Pages

Friday, April 25, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 2 (FAQs part 2)

முந்தைய கட்டுரையின் ( http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html ) தொடர்ச்சி ....

13) தனித்தமிழ், தூயதமிழ் என்று நாம் பேசுவது
அரசியல் சார்புடையதா?


இல்லை. அரசியலுக்கும் இதற்கும் எப்படித் தொடர்பு
இருக்க முடியும்?

மக்களிடம் இதை விளக்குவதைப் போல அரசிலார்க்கும்
இதனை விளக்க வேண்டிய நிலையில்தான் அரசியல்
இருக்கிறது; இருக்கும்.

14) தமிழ்நாட்டில் மட்டும்தான் மொழியின் தனித்தன்மை
காக்கப் படல் வேண்டும் என்ற சிந்தனை தோன்றிற்றா?

இல்லை. இந்தியாவிலும் இவ்வாறு அவரவர் மொழிகளின்
தனித்தன்மை காக்கப் படல் வேண்டும் என்று
முனைந்திருக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும்
தனித்தமிழ் இயக்கம் போல பல இயக்கங்கள்
தோன்றியிருக்கின்றன.

உண்மையில் தமிழர்கள் மிகவும் காலத்தாழ்வாகவே
இதனைச் செய்தனர்!!


15) மொழியின் தனித்தன்மை பற்றி காந்தியாரின் கருத்து
யாது? (இந்தி மொழி பற்றி)

"கூடியமட்டும் இந்திமொழி அம்மொழியின் மூலச்
சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்வதே
அம்மொழி வளர்ச்சிக்கு உகந்தது;

பிறமொழிச் சொற்கள் புகுந்து விட்ட இடங்களிலும்,
இன்றியமையாது மேற்கொள்ளப்படவேண்டிய இடங்களிலும்
*இயைவித்தே* அவை மேற்கொள்ளல் வேண்டும்".
இக்கருத்தை 'வளரும்தமிழ்' என்ற நூலில் இருந்து
பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் எடுத்துக்
கொடுக்கிறார்.

காந்தியாரின் அக்கருத்து எம்மொழிக்கும்
பொருந்துமல்லவா?

காந்தியாரின் இந்த எளிமையான அடிப்படையே
பல குமுகச் சிந்தனையாளர்களும் மொழியறிஞர்களும்
வரலாற்றாசிரியர்களும் பல நாடுகளிலும் சொல்கிறார்கள்.

16) தெலுங்கின் தனித்தன்மைக்காக எழுந்த இயக்கம் யாது?

தெலுங்கு தேசத்தில் "அச்சதெனுகு" எனப்படும் தூய
தெலுங்கு இயக்கம் 17 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி
விட்டது. தமிழருக்கும் முன்னால் சுமார் 200 ஆண்டுகளுக்கு
முன்னரே தூய தெலுங்கு போற்ற தெலுங்கர்கள் முனைந்து
எழுந்தனர்.

17) ஆங்கிலத்தில் மொழித் தூய்மை காக்க சிந்தனைகளும்
இயக்கங்களும் எழுந்தனவா?

ஆமாம்; ஆமாம். நிறைய செய்திருக்கிறார்கள்
வெள்ளையர்கள். தனி ஆங்கிலம், தூய ஆங்கிலம் பற்றிய
வெள்ளையர் குமுகத்தின் சிந்தனையாளர்கள் பலரும்
கூற்றும் சிறந்தவை.

முனைவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின்
தூய ஆங்கில இயக்கம் பற்றிய மேற்கோள்களை
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன் அவர்கள்
அழகுற விளக்குகிறார்.

ஆங்கிலன் நாட்டில் 1913ல் "Society for Pure English"
என்ற மொழித்தூய்மை இயக்கம் துவங்கப்பட்டது. இதைத்
தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அரசவைப்புலவர்.

அதற்கும் முன்னரே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே, வேற்றுமொழி, சொல் கலப்பினை
வெறுக்கும் கொள்கை தோன்ற ஆரம்பித்து விட்டது.
தெஃபோ (Defoe), திரைடன் (Dryden), அடிசன் போன்ற
அப்போதைய பெரும்புலவர்கள் பிறமொழிக் கலப்பை
வன்மையாகக் கண்டித்தனர்.

1711ல் அடிசன் தம் இதழில்
"நம்முடைய சட்ட அமைப்பில் சட்டங்கள் உரிமைகள்
வாணிகங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர்
நியமிக்கும் விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்று மொழிச்
சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமல் இருக்குமாறு
காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்"
என்று முழங்குகிறார்.

கேம்பெல் (Campbell) என்பார், "பிற துறைகளால் அழிவதை
விட, வேற்று மொழிச் சொற்களால் அழிவது நம்
மொழிக்குள்ள பெரிய அபாயம்" என்கிறார்.

சோமலே என்பார், அமெரிக்க ஆங்கிலத்தை மாசுற்ற மொழி
என்கிறார். அமெரிக்க ஆங்கில உச்சரிப்பிலும் பொருளிலும்
உள்ள மாற்றங்கள் அதிகம் வாதிக்கப் பட்டிருக்கின்றன.

18) ஆங்கிலர் மட்டும்தான் தம் மொழி போற்றினரா?
வேறு யாரும் இல்லையா?

ஏன் இல்லை. உருசியா, பிரான்சு போன்ற நாடுகளில்
தூய மொழி இயக்கங்கள் இருந்திருக்கின்றன.

அதைவிட பல நாடுகளில் அப்படி ஒரு தேவையே
எழாத அளவிற்கு தம் மொழிகளைப் பேணுகிறார்கள்.

செருமனி, ஆலந்து, அரேபியா போன்ற நாடுகளில்
மொழியின் மேன்மையும் தொன்மையும் பேணிக் காக்கப்
படுகின்றன. தம் மொழியை அவர்கள் சிதைக்கும்
பண்பாடே இல்லை.

அவ்வளவு ஏன், சமற்கிருதமே இதற்குச் சிறந்த சான்று.
சமற்கிருத மொழியை சமற்கிருதம் பேணுவோர்
சிதைத்திருக்கிறார்களா?

மாறாக, அவர்கள் அதனை தேவ மொழி என்றெல்லாம்
உயர்வான இடத்தைக் கொடுத்துப் பேணுவது நோக்கிக்
காணத் தக்கது.

சமற்கிருதம் என்றொரு மொழி தோன்றிய பின்னர்,
சமற்கிருதத்தில் ஆங்கிலச் சொல் அல்லது எழுத்து
கலந்து எழுதுவதோ, அல்லது அந்த மொழியை சிதைத்து
இன்புறுவதோ உண்டா?

அவர்களின் மொழி என்ற வகையில், சமற்கிருத
மொழியரின் இந்தப் பண்பு பாராட்டத் தக்கது.

அது போலத்தான் தமிழர், உருசியர், பிரெஞ்சுக்காரர்,
டச்சுக்காரர், அரேபியர், ஆங்கிலர், இந்திக்காரர், தெலுங்கர்
போன்று ஒவ்வொரு மொழியினரும் அவரவர்
மொழியினைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகளைச்
செய்து அதன் தனித்தன்மையைக் காத்துக் கொள்கிறார்கள்.

ஆகையால் அப்படியான முயற்சிகளை எண்ணி
தமிழர்கள் நாணம் கொள்ளக் கூடாது.

கலப்புத் தமிழ் எழுதுவதைப் பெருமிதம் என்று
எண்ணும் தமிழர்கள் அப்படிச் செய்வது
ஒரு வகை கூச்சத்தினாலும் ஐயத்தினாலும்தான்.
அவற்றைக் களைந்து நமது முன்னோர்களின் சொற்களில்
இருந்து திடம் பெற வேண்டும்.

19) உருசியாவில் உருசிய மொழித் தூய்மை பற்றி
உருசியச் சிந்தனையாளர்கள் என்ன சிந்தனை
கொண்டிருந்தனர்?


உருசியாவைப் புரட்டிப் போட்ட தோழர் இலெனின்:

"நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண்டு
வருகிறோம். வேற்று மொழிச் சொற்களுக்கு
இணையாக உருசியத்தில் சொற்கள் வளமுடன்
இருப்பினும் அதை நாம் பயன்படுத்துவதில்லை.

செய்தித் தாள்களைப் படிக்கும் ஒருவன்,
அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
அவர்கள் பயன்படுத்தும் சொல்லையும் நடையையுமே
பழக வேண்டியதாகிறது!

வேற்று மொழிச் சொற்களால் செய்தி ஏடுகள்
மொழியைக் கெடுக்கின்றன.

செய்தி ஏடுகள் தரும் புதுச் சொற்களால்
ஒருவன் மகிழ்ச்சி கொண்டு அதையே நாட்டு

முன்னேற்றத்திற்கு ஏற்றது என்று சொல்லலாம்!

ஆனால் அது அவன் பிழையல்ல! பொறுப்பற்று
எழுதும் எழுத்தாளனின் பிழை!
அந்த எழுத்தாளனை மன்னிக்க முடியாது!.

இப்படி வேற்று மொழிச் சொற்களைப்
பயன்படுத்துவோரை எதிர்த்து நாம்
போராடவேண்டும்.

மொழிக்கலப்பைக் கண்டு நான் மிகவும்
மனம் நோகிறேன்.

சில ஏடுகள் முறையற்று செய்வதைக்
கண்டு நான் சீற்றம் கொள்கிறேன்.

இப்படிச் செய்வதால் உருசிய மொழி
சிதைவடைகிறது.

இப்படிச் செய்பவர்கள் மேல் போர்
தொடுக்கும் நேரம் வந்து விட்டது"

உருசியாவில் தோழர் இலெனின்,
இந்தியாவில் காந்தியார்,
ஆங்கிலர் நாட்டில் அடிசன்
தமிழ்நாட்டில் மறைமலையடிகளார்
என்ற
இந்த நான்கு சிந்தனையாளர்கள் மற்றும் குமுக
அக்கறையாளர்கள் சொற்களில் ஏதேனும்
அடிப்படை வேறுபாடுகளைக் காண முடிகிறதா?

இதழ்கள்/ஏடுகள் பற்றி இலெனினார்
கூறியவற்றைக் கூறாத, அக்கறைப்படாதவர்கள்
வலைப்பதிவு உலகிலும் இணைய உலகிலும் உண்டா?

அனைவரின் மொழி பற்றிய சிந்தனைகளின்
அடிநாதம் ஒன்றாக அல்லவா இருக்கிறது?

பிறகு என்ன தயக்கம்?

தெரிந்த தமிழில் தெரிந்த தமிழை எழுதுவது
எளிமைதானே!

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: தனித்தமிழ் இயக்கம் என்ற புலவர் இரா.இளங்குமரன் அவர்களின்
நூல் மிக அருமையான செய்திகளைக் கொண்டிருக்கிறது. அந்நூலுக்காக
அவருக்குப் பல நன்றிகளைச் சொல்லவேண்டும். அனைவரும் பயில வேண்டிய நூல்.

6 comments:

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பல விளக்கங்கள்..

nayanan said...

நன்றி பாசமலர் அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்

இராம. வயிரவன் said...

அன்பின் தோசுத்து,

(வடமொழி எழுத்து தவிர்த்து). தனித்தமிழின் முக்கியத்துவம் அறிந்து கொண்டேன் உங்கள் பதில்களில் இருந்து. உங்கள் உழைப்பு தெரிகிறது. உங்களின் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களைக் கட்டுரைகளாக புத்தகமாகத் தொகுத்து வெளியிடுங்கள். என் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வயிரவன்.

nayanan said...

// இராம. வயிரவன் said...
அன்பின் தோசுத்து,

(வடமொழி எழுத்து தவிர்த்து). தனித்தமிழின் முக்கியத்துவம் அறிந்து கொண்டேன் உங்கள் பதில்களில் இருந்து. உங்கள் உழைப்பு தெரிகிறது. உங்களின் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களைக் கட்டுரைகளாக புத்தகமாகத் தொகுத்து வெளியிடுங்கள். என் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வயிரவன்.
//

அன்பின் தோசுத்து,

கலப்பின்றி இப்படிக் காண்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியே தொடர்வோம். தங்கள் மறுமொழியும்
பாராட்டும் இதமாக இருந்தது.
கனிவிற்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

யாராவது நல்ல தமிழ் பேசினாலே " இவற்றை பண்டிதத்தமிழ் ஆருக்குப்புரியும்?" என்று கேலி பேசுபவர்களுக்குச் சரியான சாட்டையடி!
வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!
அன்புடன்
சிவம் அமுதசிவம்

nayanan said...

அன்பின் சிவம் அவர்களே,
வருக.

தங்களின் பின்னூட்டு மகிழ்ச்சியளிக்கிறது. வாருங்கள்
அனைவரும் சேர்ந்து தமிழ்க்கலப்பை
நீக்கி தூயதமிழ் அடைவோம். நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்