Pages

Thursday, June 15, 2006

தேரா மன்னா! செப்புவது உடையேன்!

சன்னல் பதிவில் மாலன்:
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )

சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே
பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்
இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்
தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் :-)

முரண்பாடு!

இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்
அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!

>>மாலன் எழுதியது<<<
கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும்
முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>

காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். "காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்."
சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:

"இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;"

கண்ணகிக்கு "கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்" என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!

கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!

அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!

அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!

அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் - மாலன் சொல்கிறார். முரண்பாடு!

உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.


படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.

மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது - அடிப்படைக்
குறைகள் கொண்டது.


>>>>மாலன் எழுதியது<<<<<<
கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று
பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை
விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் "பல ஆண்டுகள்" பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.
மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.

அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.

மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.

"ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே... "! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு" என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்
கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.

இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!

மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
"இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து" என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.
மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.

காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி "தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு" என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!

மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
"தேரா மன்னா! செப்புவது உடையேன்!".
அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06

9 comments:

கோவி.கண்ணன் said...

சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, சீத்தலை சாத்தனாரின் அன்புக்கு உரிய நண்பர். சீத்தலை சாத்தானார் கண்ணகியின் கற்பின் மாண்பை உறைத்து கண்ணகி தெய்வமாக போற்றப்பட வேண்டும், கோயில் எழுப்பி பூசனைகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இளங்கோ அடிகளிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே சேர நாட்டு இளங்கோ சோழ நாட்டு கண்ணகியைப் பற்றி சிலப்பதிகாரம் இயற்றினார்.
கண்ணகி காதை தெரியாதவர் கண்டபடி உளருவது தான் கண்ணகியைப் பற்றிய தூற்றல்.

பெண்ணியம் பேசுபவர்கள் தன்னை வைத்து சூதாடிய கனவர்களுடன் சென்ற பாஞ்சாலியைப் பற்றி பெண்ணியக் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக பாஞ்சாலி சபதத்தை பெண்ணிய அளவுகோலாக பெருமிதம் பேசுகின்றனர். இவர்களின் பெண்ணிய வாதம் நகைப்புக் கிடமானதே.

VSK said...

தன் கணவன் பரத்தையர் வீடிற் சென்று தன்னைப் பரிதவிக்கவிட்ட போது, ஒன்றும் செய்யாதவளாய் இருந்த கன்னகியைக் 'கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்' எனக் கவுந்தி அடிகளார் பாராட்டியதை நீங்கள் வேண்டுமானால் உயர்வாய்ச் சொல்லலாம்.

ஆனால், அது பேடித்தனம்; பேதமைத்தனம்!

குற்றமில்லத் தன் கணவனைக் கொன்ற பாண்டியனை 'தேரா மன்னா' என விளித்தாளே, அப்போதுதான் அவள் பாத்திரம் பெருமையடைந்தது!

மேலும், இந்த ஓராண்டு வாதம் நகைப்புக்குரியது!

மாதவி சோழன் சபையில் ஆட வந்த போது அவளுக்கு வயது 12!!![புகார்க்கண்டம் அரங்கேற்றுக்காதை 10]

அவள் ஆடலில் மயங்கி சோழன் அவளுக்கு அளித்த மாலையை "விலைக்கு" வாங்கி அவள் பின் சென்ற புண்ணியவான் தான் கோவலன்![புகார்க்காண்டம் அரங்கேற்றுக்காதை 171]

அதற்குப்பின் கால ஓட்டத்தைக் காட்ட விரும்பிய இளங்கோவடிகள்,

[ ஏனெனில் 13 வயதில் 'இவர்கள்' கூற்றுப்படி மாதவி மணிமேகலையைப் பெற்றிருக்க முடியாது!
கோவலனும் கண்ணகியின் ஆடை அணிகலன்கள், நகைகள் இவற்றையெல்லாம் மாதவிக்கு வழங்க நேரம் வேண்டும்!][புகார்க்காண்டம் கனாத்திறம் உரைத்த காதை 69 - 70]

கரிகாலன் இமயம் வரை சென்று திரும்பிய வரிகளைப் போடுகிறார்![புகார்க்காண்டம் இந்திர விழவூரெடுத்ட்ர்க காதை 89 - 98]

மாலையை விலைக்கு வாங்கிய பண்பிலாக் கோவலன், மாதவியுடன் மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு களித்திருந்தான் என்பதை இளங்கோ அடிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இதை மறுக்க முடியுமா?

இந்த வாதத்திற்கிடையில் சீதையை இழுத்தது, இராவணன் இழுத்ததை விடக் கேவலமான நிகழ்வு!

இராம.கி said...

கண்ணகி பற்றிய திரு. நயனனின் பதிவும், அதையொட்டிய என் சென்ற மூன்று பதிவும் இங்கே ஒருசிலரைக் கொதிக்க வைத்திருக்கிறது போலும். திரு. SK நயனனின் பதிவில் ஒரு பின்னூட்டு அளித்திருந்தார். அதைப் படித்த பின்னால், என் மறுமொழியைப் படியுங்கள்.
-----------------------------------------------------
திரு.SK,

இந்த ஓராண்டு வாதம் ஏன் நகைப்புக்குரியது?

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். சிலம்பில் இருப்பதைத்தானே சொல்ல முடியும். உங்கள் கற்பனையில் இருப்பதையா சொல்ல முடியும்?

மாதவி அரங்கேற்றுக் காதையில் வரும் பொழுது அவளுக்கு அகவை 12 என்று ஒப்புகிறீர்கள். அதற்குப்பின் கால ஓட்டத்தைக் காட்ட விரும்பிய இளங்கோவடிகள், கரிகாலன் இமயம் வரை சென்று திரும்பிய வரிகளைப் போடுவதாகச் சொல்லுகிறீர்கள். [புகார்க்காண்டம் இந்திர விழவூரெடுத்த காதை 89 - 98]. அப்படியானால், கோவலன் மாதவி காலத்தில் இருந்த அரசன் கரிகாற் சோழன் என்கிறீர்களா? பாட்டின் வரிகளை ஒழுங்காகப் படியுங்கள், அய்யா! நீங்கள் காட்டும் வரிகள் முன்னோர் புகழ்ச்சி.

"இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅ
செருவெங் காதலில் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுக இம்
மண்ணக மருங்கின் என்வலி கெழு தோள் எனப்
புண்ணிய திசைமுகம் போக்கிய அந்நாள்"

என்பது பழங்கதை. சிலம்பில் இந்த இந்திர விழாக் காலத்தைப் பார்க்கும் போது கரிகாலன் காலம் அந்நாள் (past); ஆய்வாளர் கருத்துப் படி அந்த அந்நாள் என்பது குறைந்தது 150, 200 ஆண்டுகளுக்கு முன்னே. சேயோனை மகன் காலத்திற்குக் கொண்டுவந்தால் எப்படி? கரிகாலனைத் தூக்கி சிலம்பின் கதைக் காலத்திற்குக் கொண்டுவந்து ....... நண்பரே, சிலம்பையும், கொஞ்சம் புறநானூற்றையும், பதிற்றுப் பத்தையும், அகநானூற்றையும் ஆழ்ந்து படியுங்கள்; அப்புறம் சொல்லுங்கள்.

சரி கரிகாலன் இல்லை என்றால், யார் தான் சிலம்பு காலத்தில் இருந்த சோழ மன்னன்? இதற்கு மறுமொழி சொல்ல, இரண்டு இடங்களைப் பார்க்கவேண்டும்.

முதல் இடம். வாழ்த்துக் காதையில் வரும் உரைப்பாட்டு மடை. இதில்

"குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்"

என்ற வாசகத்தில் வரும் ஞாயிற்றுச் சோழன் யார்?

இரண்டாம்ஈடம், நீர்ப்படை காதை. இதில் "நெடுஞ்செழியன் மறைந்த பின்னால் பாண்டிய நாட்டில் என்ன நடந்தது?" என்று மாடல மறையோனிடம் செங்குட்டுவன் கேட்கிறானே, அப்பொழுது மாடலன் சொல்லுவதையும் பார்க்க வேண்டும்.

"நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்"

என்று சொல்லுகிறான். அதாவது "உன் மைத்துனன் பெருங்கிள்ளியொடு ஒத்துப் போகாமல், அந்த இளைய அரசனைப் பொறாத, அவன் ஏவல் கேலாத, சோழவளநாட்டை அழிக்கும் குணம் கொண்ட, ஒன்பது அரசரின் ஒன்பது குடையும் ஒரே பகலில் ஒழித்து, உன் மைத்துனனின் சக்கரத்தை (ஆட்சியை) ஒருவழிப் படுத்தினாய்!"

அப்படியானால் செங்குட்டுவன் காலத்தில் சோழநாட்டை ஆண்ட அரசன் பெயர் என்ன? அவன் பெயர் பெருங்கிள்ளி. இவன் ஞாயிற்றுச் சோழனின் மகன். செங்குட்டுவன் தாய் நற்சோணையின் தம்பி. இந்தப் பெருங்கிள்ளியைப் பெருநற்கிள்ளி என்றும் சொல்லுவர். பெரும்பாலும் இவன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்றே பல தமிழறிஞரும் முடிவு செய்கின்றனர்.

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து பற்றிய பதிகத்தில்,

"ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை, நேரிவாயில் நிலைச்செரு வென்று" என்றும், "ஆராச் செருவிற் சோழர் குடிக் குரியோர், ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து, நிலைச்செருவினால் தலையறுத்து" என்றும் வருவதால், மேலே பெருநற்கிள்ளி காலத்திய நிகழ்வுகள் இன்னொரு இடத்தில், உறுதி செய்யப் படுகிறது. நீங்கள் சிலம்பை எப்படித் தலைகீழாகப் படித்தாலும் வேறு இடைப்பரட்டு (interpretation) ஏற்பட வழியில்லை.

அடுத்து, "13 வயதில் 'இவர்கள்' கூற்றுப்படி மாதவி மணிமேகலையைப் பெற்றிருக்க முடியாது!" என்று சொல்லியிருக்கிறீர்கள். இவர்கள் என்பது நானும், நாக. இளங்கோவனுமா? அல்லது இளங்கோவடிகளா? மாற்றுக் கூற்றை எடுத்துக் காட்டுங்களேன். சும்மா, உங்கள் எதிர்பார்ப்புக்களைக் கூறிக் கொண்டிருந்தால் எப்படி?

13 அகவையில் பிள்ளை பெற முடியுமா? ஒரு காலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்னால், நம் பாட்டி மார்கள் 14, 15 அகவையில் கூடப் பிள்ளை பெற்றார்கள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். பெண்கள் சமைகின்ற பருவம் 12 இலும் அமையலாம் என்றுதான் கேட்டிருக்கிறேன். நம்முடைய இந்தக் கால விழுமங்களை அந்தக் காலத்தில் பொருத்தாதீர்கள் என்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நான் சொல்லும் கணக்குகள் சிலம்பில் கொடுத்துள்ள தரவுகளை வைத்து ஒருவிதக் கணிப்புத் தான். அதில் ஒரு நாலைந்து மாதங்கள் தவறலாமே ஒழிய, முற்றிலும் மாறி இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது தவறென்றால், நிறுவித்துக் காட்டுங்கள். உங்கள் ஊகங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.

"கோவலனும் கண்ணகியின் ஆடை அணிகலன்கள், நகைகள் இவற்றையெல்லாம் மாதவிக்கு வழங்க நேரம் வேண்டும்!"[புகார்க்காண்டம் கனாத்திறம் உரைத்த காதை 69 - 70] என்று ஒரு நக்கல் அடித்திருக்கிறீர்கள். அதில் அவன் மாதவிக்கு அத்தனையும் கொடுத்ததாகச் சொல்லவில்லை. மீண்டும் வரிகளைக் கூர்ந்து படியுங்கள்.

"சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடில்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு"

என்றே இளங்கோ சொல்லுகிறார். "அந்த வஞ்சகமானவளோடு கூத்தாடியதில், என் பொருள் குலைந்த இலம்பாடு (பொருள் இல்லாது இருத்தல்) எனக்கு நாணம் தருகிறது" என்று கோவலன் சொல்லுகிறான். இங்கே "பொருளைத் தூக்கிக் கொடுத்தான்" என்ற நேர்பொருள் இல்லை. மற்றோர் உரையை வைத்து அதன் வழியே இடைப்பரட்டாமல், "வேறு எந்த வழியில் வணிகத்தைச் சரிவரப் பார்க்காத ஒருவனுக்குப் பொருள் தொலையும்?" என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். [நீங்கள் ஒரிடத்திற்குப் போய்க் கேட்டிருந்தால், உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திருக்கும். அங்கு போகவொட்டாமல் யாரோ ஒரு நண்பர் உங்களை ஒரு பொழுது இருத்திக் கொண்டுவிட்டார். அப்புறம் கொடுபட்ட பணத்தை கடைசிவரை வாங்கவே முடியவில்லை. இப்பொழுது பண இழப்பு ஏற்பட்டது எதனால்? எப்படி அதைப் புரிந்து கொள்வீர்கள்? நிலைமையைப் புரியாது, உங்கள் நண்பரிடம் அந்தப் பணத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுவீர்களா?] அது என்ன அய்யா, அவ்வளவு வெறுப்பு மாதவி மேலும், கோவலன் மேலும், நக்கல் அடிக்கும் அளவிற்கு?

"மாலையை விலைக்கு வாங்கிய பண்பிலாக் கோவலன், மாதவியுடன் மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு களித்திருந்தான் என்பதை இளங்கோ அடிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதை மறுக்க முடியுமா?" என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் மறுக்கிறேன். என் கருத்தை என் பதிவிலும் இங்குமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். "கோவலன் மாதவியொடு பல்லாண்டு களித்ததாய் எங்கு இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார்?" என் று சான்று கூட்டிச் சொல்லுங்கள், காத்திருக்கிறேன்.

இந்த வாதத்திற்கிடையில் நாக. இளங்கோவன் சீதையை இழுத்தது முற்றிலும் சரி என்றே எனக்குப் படுகிறது.

இத்தனை பேரை இலங்கையில் இராமன் கொன்றிருக்க வேண்டாமே, சீதையை அனுமன் தூக்கிச் செல்ல அணியமாய் இருந்தானே? பிறகு ஏன் இவ்வளவு உயிர்ச்சேதம்? இராமாயணம் புரிந்த அளவிற்கு சிலம்பு புரிந்ததா என்பதே என் கேள்வி.

"என் இராமனுக்கு இழுக்கு" என்று பிராட்டியார் செய்ததும் எனக்குச் சரி. அதே போல "பட்டாங்கில் யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்" என்று கண்ணகி செய்ததும் சரி. "சீதையைத் தொடக் கூடாது, கண்ணகியை இழிவு படுத்தலாம்" என்பதில் எனக்கு ஒருப்பாடு கிடையாது. எனக்கு இருவருமே போற்றத் தகுந்தவர்கள்.

அன்பிற்குரிய இளங்கோ,

இந்தப் பின்னூட்டம் நீண்டு போனதால், அதே பொழுது நான் எழுதிவரும் பதிவிற்கும் ஒரு தொடர்ச்சியாய் இருக்கும் என்பதால், என்னுடைய பதிவிலும் இந்தப் பின்னூட்டத்தை ஒரு படி போடுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

யாரோ ஒரு மடையன் சொல்வதற்கு எல்லாம் தனிபதிவு தேவையா இராம.கி? இருந்தாலும் தோலுரித்ததற்கு நன்றி.

nayanan said...

அன்பின் திரு.கண்ணன்,

தங்கள் கருத்துக்கும் இடுகைக்கும் மிக்க நன்றி.

பல பேரின் உளறல்கள் நல்லோர் பலரையும்
குழப்பி விடுகிறது. இதுவே பெரிய பாதகமாக
அமைகிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

அன்பிற்குரிய இராம.கி அய்யா,

தங்கள் இடுகையும் விளக்கமும் அரியன.
நேரமெடுத்து நீங்கள் செய்யும் பணி,
பல நல்லோருக்கு இருக்கும் குழப்பத்தைத் தீர்க்கக்
கண்டிப்பாக உதவும்.

என் மனமார்ந்த நன்றிகளை ஏற்றுக் கொள்ளவும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்


்எனதுமனமஆன்பஆஅஆஅ

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்பு இளங்கோவன், நீங்களும் இராம.கியும் அருமையான கருத்துக்களை வைத்திருக்கிறீர்கள். நன்று. நீங்கள் முன்னும் பல சிலப்பதிகாரக் கட்டுரைகளை (மடற்குழுக்களில்?) எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம். அவற்றிற்கான சுட்டுதலைத் தர முடியுமா? படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

nayanan said...

அன்பின் செல்வா,
தங்களின் இடுகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
பதிவுகள் தளத்தில் தொடராகப் போட்டுவருகிறார்கள்
அக்கட்டுரைகள். சிலம்பு மடல் என்ற தலைப்பில்.
http://www.geotamil.com/pathivukal/silambumadal_20_21.html
பார்க்கவும். நண்பர் அலெக்சு பாண்டியன் அவர்களின்
வலைப்பதிவில் மொத்தக்கட்டுரைகளையும்
போட்டு வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
நீண்ட காலத்திற்கு முன்னர். அவரின் பதிவில் சென்று
தேடமுடியவில்லை. அவரிடம் சுட்டியைப் பெற்று
அனுப்புகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

திரு.SK,

13 வயதில் குழந்தை பெற்றிருக்க மாட்டார்கள்
என்று கூறுகிறீர்கள். முனைவர் இராம.கி அவர்களின்
விளக்கங்களும் சான்றுகளும் எவ்வளவோ நடைமுறைச்
சங்கதிகளையும் சில உண்மைகளையும்
எடுத்தியம்பியிருக்கின்றன.

அதோடு, பண்டைய காலத்தில் மட்டுமல்ல,
இன்று கூட மிக இளவயதில் குழந்தை பெறும்
பெண்கள் உண்டு.

இந்தச் சுட்டிகளைப் பாருங்கள். அதிர்ச்சி தரும்
சேதிகள் உள்ளன.
http://youngest_mother.tripod.com/
http://www.snopes.com/pregnant/medina.asp

மேலும் தரவுகள் வேண்டுமானால்,
Google ்குச் சென்று "youngest mother" என்று
போட்டுத் தேடிப் பாருங்கள். உங்களுக்குப் பல
நடைமுறைச் சங்கதிகள் தெரிய வரும்.

அய்யா, உங்களின் வாதமான "பல ஆண்டுகள்"
மாதவியுடனான வாழ்க்கை என்பது மிகவும் தவறான
ஒன்று. இன்னும் கூட உங்களுக்கு எவ்வளவொ
சான்றுகளை சிலப்பதிகாரம் கொண்டிருக்கிறது.
ஆனால், நீங்கள் அதன்பால் கண்ணுறுபவர்
போலத் தோன்றவில்லை.

சீதாதேதி மேல் எனக்கும் அன்பு நிறைய உண்டு.
என் கட்டுரையில் அவரை மேற்கோள் காட்டியதற்கே
என்னவோ கேவலப் படுத்தி விட்டதாக நீங்கள்
எழுதுவது சரியா?

அப்படி மேற்கோள் காட்டுவதே தவறென்றால்,
கண்ணகியைப் போட்டு இந்த வாங்கு
வாங்குகிறார்களே எப்படிக் கொதிக்கும் எமக்கு நெஞ்சம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

சீதாப்பிராட்டியார் உயர்ந்தவர். அவரின் உயரிய
பண்புக்கு எள்ளளவும் குறைந்தவள் அல்ல
கண்ணகியார் என்பதற்கு நூற்றுக்கணக்கான
ஒப்புமைகளைக் காட்டமுடியும் அறிஞர்களால்.

ஆனால், ஒரு சாதாரண மேற்கோளுக்கே இப்படி
வெகுண்டு போகிறீர்களே :-))

கண்ணகியை வெறு ஓரிரண்டு மேம்போக்கான
கருத்துக்களால் எடை போட்டு விடமுடியாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்