Pages

Friday, May 25, 2007

இரியால் மட்டுமா? - கவிதை

தலைப்பு: இரியால் மட்டுமா?
பாவகை: கட்டளைக் கலித்துறை
(அந்தாதியுடன்)

(அரபு நாட்டில் பல காலம் பணிபுரிந்தவர் தமிழகம் திரும்பும்போது பணத்தை மட்டும்தான் எடுத்துச் செல்ல இருக்கிறதா என்று வினவும்தலைப்பில் நடந்த
கவியரங்கில் பாடிய பாடல். இரியால் --> சவுதி அரேபியாவின் பணம்)
இறைவணக்கம்
இழைக்கும் எழுத்துக்(கு) உயிர்தனை ஒத்தியால்! ஈசஉன்னை
அழைக்கும் அடியேன் அவமதை ஒத்ததே; ஆதரவே,
மழைக்குந் நிகர்இத் தமிழ்பொழி மன்றிலே, ஒன்றறியேன்
குழைக்கும் பொருளில் குறைஅறக் கொட்டுவாய் வல்லபமே!

தலைமை வணக்கம்
வல்லபம் வற்றிலி, வைய வகையெலாம் வாகுடையச்
சொல்லினில் செய்திடும் செம்மொழிச் சுந்தர, சீருடையத்
தொல்லியத் தண்மொழித் தொய்வறத் தந்திடு தோளுடைய
மெல்லிய முன்னவ மொய்ப்பதில் யாமும் மகிழ்கிறமே!

சபை வணக்கம்
மகிழும் மனவர் மயக்கும் மொழியினர் மாமொழியால்
அகிலம் இணைத்தோர் அணியோர் அணிஅணி ஆனவர்கள்
நெகிழும் மனதால் நிதிய மளிப்பவர் சேரரங்கில்
முகிலின் பெயலாய் முந்தி வணங்கினனன் (அன்)புற்றிவனே!

பாடல்
புற்றறு ஈசல் புலபுல வென்றெங்கும் பூப்பதுபோல்
பெற்றனள் பாரத அன்னையும் பொங்கிடுஞ் சோறதுபோல்
கற்றவர் கற்பவர் உற்றவை உந்திடச் சிந்தினராம்
வற்றின பாலையில் கொஞ்சம் வெளிமிச்சம் எங்கனுமே! (1)

எங்கனும் மேவிய ஈரம்இல் மண்ணின் இடுப்படியில்
தங்கியநல் லூற்றில் தழைக்குந் தகைகொள் இரியால்கள்,
மங்கல மாதன, மாநிலத்(து) இன்சுவை யீச்சமுடன்
இங்குள மாடதும் ஏர்தரும் ஒட்டம் அறிந்ததுவே! (2)

அறிந்தனம் பொன்மணி அள்ளி முடிகையில், சிந்தைஒன்றிச்
செறிந்தம் பசுமையின் செம்பொருளை, சொந்தத் திருமண்ணில்,
வெறியில் வெளியினில் வெம்மை விதைப்பவர் உள்ளமதைப்
பிறிந்து கழனிகள் கட்டிப் பதிப்பம் பயிர்தனையே! (3)

பயிரைப் பிரிந்திட்டப் பாலைப் பொழுதினில் போர்த்தமுடி
மயிரின் கருகலை மோந்த கணங்கள் மனம்நிலவி
செயிர்செய் தமிழ்நிலம் சீர்செய, சந்ததி சீர்பெருக,
வெயில்வெல் மருந்தாம் வளர்தரு நீழல் விதைத்திடுமே! (4)

விதைக்கும் வனங்கள் விளைகையி லெண்ணுவம் புண்பரங்கி
பதைக்கக் கொளுத்திய பண்டைச் சிவகங்கைச் சீமைவனம்;
அதையும் கடந்தோ அரபின் வறட்சி? இனிவருநாள்
எதையும் இழக்கினும் எம்வன மென்றும் மறுக்குவமே! (5)

மறுத்திடும் அண்டை நதியை முடக்குது; நம்பொழிலை
வெறுத்திடும் பண்பில் விதைப்பது கண்டோம் பெரியபாலை;
நறுக்கதன் நீளம் நதியிலாப் பண்பிங்கே நாமறிவோம்,
அறுக்குவம் அண்டைச் சதியினைச் செல்லும் அணியமைத்தே! (6)

அணியும் உடைகள் அரபியன் பீடது சொல்கிறதே
பணியும் பழைய அரபுத் தலைப்பாய் தமிழனதாம்!
துணிகள் நவமென வாயினும் துண்டுவேட்டி சீலையினைப்
பிணியைப் போலப் பதுக்காமல் தொல்பெருமை பேசிடுமே! (7)

பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி
வீசும் மொழியினைப் பேசும் பழியினில் தாழ்தமிழர்
காசும் பணமுமே தாசியின் பேரையும் பேசிடுந்தான்
தேசு தமிழ்நிதம் பேசிப் பெருமைகள் கொள்ளுவமே! (8)

கொள்ளோம் மனதில் இனியும் தமிழ்ப்பறிக் கூட்டுதன்னை
விள்ளோம் பிழைமொழி வேண்டோம் குறைமொழி, வென்றிடவே
உள்ளோம் தமிழுடைத் தொன்மம்; அரபூரில் கற்றதையாம்
தள்ளோம் தரணியில் தள்ளித் தவியோம் முகவரிக்கே! (9)

முகமே முகத்தின் சுடரே சுடர்தரு நெஞ்சுடைய
அகமே அகத்தில் விளையும் சுகமே அறிந்திலர்க்குப்
பகமே பகத்தின் முடிபே பரமன் தருதமிழே
தொகமே உனைவிட ஒன்றில்லைத் தேடி இழைத்தனனே! (10)

(பாடல் நிறைவு)

இறைக்கு நன்றி
இழைக்கும் எழுத்துக்(கு) உயிர்தனை ஒத்தியால்! ஈசஉன்னை
அழைத்த அடியேன் அவமதை ஒத்ததே; ஆதரவே,
மழைக்குந் நிகர்இத் தமிழ்பொழி மன்றிலே, ஒன்றறியேன்
குழைத்த பொருளில் குறைஅறக் கொட்டினாய், நன்றிகளே!

(நிறைவு)
பாடல் விளக்கம்/பொருள்/குறிப்பு:

இறைவணக்கப் பாடல்:
நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உயிர் உண்டல்லவா? அதுவே இயக்கம். "இழைக்குமெழுத்துக்குயிரே ஒத்தியால்"என்ற சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவரியில் துவங்கும் தேவாரப் பாடல் ஒன்றுஅற்புதமானது. அந்த வரியில் சில மாற்றத்தோடு இந்தப் பாடல் துவங்கிற்று.
அவமதை = அவம் + அதை ; அவம் என்று சொன்னது இறைவனின் முன்னர் எத்தனைஇழிந்தவன் அடியேன் என்ற சிறுமையைச் சொன்னது.
தலைமை வணக்கப் பாடல்:
"வைய வகையெலாம்" என்று சொன்னது கவியரங்கத் தலைவர்,தமிழ் மரபு, ஐக்கூ, கசல், கானா போன்ற உலகில் உள்ள பல கவிதைகளிலும்திறன் கொண்டவர் என்பதுரைக்க.

சபைவணக்கப் பாடல்:
மனவர் = மனம் கொண்டவர் (கன்மனவீர் என்பார் அப்பர் பெருமான்)
"அணியோர் அணிஅணி ஆனவர்கள்" என்றதுபெரிய கூட்டு/சங்கமாகவும், சிறு சிறு கூட்டு/அணி/சங்கம் ஆக சேர்ந்தோஅல்லது பிரிந்தோ பொதுவில் காணப்படும் அமைப்பினை, குறிப்பாக தமிழர்களின்பெருங்குழு, சிறுகுழுத் தன்மையைச் சொன்னது.
பெயலாய் = பெயல் + ஆய்; பெயல் = பெய்தல், பொழிதல்
பாடல் - 1:
புற்றறு = புற்று + அறு: புற்றினை அறுதல் என்பது புற்றை விட்டு வெளிப்போதல்
பாடல் - 2:
ஈரம்இல் மண்ணின் = உலர்ந்த நீர் தங்காத பாலை மண்மங்கல மாதன = மங்கல மாது + அன = மங்கல மாதினை ஒத்த.அரபி மண்ணில் கால காலமாய் நித்தியக் கல்யாணிபோல் என்றும் காய்த்து வரும்பேரீச்சையை மங்கல மாதென்று சொன்னது.
ஈச்சு = பேரீச்சை
மாடதும் = மாடு + அதும்; மாடு = செல்வம், பரம்பரைச் சொத்து.(மாட்டுப் பெண் என்று சொல்லப்படும் வழக்கை நோக்குக)
ஒட்டம் = ஒட்டகம். (இந்த மண்ணின் பரம்பரைச் செல்வம் ஒட்டகம் என்று சொன்னது)
பாடல் - 3:
"வெளியினில் வெம்மை விதைப்பவர்" என்று சொன்னது, நமது நாட்டிலே வழி வகைஆராயாமல் நீர் வளம் இயற்கை வளம் பெருக்காமல், கண்போன படி விளை நிலங்களையும்வனங்களையும் வணிக, சொந்த, அரசியல் காரணங்களுக்காக அழித்து வரும் நம்மவரைப் பற்றியது.
போற போக்கில் "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்று நமது நிலமும்ஆகிவிடுமோ என்ற கவலையில் எழுதிய பாடல் இதுவும் அடுத்த சிலவும்.
பாடல் - 4:
செயிர் = நோய், அவலம், தவறு
"செயிர்செய் தமிழகம்" என்றது, நம்மூர் தவறுகளைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதாக/கொண்டதாக எண்ணுவது.
"சந்ததிகள் சீர்பெருக" என்றது நாம் அமைத்துக் கொடுக்கும் இயற்கைச் சூழலேநமது பின்னவர்களுக்கு நாம் தரும் நல்ல சீர்வரிசையாக இருக்கும் என்ற பொருளில்.
(இல்லாவிட்டால், வரும் தலைமுறைகளின் தலைமயிர் நம்மூர் வெயிலில்பொசுங்கும் வாடை அடிக்கும் நிலை வருமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது)
வளர்தரு நீழல் விதைத்திடுமே என்றது "நிழல் கொடுக்கும் பெரிய மரங்கள் கொண்ட காடுகள், வனங்கள், சோலைகள் எங்கும் வளர்ப்பதும் பெருக்குவதும்குறித்தது.
பாடல் - 5:
சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் படுவது, ஆங்கிலேயர்மருது பாண்டியரைக் கைது செய்ய, சிவகங்கைச் சீமைக்கு வளமாக விளங்கியமிகப் பெரிய காட்டைக் கொளுத்தி முழுவதுமாக அழித்து நாசப்படுத்தியதால். அன்று அவன் செய்த கொடுமையால் இன்று அந்தப் பகுதியில் துன்பம் மிகுந்து போய் இருக்கிறது. ஏறத்தாழ பாலையாகவே அதுவும் இருக்கிறது.இதனைப் பற்றிய மிக அருமையான வரலாற்றுக் கட்டுரையை முனைவர் இராம.கி அவர்கள்valavu.blogspot.com என்ற தனது தளத்தில் எழுதியிருக்கிறார். அனைவரும் படித்துப்பயன்பெற வேண்டியக் கட்டுரை அது.
அதன் நினைவு வர இந்தப் பாடலில் அதனைச் சேர்த்தேன். காடுகளை கண்மண்தெரியாமல் வெட்டி எறியும் நம்மவர்க்கு பட்டும் புத்தி வர மாட்டேன்கிறதே என்ற எண்ணத்தில் சொன்னது.
"அதையும் கடந்தோ அரபின் வறட்சி?" என்றது, அந்த வறட்சியில் துவண்டு பலர்அரபிய, மலேயப் புறங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆகவே, அரபிப் பாலைவனத்தின் வறட்சியை விட நம்மூர் இராமநாதபுரம், சிவகங்கை வறட்சி அதிகம் என்று சொல்ல முனைந்த பாட்டு என்றறிக.
பாடல் - 6:
தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்கள் நீர்தர மறுத்து அயோக்கியத்தனம் செய்து வருகின்றன. இது போகப் போக நமது ஊரையும் பாலையாக்கிவிடும் என்ற கவலையில் சொன்னது.
"நறுக்கதன் நீளம் நதியிலா"; நறுக்கு = சிறு ஓலையில் கிள்ளியது அல்லது கீற்றினில் நறுக்கியது.
அரேபியாவில் "சொல்லிக் கொள்ளும்படியான" நீரோட்ட நிலைகள் இல்லை என்றுசொல்ல வந்தது; "பண்பிங்கே" என்றது, இதனால் பசுமைக் காட்சிகள் குறைந்திருக்கிறது என்று உணர்த்தச் சொல்லியது.
"செல்லும் அணியமைத்தே" என்றது, இயற்கை வளங்களில் அக்கறை கொண்டோருடன்மட்டும் நம்பிக்கை வைப்பது என்று சொல்லியது. "செல்லும்" என்றது செல்லுபடியாகிறஅணியம் என்ற பொருளில்.
பாடல் - 7:
அரபிய ஆடவரின் உடைகளில் இருக்கும் கம்பீரம் மற்றும் அதில் அவர்கள் அடையும்பெருமை குறித்துச் சொல்லியது.
"பணியும் பழைய அரபு" என்றது, இறைவனைப் பணிகின்ற அரபியர்; அவர்களின் பழையதலைப்பாகை மரபு நமது ஊரில் நாம் துண்டு அல்லது நீளத் துணியைத் தலையில்சுற்றிக் கட்டுவது போலாம். பண்டைய கால தமிழ மேற்கத்திய உறவுகளின் கலப்பா,அல்லது இயல்பா என்பது ஆயத் தக்க விதயம். அரபியாவில் நம்மூர் தலைப்பாகைமாதிரி அணிபவர்கள் சிலரைப் பார்த்திருக்கிரேன். இன்னும் செங்கடல் சுற்றிய பகுதிகளிலும் சூடானின் சில பகுதிகளிலும் வேட்டி, தலைப்பாகை அணியும் பழக்கம் இருப்பதாகச் சொல்லிதமது தந்தையார் படத்தைக் காட்டினார் ஒரு சூடானியர். அதனைக் காட்டாகச் சொல்ல வந்து,நமது மக்கள் வேட்டியையும், துண்டையும் ஏழைக்கும் பிச்சைக் காரனுக்கும் மட்டும்சொந்தம் போல எள்ளுவதை வருந்திச் சொன்னது இப்பாடல்.
மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ஆடை தரிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.ஆயினும் இகழாத பண்பும், பழம் மரபும் மனதில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்சொன்னது. இந்த வகையில் அரபிய ஆடவர் என்னைக் கவரவே செய்கிறார்கள்.
பாடல் - 8:
"பேசும் மொழியினில் வீசும் ஒளியினில் வாளரபி!"
வாளரபி = வாள் + அரபி; வாள் = ஒளிர்தல் (புற்றில் வாள் அரவும் அஞ்சேன் என்றமாணிக்கவாசகரின் வரியை கவனிக்கவும்).
தாய்மொழியைப் பேசும்போதும் அதனை மிகத் தூய்மையாக அவர்கள்பேசும்போது, ஒவ்வொரு அரபியும் பெருமிதத்தோடு ஒளிர்கிறார்கள் என்றுசொன்னது.
இந்தப் பெருமிதம் ஒவ்வொரு அடிமைப் புத்தியும், கொண்ட தமிழனுக்கும் உரைக்க வேண்டும். தாம் பேசும் மொழியில் பெருமிதப்படாவிடிலும்அதனைச் சிறுமைப் படுத்துவோரை அரபியருடன் ஒப்பிட்டுப் பார்த்துநான் வேதனைப் படும் கணங்கள் அதிகம்.
"வீசும் மொழியினைப் பேசும் பழியினில் தாழ்தமிழே!" என்றது, தமிழ் மக்களில்
பலரும் மொழியின் தடம் மறந்து பேச்சிலும் எழுத்திலும் பொறுப்பற்றுக் கிடப்பதையும்அவர்கள் மொழி வீசுகிறது என்றும் சொன்னது. வீச்சம் என்றால்
"முடை நாற்றம்" என்றுபொருள். மதுரை நெல்லைப் பகுதியில் "என்னலே வீசுது" என்று மூக்கைப் பிடிப்பார்கள்.
அந்த வீச்சத்தைப் பேசுவது பெரும் பழிக்கு உள்ளானது என்று சொல்லி அதனால்தமிழர் தாழ்கிறார்கள், தாழ்ந்து போகிறார்கள், தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுசொன்னது.
தேசு = சுடரும், ஒளிரும், சோதி என்பன ஆகும். வடமொழியில் இதனை "thEjus"என்பார்கள்.
"தேசுடைய இலங்கையர் கோன்" என்று சுந்தரர் பெருமான் சொல்வார்."தேசுடைய விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி" என்பார் மாணிக்கவாசகர்.
பாடல் - 9:
விள்ளோம் = சொல்லோம்; விள்ளுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள்.
பாடல் - 10:
பகம் + ஏ = பகமே;பகம் = பிரிவு, பகுப்பு, பிளவு.
அற்புதமான நமது தமிழையும் தமிழ்த் தொன்மங்களையும் அறியாதவர் மற்றும் அறிய மறுப்பவர், முக்கியமாக அதனை"அவமதிப்பவர்", "தமிழத்தில்" இருந்து விலகிப் போய்விடுவர்.
"பகத்தின் முடிபே" என்றது, அப்படிப் பிரிந்து போனவர்களுக்கு ஒரே கதி, அதன்வலியை உணர்ந்து மீண்டும் தமிழுக்கும் நமது இயற்கை ஒத்த தொன்மங்களுக்கும்மீளுவதே என்று சொன்னது.
"பரமன் தரு தமிழே" என்றது, "பண் ஆர் இன் தமிழாய் பரமாயப் பரஞ்சோதி" என்றசுந்தரரின் மொழியால் என்று அறிக.

தொகமே = தொகுப்பு; தமிழ் என்பது மொழியாகவும், பண்பாடாகவும்,தொன்மமாகவும், நெறியாகவும், செம்மையாகவும், நமது முகவரியாகவும்,நமது முக ஒளிக்கும் பெருமைக்கும் நமது குமுக முன்னேற்றத்திற்கும்நமது அடிப்படைகளைப் பேணுவதில் இருப்பதால், பல் வேறு சாதி சமயவேறுபாடுகள் கொண்ட நமது நாட்டில் நம்மை இணைப்பதற்கும் தொகுத்துச்சேர்ப்பதற்கும் தமிழை விட்டால் வேறொன்றுமில்லை என்று அதன் உயர்வையும்உண்மையையும் சொல்லிப் பாடிய பாடல் இது.

இறுதியாக, இங்கே காணக்கூடிய மக்களின் அன்றாட வாழ்வில்பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பதனை, நாம் மற்றும் நமது மக்களோடுஒப்பிட்டுப் பார்த்து நிறைகளைப் பற்றிச் சிந்திக்க இடம் நிறையவே இருக்கிறது என்று சொல்ல முனைந்த பாடல்கள் இவை.
எந்த அயல்நாடாக இருந்தாலும், பீடுடன் இருக்கும் எல்லா நாடுகளும்,தங்கள் மொழியிலும் மரபிலும் தொன்மங்களிலும் பெருமிதங் கொண்டுஉயர்கிறார்கள். தமிழர்கள் இந்த விதயத்தில் தமது குரவத்தை இழந்து, தம்மையும் இழப்பதுவே தற்போதைய கவலையான தமிழ்ச்சூழல் அல்லவா?
அன்புடன்
நாக.இளங்கோவன்
(20/4/2007)

No comments: