"மங்கலதேவி கண்ணகி" என்றே சிறீ பூரணகிரியில், கண்ணகி கோட்டத்தில்
இருக்கும் கண்ணகி அழைக்கப்படுகிறார். அப்பெயரிலேயே, அதாவது
"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" என்ற அமைப்பு இயங்கி வருகிறது.
இவ்வமைப்பு, கம்பம், கூடலூர் என்ற பேரூர்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட பொது அமைப்பாக இயங்கி வருகிறது.
கண்ணகி கோட்டம், அதற்கான பணிகள் விழாக்கள், போராட்டம்
என்று சொன்னால் காலஞ்சென்ற திரு. கூடல் தா.இராமசுவாமி என்பார்தான்
முன்னோடியாவார். அவர் தொடங்கிய ஒரு அமைப்புதான், கண்ணகி கோயிலை
தமிழகத்தில் பேசவைத்தது. தன்னலம் கருதா, சொந்த செலவிலேயே பல
நற்பணிகளை கண்ணகி கோயிலுக்காக செய்து சுற்றுப்புறங்களும்,
ஆர்வலர்களும் வணங்கத்தக்க நற்பெயரை விட்டுச் சென்றிருக்கிறார் கூடலூரைச் சேர்ந்த தா.இராமசுவாமி அவர்கள்.
கம்பத்திற்கு, விழாவிற்கு முதல்நாளே (26/ஏப்) சென்றுவிட்டது பல வகையில்
பயனுள்ளதாக அமைந்தது.
"மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை" அமைப்பின் தலைவர் திரு.தமிழாதவன்
அவர்களை நேர்கண்டு உரையாடியவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நாள்: 26/ஏப்ரல்/02
இடம்: கம்பம்.
இளங்கோ: இண்டர்நெட் என்று சொல்லப்படுகின்ற இணையத்தில்,
மடலாடு மன்றங்கள், மின்னிதழ்கள் பெருகி வருகின்றன. அங்கே தமிழ் நிறைந்து
வருகிறது. அந்த இணையத்தில் உள்ள "தமிழ் உலகம்" மடலாடு மன்றத்தின் சார்பாக தங்களிடம் நேர்காணுதலில் மகிழ்வடைகிறேன். இதனால் பன்னாட்டு தமிழர்க்கு கண்ணகி கோட்டம் பற்றி சேதிகள் சென்றடையும் எனும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
தமிழாதவன்: தங்களோடும் இணையத் தமிழர்களோடும்
தொடர்பு ஏற்படுவது மகிழ்ச்சி தருகிறது.
இளங்கோ: உங்கள் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டது எப்போது?
தமிழாதவன்: 1999
இளங்கோ: அதற்கு முன்னர் கண்ணகி கோட்டத்திற்காக அமைப்புகள் இல்லையா?
தமிழாதவன்: என்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்?! பல ஆண்டுகளுக்கு முன்னரே,
"மங்கலதேவி கண்ணகி கோட்டச் சீரமைப்புக் குழு & அறக்கட்டளை" என்ற அமைப்பை, காலஞ்சென்ற, கூடல் திரு.தா.இராமசுவாமி அவர்கள் தொடங்கினார்.
அவர்தான் கண்ணகி கோட்டம் சார்ந்த தொண்டுகளுக்குத் தந்தையாவார். அந்த
அமைப்புதான் அனைத்து அமைப்புகளுக்கும் தாய்க்கழகமாகும்.
இளங்கோ: கூடல் இராமசுவாமி அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.
தமிழாதவன்: தன்னலம் கருதா, பொதுப்பணி ஆற்றியவர். கண்ணகி கோட்டப்
பிரச்சினைக்கு தமிழ் மன்றத்திற்கு எடுத்துப் போனவர். பல போராட்டங்கள் மற்றும் உண்ணா நோன்புகள் நடத்தி தமிழக மற்றும் கேரள அரசுகளின் கவனத்தை ஈர்த்தவர்.
இப்பகுதி மக்களின் அன்பைப் பெற்ற பண்பாளர். எங்கள் பணிகளுக்கெல்லாம்
தந்தையாய் முன்னோடியாய் இருந்து கண்ணகி கோட்டப் பணி தொடர்ந்து நடைபெறக் காரணமானவர்.
இளங்கோ: உங்கள் அமைப்பின் குறிக்கோள்கள் என்ன?
தமிழாதவன்: 1) கோட்டத்தை சீரமைத்தல்
2) சிலப்பதிகாரத்தை மக்கள் மனதில் பதித்தல்
3) நலிந்தோர்க்கு உதவுதல்
4) பளியங்குடி வழியே, தமிழகத்துக்குள் இருக்கும்
மலைவழி நடைபாதையை மேம்படுத்தி பொதுமக்கள்
கோட்டத்திற்கு சென்றுவர வழிஏற்பட, அரசையும்
ஆர்வலர்களையும் ஒன்றுபடுத்தி செயல்படுதல்.
இளங்கோ: உங்களுக்கு இப்பகுதியில் உள்ள அரசியல், குமுகாய அமைப்புகளில்
இருந்து ஆதரவு கிடைக்கிறதா?
தமிழாதவன்: இப்பகுதி மக்கள் அரசியல் வேறுபாடு இல்லாமல் கண்ணகி
கோட்டத்திற்காக ஆதரவு அளிக்கிறார்கள். அது போற்றப்படத்தக்கது. அதேபோல்
அரசியல் சார்பற்ற அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
இளங்கோ: சித்திரை விழாவைத் தவிர வேறு விழாக்கள் கண்ணகி கோட்டத்தில்
நடக்கிறதா?
தமிழாதவன்: சித்திரை முழு நிலவு நாள் விழா மட்டுமே! மதுரையில் அழகர்
ஆற்றில் இறங்கும் அதேநாளில் இவ்விழாவைக் கொண்டாடுகிறோம். முன்னாளில் இந்த விழா மூன்று நாட்கள் நடக்கும்; அது இப்பொழுது ஒன்றாகி விட்டது.
இளங்கோ: இவ்விழாவிற்கு வருவோர்களில் சாதி வேறுபாடு ஏதேனும் உண்டா!
தமிழாதவன்: இல்லை இல்லவே இல்லை!
இளங்கோ: மதங்களைக் கடந்து கண்ணகி வழிபாட்டிற்கு வருவோர்கள் உண்டா?
தமிழாதவன்: ஆம்! நாளை வாருங்கள் காட்டுகிறேன்.
இளங்கோ: எவ்வளவு பேர் சாதரணமாக விழாவிற்கு வருவார்கள்?
தமிழாதவன்: 25 முதல் 30 ஆயிரம் பேர் கடந்த வருடம் கலந்து கொண்டார்கள்.
இளங்கோ: என்ன நோக்கிற்காக இக்கோயிலுக்கு வருகிறார்கள்?
தமிழாதவன்: பெரும்பாலும் வழிபாடு. சுற்றுலா மற்றும் ஆய்வு நோக்கு. பெரும்பாலும் இப்பகுதி மக்கள் வருவார்கள். கேரள மக்களும் வருவார்கள்.
இந்த வருடம் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.
இது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.
இளங்கோ: கம்பம், ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்த தேனி மாவட்டத்தில் மக்கள் தெய்வமாக கண்ணகியை
வழிபடுகிறார்கள் என்று அண்மையில் அரசியல் மேடைகளில் பேசப்பட்டதே, அது உண்மையா?
தமிழாதவன்: ஆமங்க! பலர் 40 நாள் நோன்பிருந்து வருகிறார்கள். நாளைக்குத்தான் நீங்கள் வருகிறீர்களே; பார்த்து விட்டுக் கேளுங்கள்.
இளங்கோ: சென்னையில் கண்ணகி சிலை பெயர்க்கப் பட்டு விட்டதே; அது
குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தமிழாதவன்: சிலை பெயர்க்கப் பட்டது ஏற்றுக் கொள்ள இயலாதது. அதற்காக
நாங்கள் இங்கு போராட்டம் நடத்தினோம் (அது குறித்த புகைப்படங்களைக் காண்பித்தார்.
பி.ஆர்.ஈசுவரன் (தி.மு.க) மற்றும் அறக்கட்டளை முன்னணியினர்
செய்த போராட்டக் காட்சிகளை அப்படங்களில் காண முடிந்தது).
இளங்கோ: கண்ணகி கோயில் உள்ள இடம் திருச்செங்கோடு என்றும் திருச்செங்குன்றம் என்றும் சொல்லப்படுகிறதே? (கூறியவர்கள் முறையே அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லார் என்றும் நாட்டார்
உரைக் குறிப்பு கூறுகிறது)
தமிழாதவன்: வையைக் கரையோடு வந்த கண்ணகி, எங்கேயோ இருக்கும்
திருச்செங்கோட்டிற்கு எப்படிப் போக முடியும்?
இளங்கோ: "வென்வேலான் குன்றில் விளையாட்டு நான் அகலேன்" என்று கண்ணகி கூறியதாக சிலம்பு கூறுகிறதே; அதனால் முருகன் வாழும் மலையில்தானே சென்று சேர்ந்திருக்க வேண்டும்?
தமிழாதவன்: அட என்னங்க! இங்கேயிருந்து 17 கி.மீ கிழக்கே, "சுருளி தீர்த்தம்" என்ற அருவி உள்ளது. அங்கே சுருளி வேலப்பர் என்ற ஆண்டவனும் இருக்கிறான். சிலம்பு சொல்லும் நெடுவேள் குன்றம் அங்குதான் உள்ளது. இதை விட வேறு சான்று தேவையில்லை. சுருளி அருவிக்கு நிறைய பேருந்துகள் போகின்றன.
நீங்களும் போய் வாருங்கள். அது மட்டுமல்ல இன்னும் கொஞ்ச தொலைவு போனால் "சண்முக தீர்த்தம்" என்ற அருவியும் உண்டு.
இளங்கோ : கண்ணகிதான் மாரியம்மன் என்ற கருத்து உளதே? அது குறித்து....
தமிழாதவன் : நிச்சயம் இல்லைங்க. மாரியம்மன் என்ற கடவுளுக்கு மிகப்பிந்தியவர் கண்ணகி.
இளங்கோ: இலங்கைக் கண்டியில் உள்ள கண்ணகி கோயிலுக்கும்
முதற்கோயிலானா இந்தக் கண்ணகிக் கோயிலுக்கும் ஏதேனும் தற்போது தொடர்புண்டா?
தமிழாதன்: (சற்று யோசிக்கிறார்.) இல்லைங்க அப்படியேதும் இல்லை.
நாம் போக முடிவதே வருடத்தில் ஒரு நாள். இடிந்து பாழ் பட்டுக் கொண்டிருக்கும்
கோயிலுக்கு மனிதர்கள் போவதே ஒருநாள் மட்டும். அப்புறம் எப்படி தொடர்பு
இருக்க முடியும்?
இளங்கோ: இங்கு தொல்பொருள் ஆய்வுகள் ஏதும் நடந்ததா?
தமிழாதவன்: தொல்பொருள் ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் விரிவாக ஏதும் செய்ததில்லை.
இளங்கோ: அய்யப்பன் கோயிலுக்கு அனுமதி தரும் கேரள அரசு, கண்ணகி கோயிலுக்கு ஏன் அனுமதி மறுக்கிறது?
தமிழாதவன்: (சற்று யோசனை...சற்று சிரிப்பு) அய்யப்பன் கோயில் கேரளாவில்
உள்ளது. கண்ணகி கோயில் தமிழகத்தில் அல்லவா உள்ளது!!!! அதற்கெப்படி
கேரள அரசு அனுமதி தர முடியும்? (என்று கேட்டு அர்த்தமுள்ள புன்னகை புரிந்தார். அது எனக்கு இதமாக இருந்தது)
(திரு.தமிழாதவன், கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள்தான் உள்ளது. நாம்தான் அதைக் கவனிக்காமல் குழப்பிக் கொண்டு இருக்கிறோம் என்று ஆழமாக நம்புகிறார். எண்ணுகிறார்; தமிழகம் சிறு முயற்சி எடுத்தாலே நலம் விளையும் என்று எனக்கும் அந்த உரையாடலில் பட்டது)
இளங்கோ: கண்ணகி கோயில் இங்கு மட்டுமே உள்ளது. முதற்கோயில். தமிழகம்
முழுவதும் பரவ வழியுண்டா?
தமிழாதவன்: இப்பகுதியில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பிற பகுதிகளில்
ஆங்காங்கு உள்ள தமிழர்கள்தான் செய்ய முன் வரவேண்டும்.
இளங்கோ: கேரள தமிழக எல்லை பிரிப்புக்கு முன் இந்தக் கோயிலில் வழிபாடு
இருந்ததா?
தமிழாதவன்: இந்த மக்களின் பழக்கவழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. எல்லை
பிரிப்புக்குப் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட விசயம் வெளியே வந்தது.
இளங்கோ: சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோயிலை நிறுவி, வழிபாட்டு முறைகளை செய்து வைத்தான். அதேபோல் சோழன் இராச இராசன் தஞ்சையில் சிவன் கோயிலை நிறுவி வழிபாட்டு முறைகள் செய்து வைத்தான். இராச இராசன் செய்து வைத்தது காலகாலமாய் நின்றது போல் கண்ணகி கோயில் வழிபாடு காலகாலமாய் நிற்கவில்லையே! இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்!
தமிழாதவன் : (புன்னகை, யோசனையோடு)...அது சைவங்க!...இதுதான் சமணம் என்று சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியுமே....என்று பல்பொருள் சிரிப்பொன்றை சிரிக்க, நானும் கண்விரித்து சிரிக்க அத்துடன் நேர்காணலை முடித்துக் கொண்டு அதே கருத்தை உரையாடிக் கொண்டிருந்தோம்.
(கண்ணகி கோயிலின் அமைப்பு சமணர் கோயில் போன்றது அல்ல. அது சமணக் கோயிலாக இருந்திருக்க முடியாது)
நான் எடுத்த முதல் நேர்காணல் இது. பக்கத்தில் கடைக்குப் போய், ஒரு 40 பக்க
குறிப்பேடு வாங்கி, கேள்விகளை முன்னரே எழுதி வைத்துக் கொண்டு அவரிடம்
அமர்ந்தேன். கேள்வி கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று; எனக்கும் பிடித்த ஒன்று; தருமிக்கும் பிடித்த ஒன்று :-) அவ்வப்போது சிலம்பு வரிகளை எடுத்தாண்டு ஆண்டு பறிமாறிக் கொண்டதால் இந்த நேர்காணல் மற்றும் உரையாடல் மிகச் சுவையாக இருந்தது எனக்கு.
தமிழாதவன் அவர்களோடு அன்றைய நாளிற்கு விடைபெற்றுக் கொண்டு
உலகத்திற்கு எழுதலாம் என்று உலவகம் சென்றால்...அய்யோ அதற்கு பதிலாக
அய்ந்து தடவை கண்ணகி கோயில் உள்ள மலையில் ஏறி இறங்கி விடலாம் :-)
நாக.இளங்கோவன்
13/மே/2002
2 comments:
வணக்கம்.
தங்கள் பதிவு கண்டு அளவிலா மகிழ்ச்சி.சிலம்பில் தங்களுக்கு உள்ள
ஈடுபாடு எனக்கு அளவிலா மகிழ்ச்சி
தருகிறது.
பயண அனுபவம் சிறப்பாக
வெளிப்பட்டுள்ளது.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
இந்தியா
அன்பின் முனைவர் மு.இளங்கோவன்,
தங்கள் பின்னூட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிலம்பைப் படித்தால் அதனை யார் விட முடியும் :) சொக்க வைக்கும் இலக்கியம்.
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment