Pages

Sunday, February 17, 2008

சிலம்பு மடல் 37

காப்பிய ஆசிரியரின் துறப்பு/துறவு!

காப்பிய ஆசிரியர் அரசு துறந்தார் என்றும்
அகல் இடப் பாரம் நீக்கினார் என்றும்
காப்பியம் சொல்கிறது.

"வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கிக்
கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி"
...சிலம்பு:வரம்தரு காதை:173-183

தேவந்திமேல் கண்ணகி தெய்வம் எழுந்தருளிக்
காப்பிய ஆசிரியரின் சிறப்பை சொன்ன இடம் அது.

"குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு...."
...சிலம்பு:பதிகம்:1-2

காப்பிய முடிவிலும் முகப்பிலும் இருக்கும் இந்த
இரண்டு குறிப்புகள் ஆசிரியரின் துறவு/துறப்பைப்
பற்றிப் பேசுகின்றன.

பல்வேறு நூலாசிரியர்களும் செங்குட்டுவன்
அரசனாகும் பொருட்டு இளங்கோ துறவியானார்
என்றும், பெரிய ஈகையைச் செய்தார் என்றும்
சொல்கிறார்கள் இந்தக் குறிப்புகளின்
அடிப்படையில். இன்னும் சிலர் அண்ணனுக்கு
வழி விட்டு தம்பி துறவியானார் என்று கூடச்
சொல்லத் தலைப்படுகிறார்கள்.

சிலம்பாசியர் துறந்தது உண்மை. அதை மறுக்க
வாய்ப்பில்லை.

எதைத் துறந்தார்? என்றால், அரசைத் துறந்தார்
என்று தெளிவாகத் தெரிகிறது.

ஆனால்,
எந்த அரசைத் துறந்தார்?
துறவின் தன்மை எத்தகையது?
என்ற இரு வினாக்களும் முக்கியமானவை.

சிலப்பதிகாரத்தைப் படிக்கும் யாவர்க்கும்
இளங்கோ முற்றும் துறந்த சாமியார்
என்ற எண்ணத்தைத் தருகிறது. அதுவும்
சிலர் சமணர் என்று சொல்வதையும் கேட்டு
அவர் சமணச் சாமியார் அல்லது சமணத் துறவி
என்று கூறுகின்றனர். அவர் எந்த நெறியைப்
பின்பற்றினார் என்பதெல்லாம் வேறு விதயம்.

இமயவரம்பன் சேரக் கொடியை இமயத்தில்
பொறித்த சேரப் பேரரசன். அவனுக்கு
இரண்டு பிள்ளைகள்; செங்குட்டுவன் மற்றும்
அவன் தம்பி.

இந்த இரண்டு பேருமே இமயவரம்பன் அரசின்
இளவரசர்கள். ஆட்சிப் பொறுப்பில்
இமயவரம்பன். "நுந்தை தாள்நிழல் இருந்தோய்"
என்று சொல்லப்படுவதைக் காண்க.

இவர்களோடு அமர்ந்திருக்கும் போது நிமித்திகன்
என்று உரைக்காரர்களால் சொல்லப்படும் ஒருவர்
சில திருச்சொற்களைச் சொல்கிறார்.

"...அரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டு..."

இந்தச் சூழலை நன்கு கவனிக்க வேண்டும்.
இமயவரம்பன் ஆட்சியில் இருக்கிறான்.
அவனுக்குப் பிறகு பட்டத்துக்கு யார்
வரவேண்டும் என்றால் - யாரையும் அவன்
கேட்கவேண்டியதில்லை. மரபுப்படி மூத்தவன்தான்
பதவிக்கு வரவேண்டும். அவன்தான்
பட்டத்தரசனாகப் பட்டம் கட்டப் படுவான்.
இதுதான் மரபு.

இதில் இமயவரம்பன் எதற்கு நிமித்திகனைக்
கேட்க வேண்டும்? அப்படியே கேட்டிருந்தால்
என்ன கேட்டிருப்பான்?

எப்பொழுது "குட்டுவனுக்குப் பட்டம் கட்டலாம்"
என்று கேட்டிருப்பான்; கூடவே எங்கே எப்படி
என்றும் கேட்டிருக்கலாம்.

இமயவரம்பன் கேட்கும் போது கூடவே
"துறப்பது" என்பதை அறிந்த வளர்ந்த
சின்ன மகனும் அவனுக்கு மூத்தவனான
பட்டத்துக்குரிய அண்ணனையும் வைத்துக்
கொண்டு கேட்கின்றான் என்றால்
அண்ணன் தம்பிக்குள் மன இடர் வரக்கூடிய
ஒன்றைக் கேட்க மாட்டான். அந்த முதிர்ச்சி
இல்லாதவன் இமயம் வரை வெற்றி கண்ட
பேரரசனாக இருக்க மாட்டான். (ஒரு ஏழைத்
தகப்பனுக்குக் கூட இந்த முதிர்ச்சி இருக்கும்.)

அது மட்டும் அல்லாது, அரண்மனையில்
அரசனின் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை
சோதிடம் அல்லது நிமித்தம் பார்க்காமல்
இருந்திருப்பார்கள் என்று எண்ண வாய்ப்பில்லை.

அந்த அவையில் "உரை செய்தவன்" என்றுதான்
காப்பியம் கூறுகிறது. உரை செய்பவன் என்றால் யார்?

எதிர்காலம் பற்றிக் குறிப்புகள் சொல்வதில் பல
வகை உண்டு. சோதிடம், கைரேகை போன்று
பல வகைகள்.

அருள் வாக்கில் பல வகையுண்டு.

சிலம்பில் பல இடங்களில் இப்படியான இடங்கள்
உண்டு. வேட்டுவ வரியில் சாலினியாட்டம்
சொல்லப் பட்டிருக்கிறது. கொற்றவை (அம்மன்)
ஒரு பெண்ணின் மீது ஏறி ஆடி அருள்வாக்கு
சொல்வது (ஏறத்தாழ வேப்பிலையாட்டம் போல
இருக்கும்). குன்றக்குரவையில் வேலன் ஆட்டம்
(வெறியாட்டு) சொல்லப்படுகிறது. (காவடியாட்டம்
போல இருந்திருக்கக் கூடும்) வேலன் ஆட்டம்
ஆடக்கூடிய ஆடவன் மேல் முருகன் ஏறி அருள்
வாக்கு/உரை சொல்வது.

இதுவன்றி சிலம்பில் அருவுரை பேசப்படுகிறது
(அருவ உரை << அருவுரை: அருவம் << அரு;
அருவம் = அசரீரி). அதற்கும் மேலே
எல்லாவற்றுக்கும் மேலாக மீனாட்சி அம்மன்
தெய்வமே பேசுகிறது. வரம் தரு காதையில்
கண்ணகி அம்மை பேசுகிறது.

அரண்மனையில் இமயவரம்பன் முன்னிலையில்
எவ்விதமான உரைசெய்வார் இருந்திருக்க
வேண்டும்?

வேலனாட்டமும் சாலினியாட்டமும்
இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால்
காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும். அது
மட்டுமல்ல இந்த இரு ஆட்டத்திற்கும் பம்பை
உடுக்கு முதலான இன்னியக் கருவிகளை வாசித்து
வேலனையோ சாலினியையோ அழைக்க
வேண்டும். அந்தச் சூழல் இருந்ததாகத்
தெரியவில்லை.

சோதிடம் என்பது காலக் கணிதம். காலக் கணிதர்
சொல்லியிருந்தால் ஏதாவது இராசி, நட்சத்திரம்
போன்றவற்றைச் சொல்லித்தான்
சொல்லியிருப்பார். அப்படிச் சொல்லப்படவில்லை
காப்பியத்தில்.

"திருப்பொறி" என்றால் ஒரு வேளை ஏதாவது
உடம்பில் அல்லது உள்ளங்கையில் உள்ள குறியா
என்றால்? - இருக்கலாமோ என்ற எண்ணம்
வருவது இயல்பு. அந்த அடிப்படையில் கூட
பலரும் உரை எழுதியிருக்கலாம்.

ஆனால் அதுவும் இல்லை என்று ஆதரவு
தருகிறார், அப்பர் திருமூலர். 'அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி'
உண்டு என்பது மந்திர முடிச்சு! அதைத்
திருமூலரால் மட்டும்தான் அவிழ்க்க முடிகிறது.

அரண்மனையிலே அரசகுரு போன்றோர்
இருப்பர். ஆன்ம, சமய நிலைகளில் அரசனுக்கு
வழிகாட்டும் நிலையில் ஞானமும் அருளும்
நிறைந்த பெரியார் இருப்பர். அப்படியான
பெரியார் ஒருவர், இமயவரம்பன் அரண்மனையில்
இருந்திருக்க வேண்டும்.

ஞானமும் அருளும் நிறைந்த அருளாளராகவே
அவர் இருந்திருக்க வேண்டும்.

இப்படியானவர்கள், பேரரசிற்கு ஞானகுருவாகவும்,
சமயகுருவாகவும், அரசகுருவாகவும் இருப்பது உண்டு.

அவரிடம் அரசியல் மற்றும் பட்டம் கட்டுவது
பற்றிய அரச ஆலோசனையின் போது அந்த
அருள் நிறைப் பெரியார், செங்குட்டுவன்
பேரரசனாக்குவது பற்றி பேசிவிட்டு,
இளங்கோவுக்கு "திருப்பொறி அரைசு
வீற்றிருக்கிறது" என்று சொல்லியிருக்க வேண்டும்.

பல நூல்கள் சொல்வது போல அது அரசாளும்
அங்க இலக்கணம் காட்டும் பொறி அல்ல.

அந்தப் பொறியானது திருப்பொறி; அது
இளங்கோவிடம் அமைந்திருக்கிறது; எப்படி
என்றால் அரைசு வீற்றிருப்பது போல.

ஓங்கிச் சிறந்த ஞானப் புலன் இளங்கோவிடம்
அமைந்திருக்கிறது என்று அவர் சொல்கிறார்.

"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்பதை ஆழ்ந்து படித்தால் அது தரும்
பொருள் "திருப்பொறி அரைசு வீற்றிருக்கிறது"
என்றுதான் வருகிறது. அதாவது
அந்தத் திருப்புலன் என்ற ஞானப் புலன்

நாட்டையெல்லாம் ஆளும் அரசனைப் போல
ஓங்கி உயர்ந்து இவனிடம் குடி கொண்டிருக்கிறது
என்று அது சொல்கிறது.

ஐம்பொறிகள் என்றால் மெய், வாய், கண், மூக்கு,
செவி என்ற ஐந்தினைக் குறிக்கும்.

எல்லா மனிதருக்கும் இருக்கும் மேலும் ஒரு
பொறி, மனம் அல்லது சிந்தை. ஒரு சிலருக்கே
அந்த சிந்தையில் இறைவன் அருளால் பெருஞ்ஞானப்
பெருஞ்சுடராய் ஞானப்புலன் விளங்குகிறது. அந்தப்
பெருஞ்சுடரை, பெருஞ்ஞானத்தைக் கொண்ட
சிந்தையைத்தான் "திருப்பொறி" என்று கூறுகிறது
காப்பியம். அந்தத் திருப்பொறி குட்டுவன் தம்பி
இளங்கோவிடம் வீற்றிருக்கிறது, குடி
கொண்டிருக்கிறது என்பதையும், அது ஓங்கி
உயர்ந்து நிறைந்து ஆளுமை செய்கிறது
என்பதைச் சுட்டவே "அரைசு வீற்றிருக்கிறது"
என்றும் சொல்கிறார் அந்தப் பெரியார்.

பொறி என்ற புலனில், திருவைக் கூட்டி
அதை சிம்மாசனம் போட்டு இளங்கோ மேல்
அமர வைக்கிறது காப்பியம்.

இப்பொழுது பாருங்கள் எங்கப்பன் மூலன் எப்படி
பல முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறான் என்று!

"கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே"
...திருமந்திரம்:த1-கல்வி-பாடல்291
(பழனியப்பா பதிப்பு, யி.வரதராசனார் உரை)

விளக்கம்: "உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப்
பார்க்கும்போது, அவர்கள் கருத்தில் ஞானக்கண்
புலனாகிறது. அவர்கள் அவ்வாறு புலனாகும்
உண்மையைச் சிந்தித்து, பிறர்க்கு உரைப்பர்.
கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறருக்கு
உணர்த்தி அவர்களது ஞானக்கண்ணை
விளங்கும்படி செய்வர்".

கற்றறிவாளர் கருத்தில் ஞானக்கண் புலனாகிறது
என்று சொன்னவிடத்து, அதுதான்
கற்றறிந்த இளங்கோவின் மேல் அரைசு
வீற்றிருக்கும் திருப்பொறி என்பது
அறியப்படுகிறது.

"கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்"
என்றவிடத்து இமயவரம்பனின் அரசவைப்
பெரியாரும் ஞானக்கண் பெற்றவர் என்பதும்
தனது ஞானத்தினால் இளங்கோவின் ஞானத்தை
அறிகிறான். அந்த ஞானம் பெருஞ்சுடர்
என்று அறிகிறான். அதை உரை செய்கிறான்
என்றும் அறியப்படுகிறது. அந்த ஞானக்கண்ணை
அந்தப் பெரியார் விளங்கவும் வைத்திருப்பார்.

ஒரு பெரியாரை "உரைசெய்தவன்" என்று
காப்பியம் சொல்லுமா? என்ற கேள்விக்கு,
சொன்னவள் கண்ணகி என்ற தெய்வம். அவள்
தேவந்தி மேல் வந்து சொன்னாள். தெய்வம்
அப்படித்தான் பேசும் என்று புரிந்து கொள்ள
முடிகிறது.

"உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி"
என்று சிலம்பு சொல்லுமிடத்து, இளங்கோ
வெகுண்டான் என்று பொருள் சொல்கிறார்கள்.
உருத்து என்பதற்கு சினந்து, வெகுண்டு என்ற
பொருள் உண்டாயினும், அச்சம் என்ற ஒரு
பொருளும் உண்டு. இளங்கோ அஞ்சினான்.
அல்லது மிரட்சியாய்ப் பார்த்தான் என்று
பொருள் கொள்வதுதான் சரி. ஏனென்றால்
அவன் இளைஞன்; இளவரசன். அவனைப்போய்,
உன்னிடம் பெருஞ்சுடர் வீற்றிருக்கிறது என்று
சொன்னால் அவன் பேந்தப் பேந்த விழிப்பான்
முதலில். அந்த விழியில் வெகுளியும் மிரட்சியும்
அச்சமும்தான் இருக்கும். ஆகவே அவன்
வெகுண்டு அரசு துறந்தான் என்பது மிகத் தவறு
என்பது அறியப்படுகிறது.

"செங்குட்டுவன்தன் செல்லல் நீங்க" என்று
சொல்கிறார்களே "செல்லல்" என்றால்
மனவருத்தம் என்று பொருள் கூறுகிறார்களே
என்பதற்கு விளக்கமாக,

"செங்குட்டுவன் தன்செல் அல் நீங்க" என்று
படித்துப் பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என்று
சொல்ல முடிகிறது,

"செங்குட்டுவன் வழியில், அவன் அரசாளும்
வாழ்க்கையில், அவனை இருள் அண்டாதிருக்கும்
ஞான ஒளியை அவனுக்குக் காட்டி உதவும்
பொருட்டு" (அல் = இருள் எல் = ஒளி) என்று
பொருள் வருவதை அறிய முடிகிறது.

"பகல் செல் வாயில் படியோர் தம்முன்
அகல் இடப் பாரம் அகல நீக்கி"

என்ற இடத்து:

பகல்செல் வாயில் என்றால் அது குணக்
கோட்டம் என்று முந்தைய கட்டுரைகள்
விளக்குகின்றன.

"படியோர்" என்றால் பலநூல்களிலும்
அங்கிருந்த துறவிகள் என்று சொல்லப்படுகிறது.

படி என்றால் படிவம் என்ற பொருளில்
"குணவாயில் கோயில்" என்ற பழைய
கருதுகோளில் அங்கிருந்த தெய்வச் சிலைகளின்
முன்னர் "அரசு துறந்து" துறவியானார்
என்றும் சில நூல்களில் சொல்லப் படுகிறது.

ஆனால் படியோர் என்றால் அதற்குப் பொருள்
முறையானவர் என்பதே. படிவது என்பது
முறைப்படுவது. "அடியாத மாடு படியாது" என்று
சொல்வது காண்க.

அது மட்டுமல்ல,

"அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமகனார் மகளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே"
...திருமந்திரம்:த2-இலிங்கபுராணம்-பா347

"ஆதிபராசக்தியான அன்னை, மலையன் மகளாகி
முக்கணனை முறையாக அர்ச்சித்து பத்தி செலுத்தி
வழிபட்டாள்" என்பது குறுகிய விளக்கம்.
இங்கே படியார என்பது முறையாக என்று
பொருள் தருவது அறியக் கிடைக்கிறது.

"அகல்இடப் பாரம் அகல நீக்கி" என்றால்,
ஆமாம் இளங்கோ அரசைத் துறந்தான்.

இமயவரம்பனின் முடியரசின் கீழ்
அவனது இளைய மகன் இளங்கோ
குணக்கோட்டம் என்ற கிழக்கு வாசல்
நிலப்பரப்பின் மாதண்ட நாயகனாக
இருந்தான்; அந்தப் பதவியை துறந்தான்!
அந்தப் பதவியைத் துறந்து, தன் அண்ணனுக்கும்
அண்ணனின் பேரரசிற்கும் இருள் நெருங்காமல்,
இருக்க தன் ஞானப் பேரரசால் உதவ
இந்த 'இடப் பதவியை" துறந்தான்.

அதனை அவன் தந்தை, அண்ணன், ஆசான்
மற்றும் சான்றோர் போன்ற முறையானவர்கள்
(படியோர்) முன் துறந்தான்.

இளங்கோ குணக்கோட்ட மாதண்ட நாயகன்
என்றால், செங்குட்டுவன் வஞ்சி அல்லது
பிற பகுதிகளுக்கு மாதண்ட நாயகனாக
இருந்திருக்க வேண்டும்.

அரசன் ஆட்சியில் இருக்கும் போது,
தலையெடுக்கும் அவன் பிள்ளை, ஆட்சிப்
பரப்பின் முக்கிய பகுதிகளில் உள்-ஆளுமை
செலுத்துவது பழக்கம்; மரபு.

அப்படித்தான் இமயவரம்பன் ஆட்சியிலே
இருக்கும் போது, அவனின் தலையெடுத்த
பிள்ளைகளான குட்டுவனும் இளங்கோவும்
ஆளுக்கொரு முக்கிய பகுதிக்கு மாதண்ட
நாயகர்களாக இருந்திருக்க வேண்டும்.

பகல்செல் வாயிலில் அப்பதவியினைத் துறப்பதால்
அந்த உள்-அரசைத் துறப்பதனால் இளங்கோ
குணக்கோட்ட மாதண்டநாயகனாக இருந்து
பின்னர் அதைத் துறக்கின்றான், ஞானப்பேரரசை
ஆளுதற்காக.

வரலாற்றில் இதற்கு நிறைய சான்றுகள் உண்டு.
இராசராசப் பேரரசன் தன் மகன் இராசேந்திரனை
கங்க நாட்டில் அதாவது கொங்கு நாட்டிற்கு
வடக்குப் பகுதிகளின் மாதண்ட நாயகனாக்கி,
அரசைப் பாதுகாத்தான் என்பது வரலாறு.

அவன் காலத்திலேயே, சேரநாட்டை ஆண்ட
பாசுகர இரவிவர்மன்(1), அவன் மகன் இரண்டாம்
பாசுகர இரவிவர்மனை உதகையில் மாதண்ட
நாயகனாக பதவியில் வைத்திருந்தான்.

அவ்வளவு ஏன், சிலப்பதிகாரத்திலேயே,
மதுரையை ஆண்டு மடிந்த பாண்டியன்
நெடுஞ்செழியன், அவன் மகனான வெற்றி வேல்
செழியனை கொற்கையிலே அமர்த்தி
தென்பாண்டி நாட்டின் காவலனாக
வைத்திருந்தான்.

இன்றைய காலத்தில் கூட இப்படியான பழக்கம்
இருக்கிறது என்று சொல்வாரை நான் துளியும்
மறுக்க மாட்டேன்!!!

ஆகையால் காப்பியத்தின் பதிகத்தில்
சொல்லப்படுகிற "குணவாயில் கோட்டத்து அரசு
துறந்த" என்ற வரியும், வரந்தரு காதையின்
"அகல் இடப் பாரம் அகல நீக்கி" என்று
சொல்லப் படுகிற வரியும் ஒன்றாகப் பார்க்கப் பட
வேண்டியவை. அவை இளங்கோ
குனக்கோட்டத்தின் காவலனாக, மாதண்ட
நாயகனாக இருந்த பதவியைத் துறந்ததை
சொன்ன வரிகள்.

உரைசெய்த பெரியார் சொன்ன
"அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு"
என்று சொன்னது அவனை ஞானி என்று
கண்டறிந்தது.

இரண்டையும் ஒரே பார்வையில் பார்த்து துறவு குறித்து
பல நூல்களும் வேறு பொருள்களைத் தருகின்றன.
ஆகவே, காப்பிய ஆசிரியரின் துறப்பு என்பது
இதுதான்; இத்தன்மையதுதான்.

இளங்கோ ஒரு சோகத் துறவியும் அல்ல, ஈகைத்
துறவியும் அல்ல.

குட்டுவன் நாட்டு வேந்தன்.
இளங்கோ ஞானவேந்தன்.

இருவரின் சுவடுகளும் தமிழ் உலகின் அழியாப் பதிவுகள்.

இவர்கள் இரண்டு பேருமே பெரும் பேறு
பெற்றவர்கள்தான்; ஆனால் இவர்களை மகனாகப்
பெற்ற இமயவரம்பன்தான் இவர்களை விட
பெரும் பேறு பெற்றவன். பெற்றவனுக்கு
இதை விடப் பெரும் பேறு கிடைக்க முடியாது.

"சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்து
அந்தம்இல் இன்பத்து அரசுஆள் வேந்துஎன்று"

என்று சொல்லும் சிலப்பதிகார வரிகளை
மிக மேலேத்திப் பிடிக்கிறது திருமந்திரம்.
அதையும் சேர்த்தால் கட்டுரை இன்னும்
நீண்டு விடும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

இராம. வயிரவன் said...

நன்றாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
//இளங்கோ ஒரு சோகத் துறவியும் அல்ல, ஈகைத்
துறவியும் அல்ல.

குட்டுவன் நாட்டு வேந்தன்.
இளங்கோ ஞானவேந்தன்.// என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறீர்கள். கட்டுரை தொய்வு இல்லாமல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

- அன்புடன், வயிரவன்

பாச மலர் / Paasa Malar said...

மாறுபட்ட சிந்தனை..தரும் தகவல்கள் வியப்புக்குள்ளாக்குகின்றன.