Pages

Saturday, September 09, 2006

Can I get a LIFT? - poem (Not for Contest)

முல்லைப் பந்தரை முகர்ந்து பார்க்க
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!

கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!

இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!

வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!

மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!

பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!

பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !

அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )

3 comments:

சுதேசன் said...

நீண்ட நாட்களின் பின்னே அழகிய
தமிழில் கவிதையை படித்தோர் திருப்தி

nayanan said...

அன்பின் திரு.சுதேசன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.
மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

அன்பின் ஐயா,

என்னைக் கவிஞன் என்று யாரேனும் சொன்னால் கூசிப்போய் விடுவேன் என்று மடல் அனுப்பிய கைகளா எழுதியது இந்த கவிதை...

தமிழ் வார்த்தைகளும் வர்ணனைகளும் கொஞ்சி விளையாடும் இந்த கவிதைப் படித்த பிறகு உங்கள் மேல் வைத்திருந்த மதிப்பு இன்னும் அதிகமாகிறது ஐயா..

இன்னும் எழுதுங்கள்.. வரவேற்று வாசிக்க தயாராகவே இருக்கிறோம்..

அன்புடன் லக்கி ஷாஜஹான்.