Pages

Tuesday, April 27, 2021

நட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும் சூழ்ச்சியும் பிறவும்

நட்சத்திரப் பெயர் என்ற பேதைமையும், சூழ்ச்சியும் பிறவும். ஒரு குழந்தை பிறந்ததும், அதன் அப்பா, அம்மா, அப்பம்மா, அப்பப்பா, அம்மம்மா, அம்மப்பா, நாத்தனார், கொழுந்தனார், ஓர்ப்படியார், மாமா, அத்தை என்ற உறவுகள், குழந்தைக்குப் பெயர் வைக்க, படும் பாடு இருக்கிறதே! சொல்லிமுடியாது. தமிழ்நாட்டின் இளையதலைமுறையின் தவிப்புகள் நிறைய. புதுமையான பெயர் வேண்டும் என்று தவறான வடமொழிப் பெயர்களை வைப்பவர் ஒரு சாரார். திரைப்பட நடிக நடிகையரின் பெயர்களை வைத்து பெருமிதம் கொள்பவர் ஒரு சாரார். அரசியல் தலைவர்களின் பெயர்களை வைப்பவர் இன்னொரு சாரார். குலசாமி பெயரை வைக்கும் மரபு, பிறசாமிகளின் பெயர்களை வைக்கும் பழக்கம், பாட்டன் பாட்டி பெயரை பேரப்பிள்ளைகளுக்கு சூட்டும் மரபு, அல்லது பொதுவாக மலர், பயிர், ஆறு, கடல், தங்கம், மணி போன்ற இயற்கையின் பெயர்களை சூட்டும் வழமை, அல்லது பொருள் பொதிந்த ஏற்றமிக்க பெயர்களை சூட்டும் எண்ணங்கள் ஆகியவை குறைந்து போயின. என் தந்தையார் தலைமுறை வரை முன்னோர்களின் பெயர்கள் எங்கள் குடிக்குள் தொடர்ந்து வந்தன. இன்றைய இளையதலைமுறையில், "அழகான பெயர் வேண்டும், அதில் புதுமை வேண்டும், அதுவும் தமிழில்தான் வேண்டும்" என்பவர் மிகப்பலர். இவர்கள் படும்பாடுதான் பெரியது. "பேர் நல்லாத்தான் இருக்கு - ஆனால், முதலெழுத்து நட்சத்திரப் பேரா இருக்கணும்". சோதிடரைக் கேட்டேன் - ட, டா, டெ,டே யில் தொடங்கறமாதிரி பேர் வையுங்க என்று மாமியார் சொல்றாங்க. அதில் தொடங்கற மாதிரி நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்களேன் என்று கேட்பவர்களும் உண்டு. கூகிளையும், பொத்தகங்களையும், சோதிடர்களையும் தேடி அலைபவர்கள் உண்டு. தமிழில் இல்லை, ஆனால், ட, டா, டெ, டே தான் வேண்டுமெனில், டப்பா, டால்டா என்றுதான் பழக்கமான பெயர்கள் கிடைக்கும் என்று எப்படி ஆர்வத்துடன் அலையும் இளையதலைமுறையிடம் சொல்ல முடியும்? ட,டா,டெ,டே யில் தமிழில் எந்தச்சொல்லும் தொடங்காது என்பதொடு, இப்பொழுதெல்லாம் ஆங்கில எண் கணியத்தின்படியும் (numerology) இருக்க வேண்டும் என்று இவர்கள் தங்களைப் படுத்திக் கொள்ளும் பாடு இரங்கத்தக்கது. பல ஆயிரம் நல்ல பெயர்களுக்குள் நட்சத்திரப் பெயரைத் தேடி, சிலவற்றைக் கண்டுபிடித்து அதன்பின், எண் கணியத்துள் முக்கியடித்தால் கடைசியில் நல்ல பெயர் ஒன்றுகூட தேறாத நிலையில் பலர் தவிப்பதுண்டு. பலபேரின் தமிழ்ப்பெயர் வைக்கும் ஆர்வம் இந்த நட்சத்திரப்பெயர், எண்கணியப் பெயர் என்ற இரண்டினாலும் பட்டுப்போகிறது என்பது வருத்தமான விதயம் அல்லவா? அதனால்தான் இந்தக் கட்டுரை. இது மிகப் பிற்காலத்தில், வட சனாதனத்தை உள்வைத்த கொத்தடிமைக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிய போது, பரவிய பழக்கம். சரி - எதற்காக இந்த முறை உருவாக்கப்பட்டது? பெயரின் முதலெழுத்துக்கும் அவரின் வாழ்க்கைக்கும் ஏதாவது தொடர்புண்டா? நட்சத்திரப்பெயரை அறிவுறுத்தும் சோதிடர்கள் யாரேனும், அப்படிப் பெயர் வைப்பதால், சாதகரின் சென்ம, கோட்சார பலன்கள் மாறி ஏற்றம் தரும் என்று சொல்ல முடியுமா? ஓர் எழுத்து சோதிடக் கட்டங்களின் இராசிநிலையின் பலன்களை மாற்றி எழுதிவிடும் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது. சில சோதிடர்கள் நட்சத்திரப்பெயர்களை அறிவுறுத்துவதில்லை. கேட்பவரின் நெருக்கடி தாங்காமல் ஏதோ சொல்பவர்களும் உண்டு. 12 இராசி மண்டிலங்களில் அமையும் 27 நட்சத்திரங்களை வரிசையாக சந்திரன் கடந்துவரும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உண்டு. ஆக 27x4 = 108 நிலைகளை, ஒரு சுற்றில் சந்திரன் கடக்கும். பிறக்கும் போது சந்திரன் எந்த நிலையில் இருக்கிறதோ அதுவே ஒருவரின் நட்சத்திரமும் நட்சத்திர பாதமுமாகும். அந்த நட்சத்திரம் இருக்கும் இராசியே அவரின் இராசி. 1) இப்படி இந்த 108 பாதங்களுக்கும், ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு எழுத்து என்று இட்டுக்கட்டிய குறியீடுதான் (Id அல்லது Cryptic Code) நட்சத்திர எழுத்து. ஆக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 எழுத்துகள் வரும். இந்த எழுத்து வரிப்புக்கு (Mapping) எந்த ஏரணமும் கிடையாது. 2) இந்தக் குறியேற்றம் ஏன் செய்யப்பட்டது என்பதுதான் கேள்வி! அந்தக்காலத்தில் பண்ணையார், சமீன், சிறு குறு பெரு நில மன்னர்களுக்கு வேலைக்கு, குறிப்பாக அடிமை வேலைக்கு ஆள்கள் தேவை. சாதாரண பொதுமக்களிடம் தக்கமுறையில் எழுதப்பட்ட சோதிடக்குறிப்பு இருக்காது. ஆக, பிள்ளை பிறக்கும்போது, இருக்கும் கோள்நிலையை வைத்து, இந்த இராசிக்கு இன்ன முதலெழுத்து என்று வைத்துவிட்டால், அதுவே அப்பிள்ளையின் இராசிக்குறியீடும் ஆகிவிடுகிறது. மோ என்ற எழுத்தில் அவன் பெயர் தொடங்குகிறதா, அப்படியானால், பூர நட்சத்திரக்காரன். போ என்பது உத்திராடம்; என்று இராசியை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பின்னர் கோட்சாரப்படியும், ஒரு ஆளின் குத்துமதிப்பான வயதையும் கொண்டு, இவனுக்கு என்ன திசை, புத்தி இருக்கும் என்று கணிக்க முடியும். இவனுக்கு ஏழரை, அவனுக்கு அட்டமச்சனி, இன்னொருத்தனுக்கு 10ல் குரு என்று இப்படி மேம்போக்கான சில கணிப்புகளைச் செய்து, இவன் அடிமையாக, கொத்தடிமையாக இருப்பானா? முதலாளி சொல்வதை அப்படியே கேட்பானா? என, இந்த எழுத்துக்குறியீட்டை வைத்து தேவையான அடிப்படைக் கணிப்பை செய்துவிட முடியும். சோதிடத்தால் இப்படி முடியுமா முடியாதா என்பதெல்லாம் வேறுவிதயம். ஆனால், இப்படி ஒரு போக்கு இருந்தது. இதனை ஆன்மீகம் என்ற வகையில் பரப்பிவிட்டதால், ஆண்டான்-அடிமை முறை நிலைக்க ஏதுவானது. இதனால்தான் இதை வடக்கத்திய சனாதன முறை என்று குறிப்பிட்டேன். இந்தக்காலத்திலேயே, செயலலிதா அம்மையார் தனக்குத் தோதானவர்களை தேர்வு செய்ய, வேட்பாளர்களை தேர்வு செய்ய, அவர்களின் சோதிடக் கட்டங்களைத்தான் நம்பினார். இல்லாவிடில் இப்படி சீரான அடிமைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லுபவர்கள் உண்டு. அவ்வளவு ஏன், தமிழக பா.ச.கவின் அறிவு-சார் துறையின் தலைவர் செல்வி என்ற சோதிடர்தானே! அவர் அங்கே உட்கார்ந்து கொண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோள் ஏவிக்கொண்டிருக்கிறாரா? அண்ணாமலை மாதிரி ஆள்களுக்கு சோதிடம் பார்த்து கட்சிக்கு ஆள், அடிமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் 🙂 3) ஆக, அடிமைகளை அடையாளங்காண உருவாக்கப்பட்ட நட்சத்திரப்பெயர் என்ற எழுத்தடையாளம் உங்களுக்குத் தேவையா? 4) நட்சத்திர எழுத்து என்பது அந்தக்கால ஆதார்-குறியீடு. அதைவைத்து உங்கள் அகங்களை சற்று ஆராய செய்யப்பட்ட ஏற்பாடே நட்சத்திரப்பெயர் என்பது. உங்களின் அகத்தை புறத்தாரிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும் நட்சத்திரப்பெயர் உங்களுக்குத் தேவையா? 5) முகேசு அம்பானியின் நட்சத்திரம் மூலம்(4). அவருக்கு விதிக்கப்பட்ட முதல் எழுத்துகள் யே, யோ, ப,பி. ஆனால் அவரின் பெயர் மு-வில் தொடங்குகிறது. நட்சத்திரப் பெயர் அல்ல. சிவாசிராவ் என்ற இரயினிகாந்தின் நட்சத்திரம் திருவோணம். Ju, JE, JO, கா என்பன திருவோணத்தின் முதல் எழுத்துகள். அவரின் பெயரும் நட்சத்திரப் பெயர் அல்ல. அவர் நன்றாக இல்லையா? செயலலிதா அம்மையாரின் நட்சத்திரம் மகம். மகத்திற்கான முதலெழுத்துகள் ம, மு, மி, மெ. சோதிடத்தை அதிகம் நம்பும் அவரின் பெயரே நட்சத்திரப் பெயராக இல்லை. வாழ்க்கை நலன்களுக்கும் நட்சத்திரப்பெயருக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? பிறகு ஏன் இந்த நட்சத்திரப் பெயருக்கு பேயலைச்சல்? 6) சிலர் நரேந்திர மோதி தன் அணுச நட்சத்திரத்திற்கான முதலெழுத்தான ந-வை கொண்டுள்ளதால் ந.மோ சிறப்படைந்தார் என்று சொல்லக்கூடும். அவர்களிடம், "சுவாமிநாதன் என்ற இயற்பெயருடைய, மகாபெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சாமிகளும் அணுச நட்சத்திரத்தில் பிறந்தவர்தானே, அவருக்கு ஏன் நட்சத்திரப்பெயரை அவர்களின் பெற்றோர் சூட்டவில்லை" என்று கேளுங்கள். 7) தமிழ் உயிரெழுத்துகளில் ஐந்தை (அ, இ, எ, உ, ஒ) மட்டுந்தான் நட்சத்திரப்பெயரில் பயன்படுத்துவர். உயிர்நெடில் கிடையாது. முருகனின் நட்சத்திரம் கார்த்திகை என்பர். கார்த்திகைக்கு எழுத்துகள் அ,இ,எ,உ. நன்கு கவனிக்க; ஆ கிடையாது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு ஆறுமுகம் என்று பெயரிட நட்சத்திரப் பெயர் இடம் தராது 😉 ஆயினும் சோதிடர்கள் பெரிய மனது பண்ணி, அ வருதில்ல, அதனால் ஆ போட்டுக்கலாம் என்று சொல்லி அனுப்புவார்கள் 🙂 இந்தோ ஐரோப்பிய மொழியான ஆங்கிலத்தில் a, e, i ,o ,u என்ற ஐந்து உயிர்கள்தான் உண்டு. குறில் நெடில் கிடையாது. அதே போல, இவர்கள் ஐந்தே ஐந்து உயிர்களை மட்டும் வைத்திருப்பது கவனிக்கத் தக்கது. 😎 சிவனின் நட்சத்திரம் ஆதிரை என்பர். ஒரு நாமம் இல்லாதான் அவனுக்கு ஆயிரம் திருநாமம் என்பார். ஆதிரைக்கு அத்தனை எழுத்துக்குறியீடுகள் உண்டா? பெருமாளுக்கு திருவோணம், ஆண்டாளுக்கு பூரம். இவர்களுக்கு நட்சத்திரப் பெயர் ஏன் இல்லை? தெய்வங்களை நம்புவோர்க்கு தெய்வங்களை விட உயர்ந்தது வேறில்லை. தெய்வங்களுக்கும் நட்சத்திரமுண்டு என்று நம்புவோர், நட்சத்திரப்பெயர் என்றொன்று கிடையாது என்று நம்பவேண்டும். 9) http://astromaster05.blogspot.com/p/blog-page_7385.html என்ற இந்தத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை, இதன் மூலமான https://en.wikipedia.org/wiki/List_of_Nakshatras என்ற தளத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள் நண்பர்களே. இந்தி/சமற்கிருத ச, க எழுத்துகளுக்குப் பல வடிவங்கள் உண்டு. இங்கே நம்மூரில் உத்தரட்டாதி நட்சத்திரத்திற்கும் இரேவதி நட்சத்திரத்திற்கும் "ச" என்ற எழுத்து வருவதைக் காண்க. ஆனால், மூல இந்தி/சமக்க வடிவங்களில் இரண்டு ச-கரங்களும் வடிவிலும் ஒலிப்பிலும் வேறுபட்டிருப்பது காண்க (uttara bhadrapada, Revati) . இதேபோலத்தான், அவிட்டத்திற்கு வரும் க-விற்கும், திருவாதிரைக்கு வரும் க-விற்கும் மூலத்தில் வேறுபாடு உண்டு (घ Gha, गा Ga). வடக்கத்தி ஆளுகளின், Gha, Ga என்ற இரண்டு ஒலிப்பையும் க என்ற தமிழோடு கோத்துவிடுகிறார்கள். இருவேறுபட்ட நட்சத்திரக்காரர்களுக்கு ஒரே எழுத்தை வைப்பது எப்படி உங்களின் பலத்தை கூட்டமுடியும்? இதேபோல நிறைய முரண்பாடுகளைப் பார்க்க முடியும். இது முரண்பாடு மட்டுமல்ல, மிக மோசமான சூது. ஆகவே, மக்களை முட்டாளாக்கும் இந்த நட்சத்திரப்பெயரிடும் கொத்தடிமை முறையில் இருந்து வெளியே வாருங்கள். பைத்தியமும் முட்டாளும் ஒன்றாகச் சேர்ந்து செய்த பெயர் முறைதான் இது. நல்ல சோதிடர்களும் நட்சத்திரப்பெயர் என்று மனசாட்சிக்கு ஒவ்வாத ஒன்றை மக்களுக்கு அறிவுறுத்த வேண்டாம். இதற்கு மேலும் நட்சத்திரப் பெயரில் நம்பிக்கையை ஒருவர் வைப்பாரெனில் அவரின் சோதிடக்கட்டத்தில் கேதுபகவானின் நிலை மோசமான நிலை என்றே சொல்ல வேண்டும் 🙂 🙂 ..... அன்புடன் நாக.இளங்கோவன்

No comments: