Pages

Tuesday, December 30, 2008

புலம்பெயர்வு இலக்கியங்களில் சிங்கையில் தோன்றிய காப்பியம் 'சங்கமம்'.

சொல் நேர்மை, பொருள் நேர்மை,
மொழி நேர்மை, குமுக நேர்மை,
என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
இழிவான படைப்புகளை எழுதித் தள்ளும்
எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்ற
தமிழ்ச் சூழலிலே, பிறமொழி முக்கால்
தமிழ் மொழி கால் என்ற அளவிலே
அருவெறுக்கத்தக்க நடையில் வெளிவரும்
படைப்புகளுக்கு இடையே,
சிறந்த பாக்களால் சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
(pathenralmurugadiyan.blogspot.com)
அவர்களால் யாக்கப்பட்ட
செந்தமிழ்க் காப்பியமான சங்கமத்தைப்
படித்த போது எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தேன்.

புலம்பெயர் தமிழரின் இலக்கியங்களில்
ஒரு சிறந்த காப்பியம் உருவாகியிருப்பது
தமிழ்க் குமுகத்திற்கு
நம்பிக்கையையும் உணர்வையும்
அளிப்பதாக இருக்கிறது.

தமிழ்க்குடியின் புலம்பெயர் வாழ்வு
பல்வகையது; அதிலே சிங்கப்பூருக்குப்
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளின்
அமைவை, ஒரு எளிய தமிழனின்
இன்னல் மிகுந்த
வாழ்வை கருவாகக் கொண்டு
காப்பியமாக யாத்திருக்கிறார் பாத்தென்றல்.

சிங்கப்பூரில் தமிழர் வாழ்வியலை அறிய வேண்டுமா?
"இந்தாப்பிடி சங்கமம் என்ற இந்த நூலை" என்று
தமிழ் படிக்கத் தெரிந்த எந்தத் தமிழரிடமும் எடுத்துக்
கொடுத்து விடலாம். வரலாறு, அரசியல், வாழ்வியல்
என்று கோர்க்கப் பட்ட இந்த நூல் சிங்கைத் தமிழர்
வளர்த்த தமிழுக்கு மணிமகுடம்.

மாபெரும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம்
எங்கு தொடங்கியதோ அங்கேயே சங்கமமும் தொடங்கி,
மதுரைப் பக்கம் போகாமல் மலாயா சிங்கப்பூர் பக்கம்
வந்துவிடுகிறது. ஆம் - புகாரில் தொடங்கி, சிங்கையை
நடுவமாக வைத்து மலாயாவையும் அணைத்து எழுதப்
பட்டிருக்கிறது.

செல்வமும் கல்வியும் சிறிதாகவேக் கொண்டு ஆனால்
உணர்வுகளிலும் பழைமைகளிலும் ஊறிய பெற்றோரையும்
உற்றாரையும் கொண்ட எளியனின் பிழைப்பு தேடிப் புலம்
பெயர்ந்த வாழ்வில் களிப்பும் துயரும் மாறி மாறி வந்து
இறுதியில் படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கும் புரிதலுக்கும்
தள்ளிவிடுவது இக்காப்பியத்தின் வெற்றி!

எளிய மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய காப்பியம்
என்பதால் பல முறை காப்பிய ஆசிரியரைப்
பாராட்டத் தோன்றுகிறது. எளியரைப் பாடும்
இந்நூலால் பெருவாரியான
மக்களின் வாழ்வியலை எளிதாகப் புரிய வைக்க முடிகிறது.
புலம் பெயர்ந்த குமுகத்தின் போக்கைப் பெரிதும்
புரிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தமிழ் தேனருவியாக காப்பியம் முழுமையும்
பல்வேறு பாக்களாக பல்வேறு பாவகைகளாக சீராக
ஓடி இன்பம் சேர்க்கிறது. கவிஞரின் ஆழ்ந்த நெடுங்கால
பாப்புலமையை எண்ணி வியக்க வைக்கிறது ஒவ்வொரு
பாட்டும்.

சிங்கை வரலாறு, புகார் சிறப்பு, மலாயாக் குறிப்புகள்,
சிங்கை அரசியல், தமிழ் நாட்டின் குமுக மாற்றங்கள்,
சிங்கையில் தமிழர்கள் குமுகமாக ஆகித் தமிழ்
வளர்த்தது, தமிழ் விழாக்கள் செய்தது,
சிங்கைத் தமிழரின் ஒற்றுமை வேற்றுமைகள்,
பிற இன மக்களோடு ஒப்புவித்து
தம் மக்கள் பெற வேண்டிய திறன்கள்,
சீன மலாய் மக்களின்
பழக்க வழக்கங்கள், சிங்கை வளர்ச்சியில்
தமிழர்களின் பங்களிப்பு, அளித்த பங்கிற்கேற்ப அளித்த
தமிழர்கள் பெற்றதன் அளவீடு, சிங்கையில்
தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள்,
சிங்கையைக் கட்டி வளர்த்த பெரியார்கள்,
அவர்தம் சீரிய தொண்டு,
சிங்கையின் சமய நல்லிணக்கமும்,
சட்ட/காவற் சிறப்பு, தமிழ் மொழியின்
ஏற்றமும் தாழ்வும், தத்துவம், ஆன்மீகம்,
தமிழ்ச் சமய நெறிகள், என்ற இவற்றோடு
தமிழனாய்ப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்த
ஒரு தமிழனின் தனிமனித வாழ்க்கையையும் அவன்
தமிழ்க் குமுகத்தோடு ஆற்றிய பணிகளையும், அடைந்த
சரவல்களையும் வாழ்க்கையாக கதையாகக் குழைத்துக்
கொடுத்துள்ள பாங்கு மிகப் பாராட்டத் தக்கது.

தமிழவேள் கோ.சாரங்கபாணியார் தமிழ் மக்களை
அரவணைத்து ஆற்றிய தமிழ்த் தொண்டோடு
அவர் ஆற்றிய பாங்கு, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
ஊன்றிக் கற்க வேண்டிய ஒன்று.
அதற்கு இந்நூல் பெரும்
உதவியாக இருக்கும். அது தமிழ்ச் சங்கங்கள்
என்ற பெயரில் தமிழ்ப்பணிகள் செய்ய முனையும்
புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு கூடுதல்
கல்வியாக இருக்கும்.

காப்பியத்தின் பகுதி-4 பகுதி-5 (இயற்கும்மி, ஒயிற்கும்மி)
சிங்கையில் தமிழையும் குமுகத்தையும்
வளர்த்த பாங்கினை அழகுறச் சொல்கிறது.
பிற பகுதிகளும் இயம்புகின்றன.
பாக்களின் சந்தங்கள் மதி மயக்க வைக்கின்றன.

"அள்ளிக் கொடுத்தனர் பள்ளிக்கென மக்கள்,
ஆர்வம் மிகுந்தது கல்விக்கென
அமுதத் தமிழ் அறிவைப் பெற
குமுகக் குரல் குரவையிடத்
துள்ளிக் குதித்தனர் தொல்தமிழால்"

தமிழரைப் பிடித்த பெருஞ்சழக்கான
சாதீயமும் புலம் பெயர்ந்த சான்றுகளும் நூலில்
மிகச்சரியாகப் பதிந்திருக்கிறது. கீழே ஒரு சான்று:

"பாழை விளைத்திட்ட சாதியைப் பாய்மரக் கப்பலேற்றிக்
கீழை திசைக்கெலாம் கொண்டுவந்தாரந்தக் கீழ்மையாலே
வாழை மரத்துக்குத் தாரீன்ற காய்களே கூற்றமாப் போல்
மோழை மனங்களும் ஏழை நிறங்களும் மூண்டதிங்கே!
"
(பகுதி-9)

சுவையான காதல் பாட்டுகள், வாழ்க்கை பாட்டுகளுக்கிடையே
தமிழுக்கு ஏற்பட்ட சோதனைகளை அடுக்கடுக்காய்
செருகிய பாங்கு கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கு
எடுத்துக் காட்டு மட்டுமல்ல, கல்வி கற்ற நேர்மையான
தமிழருக்கு இருக்கும் நேர்மையான எதிர்காலக் கவலையும்
அக்கறையும் ஆம்.

"தென் புலத்தாரைப் பெண்கள்
திருடராய்க் குரங்காய்த் தீய
வன்புலனரக்கர் போன்ற..."

"மறைகளை ஆற்றில் போட்டோம்
மண்டிய சாதித் தீயின்
குறைகளைக் களைய மாட்டோம்
*குலத்தையே குலத்தார் வெட்டும்*
பறைகளைத் தட்டிக் கொட்டிப்
பார்ப்பனர் வேதங் கேட்டோம்
உறைகளில் வைத்த வாள் போல்
உறங்கினோம் தமிழா மீட்டோம்?"

ஆழ்ந்த குமுக அக்கறையில் காப்பியத்தின்
வரிகளில் பாத்தென்றல் புயலை எழுப்புகிறார்.

"சீனரின் கோவில் சென்றால்
சீனமே வழிபாட்டோசை
ஆனதோ அரபி மண்ணில்
அதுகேட்கும் பள்ளிவாசல்
ஊனமுற்றழிந்த பாடைக்கு
உயிர்தர உழைக்குஞ் சூதர்
ஆணையில் அடங்கும் நம்மை
அடிமையாய் நினைக்கின்றாரே!.."

பகுதி-17ல் கவிஞர் புயலாகச் சுழல்கிறார். தெறிக்கிறது
அவரின் வேதனைகள்.

தமிழ்நாட்டிலே கோயில்களில் தமிழ் இல்லை;
அதற்குக் காரணமாக திராவிட தமிழ் இயக்கங்கள்
எத்தனைக் காரணங்கள் சொன்னாலும், அத்தனைக்
காரணங்களையும் தமிழ் மக்கள்
புலம் பெயர்ந்து போகையிலும் கட்டித் தூக்கிப்
போகவேண்டியதில்லையே? என்ற வினாவை இவர்தம்
கவிதை எழுப்புகிறது.

ஆம் - சிங்கையிலே 1824ல் சுமார் 500, 600 தமிழர்களே
இருந்துள்ளனர் நூலின் படி. 1860ல் சுமார் 10000 தமிழர்களே
இருந்துள்ளனர்.

இவர்கள்தான் பெருகி இன்றைக்கு
சில இலக்கங்கள் அளவில் இருக்கிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் சமைத்த
இவர்கள் ஏன் சாதிக்குள் அமிழ வேண்டும்?

இவர்கள் வேர்வை சிந்தி உழைத்து ஏன்
நஞ்சான சமற்கிருதத்தைக் கோயிலுக்குள்
கூட்டிப் போக வேண்டும்?

ஒரு புதுக் குமுகத்தைக் கட்டி எழுப்பிய தமிழர்களின்
உழைப்போடும் வேர்வையோடும் முக்கியமான மடமையும்
சேர்ந்து கொண்டதைக் காப்பியம் பண்புடன் விளக்குகிறது.
இதற்கு முற்றும் தமிழ் மக்களே காரணம் என்று தெள்ளென
விளங்க வைக்கிறது.

இப்படிக் கட்டப்படும் புதுத் தமிழ்க் குமுகங்கள் எப்படி
எதிர்காலத்தில் சரவல் படும் என்பதனையும் சிங்கையில்
தமிழர் வரலாறு கூறுகிறது.

தமிழர் விழாக்களுக்கான விடுமுறைகள் என்றால்
அது தீபாவளிக்கு ஒருநாளும் விசாக நாள் என்ற நாளுக்கும்
ஆகிப் போனதை காப்பியம் காட்டுகிறது. விசாக நாள்
என்றால் தமிழர் விழாவா என்பதனை தமிழர்கள்தான்
சிந்தித்து விடை காண வேண்டும்!

"பாதகந் தமிழுக்கென்றால் பல்லிளித்து இருந்திடாதே!
நீ தவம் செய்க நாளை நிமிர்ந்தெழும் தமிழர் வாழ்வே!"

என்ற இவ்வரிகளும் இன்ன பிற வரிகளிலும் பாவேந்தரே
நிமிர்ந்து நிற்கிறார்!

"உலவுந்தன் மதத்தை மட்டும் உயிராக நினைப்பாருண்டு
கலகத்தார் இவரே தங்கள் கட்சிக்கே மேன்மை செய்வார்"
என்ற இவ்வடிகள்,

"அவரவர் தத்தம் மதங்களே அமைவதாக
அரற்றி மலைந்தனர்..." என்று
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
அடிகளை ஒட்டி வருகின்றன.

காப்பியத்தில் காதலைப் பாடும்போதும்,
கவலையைப் பாடும் போதும், துயரைப் பாடும் போதும்,
ஏற்றத்தைப் பாடும் போதும்,
தெருவீதியைப் பாடும் போதும் எங்கும் பாத்தென்றலொடு
தமிழர் கவலையும் அவர்தம் மொழிக் கவலையும்
சூறாவளியாய் சுழன்று கொண்டே இருக்கின்றன.

தமிழ் மொழிபால் தூய அக்கறை கொண்ட
தூய தமிழ்ச் சிந்தை பாத்தென்றலுடையது.

"தெருப்பக்கம் குரைக்கின்ற நாயாகப் பேயாக
திரிகிறோம் எச்சில் உண்டு!
தென்னாட்டுச் சிவன் தந்த தென்மொழி வழிபாடு
திருக்கோவில் வாழவிலையே!"

"தேய்பிறையாக்குவார் தேன்மொழியை - மொழித்
திருடர்கள் மாற்றிடார் தம் வழியை"

"சாதிக் கலப்பை வெறுப்பவர்கள் - மொழி
பாதிக்குப் பாதிக் கலப்பவர்கள்..."

தென்றலா கவிஞர்? என என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

மறைமலையாரும் நீலாம்பிகை அம்மையாரும்
தேவநேயரும் சித்திரனாரும் பாவேந்தரும் பாரதியாரும்
அண்ணாவும் திரு.வி.கவும், பிற பெரியார்களும்
நீங்காமல் நிறைந்திருக்கிறார்கள் இந்நூலில்.
நாயன்மார்களும் அறவோர்களும் தமிழ்நெறியும்
சிறப்பிடம் பெருகிறது நூலில்.

"அருட்கவி அருணகிரியார்
அருந்தமிழ்க் குமர குருபரர்
மருட்புவி மயக்கந் தீர்த்த
மாமுனி தாயுமானார்...."

பகுதி-40ல் கற்றுணை பூட்டிய பெருமான்
கடலில் மிதந்ததை ஏத்தி செய்திருக்கும் வாதம் அருமை.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார்
ஒரு சமணர் என்று விளம்பரம் செய்வோரை
கண்டிக்கிறார் சங்கமக் காப்பிய
ஆசிரியர். இதற்காகவே அவரைப் பல முறை
பாராட்ட வேண்டும்.

"சிலப்பதி காரத் துக்குள்
சென்றவர் பலபேர்! அந்த
அளப்பரும் அமுதம் உண்ட
அறிஞரோ சில பேர்! இன்னும்
களப்பிரர் பின்னே செல்லும்
கயமைகள் கண்கள் மூடிக்
குழப்புவார் அதையே நம்பிக்
குலக்குணம் விட்டார் கோடி!"

காப்பியமெங்கும் தமிழர்களிலே இருக்கும்
சிறுமதியாளர் வளைந்து நெளிந்து நத்திப் பிழைத்து,
எப்படித் தமிழுக்கும் இனத்திற்கும்
தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதனை ஆங்காங்கு
பல காட்டுகளோடு விவரிக்கிறார்.
எல்லா தமிழ் நிலங்களுக்கும் இது மிகப் பொருந்தும்.

"நல்ல தமிழில் பெயரிருந்தாலும்
கொல்ல நினைப்பது உன் குலத்தானே"

"அன்று வந்தவர் அருந்தமிழ் காத்தனர்
இன்று வந்து அவர் இனம் மொழி கொல்கின்றனர்"

"சீனர்களின் கடை முகப்பில் செழுந்தமிழும் எழுதுகிறார்
மானமில்லாத் தமிழர் பலர் மருந்தளவும் தமிழ் எழுதார்"

காப்பிய நாயகனான செந்தில் என்ற தமிழுணர்வு குன்றாத
ஒரு எளிய தமிழனின் வாழ்வு இன்னல் மேல் இன்னலுறும்;
வளர்ச்சியும் தளர்ச்சியும் காணும்; அவன் சிங்கை வருவது
முதல் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் காட்டிக் காட்டிக்
கடைசியில் கண்ணையும் மூடிவைக்கும் காப்பியத்தில் தொட்ட
இடமெல்லாம் தென்றலும் புயலுமாய் தமிழ் நடம் புரிகிறது.

மொழிப்பற்று உடையவருக்குத்தான் சிறந்த நாட்டுப்பற்று
இருக்கும். தமிழ் மொழிப் பற்றோடு சிங்கப்பூர் என்ற தனது
தாய்நாட்டின் மீதும், தாய்த்தமிழ் நாட்டின் மீதும் கவிஞர்
பேரன்பு பொழிந்து உறவுகள், காதல், மணம், படிப்பு,
வேலை, மகிழ்ச்சி, துயர், தொண்டு, அறம்,
தத்துவம், இறை, தமிழ், அரசு, நாடு, இனம்,
சட்டம் என்ற பலவற்றையும் பாடி, கீழ்பட்டிருக்கும்
உலக வாழ் தமிழ்க் குமுகத்தை நோக்கி அடிப்படை
வினாக்களை வைத்துக் குமுறுகிறார் இறுதியில்.

"சீரிலங்கை நாட்டில் எங்கள்
செந்தமிழர் கொல்லப் பட்டால்
ஓரிரங்கல் உரை ஏன் இல்லை?...."

"ஒரு பத்துக் கோடி மக்கள்
உலகத்தில் இருந்தும் கூட
ஒரு பற்றும் இல்லார் போன்றும்
உணர்வற்றும் எழுச்சியற்றும்
மறுவுற்ற மந்தையாக மாய்வதுமேன்...?"

தமிழறியாரும், தரங்கெட்ட தமிழரும் குமுகத்தின்
முன்னணியில் இருந்தால் அந்தக் குமுகத்தின்
மொழியுணர்வும், இனவுணர்வும் நீர்த்துப் போகும்;
அதுவே தமிழ்க்குடிகளுக்கு உலகெங்கும் நடந்து
வருகிறது. காப்பிய நாயகனோடு கவலையோடும்
இந்தக் கவலையோடும் காப்பியம் நிறைவுறுகிறது.

ஒவ்வொரு தமிழரும் இந்த உயர்ந்த படைப்பினைப்
படிக்க வேண்டும்; தமிழ் உணர்வூட்டும் இந்நூலை
பலருக்கும் அளிக்கவும் வேண்டும். புலம் பெயர்ந்த
மக்களின் நூலகங்கள் இதனை ஏற்றி வைக்க வேண்டும்.

பொத்தகத்தில் காணும் நூல் கிடைக்குமிடங்கள்:
தென்றல் பதிப்பகம், சிங்கப்பூர். தொ.பேசி 68996319
தமிழ்நிலம், சென்னை. தொ.பேசி 94444 40449
திரு.அருகோ, சென்னை. தொ.பேசி 2472 1009

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

செல்வா said...

அன்புள்ள இளங்கோவன்,

உங்கள் அருமையான தேர்வுரையைப் படித்து, நூலைப்படித்து மகிழ்ந்தது போல உணர்வு பெற்றேன். கண்டு, தேர்ந்து மதிப்புரை தந்தமைக்கு நன்றி. படிக்கத் தூண்டியமைக்கு நன்றி. சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
அவர்களுக்கு படிக்கும் முன்னே என் பாராட்டுகள், உங்களைப்போல ஒருவரின் உள்ளத்தைக் கவர்ந்ததாலேயே.

செல்வா

nayanan said...

அன்பின் செல்வா அவர்களுக்கு,
வணக்கம்.

தங்களின் மேலான பாராட்டிற்கும்
கனிவிற்கும் நன்றி.

சிங்கையின் ஒரு எழுத்தாளப் பெருந்தகை தாம் படித்து இன்புற்று
எனக்கும் அதனைக் கிடைக்கச் செய்தார்.

நானும் அதனை சுவைத்து இன்புற்றேன். அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில்
இதனை எழுதினேன்.

பாத்தென்றல் முருகடியான் அவர்களின்
படைப்பு போன்று தமிழுலகில் படைப்புகள் பெருக வேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்