Pages

Friday, February 23, 2018

"அய்" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.

கமலகாசன் கட்சி தொடங்கியவுடன் கய்-மய்-தமிழில் கட்சிப்பெயர் வைத்து தமிழைத்தான் எடுத்தவுடன் படுகொலைசெய்துள்ளார். முகநூலில் எழுதும் முக்கால்வாசி அப்பாவித்தமிழ்மக்கள் அனைவரும் அந்தக்கேட்டை கண்டித்துவிட்டனர். ஆனாலும், தமிழக அரசு, தமிழக தமிழ்ச்சங்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள், வெளிநாட்டு தமிழ்ச்சங்கங்கள், தமிழ்வளர்ச்சித்துறை, அரசியற்கட்சிகள் என்ற யாரும் இந்த தமிழ்க்கேட்டை கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்கும் தமிழுக்கும் எப்பொழுதும் தொடர்பிருந்ததில்லை என்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.


1) மய்யம் என்பது ஏன் பிழையாகிறது.?

அ) கொஞ்சம் அறியை என்ற சொல்லை காண்போம்.

"நீயே அறியை சாலவெம் பெரும" என்று 11-ஆம் திருமுறையில் நான்மணிமாலை சொல்லும் .

"நீ அறியையோ?" என்று ஏரக நவரத்தினமாலை சொல்லும். அழகான சொல்லாட்சி.

கய்-மய் தமிழில் எழுதினால் "நீ அறியய்யோ?" என்று வரும். மை = மய் என்றால், யை = யய் அல்லவா!

மணி + அழகு = மணியழகு. இகரமும் அகரமும் என இரண்டு உயிர் சேர்ந்து வருவதால், யகர உடம்படுமெய் பெற்று மணியழகு என்றாகிறது என்பர் புலவர்.

அதேபோல, அறி + அய்யோ = அறியய்யோ (யகர உடம்படுமெய்) என ஆகி
அடியோடு பொருள் மாறிவிடுவதை காண்க.

ஆ) அதேபோல, சாரியை என்ற சொல்லை அனைவரும் அறிவோம்.

சந்தியா சாரியையா? என்று பகுபத இலக்கணத்தில் கேள்விகள் எழும்.
அது "சந்தியா சாரியய்யா?" என்று ஆகி சொல், பொருள் என்ற இரண்டுமே சிதைந்து போவதை காண்க.

இ) கழுதையை அறியாதவர் உண்டோ?

இது கழுதையோ! என்று இனிமேல் வியக்க முடியாது. ஏன் தெரியுமா?
கய்-மய் தமிழின் கொடுமையால், கழுதையோ என்ற சொல், கழுதய்யோ என்று மாறி, கழுது + அய்யோ என்று பிரியும். சரி தெரிந்த கழுதைதானே என்று நினைக்காதீர்கள். கழுது என்றால் பேய் என்ற பொருளுண்டு. (கழுகொடு கழுதாட என்று அருணகிரிநாதர் முத்தைத்தரு.... .பாடலில் சொல்வார்).

கய்-மய் தமிழ் கழுதையை கழுதாக, பேயாக மாற்றிவிடுவது பொருட்சிதைவல்லவா?

ஈ) பத்தன், பத்தை (பக்தர், பக்தை) - "பத்தையா வந்தாள்?" என்று கேள்வி கேட்டுவிட முடியாது. பத்தையா = பத்தய்யா! பத்தய்யா வந்தாள்? பத்து அய்யாக்கள் வந்தாள் என்று ஆகி, பொருள், திணை என்ற எல்லாமே வழுவுகின்றன.

உ) அதேபோல. "கோழி வாங்கலையா! மீனையா வாங்கினாய்?" என்று எழுதிவிட முடியாது. மீனையா = மீனய்யா! "மீனய்யா வாங்கினாய்" என்று ஆகி எந்த மொழி என்றே தெரியாமல் போகும்.

ஊ) "இது உன் தங்கையா?" என்று கேட்க முடியாது. ஏனென்றால் கய்-மய்-தமிழ்,

"இது உன் தங்கய்யா?" என்று மாற்றிவிடும். தங்கச்சியை, தங்க அய்யாவாக மாற்றிவிடும் எண்னற்ற கொடுமைகள்தான் கய்-மய்-தமிழ். சொல், பொருள், தினை, தொடர், பகுபத உறுப்பிலக்கணம், மாத்திரை, யாப்பு என்ற அனைத்தையும் வகைதொகை இல்லாமல் சிதைக்கிற வழக்கை கண்டுகொள்ளாமல் கேலியும் கிண்டலுமாய் பொழுதுகள் கழிகின்றன.

2) மய்யம் என்ற சொல்லை தவறு என்று சொல்ல ஏன் நா தடுக்கவேண்டும்? அந்த தடுமாற்றத்தை மறைக்க மையம் என்ற சொல்லே தமிழ் இல்லை - அது வடமொழி என்று உதறித்தள்ளும் பொறுப்பற்ற தன்மையை என்ன சொல்ல?!

தன்மை, தண்மை, வன்மை, மென்மை என்று எத்தனை சொற்களில் மை விகுதியாக வருகிறது. மை என்பதே தனிச்சொல்தானே? மை + அம் என்று அம் விகுதி பெற்றுவிட்டால் உடனே அது வடமொழியாகிவிடுமா?
இருக்கும் தமிழ்ச்சொல்லை எல்லாம் வடமொழி வடமொழி என்று தள்ளிவிடுவது தமிழர்களா? அல்லது வடவரா? அச்சு + அம் = அச்சம் என்பது வடமொழியா? ஐயம் என்பது வடமொழியா? தமிழம் என்பது வடமொழியா?

சிந்திக்க வேண்டாமா? நமது பொறுப்பற்ற போக்குக்கு ஒரு வரம்பு வேண்டாமா?

3) மய்யம் என்று ஏதோ எழுதிவிட்டார். இதனால் என்ன இப்ப கெட்டுப்போயிடுச்சி! இதுக்கு போய் எல்லாரும் ஏன் தவிக்கிறீங்க? - இப்படிச்சிலர்.

அ) மய்யம் என்ற சொல்லை இன்று உலகில் உள்ள 8 கோடித்தமிழரும் படித்துவிட்டனர். இனி அந்தக்கட்சியை அப்படித்தான் எழுதுவர்.

ஆ) இருபது முப்பது ஏடுகளும் அப்படித்தான் நாடோறும் எழுதும். அவர்களை பொறுத்தவரை கமலகாசனால் நாலுபேர் அதிகமாக வாங்கிப்படித்தால் வரும்படி கூடும். அவ்வளவுதான்.

இ) இருபத்தைந்து தொலைக்காட்சிகளும் அப்படி எழுதியே படங்காட்டி விட்டனர். அவர்களுக்கும் நல்ல தமிழுக்கும் தொடர்பே இருந்ததில்லை.

ஈ) சட்டப்படி கட்சிப்பெயர் பதிவாகிவிட்டது. தவறான தமிழ் சட்டமாகி அதற்கு மக்களை வாக்குப்போடவைப்பதும் பேசவைப்பதும் வல்லாண்மையன்றி வேறென்ன? ஒரு தவறான செயல், தவறான தமிழை உருவாக்கி, ஒரு 8 கோடிப்பேர் கொண்ட குடியை பயன்படுத்த வைக்கிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

கமலகாசன் தமிழறிஞர் இல்லை. அவர் செய்த தவற்றினை சுட்டிக்காட்ட வேண்டியது தமிழ் அறிவுலகிலன் கடமையல்லவா?

4) ஐ-க்கு அய்-போலியா?

இதுபற்றிய நல்ல உரையாடலை http://www.wetamizh.com/archives/1752 என்ற பதிவில் எழிலன் எழுதியுள்ளார். அதைக்காண்க.

மேலும்:

"அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21

ஐ-என்ற கூட்டெழுத்தின் (dypthong) தோற்றத்தை கூறுகிறார் தொல்காப்பியர். ஐகாரம் இப்படி உருவாவதொடு, தமிழுக்கு தனிச்சொல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை தருவதை அறிவோம். (எனது முந்தைய மடலை காண்க). இங்கே ஐ-யை குறிலா நெடிலா என்ற ஒலி-வகைப்படுத்தாமை காணத்தக்கது. அஇ எனும் ஓசை முழு நெடிலாக எப்படி இருக்க முடியும்? ஒருவேளை ஐ குறுகியும் ஒலிக்கும் என்று சொல்ல வந்தாரா தொல்காப்பியர் என்பது தெரியவில்லை.

மய்யம் என்று எழுதிவிட்டு, மை-க்கு போலி மய் என்று சொன்னால் எப்படி?

தொல்காப்பியர் வழி பார்த்தால், மை = மஇ என்றோ, மை=மஇய் என்றுதானே இருக்கிறது. அப்படியென்றால், மையம் என்பதை மஇயம் என்றோ, மஇய்யம் என்றோதானே எழுதவேண்டும்?

மேலும்:

தமிழில் போலி இலக்கணம் என்ன சொல்கிறது?

5 வகையான போலிகளை சுட்டிக்காட்டுகிறது.

