தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) 10
ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம், கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலை) மிகச் சிறப்பாக
நடந்தது.
கொண்டாடப்படவேண்டிய கொண்டாட்டம் என்ற மன நிறைவு.
முன்னணி விக்கிப்பீடியர்கள், இணைய நண்பர்கள் என்று பலரையும்
சந்திக்க முடிந்தது.
விக்கிப்பீடியா என்பது ஆர்வலர்கள் உருவாக்கிய அறிவுத்தளம்.
ஒரு குமுகம் தன்னுள் கொண்டுள்ள தொன்மையான அறிவு, பிறரிடம் கற்ற அறிவு, உலகில் தொடர்ந்து
காணுகின்ற அறிவு ஆகியவற்றைத் தனது நிகழ்கால, வருங்காலத் தலைமுறைக்காகத் தேக்கி வைக்கும்
இடமே விக்கிப்பீடியா.
ஆங்கில விக்கிப்பீடியா, என்ற ஆர்வலர் உருவாக்கும்
அறிவுத் தளம், பரந்த ஆங்கில உலகின் பன்னூறு நிறுவன அறிவுத் தளங்களை, மூலமாக(source),
துணையாக(support material), செம்மைக்குச் சாட்சியாகk
(reference & verification) கொண்டுள்ளது. உலகின் அறிவு நிலையங்கள் உருவாக்கும்
படைப்புகள், இணைய வழியே அறியக் கிடந்து, ஆர்வலர் தளமான விக்கிப்பீடியாவில் உள்ளிடுவதற்கும்,
உள்ளிட்டவற்றை செம்மை செய்வதற்கும், புதியன உருவாக்குவதற்கும், பல நிறுவன, பிற ஆர்வலர்
தளங்களை ஒருங்கிணைக்கவும் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கின்றன.
இவ்வழி, தமிழ் இணைய வளர்ச்சியைப் பார்க்குங்கால்,
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி என்பது “ஆர்வலர் தமிழ்” வளர்ச்சி ஆகும்.
“நிறுவனத் தமிழ்” என்பது, அதிகாரப்பூர்வமான கல்வி
நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்ற தமிழக அறிவு நிறுவனங்கள் தமது அறிவுச் செல்வங்களை
இணைய வழி, பலரும் பயனடையப் படைப்பதாகும். தமிழ்நாட்டில் 15-20 பல்கலைக்கழகங்கள், ஆய்வு
நிறுவனங்கள், தனியார் கல்வியகங்கள் என்று பல்கிப் பெருகியிருக்கின்றன. அவை தமிழ் மொழி
மட்டுமல்லாது பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. ஆனால், பயனுள்ள அறிவு வளங்களை
எந்தக் கல்வி நிலையமும் இணையத்தில் வெளியிடுவதில்லை. தமிழ் மொழி சார்ந்த படைப்புகள்
சிலவற்றை, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிடுவதைத் தவிர, அதிகாரப்பூர்வமான நிறுவனங்கள், அதிகாரப்பூர்வமான மொழி, நுட்பம் சார்ந்த
படைப்புகள் எதையும் வெளியிடுவதில்லை. ஆகவே நிறுவனத் தமிழ் என்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சுழிக்குப் பக்கத்தில் இருக்கிறது.
இணையத் தமிழ் வளர்ச்சி என்பது, ஆர்வலர் தமிழ், நிறுவனத்
தமிழ் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று மூலமாகவும், ஆதரவாகவும், அவற்றின் செம்மைக்குச்
சாட்சியாகவும் இருந்தே பல்கிப் பெருக முடியும்.
தமிழ் இணையத்தில் நிறுவனத் தமிழ் என்பது சொல்லிக்
கொள்ளுமளவிற்கு இல்லையென்ற நிலையிலும், ஆர்வலர்களால், தமிழ் விக்கிப்பீடியா என்ற அறிவுத்
தளம் இந்த அளவிற்குப் பெருகியிருக்கிறதென்றால் இவ்வளர்ச்சி மிகப் பெரும் சாதனை ஆகும்.
விக்கிப்பீடியர்கள் சிறந்த கட்டொழுங்குடைய தமிழ்-விக்கிக்
குமுகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதே வேளையில், நிறுவனத் தமிழ் இணைய வளர்ச்சி உருவாக,
இது ஓர் உந்துதலாக அமையுமானால் அதை விடச் சிறந்த பயன் வேறொன்றுமிருக்க முடியாது. ஆங்கில
உலகில் நிறுவனப் படைப்புகள் பெருகிய பின்னர்தான்
ஆர்வலர் படைப்பான ஆங்கில விக்கி உருவானது. ஆனால் தமிழுக்கு இது தலைகீழ். அந்த வகையில்
விக்கிப்பீடியர்களின் உழைப்பு மகத்தானது.
முன்னணி விக்கிப் பீடியர்கள், உள்ளிடுவதை விட, தமிழக
அறிவு நிலையங்களுடனும், சிந்தனையாளர், குமுக அக்கறையாளர் மன்றங்கள் போன்றோருடன் தொடர்புகள்,
ஒருங்கிணைப்புகளில் அதிகக் கவனம் செலுத்தினால்,
அவர்கள் இதுவரை உழைத்தவற்றைப் பல்கிப் பெருகச் செய்வதாக அமையும். இதற்கான சிந்தனைகளையும்,
உத்திகளையும் விக்கிப்பீடியர்களின் உரைகளில் இருந்து அறிய முடிந்தது. மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பெரிய ஆலோசனைகள் இவர்களுக்குத் தேவையிருக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், பல வாய்ப்புகளையும் ஆர்வலர்களையும் இவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் போதும்.
மீண்டும், தமிழ் விக்கிப்பீடியர்கள் வெறும் படைப்புகளை
உள்ளிட்டுக் கொண்டிருக்கவில்லை – மாறாக, கட்டொழுங்குடைய குமுக மரபை, ஒழுக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தன்னலமற்ற குழு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் விக்கிப்பீடியா!
வாழ்த்துகளும்
பாராட்டுகளும் நண்பர்களே!
அன்புடன்
நாக.இளங்கோவன்
29/09/2013
3 comments:
மிக்க நன்றி இளங்கோவன். நாளொன்றுக்கு 1,75,000 முறை பார்க்கப்படும் தளமாக தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்துள்ளது என்பதும், ஒரு கூட்டுழைப்புக் குமுகம் வளர்ந்து வருகின்றது என்பதும் மகிழ்ச்சியான செய்தி. செல்லவேண்டிய தொலைவு அதிகம் இருந்தாலும், சரியான பாதையில் செல்லுகின்றோம் என்னும் நன்னம்பிக்கை இருக்கின்றது.
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா!
நம்மவர் பங்களிப்புகள் தூண்டப்பட வேண்டும் என்பதே என் கருத்து இதை ஒரு இயக்கமாக செய்ய வேண்டும்...
நல்ல பதிவு
Post a Comment