Pages

Friday, May 16, 2014

தேர்தல் 2014: மோடியும் வெற்றி, பெருநிறுவனங்களும் வெற்றி!


பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக, எடுபிடிகளாகச்
செயல்பட்ட காங்கிரசு அரசின் கொள்ளைகள், நிர்வாகக் கேடுகள்,
அவர்களுடன் கூட்டணி வகித்தவர்களின் வெட்கங்கெட்டச் செயல்பாடுகள்
ஆகியவற்றால் மக்கள் வெறுப்புற்றனர் என்பது உண்மைதான்.


இயல்பாகவே, மாற்றத்தைத் தேடுபவர்களின் தாக்கம் இருந்ததும்
உண்மைதான்!

ஆனால், இவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாக உருக்கொடுப்பவர்கள்,
இந்தியாவின் பெருநிறுவன முதலாளிகளும், பன்னாட்டுப் பெருநிறுவனங்களும்தான்.

2004ல் காங்கிரசு சிறுபாண்மை ஆட்சி அமைத்த பின்னர், 2009ல் சற்று வசதியான சிறுபாண்மை ஆட்சி நடத்த உதவியாக இருந்தது, இத்தாலி சோனியாவும் பஞ்சாபு சிங்கம் மண்மோகனும், பெருநிறுவனங்களுக்கும்,
வீழ்ந்து கிடந்த அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரத்துக்கும் பேருதவியாக
இருந்ததுதான். 2009ல் காங்கிரசு ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தல் முடிவுகள் சொன்னபோது, இன்றைக்குப் பங்குச் சந்தைகள் பேரெழுச்சியாக
எழுந்ததைப்போன்றுதான் அன்றும் எழுந்தன.

கடந்த வருடத்தின்  செப்புடெம்பர், அக்குடோபர் மாதங்களே இன்றைய தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன. பா.ச.கவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்வைக்கப்பட்ட காலம் அது. முதலாளிகளின் முன்னார் நின்ற வேட்பாளர்கள், மோடியும், இராகுலும். இதில் முதலாளிகள் மோடியைத் தேர்ந்தெடுத்தனர்.

அன்று முதல்,  தேர்தல் களத்தில் அயராது வேலை செய்தவர்கள் முதலாளிகளே. நான் சொல்வதில் ஐயம் இருப்பின், நீங்கள் வணிக உலகின் முகமாக இருக்கும் பங்குச் சந்தை நிலவரத்தைக் காணலாம்.

கடந்த செப்புடெம்பர் துவக்கத்தில், பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு, 5100+ அளவில் வீழ்ந்து கிடந்தது.  இந்தியப் பண மதிப்பும் பாதாளத்திற்குச் சென்று 69 உரூவாயை எட்டியது.

இன்று, முதலாளிகளின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அதே நிப்டி குறியீடு 7500+ தொட்டது. டாலருக்கு எதிரான இந்திய பண மதிப்பு
உயர்ந்து 58.5ஆனது.

ஆகவே, காங்கிரசு கூட்டணியின் கொள்ளை, நிருவாகக் கோளாறுகள், விலைவாசி என்ற அனைத்தும் மோடியின் குளத்தில் நீரைச் சுரந்தன
என்றாலும், அதனை அலையாக மாற்றியவர்கள் பெருமுதலாளிகள் ஆவர்.


இந்தக் குளத்தில் இவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மீன் பிடிப்பர்.

இயற்கை வளம், கனிம வளம் ஆகியவற்றைக் காப்பாற்ற எண்ணுபவர்களுக்குச் சோதனைகள் அதிகமானால் அது வியப்புக்குரியதல்ல.

அன்புடன்
நாக.இளங்கோவன்







No comments: