Pages

Monday, April 09, 2007

சுடர்வழியே செய்தி: தொடர்ச்சி

4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப்
போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று
பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின்
கணிப்பு என்ன?

உள்ளுரும நுட்பியலைப் பொறுத்தவரை, என்றைக்கும் அதன்மேல் குமிழிகள்
இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அது சார்புடைய தொழில்.
அடிப்படையில் உள்ளுருமத் தேவைகள் பிற துறைகளின் ஏற்றத்தாழ்வையே
சார்ந்திருக்கும்.

இத்துறைகளின் உள்ளுருமத் தேவைகள் உள்ளூறினும் (Insourced),
வெளியூறினும் (Outsourced), நிறுவனங்களின் முதன்மைத் தொழிலின்
ஏற்றத்தாழ்வுகள் உள்ளுரும நுட்பக் குழுமங்களுக்கும் நுட்பியலாளருக்கும்
தாக்கத்தினை ஏற்படுத்தும். வெளியூற்றானது கரைக்குள் (onshore) ஆகினும்,
கரைகடந்தாகினும் (offshore) தாக்கம் எல்லா இடங்களிலும் இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு முறை பெருக்கத்தையும், ஒருமுறை
சுருக்கத்தையும் உ.நு துறை கண்டது. முதல் முறைப் பெருக்கம்,
2000 ஆவது ஆண்டை வரவேற்றது. அதைத் தொடர்ந்த சுருக்கமானது,
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தினால் ஏற்பட்டது.

அந்தப் பொருளாதாரத்தை நிலைக்குக் கொண்டுவரும் முனைப்பிலேயே
வெளியூற்றுகை அடிப்படை கையாளப்பட்டு இரண்டாவது பெருக்கம்
ஏற்பட்டது.

பெருமளவு கும்பனிகள் வெளியூற்றுகையை செயல்படுத்த எடுத்துக்
கொண்ட கடந்த 4 ஆண்டுகள் காலத்திலும் பெருக்கத்தின் முடுக்கம்
அதிகமாக இருந்தது இயல்பான ஒன்று.

குமிழி என்பதனை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும்.

1) பெருக்கத்தின் முடுக்கம் மேலும் வரும் வருடங்களில் அப்படியே
இருக்குமா? அதாவது முடுக்கம் குறைந்தால் அது குமிழின் வெடிப்பு
என்று கொள்ளப்படுமா?
2) சுருக்கம் ஏற்படுமா? அதாவது குமிழ் உடைந்து வெறுமை/வறுமை
ஏற்படுமா?

இவற்றை பல கோணங்களில் பார்க்க இருக்கிறது. செய்யும் சேவைகளின்
அளவு, நுட்பச் செறிவு, சேவைகளின் தரம், உலகப் போட்டிகளின் நிலை,
கொள்விலை அல்லது செலவு போன்ற பல்வேறு வகைகளில் இதனை அணுக
நிறையவே இருக்கிறது. இங்கு சுருக்கமாக எனது பார்வைகளைக் கூறுகிறேன்.
ஆயினும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது என்றே
எனக்குத் தோன்றுகிறது.

1) கடந்த முறை உலக அளவில் சுருக்கம் ஏற்பட்ட 2001/02, 2002/03
ஆண்டுகளின் போது, இந்தியாவைப் பொறுத்தவரை, முறையே 5%, 20%
வேலை வாய்ப்புகள் அதற்கு முந்தைய ஆண்டினை விட அதிகமாக இருந்தன.
அதாவது, 2000மாம் ஆண்டில் 47% வளர்ச்சி யடைந்த வேலை வாய்ப்புகள்
விகிதம் அதற்கு அடுத்த ஆண்டில் 5% ஆக குறைந்து போயின என்றாலும்
இருந்த வேலைகள் பறிபோய்விடவில்லை என்பதனை இது காட்டுகிறது.
சில உள் துறைகளில் வேலைகள் குறைக்கப் பட்டிருக்கலாம்.
ஆயினும், மொத்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை இழப்பு இல்லை.
இது இந்தியாவைப் பொறுத்தவரை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைப்
பொறுத்தவரை அங்கே நிறைய இழப்புக்கள் ஏற்பட்டது.

ஆக, உலகளாவிய அந்தச் சுருக்கத்திலும் இந்தியாவைப் பொறுத்தவரை
வேலைகளின் எண்ணிக்கை குறைவான அளவில் அதிகரித்தே இருந்தது.

2) புதிய வெளியூற்றுகைக் கொள்கையினால், 2003/04 ஆண்டில்
வேலைகளின் பெருக்கத்தின் முடுக்கம் 44% ஆக உயர்ந்தது. அதன் பின்னர்
தற்போது வரை ஏறத்தாழ சீரான 30% வருடாந்திர முடுக்கம் இருந்து
கொண்டே இருக்கிறது.

3) சொவ்வறைச் சேவைகள் ஏற்றுமதிக்கு இன்றைக்கு 650,000 பேர்கள்
உள்ளனர். இவர்கள் இந்த வருடம் $23பில்லியன் அளவு ஏற்றுமதியைச்
செய்துள்ளனர் (2006-2007). சொவ்வறை இயற்றுச் சேவைகளைப் (ites+bpo)
பொறுத்தவரை அதில் தற்போது 550,000 பேர் வேலையில் இருக்கின்றனர்,
இவர்கள் $8.3பில் ஏற்றுமதி செய்கின்றனர். (நான் கடுவறைச் சேவைகள் மற்றும்
உள்ளூர்ச் சேவைகளை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.)

மொத்த உ.நு துறையின் வருமானம் 48 பில்லியன் அமெ.வெள்ளியாக
இருக்கப் போகும் இந்த வருடத்தில் (2006-2007), சொவ்வறை மற்றும் அவை
இயற்று சேவைகளின் ஏற்றுமதி, 32பில்லியன்.

வரும் 2009/10 ஆம் ஆண்டில் இந்த இரண்டு துறையின் ஏற்றுமதியும்
32பில்லியனில் இருந்து 60பில்லியானக் ஆக எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் அப்படியே
இருந்ததால் இதனையும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

அதற்குத் தேவையான ஆள்கள் 850,000 சொவ்வறையர்கள் மற்றும்
1400,000 சொ.இ.சேவையர்கள் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.

இங்குதான் சரவல் தென்படுகிறது.

அண்மைய ஒவ்வொரு வருடமும் 30% பேர்களை புதிதாக வேலைக்குச்
சேர்க்கும் சொவ்வறைச் சேவை நிறுவனங்கள் அதே வேகத்தை தற்போதைய
2007/08 ஆம் ஆண்டிற்கும் எடுப்பர். அப்படித்தான் ஆள்சேர்ப்பு
நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படிச் செய்தால்,
2009/10ல் இலக்குத் தேவையான 850,000 பேர்களை நடப்பு 2007/08 லேயே
நிறைத்து விடுவர் (650*1.3 ~ 850).

பின்னர் 2008/09, 2009/10 ஆண்டுகளுக்கு புதிய சொவ்வறையரின் தேவை
குறையுமல்லவா?

இந்த நிலைக்கு முக்கிய காரணம் முன்னெச்சரிக்கையாக கும்பனிகள்
தங்கள் நிறுவனங்களில் தேவைக்கும் மேலே ஆள்களை எடுத்து
தற்போதே வைத்திருப்பதைத்தான் இது காட்டுகிறது.

முதல் நிலை, இரண்டாம் நிலை (Tier-1, Tier-2) கும்பனிகள்,
தங்கள் நிறுவனங்களில் ஏறத்தாழ 20-25% ஆள்களை வேலையில்லாமலேயே
பயிற்சி என்ற பெயரில் முன்னெச்சரிக்கையாக எடுத்து சும்மா வைத்திருக்கிறார்கள்.
அவர்களும் தினமும் கச்சேரிக்குச் சென்று வருவதைப் போல் போய்வருவார்கள்.
(பெரும்பாலும் இந்தக் கச்சேரிக் கூட்டம்தான் துறையின் ஆரவாரங்களுக்கு
'அதிகம்' சொந்தக்காரர்கள் என்பது வேறு விதயம்)

ஆக, உ.நு/சொவ்வறைத் துறையைப் (IT services)பொறுத்தவரையில்,

க) வரும் ஆண்டுகளில் சொவ்வறையர் ஆள் சேர்ப்பு குறையக்கூடும்.
உ) சொவ்வறைத் துறைக்கு முயன்றவர்கள் இயற்று சேவைகள் பால்
அதிகம் செல்ல நேரிடும்.

ஒரு வேளை உலகப் பொருளியல் இப்படியே சென்று கொண்டிருந்தால்,
மேலும் கும்பனிகள் ஆள்களை எடுக்கலாம்தானே என்று கேட்டால்,
ஆம் என்றுதான் சொல்ல முடியும்.

ஆயினும், அதனை அடுத்த ஆண்டுதான் சொல்லமுடியும்.

அமெரிக்கா மட்டுமே ஏறத்தாழ 60-65% சேவைகளை நுகர்கிறது
என்பதால் அந்நாட்டின் பொருளாதார, அரசியல் மாற்றங்களைப்
பொறுத்தே இதனை உறுதி செய்ய முடியும்.

இந்தக் கோணத்தில் பார்க்கும் போதும், கடந்த சுருக்கத்தினைக் கருத்தில்
கொள்ளும்போதும், ஒரு வேளை பொருளியல் மாற்றங்கள்
நிகழ்ந்தாலும், வேலைகளின் பெருக்க வேகம் அல்லது முடுக்கத்தில்
குறைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே தவிர, இன்றைக்கு இருப்பது பறிபோக

வாய்ப்புகள் குறைவு என்றே தென்படுகிறது.

தெய்வுச் சூழல் ஏற்படுமானால் அதைக் குமிழி உடைப்பு எனக்
கருதலாகாது என்பது என் கருத்து.

5) மேற்கண்ட இந்திய சொவ்வறைச் சேவைகளை தேசிய சொவ்வறைச் சேவையர்
சங்கத்தின் தலைவரான கிராண் கார்னிக், அவர் பொறுப்பேற்ற
காலத்தில் இவ்வாறு சொன்னார்.

"Indian software programming services are like a car mechanic repairing cars;
They can repair cars, but cannot design them! they are like roadside

mechanics"

நான் இதைப் படித்து இரண்டு நாள்கள் சிரித்து சிரித்து எனக்கு வாய் வலித்துப்
போனது. அவர் உ.நு/சொவ்வறை இயற்று சேவைகளைப் (ITES+BPO) பற்றி
என்ன சொல்லக்கூடும் என்று எண்ணிப் பார்த்தால் மேலும் சிரிப்புதான்
வருகிறது.

இந்தத் துறைக்கு உலகளாவிய போட்டி நிலவுவதாலும்,
CRM என்று சொல்லப் படுகின்ற நுகருறவாளல் என்பதனை, பயனரை
இம்சிக்க மட்டுமே பயனபடுத்துவதாலும், அப்படி இம்சித்து
நுகருறவாளுவதே CRM என்று நம்பப்படுவதாலும், தரக்குறைவு
என்பது பெரிதும் கண்டு கொள்ளப்படாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
(CRM நல்ல பயன்களைக் கொண்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால்
அதன் நடைமுறைப்பாடு என்பது முதிர்வானது என்று சொல்லமுடியாது.
அப்படி முதிர்வான உறவாளுதல் இருந்தால் விரைவான விற்பனை இருக்காது
என்று கருத இடமுண்டு)

பல காரணங்களால் நுகருறவாளல் என்பது பயனர்களுக்கு எரிச்சலைத்
தருகின்றவையாகவே இருக்கின்றன. இதை விரித்தால் நீளும். அந்த எரிச்சல்
இந்தியாவில் இருந்தால் என்ன? அமெரிக்காவிலேயே இருந்தால் என்ன?
இக்குறைபாடு எல்லா நாடுகளிலும் காணப்படுகின்ற பொதுவான கருத்து.

அதனால் இந்தத் துறையும் இந்தியாவில் தொடரும் என்றாலும்,
பெருத்த கொள்விலைச் சரிவிற்குட்பட வேண்டி இருக்கும்.

சொவ்வறைச் சேவைகள் பல பொதினப் படிம (business model) மாற்றங்களைக்
கண்டுள்ளது. அதேபோல, அதன் இயற்று சேவைகளும் உலகளாவிய
போட்டிகளால், விலை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி
பொதினப் படிம மாற்றங்களைக் காணும்.

இந்த விலைக் குறைப்பிற்கு, உலகளாவிய போட்டிக்கு ஈடு கொடுக்கும்
வகையில் இந்திய நிறுவனங்களும் மலியத் தயங்க மாட்டார்கள் என்றே
எனக்குப் படுகிறது.

ஒரு புறம் விலைவாசியையும், மனைவிலைகளையும் ஏற்றி விட்டு விட்டு,
கொள்விலை குறைதலால் இந்தத் துறை சற்று அலங்க மலங்க ஆகக் கூடும்
என்பது ஒரு கண்ணோட்டம்.

ஆக, இந்தத் துறையும் போராடி, மலிந்து, தங்கும் என்பதாகவே எனக்குப்
படுகிறது.

அமெரிக்கப் பொருளியல் நிலைபாட்டிற்காக எடுக்கப் பட்ட இந்த
வெளியூற்றுக் கொள்கை மேலும் தொடரும் என்றுதான் கருத நிறைய
இடமிருக்கிறது. இதன் பயனைச் சுவைத்து, தமது பொதினப் படிமத்தை
மாற்றிக் கொண்ட வெளிநாட்டவருக்கு தற்போது இதனில் இருந்து
விடுபடுவதால் பயன்/பலன் இல்லை. அவர்களும் போட்டிகளுக்கு
ஆட்பட்டிருப்பதால் மேலும் கொள்விலைச் சரிவை ஏற்படுத்தித்
தங்களை நிலை நிறுத்திக் கொள்வர் என்பதாலும்,

இந்த வெளியூற்றுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்
இந்தியக் குழுமங்கள் மட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்கள்
பலவும் இருக்கின்றன என்பதாலும்,

இந்த வெளியூற்றுக் கொள்கையினால், இந்தியாவில் விற்பனையாகும்
வெளிநாட்டு (குறிப்பாக அமெரிக்க) இலத்திர & எண்மயப் பொருள்கள்
வெளிநாட்டவர்க்கு பெரும் வரும்படியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாலும்

இந்தத்துறை குமிழி உடைப்புக்கு ஆளாகாது என்றே எனக்குப் படுகிறது.

வேலைகளின் பெருக்கம் குறைந்து தற்போதைய அளவில்
அப்படியே போய்க் கொண்டிருக்கும் என்பது சொவ்வறைத் துறையிலும்,
அடிமாட்டு விலைக்கு சேவைகள் ஆற்றப்படும் என்பது
உள்ளுரும நுட்ப / சொவ்வறை இயற்றுச் சேவைத்துறையிலும் ஏற்படக்
கூடிய சூழல்களாகப் படுகிறது.

விளைவாக, அதிக நேரம் உழைத்தல், பகுதி நேர உழைப்பு,
மணிக்கு இவ்வளவு காசு என்றவாறான வேலைகள் பெருகும்.
முதல் நிலை வெளியூற்றுச் சேவையர் தங்களுக்குக் காசு கட்டுபடியாக
எடுத்த வேலையை மற்றொருவரை (அடுத்த நிலை வெளியூற்றுகை)
வைத்துச் செய்வது பெருகும். பல சிறிய நிறுவனங்கள் இந்தியாவிலேயே
இருக்கக் கூடிய பெரிய நிறுவனங்களுக்கு ஊழியம் பார்க்க வேண்டியது
மிகவும் பெருகும்.

வேலை பெருக்கத் தேய்வையும், மலிவையும் குமிழியாகக் கருதாமல்,
பொதினப் போக்கின் மாற்றமாக கருதக்கூடியதாக இருக்கும்
என்று எனக்குப் படுகிறது. அந்த மாற்றங்கள் சொவ்வறைத் துறையின்
சுவையைக் கூட்டுவதாக இருக்குமா, இல்லையா என்பதனை நாமே
புரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

nayanan said...

இறுதி வினாவினை இன்றோ நாளையோ
முடித்து விடுவேன். காலத்தாழ்விற்காக
மன்னிக்கவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

குலவுசனப்பிரியன் said...

//பெரும்பாலும் இந்தக் கச்சேரிக் கூட்டம்தான் துறையின் ஆரவாரங்களுக்கு
'அதிகம்' சொந்தக்காரர்கள் என்பது வேறு விதயம்//
புரிகிறது :)

//CRM என்று சொல்லப் படுகின்ற நுகருறவாளல் என்பதனை, பயனரை
இம்சிக்க மட்டுமே பயனபடுத்துவதாலும், அப்படி இம்சித்து
நுகருறவாளுவதே CRM என்று நம்பப்படுவதாலும், தரக்குறைவு
என்பது பெரிதும் கண்டு கொள்ளப்படாது என்றே கருத வேண்டியிருக்கிறது.//

இதன் மூலம் உங்கள் பட்டறிவு தெளிவாக விளங்குகிறது. குறிப்பாக சில மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நடத்தும் பாங்கு சற்றும் ஏற்புடையது அல்ல. அவர்களுடைய சேவைக்கு(?) உள்ளுரும நுட்பியல் கட்டமைப்பின் தரம் முக்கியமில்லைதான்.

nayanan said...

அன்பின் திரு.குலவுசனப்பிரியன்,

தங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும்
மிக்க நன்றி.

பல போலியான, மிகையான விற்பனை
உத்திகளை நிறுவனங்கள் செய்வதெல்லாம் சகிக்க முடிவதில்லை.

ஆரக்கிள், எசேப்பி (SAP) இவர்களுக்கிடையே நடந்து வரும் போர்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பெப்சி-கோக்ககோலா போரைப் போல
இதுவும் உருசியாக உள்ளது.

ஒருவேளை இதுவும் ஒரு யூத-நாசிப் போரோ என்ற எண்ணம் சமயத்தில்
வருவதைத் தவிர்க்க முடியாது.

இவர்கள் இருவரின் விற்பனை உத்திகளைப் பார்த்தால் சில நேரங்களில்
பயனர்களைக் கேலிக் கூத்தர்களாக்கிவிடுவதாகவேப் படுகிறது.

தற்போது இவர்களின் இரை,சிறு-மித நிறுவனங்களாக இருக்கப் போகிறது.

உரூவாய் 10 இலக்கத்துக்குள் தங்கள் சொவ்வறைகளை இவர்கள் SME, SME-Micro என்ற பிரிவுகளில் தள்ளிவிட
செய்யும் தந்திரங்கள் வியப்பைத் தருகின்றன.

அன்புடன்
நாக.இளங்கோவன்