Pages

Saturday, July 21, 2007

நடிகர் திலகத்திற்கு நினைவாஞ்சலி

இவனைக் கண்டார் சிவனைக் கண்டார்
சிவனைக் காண இவனைக் கண்டார்!
வீரம் கண்டார் வீரம் கொண்டார்
ஈரம் கண்டார் விழிஈரம் கொண்டார்!

வலியனாய் வளவனாய் வள்ளளாய் வசந்தனாய்
எளியனாய் ஏருழவனாய் எழுச்சியாய் எள்ளலாய்
அரசனாய் ஆண்டியாய் அப்பனாய் அறிஞனாய்
வறியனாய் முடவனாய் வண்டமிழில் எல்லாமாய்

ஒப்பும் மிக்கும் உலகில் இல்லா
கூத்தன் அவனே! கூத்தும் அவனே!

நடிப்பு இலக்கணத்தின் நாடகம் முடிய,
நடித்த சிம்மம் நன்னிலம் பிரிந்து
அயரா துழைத்த அயர்வு தீர
இயற்கை அன்னை மடிமீது தலைசாய்க்க,
பார்த்த விழிகள் பார்த்தபடி பனித்திருக்க
கூத்துத் தமிழின் மூத்தமகன் பிரிகின்றான்!

அன்னைத் தமிழுக்கு அணிசெய்த அவள்மகன் வாழியவே!
தன்நிகர் இல்லாத் தமிழ்க் கூத்தன் வாழிய வாழியவே!

கண்கள் நீர்சொரிய கரங்கள் குவித்து
கும்பிட்டுக் கூறுகின்றேன் 'போய்வா' தமிழ் மகனே!

நாளை, கும்பிட்டுக் கூப்பிடுவேன், வருவாயா கலைமகனே!
கூத்துத் தமிழின் மூத்தமகனே,

வரமாட்டாய் நீ!
வாடுகிறேன்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/01

4 comments:

G.Ragavan said...

அருமை. அழகான தமிழில் அருமையான நடிகர் திலகத்திற்குக் கவிதாஞ்சலி செலுத்தி விட்டீர்கள். மிகவும் அருமை.

பாரதிய நவீன இளவரசன் said...

//வலியனாய் வளவனாய் வள்ளளாய் வசந்தனாய்// 'வள்ளலாய்' என்று வந்திருக்கவேண்டுமோ?

நீங்காப் புகழ் பெற்ற நடிகர் திலகம், நடிப்புப் பல்கலைக்கழகம், நடிப்பின் சிகரம்...நமது இதயம் கவர்ந்த 'சிவாஜி' கணேசனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பாக அமைகிறது இந்த அஞ்சலி; மண்ணிலிருந்து விண்ணுக்குக் கேட்கட்டும் உங்கள் பண்.

nayanan said...

நண்பர்கள் இராகவன் மற்றும் இளவரசர்:

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி:

இளவரசர்:

ஆமாங்க அது வள்ளலாய் என்றுதான்
இருக்கவேண்டும். சுட்டியமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

ஜோ/Joe said...

நடிப்புலக சக்கரவர்த்தியின் நினைவு நம்முள் என்றும் வாழும்! நன்றி!