குடமலை நாட்டிற்குக் கிழக்கே இயற்கை அன்னை
அள்ளிக் கொடுத்த செல்வம் மலைத் தொடர்கள்.
பாலக்காட்டிற்கு வடக்கேயும், பாலக்காட்டிற்குத்
தெற்கேயும் தொடரும் இந்த மலைத் தொடர்கள்
சேர மண்ணின் மேல் அனைவரும் காணக்
குவியலாய் கிடக்கும் மரகதப் புதையல்கள்.
மேகங்கள் வந்து முத்தமிட, அங்கேயே அவற்றை
இளகி வழிய வைக்கும் மரகதப் பேரழகிகள். இந்த
அழகிகளிடம் சிக்கிக் கொண்டவன் நிலத்தை
நோக்குவதேயில்லை. "சித்தர்களும் அப்படிச்
சிக்கிக் கொண்டவர்கள்தான்; முனிவர்களின்
மோனங்களும் மரகத மோகம்தான்!!". ஞானிகளும்
சொல்லித்தர மறுக்கும் இரகசியம் அது.
சேரநாட்டின் இந்தப் பேரழகிகள் ஆணவம்
மிக்கவர்கள். ஆதிக்கப் பேரழகிகளின் முன்னால்
பேரரசனும் ஒரு தூசு. மறுப்போர் உண்டு?
ஓரழகியின் ஒற்றை அசைவிற்கே ஒடுங்கிப்
போய்விடும் மாந்தருக்கு முன்னால், அணிவகுத்து
நிற்கும் அழகிகளின் ஆர்ப்பரிப்பு!
நீலவானையும் மஞ்சத்துக்கிழுக்கும் நிமிர்ந்த
முகடுகள் திமிர் பிடித்தவை. அம் முலைகளில்
சிக்கிச் சீரழிந்த மேகங்கள் எனக்குச் சொன்ன
சேதியிவை!
மேகத்தின் சோகங்கள் அத்தோடு நின்றதில்லை.
ஊருலகு எங்கேயும்
காரிருளைப் போக்குகின்ற கதிரவனை
யாரேனும் காணாமல் செய்கின்ற
மாயம் விளை மேகங்கள்,
"தாம் விடுத்தும்"
எல் செய்வானை சேரத்துள் சேர்க்காமல்
சிறைவைக்கும் பாவைகளை
செய்ய ஒன்றும் ஏலாது
வானெங்கும் ஓடோடி முறையிட்டே
வாழ்கின்ற சோகத்தைக்
காண்கின்றார் கண்பனிக்கும்.
கண்டெடுக்கச் சென்ற என்னைக்
காமுற வைத்தப் பேரழகி
சொல்பேச்சில் சொக்கிப்போய்
நானேதோ பிதற்றிடினும்
சிக்கித்தான் நிற்கின்றான் சிவந்த சூரியனும்;
சேர பூமியினை அவன் எட்டிப் பார்க்கவும்
மலைப்பாவை மனம் வைக்க வேண்டும்!
சேரநிலத்திற்கு அரணாக இருக்கும் இந்த மலைத்
தொடர்களில் இடுக்கி மாவட்டக்
கிழக்கெல்லையில் மட்டுமே 13 மலைகள்
சுமார் 2000 மீட்டர் உயரத்திற்கும்
மேலானவைகள் என்று புள்ளியியல் சொல்கிறது.
கதிரவ எழுச்சி நமக்கெல்லாம் கடலின் மேல்
என்றால் சேரநாட்டிற்கு இம்மலைகளின் மேல்தான்
உதயசூரியன். "மிக்கிளஞ் சூரியனை"
வெகு அதிகாலைக் காண வேண்டுமானால்
சேரநாட்டான் இந்த மலைகளின் இடுக்குகளைத்
தேடத்தான் வேண்டும் என்பேன்.
தேடவில்லையானால் சில நொடிகளேனும்
இந்த மலைகளின் மறைப்பு சேரனைக் காக்கத்தான்
வைக்கும்.
உயர்ந்த மலைகளுக்கு அஞ்சி, குறைவான உயரம்
உடைய அல்லது சமவெளி இடுக்குகள் வழியே
வரும் மிக்கிளஞ் சூரியனுக்கு வழியாக நிற்பதாகக்
கவிஞர் எண்ணியதால்தான்
"குணவாயில்" என்று சொல்லாட்சியைப்
பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கிழக்குதிக்கும் கதிரவன் குடமலை நாட்டுக்குள்
நுழையும் வாசல் "கிழக்கு வாசல்" என்ற
குணவாயில். கிழக்கு வாசலை நிலப்படங்களைப்
பார்க்கும் போது அப்படியான கருத்து
வலுப்படவே செய்கிறது.
இதை மேலும் வலுப்படுத்துவது போல்தான்
வரம்தரு காதை இப்படிச் சொல்கிறது.
"பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்இடப் பாரம் அகல நீக்கி......"
...சிலம்பு:வரம்தரு காதை:179,180
காப்பியத்தின் முகப்பு, "குணவாயில்" என்று
சொல்கிறதென்றால் காப்பியத்தின் கடைசிக்
காதையில் ஏறத்தாழ காப்பியம் நிறைவு ஆகும்
போது கண்ணகி தேவந்தி மேல் எழுந்தருளி
காப்பிய ஆசிரியரின் முந்தைக் கால நிகழ்வை
(அதாவது அவர் துறவைப் பற்றிச் சொல்லிய
இடம். இதுபற்றி மிக ஆழ்ந்து பார்க்கப்
போகிறோம்) சொன்ன இடம்.
"பகல்செல் வாயில்" என்று காப்பியம் குறிப்பது
இலக்கியச் செறிவு மிகுந்த மேலும் ஒரு
சொல்லாடல். இருள் நீக்கும் இளஞ்சூரியன்,
அதாவது பகலைச் செய்யும் இளஞ்சூரியனை
பகல் என்றே சொல்லி அந்தப் பகல்
சேரநாட்டிற்குள் செல்லும் இடத்தில் துறந்தாய்
என்று சொல்வது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.
குணவாயில் என்பது நாட்டிற்குள்
எளிதில் நுழையக் கூடிய பகுதி.
இது பகல் செய்வானுக்கும் பொருந்தும்.
பகை செய்வானுக்கும் பொருந்தும்.
பகலை வரவேற்று, பகைக்கு அரணாக
இருந்ததுதான் குணவாயில் கோட்டம்.
காப்பிய முகப்பு "குணவாயில் கோட்டத்து
அரசுதுறந்து" என்று சொல்கிறது. காப்பிய முடிவு
"பகல்செல் வாயில்" அகலிடப் பாரம் நீங்கினாய்!
என்று சொல்கிறது.
இந்த இரண்டு செறிவு மிக்க வரிகள்
குணவாயில் என்பதனை கிழக்கு வாசல் என்று
உறுதி கூறுவதோடு இலக்கிய நயத்தையும் ஏத்தி
நிற்கின்றன.
"இரண்டு வரிகளும் காப்பியத்தின் இரு
முனைகளில் பொருளொத்து நிற்கின்றன."
குணவாயில், கோட்டம், என்ற இரண்டு
சொற்களும்(சீர்கள்) நாம் எடுத்துக் கொண்ட
மூன்றாவது சொல்லான (பதிகத்தின் மூன்றாவது
சொல் அல்லது காப்பியத்தின் மூன்றாவது சொல்)
"அரசுதுறந்து" என்பதன் பொருளை,
தொடர்ச்சியில் விளக்க மிக்க ஏதுவாகின்றன.
அன்புடன்
நாக.இளங்கோவன்
No comments:
Post a Comment