Pages

Thursday, October 05, 2006

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு)

கதிரவனே கலங்குகின்றேன்! (உரைவீச்சு!)


கதிரவனே!

என் மண்ணில் நீ தோன்றியபோதெல்லாம் தொழுத என் கரங்கள்,
அயல் மண்ணிலும் நீ தோன்றும் போது திகைத்து நிற்கின்றன!

தையிலே பொங்கலிட்டு நன்றியைத்தான் செய்து வைத்தேனே!
நன்றி மறந்துவிட்டு நாடு தோறும் கதிர்வீசும் கதிரவனே,
அயல் மண்ணைத் தொட்டதனால் நீயும் எனக்கு அயலவனே!

மேகத்தைக் காவலிட்டு காணாமல் போகிறாயோ? இல்லை
இருளை நீ ஏவி விட்டு இல்லாமல் போகிறாயோ?
நிலவை நீ நீந்தவிட்டு நில்லாமல் போகிறாயோ?
விண்மீன்கள் கண்சிமிட்டி சொல்வதெல்லாம் இதுதானோ?

வேரிலே நீரோடு, நிமிர்ந்துன்னை போற்றிடுமென்
பயிர்களும் உன்னைப் பழித்திடும் பகைவன் என்றே!

ஓடையிலே ஆடி முடித்து என் காதலிதன்
மேனியெல்லாம் பொன்னால் பூட்டிக் கொள்ளும் வரை
உன்முகம் விடியாமுகமாக இருக்கட்டும்! பொல்லாதவன் நீ!

கண்டு கொண்டேன் உன் செய்கை கடல் தாண்டி வந்ததுமே!,
ஓடிப்போ விழிக்காதே என் முகத்தில்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
கன்சாசு சிட்டி (அ.கூ.நா)
நவம்பர் 2000
(பழைய தொகுப்பில் இருந்து)

4 comments:

ஓகை said...

ஐயா, புதிய கருத்தாக்கம். நன்றாக இருக்கிறது.

உரர் வீச்சு என்பதனை சற்று விளக்க முடியுமா?

nayanan said...

அன்பின் திரு.ஓகை அய்யா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.

இலக்கணக் கட்டு இல்லாத வசன நடையில் இருக்கும் படைப்புகளை உரை வீச்சு என்று கவிஞர்கள் சொல்வர்.
எனது இவ்வெழுத்தில் இலக்கண மரபுகள்
இல்லாததினால் இதனை உரை வீச்சு
என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

உரை வீச்சிற்குத் தற்காலக் கவிஞர்க்ள்
இடும் பெயர் "புதுக்கவிதை".

உரை வீச்சு என்பதே புதுக்கவிதை என்று
பேசப்படுகிறது. நமது மரபுகளில்
உரைப் பாட்டுடைச் செய்யுள் என்று ஒன்று உண்டு. சிலப்பதிகாரத்தில் அதனை நான் படித்திருக்கிறேன்.

அந்த உரைப்பாட்டுடைச் செய்யுள் என்று
நம் முன்னோர்கள் சொல்லினவற்றை இன்று நம்மவர்கள் புதுக்கவிதை என்று சொல்கிறார்கள்.

அன்பிற்கு நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

தமிழ் இலக்கியத்தில் எப்போதோ ஏற்பட்ட புதுக்கவிதை என்னும் பெரும் மாற்றத்தினை இன்று வரை ஏற்றுக்கொள்ளவியலாத பழைய மனப்பான்மை கொண்டோர் புதுக்கவிதையை உரை வீச்சு என்று அழைப்பர். நல்ல வேளையாக இவர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவானதே.

nayanan said...

//தமிழ் இலக்கியத்தில் எப்போதோ ஏற்பட்ட புதுக்கவிதை என்னும் பெரும் மாற்றத்தினை இன்று வரை ஏற்றுக்கொள்ளவியலாத பழைய மனப்பான்மை கொண்டோர் புதுக்கவிதையை உரை வீச்சு என்று அழைப்பர். நல்ல வேளையாக இவர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவானதே.
//

அனானி அவர்களே, தங்களின் மேற்கண்ட புதுக்கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.
அருமையான புதுக்கவிதையை இட்டமைக்கு மிக்க நன்றி. :)
அன்புடன்
நாக.இளங்கோவன்