Pages

Sunday, February 28, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

2.4. 11 உயிர்மெய் வரிசைகளின் பயன்பாடு பற்றிய பார்வை:

தமிழில் அகரம் தவிர்த்த ஒவ்வோர் உயிர்மெய்யும் எத்தனைச் சொற்களை உருவாக்கியிருக்கின்றன அல்லது பங்களித்திருக்கின்றன என்ற புள்ளிவிவரம் கீழே அட்டவணை-3 இல் கொடுக்கப் பட்டிருக்கிறது. காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுவதாய்க் கூறுகிறது. அதைப்போன்று “கு” 10220 சொற்களிலும், “ஞூ” 2 சொற்களிலும், “ழீ” 5 சொற்களிலும் பயிலுகின்றன. இவ்வட்டவணையில் உயிரில் தொடங்கும் சொற்களும், மெய்யடக்கிய சொற்களும் கணக்கில் எடுக்கப் படவில்லை. அகர உயிர்மெய்கள் பயிலும் சொற்களை, ஒருங்குறியேற்றம் பயிலும் தேடுநிரலால் பிழையின்றி சலித்துத் தர முடியவில்லை. அதனால் அவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை. அஃகானும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. உயிர்மெய்க் குறியீடுகளை ஆயும் கோணத்தில் உருவாக்கிய இந்த அட்டவணையைச் செய்யப் பெரிதும் உதவியது சிக்காகோ பல்கலைக் கழகத்தின் உழைப்பால் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியாகும்.(8)




அட்டவணை-3: உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை

( இதுபற்றிய தொகுப்பு உயிர்மெய் சொல்வளம் என்ற கட்டுரையாக உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007ஐ உள்ளிட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது;
)

இந்த அகராதியில் கடைசியாகச் சொற்கள் ஏற்றித் திருத்தப் பட்டது 19-சூலை-2007 ஆகும். கணிசமான சொற்களைக் கொண்ட இவ்வகராதி புழக்கத்தில் இருக்கும் மொத்தத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிராவிடினும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதே அறிஞர்களின் துணிபாகும். அட்டவணையில் காணும் எண்ணிக்கைகளில் கட்டுரையாளரின் தேடுபிழையும் எண்ணுப் பிழையும் 1-2% ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது. அட்டவணை-3 ஐ நோக்கிக் காணுங்கால் எண்ணற்ற தரவுகள் கிடைக்கின்றன. அந்தத் தரவுகள் தரும் செய்திகளில் முகன்மையான செய்தியினைக் கீழேயுள்ள எண்ணுப்படமாகக் காணுவோம்.



இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களின் வடிவங்கள் மாறினால், தமிழ்ச்சொற்கள் 59% மாற்றம் அடையும் எனும்போது, பெரிதும் அதிர்ந்துபோகிறோம்। இந்த மாற்றம் வந்தால், தமிழ்ச் சொற்களும் எழுத்துகளும், படிக்கவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் செய்வதில் கடும் மாற்றம் அடையும். வெறுமே மேலோட்டமாய் எண்ணுங்கால் ஏற்படாத அதிர்வு, விழுக்காட்டை உன்னும் பொழுது ஏற்படுவது தெளிவு. இவ்விழுக்காட்டைப் பார்த்தபின் நம் முன் எழும் வினா, “தமிழ் மொழி/எழுத்துப் பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட வகையில் இது போன்ற பெரும் மாற்றத்தைத் திணிப்பது வலிந்ததில்லையா?” என்பதுதான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

அன்புடன்

நாக.இளங்கோவன்



3 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

//இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களின் வடிவங்கள் மாறினால், தமிழ்ச்சொற்கள் 59% மாற்றம் அடையும் எனும்போது, பெரிதும் அதிர்ந்துபோகிறோம்। //

ஆனால், 59% தமிழ்ச்சொற்களை மாற்றிவிட்டு, தமிழை எளிமையாகக் கற்பிப்போம் என்கிறார்களே.. எப்படி ஒப்புவது?

தமிழைத் தமிழாக அல்லாமல் தமிழின் பெயரில் புதிய மொழியை உருவாக்கப் பார்க்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

குலவுசனப்பிரியன் said...

உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

பதிவிற்கு நிரைய உழைத்திருக்கிறீர்கள்
//காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுவதாய்க் கூறுகிறது.//

நீங்கள் எப்படி இந்த தரவுகளை சேகரிதீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

இணைய பேரகராதியில்
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

"தி" என்று தேடினால், 10000க்கும் அதிகமான சொற்கள் இருக்கின்றன என்று தப்பிதம் காண்பிக்கிறது

Word list exceeds the set limit of 10000 words. This limit is designed to prevent runaway searches. It can be raised by the database administrator. Contact The ARTFL Project to arrange for this.

Your pattern expanded to 31253 terms:

சொற்பட்டியலைத் தரவிறக்கிக் கொள்ளக் கூடுமானால், இந்த தரவுகளைப் பெற நிரலி எழுதிக் கொள்வேன்.

nayanan said...

//
குலவுசனப்பிரியன் said...
உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

பதிவிற்கு நிரைய உழைத்திருக்கிறீர்கள்
//காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுவதாய்க் கூறுகிறது.//

நீங்கள் எப்படி இந்த தரவுகளை சேகரிதீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
//

அன்பின் குலவுசனப்பிரியரே,
வருக.

நல்லதொரு வினவல்.

தேடு/எண்ணுமுறையைச் சிறிய பதிவாக்கிப் போட்டிருக்கிறேன்.
சுட்டி இதோ.
http://nayanam.blogspot.com/2010/03/blog-post.html

இது பிறருக்கும் பயன்படும் என்பதால்
தங்கள் வினவலுக்கு எனது கைகூப்பு.

தங்கள் கனிவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்