Pages

Tuesday, April 22, 2008

கிச்சுக் கிச்சுத் தாம்பாலம்!

இருபதாம் நூற்றாண்டு பெற்றெடுத்த மாபெரும்
மாணிக்கங்களில் ஒரு மாணிக்கமான பாவாணர்,
தமிழரின் துறைகளில் ஆய்வு செய்து அடுக்கி வைக்காதத்
துறை எது என்று தேடத்தான் வேண்டும்.

நாம் குழந்தைப் பருவத்தில் ஆடிக்களித்த நாட்கள்
எத்தனையோ உண்டு! ஆடிய ஆட்டங்கள் எத்தனை,
எத்தனை? குழந்தைகள் மட்டுமா?
அரும்பு மீசைகள், மடந்தையர் மங்கையர்,
பெரியோர், முதியோர் ஆடிய விளையாட்டுகள்
எத்தனை எத்தனை?

"குலை குலையாய் முந்திரிக்காய்" என்று பாடாத பிஞ்சு
வாய்கள் இருந்திருக்குமா?

"கல்லா மண்ணா?", சில்லாக்கு, பல்லாங்குழி,
பச்சைக் குதிரை, பம்பரக்குத்து, கிட்டிப்புள், கோலி
என்று எவ்வளவோ ஆட்டத்தை நாம்
ஆடியிருக்கிறோமல்லவா?.

"தமிழ்நாட்டு விளையாட்டுகள்" என்ற, பாவாணரின்
நூல் அத்தனை விளையாட்டுகளையும், பதித்து
வைத்திருக்கிறது. அதைப் படிக்கும்போது என் உள்ளம்
மீண்டும் ஆடத் துடிக்கிறது
(நாம் எவ்வளவோ "டமில்ப் பனி" செய்து
கொண்டிருக்கிறோம். அதனாலேயே
பாவாணரின் பணி வியக்க வைப்பதாக இருக்கிறது.
ஊர் ஊராய் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்
என்று தேடித் தேடி அவர் எழுதியிருப்பது சிந்தனையை
வளர்ப்பதாக இருக்கிறது. )

அந்த ஆட்டங்களில் எவ்வளவோ ஆட்டங்களை நாம்
ஆடியிருக்கிறோமே என்று எண்ணும்போது மலரும்
நினைவுகளால் இறையம்(இதயம்) நிறைகிறது.

நகர்ப்புறங்களிலும் வெளிநாடுகளிலும்(!) காணமுடியாத/ஆடமுடியாத
இந்த விளையாட்டை எண்ணும்போது என் கண்கள் செருகுகின்றன.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்":

ஓடி ஓடிக் களைத்த காவிரி சற்று ஓய்வு கொண்ட
வேனில் காலம்!

இரு கரைகளையும் அச்சுறுத்திய காவிரி சற்று அயர்ந்து
போய் ஆற்று மணலை எமக்கு ஆடுதற்குத் தந்த காலம்!

ஆடைகளில் கறையேறாதிருக்க, காவிரித்தாய்
தோய்த்துத் தோய்த்து தூய்மையாய்த் தந்த
ஆற்றுமணல் கருப்பஞ் சக்கரையாய் எம் கண்களுக்கு!

உள்ளங்கைகளில் அள்ளி உற்று நோக்கி மெல்ல
வியந்திருந்தோம்!

அப்படியே அமர்ந்து, அருமை மணலில்
கிச்சுக் கிச்சு தாம்பாலம் ஆடிய நாட்களை இன்றைக்குப்
பிள்ளைகளோடும் ஆர்வமுள்ளோரும் பகிர்ந்து
கொள்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி!
அதுவும் பாவாணரின் எழுத்துக்களை அடிப்படையாகச்
கொள்ளும்போது மகிழ்ச்சிப் பொங்கத்தான் செய்கிறது.

கிச்சுக் கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே
ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்
ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர்.
ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.

திறந்த வெளிகளில் ஆடப்படும் ஆட்டம்.
இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள
மணற்கரை அமைப்பர்; அது ஒரு 4 அல்லது 5 அங்குல
உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு
அங்குல நீளம் உடைய மெல்லிய குச்சியை (சிறு
கிளிஞ்சல்/சங்கு/புளியங்கொட்டை/சிறு ஓடு/விலக்குமார்
குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துவர்)
போன்றவற்றை ஒருவர் மறைத்து வைக்க, மற்றவர் அதைக் கண்டு
பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.

மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது
என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில்
மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில்,
காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல,
ஓட்டாஞ்சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி
(நக்கி :) ) , "எச்சா மானமா" என்று கேட்டு,
வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.

ஆடு கருவியான குச்சியை, எதாவது ஒரு கையின்
இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),
மணற்கரையின் ஒரு முனையில் அவ்விரல்களை நுழைத்து
வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்த இரு
விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.

குறிப்பு: "தம்பலம்" என்று ஒலிக்காமல் "தாம்பாலம்"
என்று நீட்டி ஒலிப்பது வழக்கம். பாவாணர் தம்பலம்
என்று சொல்கிறார்.

"கிச்சுக் கிச்சுத் தம்பலம்
கீயாக் கீயாத் தம்பலம்
மச்சு மச்சுத் தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்"

என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப்
பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே
மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின்
முழுநீளத்திற்கும்,முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,
எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக்
கொண்டேயிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,
ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.
மறைத்து வைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து
போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்த இடத்தில்
இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.

இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின், அடுத்தவர்
எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்த
இடத்தில், தன் இரண்டு கரங்களையும் பிணைத்து,
குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த
வேண்டும்.

மறைத்து வைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும்
போய் வந்து கொண்டிருந்தபோது,
அவரின் கர அசைவுகள், உடல் அசைவுகள்,
முக அசைவுகள் இவற்றைக் கூர்மையாகக்
கவனித்தால்தான், மற்றவர் அதை எளிதில்
கண்டுபிடிக்க ஏதுவாகும்.

கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால்,
எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர் வென்றார்.

வென்றவர் மீண்டும் மறைத்து வைப்பார்.
இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர்,
ஆட்டத்தை வென்றவர் ஆகிறார்.

தற்போது, தோற்றவரின் கையைக் கூட்டி,
(ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து,
நடுவிலே அந்த சிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர்,
அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,

நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?"
என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று
சொல்வார்;

இப்படியே, இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,
திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்த ஏந்து
கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச்
சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப் பட்டிருக்கும்.

மேலும் சிறிது தூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே,
இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்
இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர்.

பின்னர் கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பி
டிக்க வேண்டும். அப்போது, தோழர் தோழியரின்
மகிழ்ச்சி பொங்கிப் பாயும்.

இப்படி ஆடுவதுதான் கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாட்டு.

யாருக்கும் இன்னல் இன்றி, குழுவினரோடு ஆடும் இந்த
விளையாட்டு, நகரத்தில் மற்றும் நாடுகள் தாண்டி
வாழ்பவர்க்கு ஏலவில்லை. அப்படியே இயன்றாலும்
அவ்விளையாட்டை நாம்/நம் பிள்ளைகள் ஆடுவதில்லை.

இது ஒரு சில்லறை விளையாட்டு - ஏழைகளின்
விளையாட்டு, என்ற கருத்தே நமக்குப் பெரும்பாலும்
தோன்றும். ஆனால் மிகவும் பொருள் பொதிந்த
விளையாட்டு.

1) மணற்கரையில் மறைத்த குச்சியை கண்டு பிடிக்கும்போது,
மறைத்து வைக்கும் சூக்குமத்தை மறைப்பவருக்கு
வளர்க்கிறது!

2) எடுக்க வேண்டியவருக்கோ, மறைத்து வைப்பவரின்
உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றை வைத்தே,
மறைத்து வைக்கும் இடத்தை உணரும் திறன் வளர்கிறது.

3)அதன் பின், விளையாட்டின் இறுதியில், கண் பொத்தி
சுற்றி விடப்பட்ட பின்,அம்மணலைத் தேடும்போது,
"திசையறியும்" திறன் வளர்கிறது.

இருவர் ஆடினும், மகிழ்ச்சி, கூடியுள்ளோர்
அனைவருக்கும்தான்.

திருச்சி பகுதியில் இப்படித்தான் விளையாடுவோம்;
விளையாடினோம். பாவாணர் அவர்களும்,
சோழ கொங்கு நாடுகளில் இப்படி பழக்கம்
என்கிறார்.

அதோடு பாண்டி நாட்டில், ஆடப்படும் விதம் நோக்கம்
எல்லாம் ஒன்றாகினும், பாடும் பாடலும், மறைக்கும்
கருவியும் வேறுபடுகிறதைச் சுட்டுகிறார்.
பாண்டி நாட்டில் சிறு குச்சிக்கு பதில் சிறு
துணித் திரியை பயன்படுத்துகிறார்களாம்.

பாண்டி நாட்டில் பாடப் படும் பாடல்:

"திரித் திரி பொம்முதிரி
திரிகாலடி பொம்முதிரி
காசுகொண்டு பொம்முதிரி
கடையிலே கொண்டும் பொம்முதிரி
நாலுகரண்டி நல்லெண்ணெய்
நாற்பத்தோரு தீவட்டி
கள்ளன் வாறான் கதவடை
வெள்ளச்சி வாறாள் விளக்கேற்று
வாறார் அய்யா சுப்பையா
வழிவிடம்மா மீனாட்சி."

(பாண்டி நாட்டுக் காரங்கதான் இதுபற்றிச் சொல்ல
வேண்டும்)

சோழ, கொங்கு, பாண்டி நாடுகளில் கண்ட
இந்த ஆட்டம் இன்றும் கிராமங்களில் சிறாரால்
விளையாடப்படுகிறது. கிராமம் விட்டு நகரம் வந்தோரும்,
நாடை விட்டு நாடு போனோர்களும்
இதனை மறந்து விட்டனர். மேலும் நகரங்களிலும் வெளிநாடுகளிலும் இம்மாதிரி விளையாடவியலாது.
தூய்மைக் காரணங்கள், திறந்த வெளிகளில் மணல்
கிடைக்காமை, அடுக்கு மாடி வீடுகளில் வாழ்க்கை
என்று பலகாரணங்கள் உள்ளன. தமிழர் தமிழரின்

பலவற்றை மறந்து வருகையில் இதையும்
மறக்க மாட்டார்களா என்ன? என்று இப்படியாக
சிந்தனைகள் போனபோது ஏன் இதனை விளையாட
முடியாது நகர்களில் என்றும் தோன்றியது.

தூய்மைக் குறைவான மணலை வைத்து விளையாடுவது
சரியல்ல! ஆனால் தூய்மையான மணலை வைத்து,
பிறருக்கு இன்னல் வராமல் இந்த விளையாட்டை
விளையாட ஏலும்.

ஒரு ஒன்னறை அடி/இரண்டடி நீளப் பெட்டியில் மணல்
பை வைத் திருக்க வேண்டும். அதில் சிறு குச்சி அல்லது
கிளிஞ்சல்,சோழி போன்றவற்றில் ஒன்றை வைத்திருக்கலாம்.
விளையாடும்போது, தரையில் கொட்டாமல் அந்தக்
கச்சிதமான சிறு மடிப்புப் பெட்டிக்குள்ளே கொட்டிக்
கொண்டு ஆசை தீர கிச்சுக் கிச்சுத் தம்பலம்
விளையாடலாம் :-))))))

வீட்டில் மட்டுமல்ல, வெளியே பூங்காக்களில்
விளையாடலாம். கடற்கரைகளிலும் தூய்மை குன்றி
வருவதால் அங்கு கூட எடுத்துச் சென்று
இதை விளையாடலாம்.

பிள்ளைகளுக்கு, அறிவுத்திறனை வளர்க்கும் ஆட்டம்
இது; நினைவாற்றல் மற்றும் திசையறியும் ஆட்டம் இது;
முக்கியமாக ஓசையுடன் கூடிய பாடலோடு கூடிய
ஆட்டம் இது;

சொல்லையும் மொழியையும் நாவில் வளர்க்கும் ஆட்டம்
என்பதோடு மீட்டெடுக்கப் படக்கூடிய,
தக்க வைக்கக் கூடிய ஆட்டமாகத்தான் தோன்றுகிறது.

என்ன எப்படி இது.... என்று சிரிப்பு
வருகிறதா? :-)) இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படி
ஒரு பேத்தலா? அதுவும் கணியுகத்தில் இப்படி ஒரு
கிறுக்கலா....! என்று நக்கலடிக்கத் தோன்றுகிறதா? :-))

ஏங்க, கடைகளிலே, "சைனாக்களிமண்" கிடைக்கிறதே
அதைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து
பொம்மைகள் செய்து விளையாடக் கொடுக்கிறோமே!?
அது மண்தானே!

நாம், களிமண்ணில் செய்து விளையாடியதைத்தானே
கடையில் தூய்மையான களியாய் வைத்திருக்கிறார்கள்!

அந்த மண்ணை நாம் தொட்டு விளையாடும்போது,
வேதிப் பொருள்கள் கலந்து ஒருவித முடையடிக்கும்.
அந்த மண்ணைத் தொட்டு விளையாடும்போது, ஒட்டிக்

கொள்ளாத தூய்மையான ஆற்று மணலில் சிறு மடிப்புப்
பெட்டிக்குள் வைத்து விளையாடலாம்தானே!

கடைகளிலும் கிச்சுக் கிச்சுத் தம்பல விளையாட்டுப்
பொருள்கள், சிறு பெட்டிக்குள் போட்டு விற்கப்
படலாம்தானே!

நமது விளையாட்டுகள் அத்தனையையும் நகர,
வெளிநாடுகளுக்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைத்து
நாம் அதை விளையாடலாம்தானே!

மெய்யாலுஞ் சொல்கிறேன் - சீனாக்காரன் நம்ம
கிராமத்துப் பக்கம் போய்ப் பார்த்தான்னா
அழகான பெட்டி செய்து, அதுக்குள்ள மூனு படி ஆற்று
மண்ணைப் போட்டு, இரண்டு மின்கலன்கள் போட்டு,
வண்ண வண்ண விளக்குகள் போட்டு, கூடவே 'கிச்சுக்
கிச்சுத் தாம்பாலம்..." என்ற பாட்டையும் ஓடவிட்டு
49.95$ க்கு விற்று விடுவான் :-)) நம்ம ஊர்க்காரன்
அதுக்கு முகவர் ஆக அலைவான் ;-))))

அன்புடன்
நாக.இளங்கோவன்

9 comments:

கோவி.கண்ணன் said...

பாவாணர் ஒரு தமிழ் களஞ்சியம் !

கிச்சு கிச்சு தாம்பாலம் விளையாட்டில் இவ்வளவு செய்தி இருக்கா ?

இப்போதெல்லாம் குழந்தைகளை யாரும் மண்ணில் விளையாட விடுவதில்லை. :)
:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் இளமையில் இந்த விளையாட்டு விளையாடியுள்ளேன்.இப்போதைய சிறுவர்களுக்கு மண்ணில் இறங்க
எத்தனை வீட்டில் அனுமதிக்கிறார்கள்.
இப்படி எழுதிப் படிக்க வேண்டியதே இவ்விளையாட்டுக்களை...

nayanan said...

அன்பின் கோவி,

ஆமாம் - அதனால்தான் நல்ல மண்ணா வாங்கித் தரணும்னு சொல்றேன்; நடக்கிற கதையா
இது :-))

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

//இப்படி எழுதிப் படிக்க வேண்டியதே இவ்விளையாட்டுக்களை...
//

ம்ம்...இதுதான் கவலையே.
நன்றி யோகன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பாச மலர் / Paasa Malar said...

விளையாடிய தருணங்களை மீண்டும் அசை போட்டு மகிழ உதவியது உங்கள் பதிவு.

கானா பிரபா said...

அருமையான பதிவு, நிறைவான விளக்கங்கள்.
கீச்சு மாச்சு தம்பளம் என்று எங்களூர்ப் பேச்சு வழக்கில் சொல்லி விளையாடுவோம்.

nayanan said...

அன்பின் பாசமலர்,
தங்களுக்கு என் நன்றி.

அன்பின் கானாபிரபா,

தங்கள் பகுதி வழக்கத்தை இங்கிட்டமைக்கு மிக்க நன்றி.
அறிந்து மகிழ்ந்தேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

குமரன் (Kumaran) said...

இளங்கோவன் ஐயா. இங்கே அமெரிக்காவில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு ஆறடிக்கு நாலடி நீள்சதுர இடத்தில் இப்படி மணல் கொட்டிக் கிடக்கிறது. அதில் என் ஐந்து வயது மகளும் அவள் தோழியர்களும் இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டிற்குப் பெயர் 'கிச்சு கிச்சு தம்பலம்' என்பது இன்று தான் தெரியும்.

மதுரையில் சிறு வயதில் வீடுகள் கட்டுவதற்காக சாலையோரம் கொட்டிக் கிடக்கும் மணலில் நான் விளையாடியிருக்கிறேன். சில நேரம் நண்பர்களுடனும். மணல்வீடுகள் கட்டி. ஆனால் இந்த விளையாட்டை விளையாடியதில்லை.

nayanan said...

//
குமரன் (Kumaran) said...

இங்கே அமெரிக்காவில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு ஆறடிக்கு நாலடி நீள்சதுர இடத்தில் இப்படி மணல் கொட்டிக் கிடக்கிறது. அதில் என் ஐந்து வயது மகளும் அவள் தோழியர்களும் இதே விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
//

அன்பின் நண்பர் குமரன்,
இதைக் கேட்பதற்கே மிக இனிமையாக
இருக்கிறது.

மகிழ்ச்சி.

மணலில் விளையாடுவதென்றால் அது தனி இன்பம்தான் இன்றைக்கும் :-))

அன்புடன்
நாக.இளங்கோவன்