Pages

Sunday, May 19, 2002

கண்ணகி கோயில் - மடல் 6 - நிறைவு

கண்ணகி கோட்டத்திற்கு சென்று திரும்பியது எனக்கு இனிமையான
பயணமாக அமைந்தது. மலைவிட்டு இறங்கி திருச்சிக்கு சேரவேண்டுமானால்
சுமார் அய்ந்தரை மணி நேரப் பயணம். கம்பத்தில் நேரம் ஏறத்தாழ மாலை நாலரை ஆகிவிட்டது புறப்படும்போது.

இருப்பினும் வழியிலே திண்டுக்கல்; திண்டுக்கல்லிலே நம் அன்புக்குரிய திரு.ஞானவெட்டியான் அவர்கள்.

முதல்நாள் அவரின் அழைப்பை அடுத்து அவரோடு தொலைபேசியில் உரையாடிதும், வழியில் அவரைக் காணாமல் செல்வதில்லை என்று நினைத்திருந்தேன். திண்டுக்கல்லில் இறங்கி, அவரை தொலைபேசியில் அழைத்ததும் 15 மணித்துளிகளில் பறந்து வந்து சந்தித்தார். அன்பே உருவானவர். அன்பொழுக என்னைப் பசியாற்றி, இருந்த அந்த முக்கால் மணி நேரத்தில் என்னை மிகவும் கவர்ந்தார். அடடா, இன்னும் கொஞ்சம் முன்னால்
வந்திருந்தால் அவரின் இல்லத்திற்கே சென்றிருக்கலாம்,
இன்னும் நிறைய பேசியிருக்கலாம் என்று எண்ணினேன். (இன்னும் நல்லா சாப்பிட்டிருக்கலாம்) இணையத்திற்கு மேலும் ஒரு நல்ல நண்பர், பெரியவர் கிடைத்திருக்கிறார். அவரும், அவருடன் வந்திருந்த அவரின் மைத்துனர் அவர்களும் தமிழ் உலக நண்பர்களை நேசிக்கிறார்கள். கொஞ்ச நேரமே ஆயினும் தமிழ் உலகம் பற்றியே கதைத்து விட்டு "கட்டாயமாக அடுத்த முறை அவருக்காகவே திண்டுக்கல் வருவதாகக்" கூறி விடைபெற்று திருச்சி புறப்பட்டேன்.

பேருந்தில் ஏறுமுன் நினைத்துக் கொண்டேன். எங்கு சென்றாலும் இணைய
நண்பர்கள் யாரையாவது சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து விடுகிறது; உலகத்தில் 'இணைய வழி அறிந்த நண்பர்களை, நிறைய எழுதும் நண்பர்களை
அதிகம் சந்தித்தது அல்லது தொலைபேசியது யார்?' என்று போட்டி வைத்தால்
நாம் எளிதாக வென்றாலும் விடலாம் என்று நினைத்துக் கொண்டேன் ;-)

நண்பர்களே, இதில் சேதி என்னவென்றால், 'இணையக் குமுகாயம் விரிந்து வருகிறது; வேகம் குறைவெனினும் அதில் உறுதி தெரிகிறது; இந்த ஊடகத்தின் சிறப்பு இதன் குமுகாயமே! ஆதலின் இந்த ஊடகத்தால் தமிழ்க் குமுகாயத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியும்' என்ற எண்ணங்கள் உறுதிப் பட்டுக் கொண்டே வருகின்றன.

இவ்வூடகத்தில் கண்ணில் படும் தமிழ்ப் பிழைகள் தவிர்க்கப் படவேண்டும்.
ஏனென்றால் தமிழ்ப்பிழைகள் புதுப்பிழைகள் அல்ல!

காலகாலமாய் செய்யப் பட்டு, பழக்கப் பட்டு வந்த அதே பிழைகள்தான் இங்கும் வரக்கூடும்.அவைகள் தவிர்க்கப் பட்டால், ஏற்படக்கூடிய தாக்கம் நல்ல தாக்கமாக இருக்கும்; இல்லையெனில் பிழைகள் குலைகுலையாய்ப் பெருகும் என்பதில் அய்யமில்லை.

பகலின் வெம்மை மறைந்து இரவின் இனிமை ஆரம்பித்து விட்ட அந்த ஒன்பது
மணி இரவில் பேருந்தில் அமர்ந்து சாலையோர வேகக் காற்றில் முகத்தை வைத்து, கண்களை இருட்டில் வைத்து, நினைவுகளை மீண்டும் கண்ணகி கோட்டத்தில் விட்டபோது இருநாள் நிகழ்வுகளும், பலரோடு உரையாடியதும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன.

இராச இராச சோழன், தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகி கோட்டம்
வந்து, அதன் சமணத் தன்மைகளை மாற்றி, அதில் சைவ முறைகளை ஏற்படுத்தி
வைத்ததாகக் கூறப்பட்டது. குட்டுவன் கட்டிய கோட்டத்தில் இலிங்கம் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் கவனிப்பார் இன்றி கிடக்கும் கோட்டத்தை, இவனாவது கவனித்தானே என்று எண்ணியபோது மனதில் மகிழ்ச்சியே நிறைந்தது. சேரநாட்டில் தெய்வமாகினாலும், சோழநாட்டுப் பெண் என்ற
அன்பில் இராசராசன் செய்தது மகிழ்ச்சியளித்தது.

அநேகமாக இது புகழ் பெற்ற , சோழப் பேரரசிற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்த சேரநாட்டு காந்தளூர்ச் சாலை போர்க்கு சென்று பெரு வெற்றி பெற்று மும்முடிச்சோழன் ஆக இராசராசன் பட்டம் கட்டித் திரும்பிய காலமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் இவன் பேரரசு பல்கிப் பரவியது.

தமிழரசியல், தமிழியம், தேசியம் என்றெல்லாம் ஆர்வப் படுபவர்கள் தவிர்க்க
முடியாத சங்கதிகள்/வரலாறுகள் இவை.

கண்ணகிக்கு அவங்கப்பா 7 யானைகளை சீதனமாகக் கொடுத்தார் திருமணம்
செய்து கொடுத்தபோது என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ,
அவ்விடம் போய் அவரிடம் அது பற்றிச் சேதியறிய முனைந்தும் நெரிசல் காரணத்தால் அது இயலாமற் போனது.

"கோவலன் கொலையானது கேட்டு கொதித்துப் போனார்கள் பெற்றோர்கள்;
கண்ணகி மதுரையை எரித்ததும், 'நீ இங்கே சாகாதே, நேராகப் போய் சேரநாட்டில்
இப்பகுதியில் சாவு; அப்பொழுதுதான் உனக்கு புகழ் கிடைக்கும்' என்று அனுப்பி
வைத்ததே அவங்கப்பாதான்' என்றொருத்தர் கூறியபோது சற்று
அதிர்ந்து போனேன். அதோடு, 'அவுங்கெல்லாம் பணக்காரச் செட்டியாருங்கங்க;
அவுங்களே கட்டினாலும் கட்டியிருப்பாங்க கோயிலை' என்று சொன்ன போது,
எனக்கு இனம்புரியா உணர்வுகள்; சற்றே சிரிப்பு. சில நூல்களில் மற்றும்
பேச்சுவாக்கிலும், "கண்ணகியை, சாதியை வைத்து தமிழர் பலர் கண்டு கொள்ளவில்லை" என்று அறிந்திருந்தது/கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
சரி சரி நாம் நாமே! :-) என்று எண்ணிக் கொண்டு அங்கும் இங்கும் படம் எடுத்துக்
கொண்டு இருக்கையில்,

"எங்கூட்டுக் காரரும் வனக்காப்பாளர்தான் (பாரெசுடு ஆபீசர் ), ஆனால் இந்தக்
கேரளாக் காரங்க மாதிரி இல்லங்க". நிரம்ப கடுபிடி பன்றாங்க; ொம்பளைங்களுக்குன்னு இருக்கிற தெய்வம்;
அதைக் கும்பிட வந்தா இப்பிடியா நடந்துக்கறது"? என்று சொல்லி நன்கு பேசிய அந்த அம்மையார், அண்டை ஊர்க்காரர். வருசா வருசம் வரும் இவர் கண்ணகியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம்.

அப்பெண்மணியும் அவரின் அம்மாவும் (வயது 65 இருக்கும்), கண்ணகி கோயிலுக்குப் பின் இருக்கும் மண்டபத்தின் உள் மிக ஆர்வமாக சாமி கும்பிட்டனர். "இங்கதாங்க அந்த அம்மா (கண்ணகி) வந்து உட்கார்ந்து தண்ணி குடிச்சது" என்று சொன்னது சிந்தனைக்குரியது. வானவூர்தி ஏறி கோவலனுடன் விண்ணுலகம் போனாள் என்று சிலம்பு கூறுவதையும், 14 நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வந்து புங்கை மர நிழலில் நின்றவளுக்கு, அவளைக் கண்ட குறமகளிர் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்திருத்தல் வேண்டும் என்று
நாம் எண்ணுவதையும் எண்ணிப் பார்த்தால்,
பிந்தையது அந்த அம்மையாரின் நம்பிக்கையோடு ஒத்துப் போகிறது.

அதோடு, அந்த கோயிலுக்குள் இருக்கும் சுரங்கம் வழியாகத்தான் கண்ணகி
அங்கு வந்தாள் என்று அந்த அம்மையார் சொன்னபோது நம்பும்படியாக இல்லை.
இருப்பினும் அது அவரின், அந்தப்பகுதியில் வாழ்வோரின் நம்பிக்கை; அல்லது
அவர்கள் அறிந்தது.

கோட்டத்திற்கு சென்று வந்து ஏறத்தாழ 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில்,
பல நிகழ்வுகள் நினைவுகளின் ஆழத்திற்கு சென்றுவிட்டன. இருப்பினும் ஒரு முக்கியமான ஒன்றை நான் மறக்கவில்லை. அங்கு சுறுசுறுப்பாக கையில்
படக்கருவிகளுடன் நிறைய பேருடன் பேசிக் கொண்டிருக்க, ஒரு கண்ணகி
பக்தருக்குப் பொறுக்கவில்லை.

வயிறின் வளர்ச்சியால் வளைந்து கிடந்த உடம்பு. வயிறு வரை தாடி.
இடுப்பு வரை பின்னாமல் விரித்துப் போட்டிருக்கும் தலைமயிர். வெள்ளை வேட்டி, சட்டை. (தமிழாதவனுடன் நான் இருக்கும் படத்தில் அவரின் பாதியைக் காணலாம். படங்கள் விரைவில் சிங்கை இணையத்தில் போடப்படும்). அவர் பெயர் நினைவில் இல்லை. (கொஞ்சம் கிண்டலாகச் சொன்னால் காபாலிகர் போல் இருந்தார்; கழுத்தில் அந்த மாலை இல்லை :-) )

கும்பகோண பாவேந்தர் தமிழியக்க நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது,
இவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

"என்னங்க....இதெல்லாம் நம்ப வேலைதான்...
நீண்ட நாட்கள் நான் செய்த உழைப்பு;
அதனால்தான் இவ்வளவு பேர் இங்கு வருகிறார்கள்.
நானும் முன்னாடி அறக்கட்டளையில் இருந்தேன்;

கண்ணகி என் மேல சாமியா வந்து ஆடுவா!
வந்து குறி சொல்வா!.

இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன் வந்தா!"
என்று சொன்னவரை மேலும் நோண்டிவிட ;)
அவர் பாட்டுக்கு பேச ஆரம்பித்து விட்டார்.
பேசிப் பேசி இறுதியாக சொன்னார்.

"ஏன் இவ்வளவு பிரச்சினைகள்னா,
கண்ணகி மேல் தோசம் அதிகம்ங்க.
'பாண்டியன் செத்துப் போனாலும் தோசம் இவளுக்குதாங்க!'.
அதோடு, மதுரையை எரித்த தோசம் என்ன சின்னதா...?
(இரண்டு மூன்று தோசங்களைச் சொன்னார்...நினைவிலில்லை)
பிரம்மகத்தி தோசம் இவளுக்கு உண்டுங்க.... அதோடு
வெற்றி வேல் செழியன் கொன்றானே ஆயிரம் பொற்கொல்லர்கள்..
அந்த தோசமும் இவளுக்கு வந்திருச்சிங்க..'.என்று சொல்லி
சிரித்தார் பெரிதாக..... தொடர்ந்து
'இந்த தோசமெல்லாம் போனாதாங்க இவளுக்கு கோயில் அமையும்..
அதற்குதாங்க நான் போகாத கோயிலே இல்லை...
30 நாள் நோன்பிருந்து இராமேசுவரம், கும்பகோணம் என்று பல
கோயில்களுக்குப் போய் கண்ணகி மேல் உள்ள தோசத்தைக்
கழித்து நேரே இங்கு வருகிறேன்' என்று சொல்லி...
மேலும் சொல்லப் போனவரை ஒரு மாதிரியாகப் பார்த்து,
'கனகவிசயன் தலையில் வைத்து கல் கொண்டு வந்ததும் தோசம்தான்'
என்று சொன்னாலும் சொல்வாய் நீ... என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்
கொண்டு மற்ற நண்பர்களோடு சேர்ந்து அவரிடம் அவசர விடை பெற்றுக்
கொண்டு நகர்ந்தேன்.

மதுரையில் வளையல்களை உடைத்துப் போட்டு விட்டு, வைகையின்
தென்கரையில் நடந்து வந்து ஆண்டிப்பட்டிக் கணவாயில் திரும்பி
ஊர்களைக் கடந்து, இந்த நெடுவேள் குன்றத் தொடர்களில் ஏறி இறங்கி
இங்கு வந்தாள் கண்ணகி, என்று நண்பர் ஞானம் சொன்னது சரியாகவேப்
பட்டது எனக்கு.

திருச்செங்கோடு, திருச்செங்குன்றம், கொடுங்களூர் பகவதி, மாசாணிக்கரை
அம்மன், சோட்டாணிக்கரை பகவதி என்று பல கருத்துக்கள் நிலவினும்,
மதுரை, வைகை தென்கரை, ஆண்டிப்பட்டி கணவாய், பளியன்குடி, நெடுவேள்
குன்ற மலைத்தொடர் என்று வந்து வைகையின் தோற்றுவாயில்
அமைந்திருக்கும் இந்த இடம்தான், இதே இடம்தான்
குட்டுவன் கட்டிய கோட்டம் என்பதற்கு சான்றாக சிலம்பு,
" செங்குத்தான மலை உச்சியில், மூங்கில்கள் சூழ்ந்த இடத்தில்
யானையைப் போன்ற நீண்ட பாறை! அதன் உச்சியில் நீர் நிறைந்த
பல சுனைகள்...." என்று கூறுகிறது.

"மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர்வரைச் சேண்உயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை நிரம்பிய
அணிகயம் பலஉள; ஆங்குஅவை இடையது
கடிப்பகை நுண்கலும் கவிர்இதழ்க் குறுங்கலும்
இடிக்கலப்பு அன்ன இழைந்துஉகு நீரும்
உண்டுஓர் சுனை;......"
- சிலம்பு: வரம்தருகாதை:53-59

நண்பர்களே,
கண்ணகி கோட்டப் படங்களை, நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன். விரைவில் அவை சிங்கை இணையத்தில்
ஏற்றப்படும்.

1800 ஆண்டுகளுக்குப் பிறகு, குட்டுவன் கட்டிய கண்ணகி கோட்டம்
படங்களாக "இணையக் கண்ணகி கோட்டமாக" சிங்கை இணையத்தில்
அமையக் கூடும் என்று கருதுகிறேன். மடல்கள் நிறைவுறுகின்றன.

குட்டுவன் கட்டிய கோட்டம் இன்று
கட்டுகள் கலைந்து கல்லாய் மண்ணாய்!
உறவுகள் எல்லாம் ஊரில் இருக்க
பிரிந்து அவளோ தனியே வெளியே!
கற்பின் அரசியைக் கண்டேன் கண்டேன்!
கண்டதும் கண்களில் துளியே துளியே!
காலம் மாற்றுவேஎன், கவனம் திருப்புவேன்!
கோட்டம் மீட்டு குலமகள் போற்றுவேன்!

நிறைவு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
19/மே/02

தொடர்புடைய மற்ற சுட்டிகள்:

சிலம்பு மடல் - 32
http://nayanam.blogspot.com/2000/12/32.html

சிலம்பு மடல் - 33
http://nayanam.blogspot.com/2000/12/33.html





1 comment:

Kannan said...

மிகவும் அருமை