மனிதர்களை மரணம் தழுவிய தருணங்கள் அதிர்வைத் தருவனவாக பல நேரங்களில் அமைந்துவிடுகின்றன.
என் நெஞ்சில் என்றும் இனிக்கும் அருமை நண்பர் கல்யாண்மறைவும் பேரதிர்வைத் தந்துவிட்டது.
2005 ஆம் ஆண்டின் இறுதியில் அர்ரியாத் மாநகரில்அவருடன் ஏற்பட்ட நட்பு மிக இனிமையானது.
நட்பிற்கும் பண்பிற்கும் காட்டாக அர்ரியாத் மாநகரில்தமிழர் மத்தியில் மிகவும் அறியப்பட்ட கல்யாணின் மறைவை இன்னும் கூட என்னால் நம்பமுடியவில்லை.
அவரிடம் நான் கண்டவைகளில் முக்கியமானவை பண்பும், மனிதமும்.
கடந்த ஆண்டு திசம்பரில் சென்னையிலும்,தற்போது கடந்த
சில வாரங்களாக அர்ரியாத்திலும் அவரை மீண்டும் சந்தித்து உரையாடியது என் சிந்தையை விட்டுஅகலாது.
எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவையும், அதன் சார்பாகமாதம் இருமுறை இலக்கியக் கூட்டத்தையும் சிறப்புடன்நடத்தி இந்த மாநகரில் அருமையான தமிழ்ப் பணி ஆற்றிவந்தவர் கல்யாண். இக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு சிலதடவைகள் அமைந்தது.
இவரின் செயல்பாடுகளும் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
வெளிப்படையான பேச்சு, எதார்த்தமான சிந்தனை,தனிப்பட்ட மற்றும் பொது உரையாடல்களில் மாற்றுப் பேச்சுக்களை கூர்ந்து கவனித்து சரியெனப் படுவதைத்தயங்காது ஏற்றுக் கொள்வதிலும் மறுப்பதிலும் உறுதி,தேனீ போன்ற சுறுசுறுப்பு என்ற பல நற்குணங்களைக்கொண்டிருந்தவர் கல்யாண்.
கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தின் போக்கு,தமிழர்கள் செய்யவேண்டியவை, தற்போதைய இணையப்போக்கு போன்றவற்றை ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும்,கவலையோடும் பல நேரங்களில் என்னோடும் நண்பர்களோடும்பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இணையத்தில் தமிழ்க் கலைச்சொற்கள், அவற்றின் முறை,தேவை, செயல்படுத்தல் குறித்த நீண்ட உரையாடல்களை பல தடவை நாங்கள் செய்திருக்கிறோம்.
கடந்த 6/7 ஆண்டுகளாக யாவா (Java) நிரலராக இருந்த ஆர்வமும் அறிவும் மிக்க இவரின் அனுபவம் தமிழ் இணைய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கும் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டியகாலகட்டத்தில் இவர் மறைந்தது தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கு பேரிழப்பு என்பதை என்னால்மிக உறுதியாகச் சொல்லவியலும்.
நேற்று மாலையில் இவரின் மறைவுச் செய்தி அறிந்ததில் இருந்து அவரின் இல்லத்தார் படும்துயரம், பெருந்திரளான நண்பர்கள் படும் துயரம்,சவுதியில் இருந்து அவரின் உடலை சென்னைகொண்டு செல்வதற்கு தமிழர்கள் சங்கத்தின் சார்பில்கண்ணீருடன் அவர்கள் எடுத்து வரும் பெரும் முயற்சிகள் என்றிவற்றையெல்லாம் நேரில் கண்டுஎன் மனம் கலங்கிப் போய் உள்ளது.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் மனைவியார், குழந்தை வர்ணிகா மற்றும் அவர்தம்பெற்றோர்களுக்கும் மன திடத்தையும் கனிவையும் இறைவன்அருளவேண்டும் என்று வேண்டுகிறேன்.
துயருடன்
நாக.இளங்கோவன்
No comments:
Post a Comment