Pages

Saturday, April 26, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 3 (FAQs part 3)

பிற நாடுகளில் மொழித்தூய்மை பற்றிய செய்திகள்:

20) உருசியாவில் இலெனின் போன்ற பிற
உருசியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:

நம்மிடையே பலரும் தூய தமிழ் எழுதுவது
பேசுவது என்பது ஏதோ அரசியல்க் கட்சிக்காரர்களின்
செயல் என்றும், பிழையானது என்றும், தமிழ்நாட்டில்
மட்டும்தான் இப்படியான செய்கைகளைச்
செய்கிறார்கள் என்றும் பரப்புரை செய்கிறார்கள்.
மொழிச்சரவல் பல நாடுகளுக்கும் இந்தியாவில்
உள்ள பல மாநிலங்களுக்கும் ஏறத்தாழ ஒன்றுதான்
என்பதனையும் பல நாடுகளிலும் இந்தச் சிந்தனை
நமக்கு முன்னரே முகிழ்த்து இருக்கிறது என்பதனை
அவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகவே இவற்றை
எடுத்து இங்கு சேர்க்கிறேன்.

எ.எசு.சுமரகோவ்:

"பிறமொழிச் சொற்களைக் கலப்பது
மொழியைக் கெடுத்து சீர்குலையச் செய்வதாகும்!"

நிகலாய் இலேசுகா:

"தூய உருசியச் சொற்கள் இருக்கும் போது
அவற்றையே பயன்படுத்தவேண்டும். கலத்தல்
கூடாது. கலத்தல், வளமான மொழியை
அழிப்பதாகும். இக்கலக்கல் தேசிய
முன்னேற்றத்திற்காகவும், நம் தேசிய
கோரிக்கைகளுக்காகவும் பாடுபடுவதாகக் கூறிக்
கொள்ளும் வெளியீடுகளிலேயே கேட்டுச் சூழலை
ஏற்படுத்துகிறது."

(தமிழ் தமிழ் என்று குரல் கொடுக்கும்
அரசியல்வாதிகளும்
ஏடுகள், எழுத்துக்கள், தொலைக்காட்சிகள்
பொன்றவற்றில் செய்கின்ற கேடுகளைத்தான்
உருசியாவிலும் நிகலாய் கண்டிருக்கிறார்.)

விசாரின் பெலின்சுகி:

"உருசிய மொழியின் தூய சொற்களை
விடுத்து பிற மொழிகளைக் கலத்தல் *பொது
அறிவையும், நல்ல பழக்கத்தையும்
அவமதித்தலாகும்*. உருசிய மொழியில்
சொற்பொழிவாற்றும் போது பிற மொழிச் சொற்களை
அள்ளி வீசுவது **அறிவுக்கும் நல்ல பழக்கத்திற்கும்
புறம்பானதாகும்*."

21) தனிப் பிரெஞ்சு இயக்கம் பற்றிய சிறு குறிப்பு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏனாதி டீகால்
என்பவர் பிரெஞ்சுநாட்டை தாம்
ஆண்டுகொண்டிருந்த காலத்தில்
"தனிப்பிரெஞ்சு இயக்கம்" கண்டார்.

அன்று அவர் தொடங்கிய இயக்கம்தான் பின்னாளில்
வளர்ந்து, அதாவது 1971 ஆம் ஆண்டில் பிரெஞ்சு
அரசு "பிரெஞ்சு மொழியில் நடைமுறையில் கலந்துள்ள
பிற மொழிச் சொற்களைக் களைந்து

அவற்றுக்குண்டான தனிப்பிரெஞ்சுச்
சொற்களை உருவாக்குங்கள்" என்று கட்டளை
இட்டு சட்டம் செய்தது.

தங்கிலீசு என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும்
மொழியைப் போல "பிராங்லெய்சு" என்ற ஆங்கிலக்
கலப்பு மிகுந்த பிரெஞ்சின் அந்தக்காலப் புழக்கம்
ஒழிக்கப் படல் வேண்டும் எனலாயிற்று.

மொழியின் தூய்மையைப் பேணுவதற்கு 19-12-76 ல்
சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரான்சில்
அறிவிக்கப்பட்டது.

விளம்பரங்கள், அலுவலகக் கோப்புகள்,
வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றில்
பிரெஞ்சுமொழியே இருக்க வேண்டும். அவை
தூய்மையாக இல்லாமல் பிறமொழிச் சொற்களைக்
கலப்படம் செய்யப்பட்டிருந்தான் அதைச்
செய்தவருக்கு 160 பிராங்குகள் தண்டம்
விதிக்கப்படும் என்று சட்டம் செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பற்றிய குறிப்புகளை க.தமிழமல்லனார்
தர, பேராசிரியர் வையாபுரி அவர்கள் ஈரானியர்
பாரசீக மொழியில் இருந்து துருக்கி, அராபியச்
சொற்களை விலக்கி வருவதையும்
செருமானியர் மொழியைக் கலக்காமல்
பிற மொழிச் சொற்களை மொழிபெயர்த்து/ஆக்கி
பயன்படுத்துதலையும் குறிப்பிடுகிறார்.

(தொடரும்)

இதன் முந்தைய பகுதி இங்கே:
http://nayanam.blogspot.com/2008/04/2-faqs-part-2.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

பாச மலர் said...

உண்மையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று அலாதிதான்..

nayanan said...

// பாச மலர் said...
உண்மையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று அலாதிதான்..
//

அன்பின் பாசமலர் அவர்களே,

ஐரோப்பிய நாடுகளில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரபு நாடுகளில்
அவர்கள் மொழியைச் சிதைப்பதில்லை
அரசாங்கம் என்றில்லை. பொதுமக்கள்
தங்கள் மொழியை உயர்வாகப் பேணுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் கவலைப்படாதது மட்டுமல்ல - கவலைப்பட்டவர்களையும் நக்கலடிக்கிற பண்பு இருக்கிறது.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்