Pages

Sunday, December 16, 2012

கணி(னி)த் தமிழ் வளர்ச்சி மாநாடு - 16-திச-2012

இலயோலா கல்லூரியில் நிகழ்ந்த இந்த ஒருநாள்
மாநாடு கணித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான
சிறந்த வெற்றிகளைப் பெறத்துவங்கியிருக்கிறது.
கணி ஊழியில் தமிழ் வளர்ச்சி என்பதும் கணித்தமிழ்
வளர்ச்சி என்பதும் வேறு வேறு அல்ல. கணித்தமிழ்
வளர்ச்சியே தமிழ்வளர்ச்சி, தமிழ்வளர்ச்சி என்பதே
கணித்தமிழ் வளர்ச்சி என்பதைத் தமிழ்க்குமுகம்
நன்கு புரிந்து கொண்டு செயல்பட்ட காட்சியே
இம்மாநாடாகும்.

மக்கள், மாணவர், தமிழறிஞர், கணிநுட்பியலர்,
பிற துறை நுட்பியலர், ஊடகத்தினர், ஆர்வலர்
என்ற பல்வேறு தரப்போடு, தமிழ்நாட்டரசின்
தமிழுக்குப் பொறுப்பான அத்தனை அதிகாரிகளும்
பங்குகொண்டு நம்பிக்கையளிக்கும் செயல்திட்டங்களை
நடைமுறைப் படுத்த அணியமாக இருந்ததைக்
காணமுடிந்தது.

கணித்தமிழ் வளர்ச்சி என்பது வெறும் நுட்பியல்
பயன்பாடுகளால் மட்டுமே வளர்த்துவிடமுடியாது.
அதேபோல மொழியின் மேன்மை மட்டும்
வளர்த்துவிடமுடியாது. இரண்டும் சேர்ந்தாலும் கூட
குமுக விழிப்புணர்வும், அரசாங்கத்தின் முன்னெடுப்பும்
கைகூடும்போதுதான் உண்மையான வளர்ச்சியை
எட்டமுடியும்.

அந்த வகையில், நுட்பம், தமிழ்மொழி, குமுகம்,
அரசாங்கம் ஆகிய நான்கு நிலைகளையும்
நன்கு ஒருங்கிணைக்கும் கூரிய செயல்திட்டத்தை வைத்து
இம்மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, அது ஆற்ற
எண்ணிய பணியைத் திறம்படச் செய்ய வைத்ததற்காக
மதிப்பிற்குரிய பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களை
மனமாரப் பாராட்டவேண்டும்.

பேரா.தெய்வசுந்தரத்தின் வரவேற்புரையையடுத்து
தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர்,
முனைவர் மூ.இராசாராம் அவர்கள் மாநாட்டைத்
துவக்கி வைத்து கணித்தமிழுக்கு ஊக்கமளிக்கும்
உரையாற்றினார்.

தொடர்ந்து தொடக்கவிழாவில்,
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர்
அருள் நடராசன் அவர்களின் செறிவான உரை
மாநாட்டின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து மின்னணுக்
கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு என்ற தலைப்பில்
கருத்தரங்கு நடைபெற்றது. முனைவர் இராம.கி
அவர்களின் தலைமையில் பல்வேறு துறையினர்,
பல்வேறு கோணங்களில் கணித்தமிழ் வளர்ச்சி
பற்றி எடுத்துரைத்தனர்.
மதிய உணவு முடித்து நடந்த அமர்வு
பல்கலைக்கழகங்களின் படையெடுப்பாகவே
நடந்தது. பேரா.பொன்னவைக்கோ அவர்களின்
தலைமையில் இவ்வமர்வு சிறப்புற நிகழ்ந்தது.

நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய
தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர்
அவர்களின் உரையும், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்
கோ.விசயராகவனின் உரையும், தமிழ்நாட்டரசு செய்ய
எண்ணியிருக்கும் கணித்தமிழ் வளர்ச்சித்திட்டங்களை
எடுத்துரைப்பதாகவும், அரசின் தொலைநோக்கு
எண்ணங்களைப் பகிர்வதாகவும் இருந்தது.
அவர்களின் உறுதி மிகுந்த உரை பல்வேறு
திட்டங்களைக் கணித்தமிழ் வளர்ச்சிக்குக் கொண்டு
வரும் என்ற நம்பிக்கையை மேலும் ஊட்டியது.

அமர்வுகளில் மேடையில் பங்குபற்றிய அனைத்து
அறிஞர்கள், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள்
கருத்துகளை மிகச்சுருக்கமாக, பல்வேறு கோணங்களில்
எடுத்து வைத்தயாவையும் மிக வலுவானவை.
தொலைநோக்குடையவை. தனியே எழுதினால் நீளும்.

எந்தத்துறையினர் பங்குபெறவில்லை?
எந்த அமைப்பினர் பங்குபெறவில்லை?
என்று தேடித்தான் பார்க்கவேன்டும் என்றளவிற்கு
மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது எனலாம்.

இந்த மாநாடு ஆகத்து மாதத்தில் இருந்து
திட்டமிடப்பட்டது. ஆக-26 அன்று பேரா.தெய்வசுந்தரம்
எழுதிய அஞ்சலில் இதற்கான பணிகள் தொடங்கின.
செபுதெம்பர் 23 அன்று சென்னையில் கருத்துரை
கேட்புக் கூட்டம் நிகழ்ந்தது.

3 மாதங்களுக்கும் மேலாக  ஏறத்தாழ 10 நாள்களுக்கு
ஒருமுறை நடந்த கலந்தாய்வுக்  கூட்டங்கள்
ஒவ்வொன்றையும் நுண்ணியமாகத்
திட்டமிட்டன.

திச-5 அன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
கணித்தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடத்தியது
தஞ்சையில் திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
ஏற்பாடு செய்த விழிப்புணர்வு கருத்தரங்கம்,
புலவர் இறைக்குருவனார் அவர்களின்
மறைவின் துயரால் நடைபெறவில்லை.

கணித்தமிழ் வளர்ச்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும்
நோக்கத்தில் பேரா.தெய்வசுந்தரம் கடுமையாக
உழைத்து, பல துறையினரையும் திரட்டி
நன்கு கட்டமைத்திருக்கிறார். அவரோடு
தோள்நின்ற திரு.மா.பூங்குன்றன் அவர்களும்
முனைவர் மு.கண்ணன் அவர்களும் மிகுந்த
பாராட்டுக்குரியவர்கள்.

நுட்பியல், தமிழியல், மக்கள்,
மக்களின் அரசாங்கம் என்ற
நான்கும் இணைந்தாற்றான்
வெற்றியடைய முடியும்
என்பதற்கு இம்மாநாடு சான்று,

கணித்தமிழ் வளர்ச்சியைப்
பார்வையாளராக பல ஆண்டுகளாகப்
பார்த்துவரும் எனக்கு இம்மாநாடு
சென்றிருக்கும் தொலைவைப் பார்க்கும்போது
இதனை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு
மேலும் எடுத்துச் செல்ல, தமிழ் வளர்ச்சியில்
அக்கறை கொண்ட அனைவரும் தோள்தரவேண்டும்
என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் வளர்ச்சி = கணித்தமிழ் வளர்ச்சி
என்று நிறுவிய இம்மாநாடு
கணி(னி)த் தமிழ் வளர்ச்சிப் பேரவையாக
தொடர்ந்து தமிழ்நாடு முழுக்கச் செயல்படும் என்பது
மேலும் மகிழ்ச்சியான செய்தி.

வருகின்ற ஆண்டு கணித்தமிழ் மறுமலர்ச்சி
ஆண்டாக மலரும் என்பது
கணித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பாக
சொல்லப்பட்டிருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்

1 comment:

nayanan said...

தொடர்புடையப் படச்சுட்டி: http://www.facebook.com/media/set/?set=a.10151203156485966.428003.675150965&type=3

நன்றி: பேரா.செல்வா