22) தமிழ்மொழியின் சரிவைச் சுருக்கமாக
எப்படிப் புரிந்து கொள்வது?
எப்படிச் சரி செய்வது?
இதனை நான் சொல்வதை விடப்
பேரறிஞர் பாவாணர் அவர்களின் வாயால்
கேட்பது சிறப்புடையதாகும்.
கீழே உள்ள அவரின் உரை 07/பிப்ரவரி/2001
திகதியிட்ட தமிழியக்கம் என்ற ஏட்டில்
இடம் பெற்றிருந்தது.
பாவாணர் உரை:
அறிஞர்காள்! அறிஞையர்காள்!
உடன்பிறப்பாளர்காள்!
உடன் பிறப்பாட்டியர்காள்!
உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழ்மொழி, தொன்மையும், முன்மையும்,
எண்மையும், ஒண்மையும், தனிமையும்,
இனிமையும், தாய்மையும், தூய்மையும்,
செம்மையும், மும்மையும், கலைமையும்,
தலைமையும், இளமையும், வளமையும்,
முதுமையும், புதுமையும்
ஒருங்கே கொண்ட உயர்தனிச் செம்மொழியாகும்.
உலகில் முதன்முதற் பட்டாங்கு
நூன்முறையிற் பண்படுத்தப் பட்டதும்,
நல்லிசைப் புலவராற் பல்வேறு துறையில்
இலக்கியஞ் செய்யப்பெற்றுப் பல கலையும்
நிரம்பியதும், முத்தமிழ் என வழங்கியதும்
ஆன சித்தர் மொழியாம் செந்தமிழ்;
இன்று கலையிழந்தும் நூலிழந்தும், சொல்லிழந்தும்
இருப்பதுடன், இறவாது எஞ்சியிருக்கின்றனவும்
ஏனை மொழிகளினின்று கொண்ட இரவல்
என இழித்தும் பழித்தும் கூறப்படுவது,
இடைக்காலத் தமிழன் மடமையின் விளைவே.
மொழித்துறையில் ஆரியத்தினும் சீரியதென
அரியணையில் வீற்றிருந்த தமிழ், பின்பு
வடமொழிக்குச் சமம் எனக் கொள்ளப்பட்டு,
அதன்பின் அதுவுமின்றி
வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாததெனத்
தள்ளப்பட்டதினால் முறையே,
அது வடமொழியால் வளம் பெற்றதென்றும்,
வடமொழித் துணையின்றித் தனித்தியங்காததென்றும்,
வடமொழிக் கிளையென்றும்,
பிற திரவிட மொழிகட்குச் சமமென்றும்,
அவற்றினின்று தோன்றியதென்றும்
கருத்துக்கள் எழுந்து,
இன்று
மக்கட்குப் பெயரிடுதற்கும்
உயர்ந்தோரோடு பேசுவதற்கும்,
அச்சுப் பிழைதிருத்தற்கும்,
அலுவலகங்களில் வினவி விடை பெறுதற்கும்,
ஏற்காத தாழ்த்தப்பட்ட மொழியாகத்
தமிழ் வழங்கி வருகிறது.
இதனால், அது புலவர் வாயிலும்
கலப்பு மொழியாகவும்,
கொச்சை மொழியாகவும் இருந்து வருகின்றது.
இது பற்றி, அது இறந்தமொழியென்றும்,
இற்றைக்கு ஏலா மொழியென்றும்,
பலர் கொக்கரித்துக் கூவுகின்றனர்.
ஒரு நாட்டு மக்கட்கு *உரிமையாவணம்* போன்றது,
அந்நாட்டு வரலாறு.
1) தமிழ்மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றின் வரலாறு
மறைக்கப் பட்டிருப்பதால்,
அவற்றின் உண்மையான வரலாற்றை
முதற்கண் வரைந்து வெளியிடல் வேண்டும்.
2) மொழிப்புரட்சி போன்ற ஒரு தமிழியக்கம்
தோன்றல் வேண்டும்.
3) தமிழியக்கத்தின் பயனாய் அயன்மொழிச்
சொல்லாயிருக்கும் ஆட்பெயர்,
ஊர்ப்பெயர் அறிவிப்புச் சொல் அனைத்தும்,
இயன்றவரை *தனித்தமிழாக்கப் பெறல் வேண்டும்*.
4) தமிழ் மீண்டும் பெருமை பெறவேண்டுமெனின்
அது ஆட்சி மொழியாவதினும்,
கல்வி மொழியாவதினும் *கோயில் வழிபாட்டு*
மொழியாவதே முதன்மையாக வேண்டப்படுவதாகும்.
வடமொழி தேவமொழியன்று.
உலகில் தேவமொழி என்று ஒன்றில்லை.
ஒன்றிருப்பின் அது தமிழே.
சிவநெறியும் மால்நெறியும் தமிழர் மதங்களே!
மந்திர வலிமையும் மன்றாட்டு வலிமையும்
உள்ளத்தின் உரத்தைப் பொறுத்ததே
அல்லாமல் **ஒலியைப் பொறுத்தது அல்ல**.
வடமொழி வழிபாடே வலியுற்றதெனின்,
அதில் நடைபெறாத பிற நாட்டு
வழிபாடெல்லாம் பயனற்றவாதல் வேண்டும்.
அங்ஙனமாகாமை அறிக.
தமிழ் கெட்டதற்கும் தமிழர் தாழ்ந்ததற்கும்
தமிழனே காரணம்.
தன்மானமும் பகுத்தறிவும்
*நெஞ்சுரமும்* உள்ளவனே நிறைமகன்.
தமிழ் நலமும் தமிழர் நலமுங் கருதாது,
தன்னலமே கருதிக் கோடரிக் காம்புகளும்
இருதலைமணியன்களும் சுவர்ப்பூனைகளுமாயிருந்து
பாழ்செய்யும் முத்திற உட்பகைகளை, விலக்கல் வேண்டும்.
"எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருக்கும்
உணர்ச்சியற்ற மரக்கட்டைகளைத் திருத்தல் வேண்டும்.
பெரும்பதவிகளில் இருந்து பெருஞ்சம்பளம் பெறும்
பேராசிரியர்கள் எல்லாம் பேரறிஞரல்லர்.
**உண்மையுரைக்கும் ஆராய்ச்சியாளர்க்கு
இன்றியமையாத இயல்பு அஞ்சாமை**.
அஃதுள்ளாரைத்
திராவிடர் கழகத்தாரென்றும்,
மொழி(தமிழ்) வெறியரென்றும்,
நெறிதிறம்பிய ஆராய்ச்சியாளரென்றும்,
பிராமணப் பகைவரென்றும்,
வடமொழி வெறுப்பாளரென்றும்,
கூறுவது பேணத்தக்கதன்று.
தமிழன் பரந்த நோக்குடையவன்.
தமிழைப் பேணுவார் அனைவருந் தமிழரே!
தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க.
தமிழ்த் தொண்டர் படை திரள்க!
- ஞா.தேவநேயன்
தேவநேயப் பாவாணர் அவர்கள் எதனை
முதலில் மீட்டெடுக்க வேண்டும்
என்று சொல்வதும், இணைய உலகில்
பலருக்கும் உள்ள கவலைகளையும்
அவர் எடுத்துச் சொல்லும் விதமும்
நமக்குப் படிப்பினையாக இருக்கும்.
(தொடரும்)
இதன் முந்தையப் பகுதி :
http://nayanam.blogspot.com/2008/04/3-faqs-part-3.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
7 comments:
பாவாணரின் உரையை அறியத் தந்தமைக்கு நன்றி..
அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவனார் அவர்களே,
அமுதத் தமிழில் அன்பான வணக்கங்களை மொழிகின்றேன்.
தங்களின் நயனம் வலைப்பதிவு மிகச் சிறப்புடன் விளங்குகிறது. தமிழ்மொழி நலனையும், தமிழர் நலனையும், தமிழீழ நலனையும் முன்னெடுக்கும் தங்களின் கட்டுரைகளை - செய்திகளைப் படித்து அகமகிழ்ந்து போனேன்.
அடியேன், மலேசியாவில் வாழ்ந்து வருகின்றேன். தமிழகத் தாய்மண்ணைக் கடந்து அயலகத்தில் தமிழைக் காத்து, வளர்த்தெடுக்கும் தகுந்த பணிகளை முன்னெடுத்து வருகின்ற மலேசியத் தமிழர் வரிசையில் அடியேனும் ஒருவன்.
நயனம் வலைப்பதிவில் உள்ள தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் என்ற தொடருக்கு என்னுடைய 'திருத்தமிழ்' வலைப்படிவில் இணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றேன். தமிழைப் பற்றிய தங்களின் செய்திகளை மலேசியத் தமிழரிடையே பரப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாங்கள் தொடர்ந்து நல்லரும் செய்திகளைப் படைக்க வேண்டுமென வேண்டி அமைகிறேன்.
இனியத் தமிழை
இணையத்தின் வழியாக
இணைந்து வளர்ப்போம்!
அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்
சுப.நற்குணன்,
மலேசியா.
அன்புமிகு, ஐயா நாக.இளங்கோவன் அவர்களே, வணக்கம்.
தங்களின் நயனம் வலைப்பதிவைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். தமிழ்மொழி நலனையும் தமிழர் நலனையும் முன்னெடுக்கும் தங்களின் வலைப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகளை உரித்தாக்குகின்றேன்.
தங்களின் வலைப்பதிவில் தனித்தமிழ் ஊடாடு வினாக்கள் பகுதிகள் மிக அருமை; பயன்மிக்கவை. தனித்தமிழ் பற்றிய தவறான கண்ணோட்டங்களைத் தகர்த்தெறிந்து தமிழின் மீது நம்பிக்கையை விதைக்கும் அருஞ்செய்திகளை வழங்கியுள்ளீர்கள்.
4 பகுதிகள் கொண்ட அந்தச் செய்திகளை என்னுடைய 'திருத்தமிழ்' வலைப்பதிவில் அறிமுகப்படுத்தி இணைப்பு ஏற்படுத்தி இருக்கிறேன்.
தாய்த்தமிழகத்தை விட்டு அன்னிய மண்ணில் தமிழைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்ற தமிழர்க்குத் தங்களின் வலைப்பதிவு பயனாக அமைந்துள்ளது.
தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும்.
இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்.
அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன் - மலேசியா
அன்பின் பாசமலர் அவர்களே,
தங்கள் பின்னூட்டு கண்டு
மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பின் திரு.சுப.நற்குணன் ஐயா
அவர்களுக்கு,
தங்கள் வருகையும், பின்னூட்டும்
கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களின் தூய தமிழ் வலைப்பதிவான
http://www.thirutamil.blogspot.com/
கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
மலேசியாவில் நீங்கள் செய்து வரும்
அருந்தொண்டு அளவற்றப் பயனை
அளிக்கும்.
தங்களைப் போன்ற சிந்தனையாளர்களால்தான் தமிழ் இன்றும் இளைமை குன்றாமல் இருந்து
வருகிறது.
நம்மால் ஆன பணிகளை நமது குமுகத்திற்குச் செய்து கொண்டே
இருப்போம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நான்கு பகுதிகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் ஐயா.
//
குமரன் (Kumaran) said...
நான்கு பகுதிகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்.
//
மிக்க மகிழ்ச்சிங்க நண்பர் குமரன்ன.
எனக்கு மிக்க உந்ததுதலாக இருக்கிறது.
தூயதமிழை மீட்போம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment