Pages

Sunday, April 21, 2013

தஞ்சை நெற்களஞ்சியம் கரிக்களஞ்சியமாகலாமா?


1) நிலக்கரிப் படுகை மீத்தேன் (நி.ப.மீ) என்றால் என்ன?
நிலத்தடியில் நிலக்கரி இருக்குமானால், அந்தக் கரிப்பாறைகளில் உள்ள
நுண்துளைகள் வழியே, கரிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும்
மீத்தேன் வாயு ஊடுறுவி வெளிவரும். இது நிலக்கரிப் படுகை மீத்தேன்
ஆகும். (Coal Bed Methane) இங்கே நிலக்கரியை வெட்டி எடுப்பது
வேலையல்ல. கரிப்பாறை நுண்துளைகள் வழியே மீத்தேன் வளியை
உரிஞ்சி எடுப்பதே வேலை.

2) நிலக்கரிச் சுரங்க மீத்தேன் (நி.சு.மீ) என்றால் என்ன?
நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுப்பது முதன்மையான வேலை
அல்லவா? அப்படி வெட்டு எடுக்கும் போது, துணைப் பொருளாக, அங்கே
வெளியாகும் மீத்தேன் வாயுவையும் உரிஞ்சி எடுப்பது நி.சு.மீ ஆகும்.
(Coal Mine Methane)

3) தஞ்சை, கடலூர் பகுதிகளில் எடுக்கப் போவது என்ன மீத்தேன்?
நி.ப.மீ. (நிலக்கரிப் படுகை மீத்தேன்)

4) நி.ப.மீயை எடுக்க எப்படித் திட்டமிட்டுள்ளார்கள்?
புதுவை மாநில பாகூர் தொடங்கி, நெய்வேலியைத் தொட்டு, தெற்கே மன்னார்குடியையும் தாண்டி இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
(பார்க்க படம்)

5) தஞ்சையில் மீத்தேன் எடுக்கப் போகும் நிறுவனம் எது?
மாகிழக்கு எரிசக்தி நிறுவனம் (Great Eastern Energy Corporation Ltd.)
http://www.geecl.com/

6) தஞ்சையில் எங்கு மீத்தேன் எடுக்கப் போகிறார்கள்?
மன்னார்குடியைச் சுற்றிய பகுதிகளில் 667 ச.கி.மீ பரப்பில் 80 கிணறுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மீத்தேன் உரிஞ்சி நிறுவனம் கூறுகிறது. 1,66,000 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக குறிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், வடக்கே செயங்கொண்டம், சீமுசுணம், நெய்வேலி, புதுவை பாகூர் ஆகிய, மன்னார்குடிக்கு நெடுந்தொலைவில் உள்ள பகுதிகளிலும் மீத்தேன் கிணறுகளுக்கான பணிகள் நடக்கின்றன.

7) மீத்தேனுடன் வேறென்ன எடுக்க முடியும்?

மீத்தேன் எடுத்து முடித்த பின்னர், நிலக்கரியை இப்பகுதி முழுவதும் வெட்டி எடுக்க முடியும். மீத்தேன் உரிஞ்சப் போவதாகச் சொல்லும் மாகிழக்கு எரிசக்தி
நிறுவனம், மீத்தேன் உரிஞ்ச உரிமம் பெற்றிருப்பதொடு, இப்பகுதியில் பெட்ரோல் எடுக்கும் உரிமத்தையும் பெற்றிருக்கிறது.

ஆகவே, மீத்தேன், நிலக்கரி, பெட்ரோல் பொருள்கள் ஆகிய மூன்றும் இப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப் படும் என்று கருதமுடிகிறது.

8) மாகிழக்கு எரிசக்தி (GEECL) நிறுவனம் எந்த நாட்டு நிறுவனம்?
இங்கிலாந்து-இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலண்டன் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையிலும் நுழைய ஆவண செய்து வருகிறது.

9) நி.ப.மீ யால் என்ன பலன்?

மீத்தேன் எரிவாயு நல்ல எரிபொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுப்பெரிக்கவும், ஆலைகளில் தேவையான சூடுபற்றவும் இது பயன்படும்.

உலகில் மீத்தேன் உற்பத்தியில் நான்காவது இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என்ற கொள்கையை இந்திய அரசு கொண்டிருக்கிறது.

10) தஞ்சை நி.ப.மீயால் யாருக்குப் பலன்?

கருநாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, சிங்களம், கேரளம் ஆகிய தென் பகுதிச் சந்தையை இணைக்கும் மீத்தேன் வளி வலை உருவாக்கப் படுவது இதன் நோக்கம்.

11)  நி.ப.மீ எப்படி எடுக்கப் படும்?

ஆழ்துளைக் கிணறுகள் வேட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள். அப்படி இறைக்கும் போது, நன்னீருடன்  உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.

அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.

இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உரிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உரிஞ்சி எடுப்பார்கள்.

இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.

12) நி.ப.மீயால் ஏற்படக் கூடிய கெடுதிகள் என்ன?

12.1         விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்.
12.2         நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்.
12.3         மேலும் நன்னீர் நிலத்தடியில் வறழ வறழ, கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்.
12.4         இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்.
12.5         துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப் பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச் சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்.
12.6         காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில் மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப் பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் அது மீத்தேன் கிணறுகள் பெருகும்.
12.7         தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும். இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்.
12.8         மீத்தேனுக்குப் பின்னர் நிலக்கரியில் கைவைப்பார்கள். பெட்ரோலும் அங்கிருந்து வரக் கூடும்.
12.9         வேளாண்மையை கைவிட்ட மக்கள் ஆரம்பத்தில் நிலங்களை விற்றுக் கிடைத்த காசில் சிறிது பகட்டாக இருந்தாலும் ஓரிரு தலைமுறைகளில் கரிக்களஞ்சியத்தின் கூலித் தொழிலாளிகளாய், பாலாவின் பரதேசி திரைப்படத்தில் வரும் பரதேசிகளாக ஆகிவிடுவர்.
12.10    பசுமையான செழிப்பான மிக அகண்ட வேளாண்மைப் பகுதியில் வெட்டப்பட்ட சுரங்கங்கள், ஆழ்கிணறுகள் காலப் போக்கில் வற்றிவிட அவற்றைக் கைவிட்டு நிறுவன்ங்கள் வேறு தொழிலுக்குப் போய்விடும். பின்னர் “Abandoned Mines and deep wells” என்ற பெயரில் பயனற்று மண்மேடாகப் போகும். பல ஆயிரம் ஆண்டுகள் பச்சையாக இருந்த நிலங்கள் அரை அல்லது ஒரு நூற்றாண்டில் பாலையாக ஆகிப் போகும்.

13)             நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.

14)             நி.ப.மீ திட்டத்தை ஏற்கக் கூடாததற்குக் காரணங்கள் யாவை!

14.1                     வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம்.
14.2                     அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.
14.3                     கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.
14.4                     தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

14.5                     தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?


கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

மீத்தேன் உரிஞ்சலால் ஏற்படும் தீங்குளை மேலும் அறிய பிரெய்ன் மெக்மேகனின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
http://www.brianmcmahonlaw.com/CM/Client-Bulletin/Client-Bulletin7.html


கரிக்களஞ்சியம் மறுக்க மறக்காமல் மின்சாத்திடுவீர்!



அன்புடன்
நாக.இளங்கோவன்
21/4/2013


6 comments:

செல்வா said...

மிகப் பயனுடைய பதிவு இளங்கோவன்!

Unknown said...

https://www.facebook.com/pages/Cauvery-basin/248748898597487

இந்த பேஸ்புக் பக்கத்தை பாருங்கள்; Cauvery basin என்ற இந்த பக்கத்தை LIKE செய்து அதில் உள்ள விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அதில் மீத்தேன் என்னும் பேராபத்தை பற்றியும் மற்றும் அதனை செய்ய துடிக்கும் நிறுவனங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகள் பற்றி விவரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

Vijay Periasamy said...

விழிப்புணர்வூட்டும் பதிவு . நானும் கையெப்பமிட்டுள்ளேன்.

எம்.ஞானசேகரன் said...

தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_14.html

RAJI said...

ஒருமித்து எதிராக குரல் கொடுக்க வேண்டும்...

RAJI said...

ஒருமித்து எதிராக குரல் கொடுக்க வேண்டும்...