Pages

Wednesday, February 20, 2008

சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?

வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகக் கருதிக் கொள்பவர்கள்
வரலாற்றை அங்கதம் செய்து இடம் பிடித்து விட முடியுமா என்று தெரியவில்லை.

அங்கதங்கள் அடிப்படை அறிவை மறைக்காமல்
இருந்து விட்டால் மனிதன் அங்கதமாகாமல்
தப்பி விடலாம்.

சிவாசிகணேசன் பற்றிய பலரின் பாமர
விமர்சனங்கள் முற்போக்கு என்ற மூடியைப்
போட்டு வரும்போதும் உண்மைகள்
ஒழிந்து போய்விடுவதில்லை.

ஒரு எழுத்தாளரைப் பற்றிப் படம் எடுக்க
வேண்டுமானால், அவர் கக்கத்தைக் காட்டிக்
கொண்டு, நெஞ்சு வரை பூவேட்டியைக்
(பூப்போட்ட வேட்டி) கட்டிக் கொண்டு,
மேசையைப் பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாய்
ஒரு மூனு மணிநேரம் உட்கார்ந்திருப்பதையே
படமா எடுத்துக் காண்பித்தால் அதுதான்
இயல்பான நடிப்பு என்று கொஞ்சுவார்கள் போலிருக்கிறது
விமர்சனக் காரர்கள் :-))

கடந்த சூலை மாதம் சிவாசியின் நடிப்பு பற்றி ஒரு
மடற்குழுவில் செய்த உரையாட்டு கீழே.
----------------------------------------------------------

திருமால் பெருமை என்று ஒரு படம்.
அந்தப் படத்தில் குறுநில அரசனாக ஒரு வேடம்.
அதில் அவர் ஒரு காட்சியில் நடந்து போன
அழகு கண்டு கட்டபொம்மன், இராசராச சோழன்
ோன்ற படங்களை
எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதை உணர்ந்தேன்.

எனது இளவயதில் "என்னடி மீனாட்சி...சொன்னது
என்னாச்சு" என்ற பாடலுக்குக் கமல் ஆடிய ஆட்டமும்,
சகலகலாவல்லவனில் அவர் ஆடிய ஆட்டமும் என்னையும்
ஈர்த்திருந்தன. ஆனால் கொஞ்சகாலத்திலேயே அது மிகை என்று பட்டது,

சலங்கை ஒலியை இரசித்த பிறகு என்னால்
மற்றவற்றை இரசிக்க முடியவில்லை. அவை மிகையாகத்
தோன்றுகின்றன.

அதற்கும் சற்று முந்திய சோலே படத்தில்
அமிதாப்பின் சில நடன அசைவுகள்
என்னக் கவர்ந்ததுண்டு.

ஆயினும் சகலகலாவல்லவன் நடனத்தை, என்னை
விட வயதில் முதிர்ந்தவர்கள் இன்றைக்கும் இரசிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆகையால் வயதும் இதில் காரணமல்ல என்று
தோன்றுகிறது,

அந்தக் காலத்தில் அப்படித் தேவைப்பட்டது
என்றும் பொத்தாம் பொதுவிலும்
என்னால் சொல்லி விடமுடியவில்லை.

பாட்சா, தளபதி இரசினிகாந்த் என்னைக் கவர்ந்த
அளவிற்கு பரட்டை இரசினியோ பில்லா
இரசினியோ கவர்ந்ததில்லை.

ஆனால் பாட்சா இரசினியிலும் சரி பரட்டை
இரசினியிலும் சரி மிகையான நடிப்பு என்பது நிறையவே இருக்கும்.
நாயகன் கமலும், ஆளவந்தான் கமலும்

அப்படியே. படையப்பாவும், நீலாம்பரியும் காலை முகத்திற்கு
நேரே தூக்கித் தூக்கிக் காண்பித்தது மிகை என்ற வகையிலேயே
சொல்லப்படக் கூடிய ஒன்று,
(அது ஒரு கலாச்சாரக் கேடு என்பது வெறு விதயம்)

எப்படியிருப்பினும் அந்த மிகையான நடிப்பு
(சிவாசி, கமல், இரசினி) என்பது
அந்தந்தக் கலைக்கால கட்டத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியே இருக்கிறது,

என்னைப் பொறுத்த வரையில் சிவாசியின் கன்ன
அசைவும், இரசினியின் துடிப்பும்,
கமலின் நளினமும் நடிப்பின் மிகையானவையாகத்
தெரியவில்லை.

ஆனால், இந்த மிகை என்பதன் பொருள் மிகை
என்பது அல்ல என்று உணர்கிறேன்.

இரசினி படம் எடுக்க வேண்டுமானால் அதற்கு
ஒரு சில தன்மைகள் மட்டுமே
வைத்து எடுப்பார்கள். இது நாமறிந்த உண்மை.

ஏன் இரசினியை வைத்து அழகி அல்லது தவமாய் தவமிருந்து போன்ற
படங்கள் எடுக்கப் படுவதில்லை?

ஏனெனில் அது அவருக்கு அவ்வளவாகப்
பொருந்தாது என்ற ஒரு படிமத்தை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதே போலத்தான் சிவாசி கணேசனுக்குப்
பொருந்தாத பல குப்பைப் படங்களை
அதுவும் 70களின் பிற்பகுதியில் இருந்து எடுத்து
அவரின் பெயரை சற்றுக் கெடுத்து விட்டார்கள்.

அதை விட மூத்த வயதில் முதல்மரியாதை படத்தின் சிறப்பை
அவரின் திறமைக்கு நான் சான்றாகச் சொல்வேன். தேவர் மகனையும் கூட,
ஏன் தாவணிக் கனவுகளையும் எண்ணிப் பார்த்தால்
அவையும் பின்னாளைய சிறந்த படம் நடிகர் திலகத்திற்கு என்று சொல்லலாம்,

ஆகவே, மிகை நடிப்பு என்ற எண்ணம்
"பொருந்தா நடிப்பினால்" வந்தது,
சிவாசிக்கு மட்டுமல்ல ஏனைய நடிகர்களுக்கும்
இந்தப் பொருந்தா நடிப்பு உண்டு.
அது பொருந்தாத பொழுதெல்லாம் அது
overacting என்று சொல்லப்படுவதாக
நான் கருதுகிறேன்.

அந்த வகையில் சிவாசிக்கு மிகையான நடிப்பு
ஒரு சரவல் இல்லை. ஆனால்
பொருந்தா நடிப்பு அமைந்தது என்று சொல்லலாம்.
ம.கோ.இரா ஏழைகளைக் கட்டிப் பிடித்தது
முதற்கொண்டு பல விதயங்களில்
அவரின் மிகை என்று சொல்லப் படுகின்ற
நடிப்பைக் காணலாம்.

உச்சமாக நான் கருதுவது என்னவென்றால் ஒரு
படத்தில் பதுமினியின் நடனத்தோடு போட்டி நடனம் ஆடி,
அந்தப் போட்டியில் அவர் வெல்வார். மன்னாதி மன்னன் என்ற படம்.

நான் அந்த நடனப் போட்டிக் காட்சியை பார்த்து
இளவயதிலெயே கதிகலங்கிப் போயிருக்கிறேன்.

நாட்டியப் பேரொளி ஒரு சிறந்த கலைமாமணி.
அவரால் தமிழகத்தில் பரதம் மேலும் தழைத்தது
என்று சொல்லலாம்.

ஆணானப்பட்ட நடிகர் திலகமே நாயனத்தைக்
கையில் வைத்துக் கொண்டு தில்லானாவுக்கு
வாசித்து அப்படியே அமர்ந்து
கொண்டார். அந்தப் புகழ் பெற்ற
போட்டியில் வெற்றி இருவருக்குமே. அது மிகப்
பொருந்திய நடிப்பு,
இயல்பான கலையை இருவருக்கும் தக்கவாறு
பொருத்திக் கொண்டதால்
அது அவ்வளவு சிறப்புப் பெற்றது.

ஆனால், இந்த மா.கோ.இரா அவருடனே
போட்டி நடனம் ஆடி, அதில் வெற்றி வேறு பெறுவார். அதைப்
பார்க்கும் போதெல்லாம் பதுமினிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு
விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் :-)

பதுமினியின் 13 நடனங்கள் கொண்ட நெருவட்டு
கிடைத்தது. அற்புதமான தரவுகள் கொண்ட தொகுப்பு அது.

சொக்கவைக்கும் நடனங்களில்
மா.கோ.இரா மற்றும் பதுமினியின் போட்டி நடனமும் ஒன்று.

என்னைப் பொறுத்தவரை அதுவும் மிகையான
நடிப்பு என்று சொல்வதை விட
பொருந்தா நடிப்பு என்று சொல்லலாம். இதே
போல இன்னும் ஒரு பத்துப் படத்தில்
அவர் ஆடியிருந்தால் ம.கோ.இரா கதி
என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது :)

எத்தனையோ அரச வேடப் படத்தில் ம.கோ.இரா
நடித்திருந்தும், பிறர் நடித்திருந்தும்
தமிழகத்தில் அரசன் என்றால் நினைவில் வருவது
எல்லாமே சிவாசியின் நடிப்பே.

அதில் மிகை யிருந்தால் அந்த மிகையே அவரின் சிறப்பு.

இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால்,

1975க்கு முன் , பின் என்று படங்களைப்
பார்க்கலாம். பழைய படங்களுக்கும் புதிய படங்களுக்கும்
உள்ள வேறுபாடுகள் மிகக் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியன.

செறிவான பாடல், அளவான இசை, வலுவான
உரையாடல், அரங்க அமைப்பு,
நெறியாளல், ஒலி/ஒளி அமைப்பு என்ற

எல்லாவற்றிலும் கலைஞர்களின் "மிகையான"
ஆழ்ந்த சிந்தனை மற்றும் கலையுணர்வு
பங்களிப்பாக இருக்கும். அதாவது முதிர்ந்த
கலைஞர்களின் செவ்விய கூட்டாகப் படம்
வெளிவரும். அம்மாதிரியாக வந்த படங்களும்
காட்சிகளும்தான் அழியாமல் இருக்கின்றன.

இங்கே நான் "மிகையான" என்று சொல்வது
"வலுவான" என்ற பொருளில்.
பராசக்தியின் உரையாட்டிற்கு இன்றைய நடிகர்கள்
எத்தனை பேரால் நடித்து விட முடியும்?
கெளரவம் படத்திலே சிவாசியின் தான்மைக்குப்
(ego) பொருத்தமாக உரையாடல்
எழுத எத்தனை பேரால் முடியும் என்று எனக்குத்
தெரியவில்லை.

பதுமினிக்குப் பிறகு, வைசெயந்திமாலாவிற்குப்
பிறகு தமிழில் எத்தனையோ
படங்கள் பரதத்தோடு வந்துவிட்டன சலங்கை ஒலி
உட்பட. ஆயினும், பதுமினியே இன்றைக்கும் நாட்டியப் பேரொளியாக
இருக்கிறார்.

மன்னவன் வந்தானடி பாடலைப் பார்க்கும்போது
ஒவ்வொரு மெல்லிய விதயத்திலும்
பதுமினியின் நடனத்தையும் தாண்டி, காட்சி
அமைப்பு, இசை, நடனம், நெறியாளல்,
ஒளிஓவியம், நடன அரங்கு, நடிப்பு, கதை, சூழல்,
பாடல், பாடலின் சந்தம், பாடலின் செறிவு
என்று ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்
கொள்ளும்.

அப்படியான சிறந்த கலைஞர்கள்.
எல்லாத்துறையிலும் சிறந்த கலைஞர்கள் ஒன்று
சேர்ந்து தரும் அந்த மிகையான(வலுவான)
கலைக்கூட்டை நடிப்பில் காட்டும்போது சில
விதயங்கள் சிலபேருக்கு சற்று மிகையாகத்
தோன்றக்கூடும்.

ஆனால், அவை மிகையல்ல! உண்மையில் வலு!

அது ஒரு சவால்.

உரையாடல், சூழல், கதை, இசை, பாடல் போன்ற
பல கலைஞர்களின் சிறந்த ஆற்றலுக்கு
ஒருங்கே ஈடு கொடுக்க வேண்டியிருந்தது
சிவாசிக்கும் அவர் கால மற்ற நடிகர்களுக்கும்.

அந்தச் சூழல் இன்று இல்லை. கலை,
கலைஞர்களின் ஆற்றலின் சங்கமம்
என்பதற்கு ஈடு கொடுக்க நடிப்பைத் தவிர
மற்றவை பெருத்துவிட்டன.

மீண்டும் சொல்கிறேன் - அன்று இருந்த நடிப்புக்
கலைஞர்கள் யாவருமே, கலையிலும் திறனிலும்
உயர்ந்திருந்தனர். நடிப்போடு கூடிய பிற
கலைஞர்களின் உயர்ந்த திறனுக்கு ஈடு கொடுக்க
வேண்டிய கட்டாயம் நடிக நடிகையருக்கு
இருந்தது.

இன்றைக்கு திரையில் நடிப்பிற்கு
அவசியம் இல்லாமலே போய்விட்டது.
ஆனால் அன்று இருந்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/2007

3 comments:

கொண்டோடி said...

இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துண்டு.
ஏனென்ற கேள்வியில்லாமலேயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிக நடிகையைப் பிடிக்கும்.

நீங்கள் சொல்வதுபோல் தாவணிக் கனவுகள் படம் சிவாசிக்குரிய பொருத்தமான படமாக எனக்குத் தெரியவில்லை; மிக மோசமான படமாகவே தெரிகிறது.
மிகை நடிப்பென்றபோதும் (நீங்கள் சொல்வதுபோல் பொருந்தா நடிப்பென்றே வைத்துக் கொள்வோம்) அவரின் பல பாத்திரங்கள் பார்வையாளர்களைச் சரியாகச் சேர்ந்தன. இன்று பார்த்தால் என்னைப் பொறுத்தவரை பாசமலர்கூட மிகவும் மிகைநடிப்பான பாத்திரம்தான். ஆனால் பார்வையாளருக்கு என்ன உணர்வை ஊட்ட வேண்டுமோ அதை அப்பாத்திரம் சரிவரச் செய்தது. இன்று பார்த்தாலும் இரண்டு சொட்டுக் கண்ணீராவது விடாமல் அப்படத்தைப் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை.

ஆனால் தாவணிக் கனவுகள் மிகவும் மோசமாகவே "எனக்கு"ப் படுகிறது. அதில் அவர் சாகும் காட்சி அபத்தம். சிவாசியின் மோசமான படத்துக்கும் காட்சிக்கும் நான் எடுத்துக் காட்டாகச் சொல்வது தாவணிக்கனவுகளும் அவரின் சாகும் காட்சியும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருவரின் நடிப்பை, அவரைவிட வேறு யார் செய்தாலும் சிரிப்புத்தான்.
இன்று தொலைக்காட்சிகளில் வரும் பல நிகழ்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன. அதையெல்லாம் அங்கதம் என்றளவில்தான் எல்லோரும் இரசிக்கிறார்கள்.

சிவாசியோ எம்.சி. ஆரோ செய்யாத ஒன்றை செயமோகன் எழுதினாரா என்று கேட்டால் எனது பதில் 'இல்லை' என்பதுதான். அனேகரின் பதிலும் அதுவாகத்தான் இருக்கும்.

nayanan said...

கொண்டோடி:

//இது தொடர்பில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்துண்டு.//

உண்மைதான். அதில்தலையிடவும்
யாருக்கும் உரிமை இல்லை.

ஆனால், எழுத்தாளர்களைப் பற்றிய சர்ச்சைகள்
கிளம்பும்போது அவை ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட்டுத்தான் இருக்கும். (வரலாற்றில் நிலைத்து விட்ட எழுத்தாளர்கள் அல்லவா :-)) )

சிவாசியை மகோஇராவைப் பற்றிய திறனோடான கருத்துகளோடு,
என்றால் பெரிய விதயம் இல்லைதான். ஆனால், தேவையில்லாமல் எங்க ஊர் ஆசாரிங்களுக்கு சிவாசியைப் பிடிக்கும் ஆனால் நாயர், நாடாருக்குப் பிடிக்காது என்று எழுதுவது, சில தகுதியில்லாத படங்களை மட்டும் எடுத்துப் போட்டு "இதனால் தான் இவர் மர்லின் பிராண்டோவாக்கும்" என்று நக்கலடிப்பது போன்றவை தேவையில்லாதது.

அதிகம் எழுதுபவர்கள் மெய்மறந்து விடும் இடங்கள் இவை போலும் :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்

பாச மலர் / Paasa Malar said...

இது பலகாலமாக சிவாஜியின் நடிப்பப் பற்றிப் பிறரும் பேசி
வருவதுதான்...இயல்பாகவே எல்லோரும் நடித்தாலும்(?)..
வண்ணமயமாக இல்லாத பட்சத்தில் கலைப்படம் என்று ஓரம் கட்டி விடுகின்றனரே...

அவரவர் ரசனையைப் பொறுத்தது..அந்தந்தத் தலைமுறை ரசனை மாற்றத்தைப் பொறுத்தது..

பழையதை ஒதுக்கியவர்களெல்லாம் இன்று remix என்றபெயரில் தூசி தட்டிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்..