Pages

Wednesday, February 13, 2008

சிலம்பு மடல் 34

சிலம்பு மடல் - 34
பதிகத்தின் மேல் ஒரு பார்வை:

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்
பேருலகிற்கு சிலப்பதிகாரம் தமிழை அள்ளி
அள்ளிக் கொடுத்து வரினும் துளி கூட வற்றாமல்
அறிவுச் சுரபியாக அது பொங்கி வழிந்து
கொண்டே இருக்கிறது. இச்செந்தமிழ்க்
காப்பியத்தை ஆக்கிய அடிகள் தமிழ்
நெஞ்சங்களில் அழியா அரசோச்சி வருகிறார்.

அவர் வாழி!

பதிகம் காப்பியத்தின் முகப்பில் வைக்கப்
பட்ட காப்பியத்தின் தொகுப்பு. இலக்கண மரபு.
அதில்தான் எத்தனை மாற்றுக் கருத்துகளை
அறிஞர்கள் கூறியிருக்கின்றனர் என்று பார்க்கும்
போது வியப்பாக இருக்கிறது.

பதிகம் பிற்சேர்க்கையா?, அல்லது முரண்
கொண்ட மூலமா?, அல்லது மூலத்தில் சில
அடிகள் செருகப் பட்டனவா? என்ற மூன்று
நிலைகளிலும் நடந்திருக்கும் ஆய்வுகள் நம்மை
திகைக்க வைக்கின்றன.

பேரறிஞர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களோ
தம் ஆய்வில் பதிகம் காப்பிய ஆசிரியரால்
இயற்றப்பட்டதே இல்லை என்று பேருறுதி
காட்டுகிறார். அவர் கருத்துகளை அவ்வளவு
எளிதாக யாரும் மறுத்து விட முடியும் என்று
தோன்றவில்லை. பதிகம் குறித்த அந்த
மூன்று ஆய்வு நிலைகளிலும், ஆய்வுக்
கோணங்களிலும் தெளிவு நிலையும் உறுதி
நிலையும் இருப்பதாகத் தோன்றினாலும் பதிகம்
குறித்த மேலதிக ஆய்வுகள் ம.பொ.சி அவர்கள்
எடுத்துக் காட்டும் மூன்று வரிகளின் போக்கில்
மட்டுமே போய்க் கொண்டிருப்பது தெளிவு. அது
சரியில்லை என்ற சொல்ல முடியாது என்ற
போதிலும் பதிகத்தின் மற்ற பகுதிகள் ஆய்வு
செய்யப்படுவது குறைவாக இருக்கிறது என்று
சொல்ல முடிகிறது. அப்படியான பகுதிகள்
சிலவற்றையும் நோக்கிக் காண்பதில் இன்பம்
இருக்கவே செய்கிறது.

"குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்குக்...."
...சிலம்பு:பதிகம்:1-2

என்று துவங்கும் பதிகத்தின் முதல் அடியின் முதல்
மூன்று சீர்கள், உரையாசிரியர்களின் காப்பிய
ஆர்வத்தில் அதிகம் கவனிக்கப் படாமல்
போய்விட்டதோ என்று எண்ணத்தை
ஏற்படுத்துகிறது. ஏனெனில் அனைவருமே
"குணவாயில் கோட்டம்" என்பது
ஒரு கோயில் என்றே எண்ணி பொருள்
கொள்கின்றனர். அதற்கு உரையாசிரியர்களின்
உரையே காரணமாக இருக்கக் கூடும்.

குணவாயில் கோட்டம் என்பது குணவாயில்
என்று ஒரு கோயில் என்றும், கீழ்த்திசையில்
இருந்த ஒரு கோயில் என்றும், கிழக்கு வாசல்
என்ற கோயில் என்றும் கருத்துப் பட உள்ள
எழுத்துகளையே பல நூல்களிலும் காணமுடிகிறது.
கீழ்த்திசையில் இருந்த ஒரு கோயிலில் அரசைத்
துறந்து துறவியானார் இளங்கோவடிகள் என்றே
பொருள் எங்கனும் காணக்கிடைக்கிறது.

இதோடு சில நூலாசிரியர்கள் "கோட்டம்" என்பது
சமணர் கோயில்களுக்கான பெயர்; அதனால்
அவர் அங்கு துறவியானதால் இளங்கோவடிகள்
சமண சமயத்தைத் தழுவிய துறவிகள் என்றும்

எழுதும்போது அங்கே அவர்களின் ஆய்வினைக்
காண முடியவில்லை. இளங்கோவடிகள் எந்த
சமயத்தைச் சேர்ந்தவர் என்பது வேறு விதயம்.
ஆனால் கோட்டம் என்ற சொல் இருப்பதால்
அது சமணக் கோயில் என்று சொல்வதும் அதற்கு
மேலும் ஒரு படி சென்று அதனாலும் அவர்
சமணர் என்று சொல்வதும் முற்றிலும்
பொருத்தமற்றதாக இருக்கிறது,

கோட்டம் என்றால் என்ன? குணவாயில் என்றால்
என்ன? என்று பகுத்துப் பார்த்தோமானால்
"குணவாயில் கோட்டம்" என்றால் என்ன
என்பதற்கான விடை கிடைத்து, அது
"அரசுதுறந்து" என்பதற்கான பொருளுக்கும்
பொருள் கூட்டும்.

34.1) கோட்டம் என்றால் என்ன?

கோட்டம் என்றால் கோயில் என்று பொருள்
உண்டு. ஆனால் அது மட்டுமே பொருள் இல்லை.
கோட்டம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
"வள்ளுவர் கோட்டம்" என்று சொல்கிறோம்;
சென்னையில் உள்ள "வள்ளுவர் கோட்டம்"
என்பது வள்ளுவர் கோயிலா? இல்லையே!
திருவள்ளுவரை ஏத்தும் சிறப்பிடம். அவ்வளவே.

"கண்ணகிக் கோட்டம்" என்று சொன்னால்
அது கண்ணகிக் கோயில்!

"பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து"
சிலம்பு:நடுகல்காதை-225
என்று சிலம்பு சொல்கிறது. அங்கே பத்தினிக்
கோட்டம் என்றால் "பத்தினிக் கோயில்" என்ற
பொருள் சரியே. அதுபோல கந்த கோட்டம்
என்றால் கந்தன் கோயில்.

கோட்டம் என்பதற்கு வளைவு, சாய்வு, பகைமை
என்ற பொருள்களும் உண்டு.

"கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது"
என்பார் அப்பர் பெருமான். அரசன் தன்னைச்
சுற்றிப் பகைகள் இல்லாதிருப்பது அவனுக்குச்
சிறப்பு என்றும், அரசன் என்பவன்
சாய்ந்த/வளைந்த கோலனாக இல்லாதிருப்பது
என்றும் பொருள்கள் கூறுவர்.
அண்மையிலே அடிக்கடி அரசியலில் "சேலம்
கோட்டம்" என்று செய்திகள் வந்தன.
"சேலம் கோட்டம்", "பாலக்காடு கோட்டம்"
என்றால் என்ன?

தொடரிச் சேவையில் இந்தியப் பரப்பின்
ஒரு பிரிவு சேலத்தை தலமையாகக்
கொண்டுள்ளது. சில அல்லது பல நிலையங்களின்
தொகுப்பு அது. மண்டலங்களின் உட்பிரிவே
கோட்டம். Zone, Division என்று ஆங்கிலத்திலே
எழுதும் போது தமிழர்களுக்குத் தெளிவாகப்
புரிகின்ற உட்பிரிவுகள் அவை.

இப்பொருளை நாட்டுக்கு பொருத்திப் பார்க்க
வேண்டும். நாட்டிலும், மண்டலம், கோட்டம்,
என்ற பிரிவுகள் உண்டு.

அது மட்டுமல்ல, கோட்டம் என்பது கோட்டை
என்ற பொருளையும் அண்டி நிற்கும். அதோடு
பாசறை எண்ற பொருளும் அதற்கு உண்டு.

கோட்டம் என்பதனை இங்கே விட்டு விட்டு,
"குணவாயில்" என்றால் என்ன, எது என்று
அறியவேண்டியுள்ளது.

34.2) குணவாயில் என்றால் என்ன?

குணவாயில் என்றால் கிழக்கு வாசல். "குண"
என்பது கிழக்கு திசையைக் குறிக்கும் சொல்.
"குணவாயில்" என்றால் என்ன என்பதனை
எல்லோருமே மிகச் சரியாகச்
சொல்லியிருக்கிறார்கள். நமக்கு அதில்
மறுப்பிருக்க முடியாது. ஆனால், அது எது?
எதற்குக் கிழக்கு? எங்கே? என்பதைக்
காண்பதுதான் அவசியமாகிறது.

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் சீர் குறிக்கின்ற
"குணவாயில்" என்பது குடமலைநாட்டின் கிழக்கு
வாசல் பகுதியை. அது வெறும் திசையைக்
குறிக்கவில்லை. வஞ்சியைத் தலைநகராகக்
கொண்ட சேரப்பேரரசின் நடுப்பகுதி குடமலை
நாடு. வஞ்சி மாநகரம் மகோதை என்றும்
திருவஞ்சைக்களம் என்றும் சுந்தரமூர்த்தி
பெருமானால் திருவஞ்சைக்களப் பதிகத்தில்
(ஏழாம் திருமுறை) சொல்லப்படும் இடம்.
வரலாறு மற்றும் ஆன்மிக முக்கியம் நிறைந்த
இடம் அது.

வஞ்சி நகரப் பரப்பில் தான் கொடுங்களூர்
இருக்கிறது (புகழ்பெற்ற பகவதி அம்மன்
கோயில்). இன்றைய கொச்சியில் இருந்து
வடக்கே சுமார் 40 கி.மீ தொலைவில்

கொடுங்களூரை உள்ளிட்ட வஞ்சிப் பரப்பு
இருக்கிறது, இங்குதான் முல்லைப் பெரியாற்றின்
கழிமுகமும் இருக்கிறது,
தேக்கடியில் உருவாகி 300 கி.மீ பாய்ந்து
வரும் பெரியாறு கடலில் கலப்பது வஞ்சி
மாநகரத்தில். சோழன் தலைநகரான புகாரில்
காவிரி கடலில் கலப்பது போல,
சேரன் தலைநகர் வஞ்சியில் அரபிக்கடலில்
பெரியாறு கலக்கிறது.

தற்போது வஞ்சியில் (தற்போதைய கொடுங்களூர்)
இருந்து தென்கிழக்காக நோக்கினால் 120-130
கி.மீ தொலைவில் தேக்கடி தெரியும். வடகிழக்காக
நோக்கினால் ஏறத்தாழ 170-180 கி.மீ தொலைவில்
உதகை தெரியும்.

கொடுங்களூரில் இருந்து கிழக்காக நேர்கோடு
போட்டால், சில திகிரிகள் வேறுபாட்டில்
மதுரை இருக்கிறது. (கொச்சியில் இருந்து நேர்
கோடு போட்டால் அது மதுரை வழியே
யாழ்ப்பானத் தீவுகளோடு போய்ச் சேரும்.)

உதகையில் இருந்து வஞ்சிக்கு நேர்கோடு வரைந்து
வஞ்சியில் இருந்து தேக்கடிக்கு கோடுபோட்டால்
இடைப்பட்ட கோணம் ஏறத்தாழ செங்கோணமாக
இருக்கின்றது.

அந்தக் கால சேரநாடு என்பது தென்கோடியில்
அனந்தபுரத்தை உள்ளிட்டு, தெற்கே நாகர்கோயில்
வரை இருந்த ஆய்வேள் நாட்டையும்
உள்ளிட்டதாகும். ஆய்நாடு சேர பாண்டிய
ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருந்திருக்கிறது.

தேக்கடி சுற்றிய பகுதி, குடமலைநாட்டின்
தலைநகரான வஞ்சியில் இருந்து தென்கிழக்காக
இருந்தாலும், குடமலை நாட்டின் தென் எல்லை
வரை இருக்கும் குடநாட்டைப் பொருத்தவரை,

தேக்கடியைச் சுற்றிய பகுதி "சரி கிழக்கு".

மேற்கு மலைத்தொடரில் இடுக்கி மாவட்டத்தில்
பல உயரமான மலை முகடுகள் உள. இதில்
வடபகுதியில் ஆனைமுடி மிக அதிக உயரம்
கொண்டது; சுமார் 2695 மீட்டர், இதுதான்
தென்னிந்தியாவின் உயரமான மலை என்று
சொல்கிறார்கள். தேக்கடிக்கு அருகில் உள்ள
செங்குன்றம் 1700 மீட்டருக்கும் மேலே உயரம்
கொண்டது.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட
மலைப்பகுதிகள் ஏற்றமும் இறக்கமும்
கொண்டவை. மதுரையில் இருந்து குடநாட்டுக்கு
வர வேண்டுமானால், இரண்டு பாதைகள் உள்ளன.

ஒன்று மதுரை-கொச்சி சாலை, இன்னொன்று
கம்பம் வழியாக வரும் மதுரை-கோட்டயம்
சாலை. இந்த இரண்டு சாலையுமே தமிழகத்து
எல்லக்குள் கம்பத்திற்கு சற்று தொலைவு வரை
ஒரே சாலையாக இருந்து பிரிந்து சிறிய
கோணத்தில் குடமலைச் சேர நாட்டுக்குள்
நுழைகின்றன.

இந்த இரு பாதைகள் சேர, பாண்டிய
நாடுகளுக்கு மிக முக்கியமானவை.

இன்றைய கேரள-தமிழக எல்லையில் இருந்து
தெற்கே தேக்கடி, வண்டிப்பெரியார், வடக்கே
தேவிகுளம், மேற்கே பேரியாறு (பெரியாறு) என்ற
கேரளப்பகுதிகளை நாம் கூர்ந்து பார்த்தால்,
அந்தப் பரப்பு குடமலை நாட்டின் "கிழக்கு வாசல்"
என்பது புரியும்.

இந்தக் கிழக்கு வாசல் அரண முக்கியத்துவம்
வாய்ந்தது.

இதைத்தான் "குணவாயில்" என்று சிலம்பின்
பதிகம் கூறுகிறது. இந்த அரண முக்கியத்துவம்
வாய்ந்த கிழக்கு வாசல் அன்றைய நாட்டுப்
பிரிப்பின் படி தனிக் கோட்டமாக (அல்லது
மண்டலமாக அல்லது வட்டமாக அல்லது
மாவட்டமாக அல்லது சிற்றரசாக) இருந்திருக்க
வேண்டும். அரண சூக்குமம் நிறைந்த பகுதி
என்பதால் இது சிறப்பு பெற்றும் இருந்திருக்க
வேண்டும். சேரப் பெரும் பாசறை இருந்திருக்க
வேண்டும்,

அதுதான் "குணவாயில் கோட்டம்".

நாம் அது ஒரு கீழ்த்திசை கோயில் என்று
எண்ணிவிட்டோம்.

தொகுப்பு:

+ குணவாயில் என்பது குடமலைச் சேர நாட்டின்
அரண முக்கியம் நிறைந்த கிழக்குப் பகுதி
+ இது குடமலைச் சேரநாட்டின் கிழக்குப் பகுதி.
சேர-பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதி.
+ இப்பகுதி, இன்றைய கேரள தமிழக எல்லைப்
பகுதியில் இருக்கும் குமுளி, செங்குன்றம்,
தேக்கடி பகுதிகளை உள்ளிட்டு, மேற்கே
வண்டிப் பெரியார் போன்ற ஆற்றங்கரை
நகரத்தைக் கொண்டதாகவும் வடக்கே
தேவிகுளம் அல்லது ஆனைமுடி
மலைத்தொடர் வரை உள்ள பகுதிகளைக்
கொண்டதாகவும் இர்ருந்திருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரை இவற்றிற்கு மேலும்
சான்றுகள்/ஏரணங்கள் கூட்டுவதாக அமையும் என்று கருதுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
13/பிப்/2008

1 comment:

Kannan said...

மிகவும் அருமை