தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில்
ஒன்றான மணற்கேணி நேற்று (24-11-2012)
புதுச்சேரியில் நடத்திய ஆய்வரங்கத்தில் கலந்து
கொள்ளும் வாய்ப்பமைந்தது.
சுமார் 125-150 பேர் கலந்துகொண்ட நல்ல
அரங்கமாக அது அமைந்திருந்தது.
1952ல் திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்களால் துவக்கப்பட்டு,
பின்னர் திரு.நாகசாமி, திரு.நடனகாசிநாதன், தற்போது
திருவாட்டி வசந்தி ஆகியோரின் தலைமைகளில்
தொடரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் பரப்பு,
ஆழம், சாதனைகள், சோதனைகள் என்ற பல்வேறு
கோணங்களை ஒரே நேரத்தில் அறியத்தரும் அரங்கமாக
சிறப்புற அமைந்திருந்தது.
கல்வெட்டாய்வு, நாணயவாய்வு, அகழ்வாய்வு என்ற
மூன்று ஆய்வுகளும் அரங்கில் முகன்மை பெற்று
இருந்தது மிகப்பயனாக இருந்தது.
ஏடுகளிலும், இதழ்களிலும் படித்திருந்த தொல்லியல்
கண்டுபிடிப்புகளை மேலும் ஆழமாக, அந்த
ஆய்வுகளைச் செய்த அறிஞர்களாலேயே
விளக்கப்பெறுமாறு அமைந்திருந்தது சிறப்பு.
கி.மு 2000 என்று கருதப்படுகிற, சிந்துவெளி எழுத்துகள்
தாங்கிய செம்பியன் கண்டியன் கல்வெட்டு,
கி.மு 1000 என்றளவில் மட்டும் பேசப்பட்டு,
ஆனால் கி.மு 2000ஐக்கும் முன்னால் செல்லும்
என்று எதிர்பார்க்கப்படுகிற ஆதிச்சநல்லூர்
அகழ்வாய்வுகள், கி.மு 490 காலத்திய
பொருந்தல் கல்வெட்டு, கி.மு 330க்கு சற்றும்
குறையாத ஆனால் வருங்கால ஆய்வுகளால்
இன்னும் முற்காலம் என்று சொல்ல
வாய்ப்பிருக்கிற கொடுமணல் அகழ்வாய்வு,
இரண்டு எழுத்துமுறைகளைக் (தமிழி+சிந்துவெளி)
கொண்ட கி.மு400-300 காலத்திய
திசமகரம (தென்னீழம்) கல்வெட்டு
ஆகியவற்றை உள்ளிட்ட நடனகாசிநாதனின்
பரத்தீடு (presentation) சிந்தைக்கு விருந்தாக இருந்தது.
தொன்மங்களாக அறியப்பட்டவற்றைப் பேணுகின்ற
பணியில் இந்திய அளவிலே உயர்நிலையில், உயர்ந்த
புகழுடன் விளங்கும் திரு.தயாளன், தாசுமகாலை
அரசியலிடம் இருந்தும் துரு, கிருமிகள் போன்றவற்றிடம்
இருந்தும் காப்பாற்றிய செய்திகளை மிக விளக்கமாகப்
பேசியதும், எல்லோரா ஓவியங்கள், சிற்பங்கள்
ஆகியவற்றைப் பேணுகின்ற, சிதைவில் இருந்து
காக்கின்ற முறைகளை படங்கள் வழியே விளக்கியதும்
நல்ல பாடமாக அமைந்தது. அவரிடம், சிதைந்து
கொண்டிருக்கும் சித்தன்னவாசலைக்
காக்க வேண்டும் என்ற வேண்டுகோளை
நிகழ்ச்சியை அமைத்த திரு.இரவிக்குமார் மேடையில்
வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அழகர்குளம், மாங்குடி தொல்லியல் ஆய்வுகளுடன்,
சுமார் 50-60 ஆண்டுகள் தொல்லியற்றுறை வரலாற்றினூடே
இருந்திருக்கின்ற சிக்கல்களைப் பற்றி விளக்கிய
திரு.வேதாச்சலம் நிறையவே சிந்திக்க வைத்தது.
கடிகைக்கோ என்று அறியப்பட்ட சொல்லில் இருந்து
விளைந்தது, இளையான்புத்தூர் பிரமதேயச் செப்பேடு சொல்வது
உள்ளிட்டவற்றை அவர் விளக்கிய போது, அதில் இருந்த
செய்திகள் "எல்லை அரசியல்", "உரிமை அரசியல்/போர்",
"ஆதிக்க அரசியல்" ஆகியவற்றை உணர்த்துவதாய்,
தொல்லியல் ஆய்வுகளின் பிறகோணங்களை விளக்குவதாய்
அமைந்தது.
மதுரையை அதிமுக்கிய தொன்மமாகக் கருதுகிற
தமிழகத்தில், "மதுரையில் தொல்லியல் ஆய்வுகள் செய்ய
இடமே இல்லை, அவ்விடங்கள் எல்லாம் மக்களால்
நிறைந்துவிட்டது" என்ற செய்தி அதிர்வை
ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.
வளர்ச்சி என்பது தொன்மங்களை மூடுகின்ற
சூழல் ஏற்பட்டிருப்பதையும், இது தொடரும்
என்பதால் தொன்மங்களின் முக்கியத்துவம்
காக்கப்படவேண்டிய அவசரத்தை
விளங்கிக் கொள்ள முடிந்தது.
தொல்லியல் ஆய்வுகள் முன்னேற்றங்களைக்
கண்டிருப்பினும், செய்திருப்பவை நூற்றில் ஒருபங்குதான்
என்றும், செய்யவேண்டியவை மலையன குவிந்துகிடக்கும்
காட்சிகளையும் விவரிப்பதாய் ஆய்வரங்கின் பல்வேறு
உரைகளும் உணர்த்தின.
கொடுமணல் அகாழய்வின் தலைவர் க.இராசன் அவர்களின்
ஆய்வுகளை அவர் உரையால் கேட்கும் வாய்ப்பு மகிழ்ச்சி
அளித்தது. கொடுமணல் பற்றி படித்திருந்தவர்களுக்கும்
அவரின் நேரடி உரை, இராசனின் அயராத உழைப்பையும்,
திறத்தையும் உணர்த்தியது. இதற்காக 15 ஆண்டுகள்
உழைத்திருக்கிறார். கொடுமணல் போன்று ஏறத்தாழ
3000 அகழாய்வு செய்ய வேண்டிய இடங்கள்
தமிழகத்தில் இருக்கின்றன என்பதை அவர் சொன்னபோது
தமிழகம் செயல்படவேண்டிய வேகம், திறன் கண்ணில்
ஆடியது.
"இலக்கியங்களுக்கும் தொல்லியற் செய்திகளுக்கும்
இருக்கவேண்டிய ஒருங்கிணைப்பு" பற்றி அவர்
பேசியது "அடிப்படையிலேயே இருக்க வேண்டிய
ஒன்று இன்னும் இல்லாதிருக்கிறதே" என்ற கவலை
ஏற்பட்டது.
கொடுமணல் அகழாய்வு அல்ல - அது தமிழ்நாட்டிற்குக்
கிடைத்த புதையல்.
வீ.செல்வக்குமார் அவர்களின் பழங்கற்கால ஆய்வுகள்
மற்றொரு பரிமாணத்தைக் காட்டின. தமிழகத்தில்
15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நிலை
பெற்று விட்டனர் என்று ஐயம் திரிபற நிறுவிய
அதிராம்பாக்க ஆய்வுகளில் இவரும் பங்கேற்று
ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவையாய் மனதை
ஈர்த்தன.
தொல்லியற் களப்பணிகளில் இன்றைக்கு
ஏற்பட்டிருக்கூடிய தொய்வு,
தொல்லியற்றுறையின் சுருங்கிவிட்ட நிலை,
தொன்மங்களைக் காப்பதில் தமிழ்க் குமுகத்திற்கு
இருக்கக்கூடிய அறிதல், ஆவணப்படுத்தலில்
சுணங்கிய நிலை, இழந்து போன தொல்பொருள்கள்,
களவு போன தொல்பொருள்கள், களவு போய்
கடினமாக உழைத்து மீட்டவைகளை தமிழகம்
பாதுகாக்கும் நிலை போன்றவற்றை
பரந்து பட்ட பார்வைகளில் திரு.விசய வேணுகோபால்
விளக்கிய விதமும் அது ஏற்படுத்திய சிந்தனைத்
தாக்கமும் முக முக்கியமானவை.
தொன்மங்களைப் பண்பாட்டுச் செல்வங்களாக
உலகம் போற்றிக்கொண்டிருப்பதை விளக்குவதாக
வீ.செல்வக்குமார் உரை அமைய, அப்படிக் கருதாமல்
தமிழகம் எவ்வளவு தள்ளியிருக்கிறது என்பதைச்
சொல்வதாய் விசயவேணுகோபாலின் உரை
அமைந்திருந்தது.
இவ்வறிஞர்களின் உரைகள் பல்வேறு செய்திகளைச்
சிந்திக்கக் கொடுக்குமாறு ஆய்வரங்கத்தினை
அமைத்திருந்த மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர்,
பல இலக்கிய நூல்களின் ஆசிரியர் திரு.இரவிக்குமார்,
தொன்மங்களைக் காக்கவேண்டிய அவசியத்தையும்
அதற்காகக் கடந்து செல்லவேண்டிய இடர்களையும்
உருவாக்க வேண்டிய கருத்தியக்கத்தையும்
இவ்வரங்கின் மூலம் மிக அமைதியாக,
தொழிலியத் (Professional) தன்மையுடன்
உணர்த்தியிருக்கிறார். இந்த முன்முயற்சிக்காக
இரவிக்குமார் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்.
இரவிக்குமாருக்கும், மணற்கேணி இதழுக்கும்,
இவ்வரங்கினைப் பயனுள்ளதாக அமைத்த
அறிஞர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்
உரித்தாகுக.
முனைவர் இராம.கி, பேரா.செல்வா,
கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு,
முனைவர் தமிழநம்பி, திரு.இராச சுகுமாரன்,
முனைவர் மு.இளங்கோவன், திரு.இரவிக்குமார்
உள்ளிட்டஇணையவழி நண்பர்கள், அறிஞர்கள்
பலரைச் சந்திக்கும் வாய்ப்பாக ஆய்வரங்கம்
இருந்தது கூடுதல் மகிழ்ச்சியாக எனக்கு
அமைந்தது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
2 comments:
கடிகைக்கோ விளக்கவும்! செம்பியன் கண்டியன் கல்வெட்டு இணையத்தில் எங்கேனும் கிடைக்கிறதா? இவர்களின் பரத்தீடுகளை இணையத்தில் மேலேற்றிட முடியாதா? இவ்வறிஞர்களை எல்லாம் ஒரு தளத்தில் இணைக்க முடியாதா, இவர்கள் ஆய்வுகள் , ஏனைய சொல்லாராய்ச்சியாளர் ஆய்வுக்கட்டுரைகளை எல்லாம் தொகுத்து வாரமொருமுறை மேம்படுத்தப்படும் இணையத் தளம் ஒன்றை நிறுவிட முடியாதா?
இந்தக் கட்டுரை சனவரி-பிப், 2013 மணற்கேணி இதழில் வெளிவந்திருக்கிறது. வெளியிட்ட மணற்கேணி இதழுக்கும் ஆசிரியர் திரு.இரவிக்குமாருக்கும் நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment