பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து (29/ஏப்ரல்).
புதுவையில் பிறந்தவன் புலமையில்
புலன்களில் பழந்தமிழ்ப் பதித்தவனே!
புதுமையைப் புழங்கிடப் பொழிந்தனன்
புலர்தரு சுடரொளிக் கவிதைகளே!
புதுக்கிய தமிழினைப் பருகினர்
படர்ந்தனர் படையெனத் தமிழ்நிலமே!
புதுப்புதுக் கனவினைத் தொடக்கினை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
மனிதரை மயக்கிய மடமைகள்
முழுதினை முகமற மிதித்தவனே!
குனிகொடு குணத்தினைக் குலத்தினில்
குலைத்திடக் குறைவறக் கொதித்தவனே!
இனிதுறு இயற்கையின் இயல்புகள்
இதமுடன் இலங்கிட இசைத்தவனே!
கனிமொழிக் களத்தினைக் கிளர்த்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
திரவிடம் தழைத்திடத் தமிழரைத்
திரட்டிய தமிழ்வழித் தளபதியே!
பரவியத் தமிழியம் பளிச்செனப்
பகைகளைப் பதைத்திடப் பழக்கினதே!
தரணியில் மகளிரைத் தடுக்கியத்
திரைகளை வெடுக்கெனத் துணித்தவனே!
திரவியக் குவியலை வெறுத்தனை,
வழுத்தினன் வாழிய பாவேந்தே!
அன்புடன்
நாக.இளங்கோவன்
28/ஏப்ரல்/2007
6 comments:
புரட்சிக்கவி பாரதிதாசன் புகழ் ஓங்குக!
பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்பின் மாசிலா,
தங்கள் வருகைக்கும் இடுகைக்கும்
நன்றி. மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
தாளமும் சந்தமும் சேர்ந்து சிறப்பாக பாடியுள்ளீர்கள்.
ஆகஸ்ட் 6 - 22 தேதிகளில் நீங்கள் தமிழகத்தில் இருந்தால் சந்திக்கலாம். kmalarselvan@யாகுடாட்காம்
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
பாவேந்தர் புகழ் பாடினால் தமிழுக்குப் பெருமை. நமக்குப் பெருமை. ஒங்கட்டும் அவர் புகழ் எட்டுத்திக்கும்..!
அன்பின் நண்பர் மலர்ச்செல்வன்,
தங்கள் பின்னூட்டு மகிழ்ச்சியைத் தந்தது.
அவசியம் அஞ்சலில் தொடர்பு கொள்வேன்.
தாங்கள் வரும்போது சென்னையில் இருப்பேன் என்று கருதுகிறேன்.
நிச்சயம் சந்திப்போம்.
அன்பின் இளவரசரே,
தங்களின் இடுகை மகிழ்ச்சி அளித்தது.
எ.கூ பக்கம் எட்டிப் பார்க்கவும்.
பாவேந்தர் வாரம் எ.கூவில் நடந்தது. அதைத் தொடர்ந்து தூதுவர்
தலைமை வகிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் கருத்தரங்கம்
வரும் 4 ஆம் நாள் நடத்துவதற்கு அருமை நண்பர் திரு.மு.வெற்றிவேல்
ஏற்பாடு செய்திருக்கிறார்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
தோஸ்த்,
உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளன. சந்தம் அழகாக இருக்கிறது.
அன்புடன்,
இராம. வயிரவன்
Post a Comment