அ) முதற்போலி -- பசல் = பைசல் -- அகரம்(ப) ஐகாரமாக(பை) மாறுகிறது.
ஆ) இடைப்போலி -- அரயன் = அரையன் -- அகரம்(ர) ஐகாரமாக(ரை) மாறுகிறது.
இவற்றை நன்கு கவனிக்க. அகரம் என்பது ஐகாரமாக இருக்கலாம் என்று சொல்வதால், ஐகாரமும் அகரமாக மாறலாம் என்று சொல்லவில்லை. அகரத்திற்குதான் ஐகாரம் போலியாகிறது. காட்டாக, காலை மாலை என்பன, கால, மால என்று வந்துவிடுவதில்லை. கால என்பதும் மால என்பதும் பொருளிலேயே மாறுபடுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு போலிகளை போட்டால் பெரிய சிதைவுகள் ஏற்படுகின்றன.

அப்படியும் வலிந்து ஐகாரம் அகரமாகும் என்று சொல்வார்களெனில், போலி இலக்கணப்படி, அரையன், அரயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, அரய்யன் என்று ஆக இலக்கணம் இல்லை. மலையன், மலயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, மலய்யன் ஆக இலக்கணம் இல்லை.

இந்த இரண்டு போலிகளொடு, கடைப்போலி(பந்தல் = பந்தர்), முற்றுப்போலி (ஐந்து = அஞ்சு), முன்பின்னதாகத் தொக்க போலி (சதை = தசை) ஆகிய மூன்றுவகை போலிகள் வரும்.

இதில் முன்பின் தொக்க போலியை கூர்ந்து காண்போம்.

சதை = தசை - இங்கே பொருள் கெடாமல் ஐகாரம் எழுத்தில் மாறி அமர்ந்திருக்கிறது. அதுதான் போலி.

இதையே, கய்-மய் முறையில் எழுதினால், சதய், தசய் என ஆகிவருமல்லவா?

இப்பொழுது த-வுக்கு ச-வும், ச-வுக்கு த-வும் மாறுகின்றன. இங்கே போலி இலக்கணமே செத்துவிடுவது காண்க. த-வில் உள்ள அகரம், ச-வில் உள்ள அகரத்திற்கு எப்படி போலியாகும்?

இலக்கணத்தையே சிதைக்கிற முறை, ஆராய்ச்சியில்லாமல் மேலோட்டமாக சொல்லப்பட்ட கய்-மய் முறை.

போலி பற்றி பார்க்க: http://www.tamilvu.org/ta/courses-degree-c021-c0211-html-c0211334-15600
மேலும்:

போலி என்று சொல்லப்படுவது போலியே இல்லை என்றாலும் போலி, போலி என்று கூவிவிற்பவர்களுக்கு செஞ்சோற்றுக்கடன் என்று ஒன்று உள்ளதாக கருதி அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், போலியே வாழ்வாக இருக்க முடியுமா? போலியே தமிழாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் நண்பர் சேக்முகமது உருபோலிப்போட்டி என்ற நல்ல சொல்லாட்சியை Fancy Dress Competition என்ற நீண்ட ஆங்கிலத்தொ டருக்கு இணையான சுருக்கமான தமிழாக தந்திருந்தார். உருபோலியைப்போலவே, எழுத்துப்போலியும் ஏதோ ஓர் இடத்தில் பகட்டு எழுத்தில் வரலாமே தவிர அதுவே மொழியாகி விடக்கூடாது. வாழ்க்கை முழுதும் பகட்டு உடுப்பு, மாறுவேச உடுப்பு அணியமுடியுமா?

ஆகவே இந்த வறட்டுப்போலிகளை மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கி வீசவேண்டும்.

5) ஓர் அச்சுக்கட்டை உடைந்து போனதற்காக, சிக்கன சீலரான பெரியார் தமிழ் எழுத்துகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்று அடித்து விட்டதையும், பேரறிவை பொதித்து வைத்திருக்கும் உலகின் தொன்மையான இலக்கண நூலை யாத்த தொல்காப்பியரையும் ஒப்பிட்டு பெரியாரை தொல்காப்பியர் மாதிரி பார்ப்பது தவறு. பெரியாரின்மேல் பாசத்தை காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. அதைத்தேர்ந்து கொள்ளுங்கள். தமிழ்மொழி குறித்து அவர் சொன்னவற்றை, வெறும் ஆத்திர அவசரத்தில் எழுதியதாக கருதி கடந்து போவது நல்லது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24/02/18

2 comments:

வலிப்போக்கன் said...

சினிமாக்காரன்..நோக்கம் தமிழை வளரப்பதில்லையே..தமிழை சிதைத்து காசு பார்ப்பதிதான்

Job News said...

Arumai Pathivu