரம்தரு முகமாக எடுத்துச்சொல்லும். “ஒரு முகம், ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி, காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே..” என்று திருமுருகாற்றுப்படை சொல்லும் முருக இலக்கணம் புகழ் வாய்ந்தது. ஆர்வலர், அதாவது பத்தர்கள், முருகனை சரணடைந்து புகழ்ந்து வணங்கி வேண்டினால், முருகன் மனம் மகிழ்ந்து, அவர்களின் வேண்டுதல் பால் மனம் கனிந்து இரங்கி, மன மகிழ்ச்சியோடு அள்ளி அள்ளிக்கொடுப்பான். அது அவன் இயல்பு. உளமார முருகனை வேண்டி நிற்போருக்கு, “பூரணம் தருமே, நிரம்பெழில் ஆதனம் தருமே, அணிந்திடு பூடணம் தருமே, இகந்தனில் வாழ்வதும் தருமே...”, என்றும் “அண்டுந் தொண்டர் வருந்தாமே, இன்பந் தந்தருளுந் தாளா!” என்றும் குமரகுருபரதாச சாமிகளின் பஞ்சாமிர்த வண்ணம் சொல்லும். ஈராயிரம் ஆண்டுக்கு முன்பு திருமுருகாற்றுப்படை சொன்னதை, 19-20ஆம் நூற்றாண்டின் பஞ்சாமிர்தவண்ணமும் சொல்கிறதென்றால், குமரக்கடவுள் ஊழி ஊழியாய் அவன் தொண்டர்களுக்கு வாரி வாரி வழங்கிய உண்மையன்றி வேறென்ன இருக்க முடியும்? நெடுநாள் பிள்ளையில்லாமல் இருந்த நாகதத்தையர் குறிஞ்சிக் கடவுளை, தங்கள் குலதெய்வமான முருகப்பெருமானை சரணடைந்து, போற்றிப்புகழ்ந்து தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் செய்யவும், மனமுகந்த முருகப்பெருமான், அவர்களுக்கு குழந்தைவரம் அருள, தத்தை கருப்பமடைகிறாள். “கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட” (க.நா.பு-13). கருவானது உருவாகி நிலைபெற்று குழந்தையாக பிறக்கும் அந்த பத்து மாதங்களின் இன்னல்களை நன்கறிந்தறிந்த குன்றவனான நாகனின் குலம், முருகப்பெருமானால் தத்தை வயிற்றில் உருவாகிய அந்தக்கரு ஊனப்படாமல் நலமோடு வளரவும், தத்தையின் நலத்தைப்பேணவும் தேவையான காப்பு மருந்துகள் கொடுத்ததொடு, அதைவிட முக்கியமான முருகக்காப்பிற்காக அவனைத் தொடர்ந்து வழிபட்டும், பூசனைகளும், குரவை வழிபாடுகள் செய்தும் கருவைக் காக்கலாயினர். நிறைமாதத்தில், தேவராட்டியின் மேல் முருகன் வந்து ஆடும் வெறியாட்டு நிகழ்ச்சியும் செய்து, முருகனை வழிபட்டு வேண்டி நிற்க, உடுப்பூரும் இவ்வுலகமும் செய்த நற்றவத்தால், களங்கமில்லாத முழுநிலவைப்போன்ற மகவினைப் பெற்றெடுத்தாள் தத்தை. “அளவில்செய் தவத்தினாலே, பான்மதி உவரி ஈன்றால், எனமகப் பயந்த போது” (க.நா.பு-13). “திண்ணன்என் றியம்பும் என்னத் திண்சிலை வேட ரார்த்தார்” (க.நா.பு-17). திண்ணன் என்று முருகருளால் பெயர் சூட்டப்பெற்று, குழந்தை வளரும் ஒவ்வொரு பருவமும் முருகனுக்கு பராய்க்கடன் செய்த நாகதத்தையரின் தவம், திண்ணனுக்கு வில்வித்தைக் கற்றுத்தருகையில்கூட தொடர்ந்திருந்தது. ஆசானிடம் முறையாக வில்வித்தையைக் கற்று பெரியவனாக ஆகி வேட்டைக்குப் போனபோதுதான், அந்தப் பன்றி திண்ணனை காளத்திநாதரிடம் கொண்டுபோய் சேர்த்தது வரலாறு. உடுப்பூரில் முருகனருளால் கந்தவாறு நோன்பு செய்து பிறந்த பிள்ளையான திண்ணன், ஓட்ட ஓட்டமாக பன்றியின் பின்னால் ஓடி வந்து காளத்தி சேர்ந்ததை, உடுப்பூருக்கும் காளத்திக்கும் இடையே நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் திருப்பதி என்ற திருமலையில் நிற்கும் நெடியோன். அப்பனுக்கு பாடம் சொன்ன அந்த சுப்பன், நாகனுக்கும் தத்தைக்கும் அருளிய பிள்ளைதான் பின்னாளில் சுப்பனின் அப்பனுக்கு திருத்தொண்டராகிறான். சிவனின் அறுபத்திமூன்று திருத்தொண்டர்களில் ஒரு தொண்டரை நாகதத்தையர்க்கு அருளி சொலற்கரிய பெரும்பேற்றினை முருகன் அருளுகிறான். வேலன், நாகதத்தையர்க்கு பிள்ளை அருளினானா? அல்லது அவன் அப்பன் சிவனுக்கு திருத்தொண்டரை அருளினானா? திருத்தொண்டர் ஒருவரை படைக்க நாகதத்தையர்க்கு நெடுங்காலம் பிள்ளையில்லாமல் இருந்ததா? அப்படிப்பட்ட பிள்ளையைப்பெற நாகனும் தத்தையும் முன்செய்த தவமென்ன? என்றெல்லாம், என்றைக்கும் மனம் நிறைய சிந்திக்க வைப்பது நாகதத்தையரின் கந்தவாறு நோன்பு என்கிற கந்த சட்டி நோன்பும் கண்ணப்ப நாயனாரும். அன்புடன் நாக.இளங்கோவன் (கனடாவில் வைத்தீச்சுரம் என்ற இதழிற்காக எழுதிய கட்டுரை)

No comments: