கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
சென்னை
சென்னையில்
2012 டிசம்பர் 16 ஆம் நாள் ஞாயிறன்று நடைபெற்ற கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் பின்வருமாறு.
1. அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்வதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறையில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பிரிவை அமைத்து , கணினித் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தி மின்-ஆளுகை, மின்கல்வி, மின்வணிகம் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கவும் அம்மென்பொருள்களைச் சந்தைப்படுத்திட வகை செய்யும் அரசாணைகளை வெளியிடவும் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.
2. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு செய்ய ஒருங்குகுறி எழுத்துருக்களையே பயன்படுத்த வெளியிட்டுள்ள அரசாணைநடைமுறைப் படுத்தப்படவேண்டும். ஒருங்குகுறி சேர்த்தியத்தால் (UNICODE CONSORTIUM) தமிழுக்கு அளிக்கப்பட்டுள்ள 128 இடங்கள் போதாது. தமிழின் அனைத்து எழுத்துகளுக்கும் இப்போது இடம் கிடைக்கும்வகையில் வல்லுநர் குழுவினரால் உருவாக்கி அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள TACE (TAMIL ALL CHARACTER ENCODING) குறியீட்டுமுறையை ஒருங்குகுறி சேர்த்தியம் ஏற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது. .
3. தமிழகத்தில் இயங்கும் அனைத்து வணிக நிறுவனங்களும் தாங்கள் விற்கும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய கையேடுகளை (USER MANUAL) தமிழிலும் உருவாக்கவேண்டும். விற்பனையில் அளிக்கப்படும் பெறுதிச்சீட்டு (RECEIPT) உள்ளிட்ட அனைத்துக் குறிப்புச் சீட்டுகளையும் தமிழிலேயே அளிக்கவேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்துச் செல்பேசிகள், கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மென்பொருளை உள்ளீடு செய்தே விற்பனை செய்யவேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குச் சில வரிவிலக்குகளை அளித்து அவற்றை ஊக்குவிக்கத் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.
4. கணினித் தமிழ் வளர்ச்சிக்கான மனிதவளத்தைப் (HUMAN RESOURCE) பெருக்கவும், மென்பொருள் (SOFTWARE) நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ் ஆய்வை மேற்கொள்ளவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்தமிழ்க்கணினிமொழியியல் புலங்களை நிறுவவேண்டும். பிற பல்கலைக்கழகங்களிலும் இதற்கான படிப்பு, ஆய்வுகளைத் தொடங்க வழிவகுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.
5. சொல்லாளர் (WORD PROCESSOR) மென்பொருளிலிருந்து தானியங்கு மொழிபெயர்ப்பு மென்பொருள் (MACHINE TRANSLATION SOFTWARE) வரை அனைத்து வகை மென்பொருள்களும் தமிழில் விரைந்து உருவாக்கப்படவேண்டும். தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அளிப்பதற்கு மென்பொருள் நிறுவனங்களுக்குத் தேவையான ஊக்கமளிக்குமாறு தமிழ் நாடு அரசைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வேண்டிக்கொள்கிறது.
6. தமிழகத்தில் மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் பிற வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் கணினி உட்பட அனைத்து மின்னணுக் கருவிகளிலும் கணிப்பொறிகளிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும். இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஒன்று என்று கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை வலியுறுத்துகிறது.
7. தமிழை முழுமையாகவும் பிழையின்றியும் பயன்படுத்தும் வகையில் சொற்பிழைதிருத்தி (SPELL CHECKER) , தமிழக அரசின் ஆட்சிச் சொல்லகரமுதலி / மாதிரி வரைவுகள் (MODEL DRAFTS) ஒருங்குகுறி (UNICODE) எழுத்துரு மாற்றி (FONT CONVERTER) ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளைத் தேர்ந்து தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கணிப்பொறிகளிலும், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிகணினிகளிலும் உள்ளீடு செய்வதற்கு வகைசெய்ய, தக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது,
மாநாட்டுக்குழு சார்பாக
பேரா.தெய்வசுந்தரம்
No comments:
Post a Comment