தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு செய்தவர் என்று சொல்லப்படுபவர். அரங்கனுக்குக் கோபுரம் எடுத்தது முதல் வெகு அண்மையில் மூகாம்பிகைக்கு அணிகள் சூட்டியது வரையிலான அவரின் கடவுள் ஈடுபாடு அனைவரும் அறிந்தது.
தலைசிறந்த தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருவாசகத்தை, மேற்கத்திய இசையில், பல நாட்டுத் தமிழர்களின் ஆர்வத்திலும், ஒருங்கிணைப்பிலும் இளையராசா கொண்டுவருகிறார் என்று ஈராண்டுகளாக கேள்விப் பட்டபோதெல்லாம், அது பல எதிர்பார்ப்புகளை பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது. எனக்கும்தான்.
கடந்த மாதம் சூன் 30 ல் முதல் நெருவட்டு வெளியிடப்பட்ட மேடையில்
தேவார திருவாசகத்திற்குத் தொடர்புடையவர்கள் நிறைய பேர் மேடையில் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனோ, மேடை, தேவார திருவாசக உலகில் இருந்து தொலைவில் இருந்ததாகத்தான் உணர முடிந்தது. அவரின் திருவாசக வெளியீட்டை சில நாள்களாகக் கேட்டபோது உணர்ந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
பாராட்டுதல்கள் என்றால், அவரின் முயற்சிக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும். அதோடு இம்முயற்சிக்கு அடித்தளமாக இருந்த காசுபர் மற்றும் அவரோடு உழைத்தவர்களும் பாராட்டுதற்குரியவர்கள். இதற்காக செலவிட்ட நேரத்தில் இளையராசா வேறு பாடல்களுக்கு இசை அமைத்திருந்தால் நிறையவே சம்பாதித்திருக்கலாம். இதனோடு தொடர்புடையவர்கள் (குறிப்பாக திரு.காசுபர்) தத்தம் மதங்களைக் கடந்து திருவாசகத்தின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இணைந்தது, தமிழும் தமிழரும் உணர்வால் மதங்களைக் கடந்தவர்கள் என்ற உண்மையைக் காட்டியது. பல நாட்டு இசை வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து இதனை ஆக்கிக் காட்டிய நமது இளையராசாவை நாம் உச்சிமுகரத்தான் வேண்டும்.
நிறைகள் என்றால், பலராலும் பாமரனாலும் அறியப்பட்ட ஒரு இசைமேதை இதில் ஆர்வத்துடனும், தனது வாழ்வின் குறிக்கோள் எனவும் கொண்டு ஈடுபட்டது மிகவும்போற்றத்தக்கது. ஏனெனில், 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டி தொட்டியெல்லாம் பரவிய அய்யப்பன் பாடல்கள், 20 ஆண்டுகளில் தோன்றிய பல ஆதிபராசக்தி பாடல்கள், எல்.ஆர்.ஈசுவரி குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் என பலவும் பாமரனையும் பலரையும்
எட்டியிருக்கையில் சிவ மெய்யியல் கொண்ட ஒப்பற்ற தேவார திருவாசகங்கள் பாமரனையும் படித்தவனையும் எட்டாதிருந்தது, எட்டாமலிருப்பது என்பது தமிழ்நாட்டின் வருத்து வியப்புகளில் ஒன்றாகும்.
கோயில்களில் விழாக்களில் பரவலாக ஒலிப்பவையெல்லாம் அண்மைக்கால
சாதாரணக் கவிஞர்கள் திரைப்படப் பாடல் மெட்டுகளுக்கு எழுதிய கடவுள் பாட்டுக்கள்தான். 'அப்படிப் போடு...போடு... ' என்ற மெட்டில் ஒரு அய்யப்பன் பாட்டு இருந்தால் வியப்பில்லை. அவற்றில் பல பாடல்கள் பொருத்தமில்லாமலும் வெற்று இரைச்சலாகவும் கூட இருக்கும்.
அதோடு, பலருக்கும் கந்தர் கவசம், சுப்ரபாதம், விநாயகர், துர்க்கையை போற்றும் பாடல்கள், கொஞ்சம் சிவனைபோற்றும் பாடல்கள் (எசு.பி.பியின் நமசிவாய ஒலி நாடா) அறியப்பட்டிருக்கும் அளவுக்கு திருவாசகமோ தேவாரமோ அறியப்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் தருமபுரம் ப.சுவாமிநாதன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பாடல்களை அற்புதமாக வெளியிட்டிருக்கிறார். திருவாசகத்தில் இருந்து சுவாமிநாதன் பாடும் குழைத்த பத்தின் 'அன்றே என்றன் ஆவியும்... ' என்ற பாடல் எலும்பைக் கரைத்து விடும்.
இதற்குக் காரணங்கள் எவையாகயிருப்பினும், தேவார திருவாசகங்கள் மிகக் குறைந்தவர்களால் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. இந்நிலையில் ஒரு இசைமேதையின் குரலாலும் இசையாலும் திருவாசகம் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இன்பமாகவே இருந்தது.
அந்தவகையில் தேவையான ஒரு முயற்சியை தகுதியான ஒருவர் செய்தது மிகவும் போற்றத்தக்கது மற்றும் இந்த முயற்சியையே நிறையாகத்தான் நான் காண்கிறேன்.
நிறைகள் இருக்கும் அதேபோழ்து குறைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இளையராசா திருவாசகம் முழுவதையும் இசையோடு கொண்டுவரப் போகிறார் என்றுதான் நான் கேள்விப்பட்டது. அதனாலேயே, அவரின் முதல் வெளியீட்டில் இருக்கும் குறைகளை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது. இது ஒரு வேளை வரவிருக்கும் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தாலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு
மட்டுமே இதற்குக் காரணம்.
1) பிடித்த பத்து, அச்சப் பத்து என்ற இந்த இரண்டு பதிகங்களையும்
இளையராசா அருமையாகப் பாடியிருக்கிறார். பிடித்த பத்தில் 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.... ' என்ற பாடலில் திருவாசகத்தை இயல்பாகப் பாடும்போது உண்டாகும் அந்த மோன நிலைக்கே நம்மை கொண்டு சென்று விடுகிறார். அவரின் குரல் வளமும் நன்றாகவே உள்ளது. அதேபோலவே 'புன்புலால் யாக்கை.... ' என்ற பாடலிலும். பொற்சுண்ணத்தையும், மிக இயல்பான ஆனந்தத்தில் பாட வைத்திருக்கிறார்.
ஆயினும் அனைத்து பாடல்களிலும் மிகுந்து கிடக்கும் இசை, பாடலைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது. அம்மையே அப்பா என்று உருகு உருகு என்று உருகி, உடனே மிகையான பெருகோசையைப் போட்டு, சலனத்தையும் சலிப்பையும், பல இடங்களில் எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறார். ஒரு பாட்டிற்கும் மறுபாட்டிற்கும் இடையே கிடக்கும் இந்த பெருகோசைகள் கேட்போருக்கு சலனத்தையும் அந்த இலயத்தையும் எடுத்து விடுகின்றன.
பெருகோசைக்கு எதிர்ப்பு சொல்ல அல்ல; ஆனால் எந்த பாட்டில் எந்த இடத்தில் அதை வைப்பது என்று ஒன்று வேண்டும் அல்லவா ? இந்தப் பெருகோசை, மிகு ஓசை பல இடங்களிலும் இசையாக அல்லாமல் இரைச்சலாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தைத் தவிர்த்த (த்ிருப்பொற்சுண்ணத்தில் இசை பரவாயில்லை என்று சொல்லலாம்) மற்ற பாடல்களில் இருக்கும் பெரும் குறைபாடு இந்த இரைச்சல்தான். இது தேவையற்றது.
ஓரோ இசை அல்லது மேற்கத்திய இசை என்றால் இப்படித்தான் என்று
நான் நம்பத்தயாரில்லை. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
இலக்கண சுத்தியோடு இயல்பான பண்ணும் ஓசையும் கொண்டவை திருவாசக தேவாரப்பாடல்கள். ஒரு சில முறை இப்பாடல்களைப் படித்தாலே படிப்பவற்கு அதன் இயல்பான ஓசை அமைந்து பாட வந்துவிடும். அத்தகு பாடல்களை அதிக பக்கம் ஒரு சுருதிப் பெட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு குரல்வளமும் தமிழ்வளமும் உள்ளார் சிறப்புடன் பாடிவிடுவர்.
அவற்றிற்கு எந்த இசையும் தேவையேயில்லை. ஆயினும் பலரையும் விரைந்து
ஈர்த்து பாடல்களை நுகரத் தரும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த இசை,
பாடல்களின் தன்மைக்கேற்றவாறு அமையாமல் மிகையான அளவில் அமைந்துவிட்டதால் இசையின் வலியில் பாடல் இளைத்துப் போகிறது.
2) சிவபுராணத்தைத் தவிர்த்த (சிவபுராணத்தைப் பற்றிக் கீழே) மற்றவற்றில்
ஒரு சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருக்கிறார். பொற்சுண்ணம் மற்றும்
திருக்கோத்தும்பியில் தலா 20 பாடல்கள் உண்டு. அவற்றில் முறையே 7 மற்றும் 8 பாடல்களை மட்டும் பாடியிருக்கிறார். அச்சப்பத்து யாத்திரைப்பத்து பிடித்த பத்து ஆகிவற்றில் 6 அல்லது 7 பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார்.
மீதியை யாருங்க பாடுறது ? எப்பங்க பாடுவாங்க ? பாடப்பட்டிருக்கும்
தேவார திருவாசகப் பாடல் ஒலிநாடா/நெருவட்டுகளின் குறையே அதுதான்.
ஒரு பதிகத்தை எடுத்துக் கொண்டு அதில் முதல் மற்றும் கடைசி அல்லது மேலும்
ஒரு பிடித்த பாடல் என்று மட்டுமே பாடி இருக்கின்றனர். முழுமையான தேவாரப்பதிகங்களோ அல்லது திருவாசகப் பாடல்/பதிகங்களோ (சிவபுராணம் தவிர்த்து) கொண்ட ஒலிநாடா அல்லது நெருவட்டு இருந்தால் அரிது. தேவார திருவாசகம் ஓரளவு ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதென்றால் அது தருமபுரம் ப.சுவாமிநாதனால்தான். அப்படி ஒரு குரல்வளம் மற்றும் நேர்த்தி. ஆயினும் அவரும் பதிகத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் என்ற மட்டிலேயே
நிறைய பாடியிருக்கிறார்.
இந்நிலையில் இளையராசாவிடம் எதிர்பார்த்த முக்கியமான ஒன்று இதுவே.
ஒரு தலைப்பு அல்லது பதிகம் என்று எடுத்துக் கொண்டால் அதன் அனைத்து பாடல்களையும் பாடவேண்டும். அப்பொழுதுதான் அதன் இனிமை, மென்மையும்
உண்மையும் உணரமுடியும். இல்லாவிடில் அது பெருங்குறை மட்டுமல்ல தீராக் குறையாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்தக் குறையோடு இளையராசா திருவாசகம் முழுமையையும் பாடிவிட்டதாக எண்ணிவிடல் ஆகாது.
3) பிழைகள் மலிந்து கிடக்கின்றன.
அச்சப்பத்தில் 'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்... ' என்பது
'புற்றில் வாளரவும் அஞ்சேன் ' என்று இருக்க வேண்டும். நெருவட்டோடு
கொடுக்கப் பட்ட கையேட்டிலும் 'வாழ் ' என்றுதான் போட்டிருக்கிறது.
பாடலில் உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.
பொற்சுண்ணத்தில் ஒரு பாடலில் 'பை அரவு அல்குன் மடந்தை.... '
என்பது 'பை அரவு அல்குல் மடந்தை.... ' என்று இருக்க வேண்டும்.
கோத்தும்பியில் 'சீயேதும் இல்லாத செய்பணிகள்... ' என்றிருப்பது
'சீயேதும் இல்லாதென் செய்பணிகள்... ' என்றிருத்தல் வேண்டும்.
யாத்திரைப்பத்தில் 'பெறுதற்கரியன் பெருமானே ' என்பது
'பெறுதற்கரியன் பெம்மானே ' என்று இருத்தல் வேண்டும்.
'மிகவோர் காலம் இனுமில்லை ' என்பது 'மிகவோர் காலம் இனியில்லை '
என்றிருக்க வேண்டும்.
சிவபுராணத்தில் 'ஓங்காரமாய் நின்ற மெய்யே! ' என்றில்லாமல்
'....மெய்யா! ' என்றிருக்க வேண்டும். 'நீள்கழல்கள் காட்டி ' என்பதில்
'காட்டி ' என்பது அளபெடுத்து வரும். பாடலில் கூட அந்த இடத்தில்
'காஅட்டி ' என்பது சாதாரண நெடிலாக வந்துவிடுகிறது.
'நாற்றத்தின் நேரியாய் ' என்பதற்கு பதில் 'ஆற்றத்தின் நேரியாய்.. '
என்றிருக்கிறது. நாற்றத்துக்கும் ஆற்றத்துக்கும் வேறுபாடு இல்லை ?
பிழைகளுள் பெரும்பிழை மற்றும் பொருள் பெருமளவு திரியும் பிழை இது.
ஒரு சில பாடல்களிலேயே என் கண்ணுக்கும் காதுக்கும் எட்டினவை
இத்தனைப் பிழைகள். நன்கு ஆய்ந்தால் மேலும் பிழைகள் இருக்கக் கூடும்.
இப்பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்டு
காலங்காலமாய் நிலைத்து வரும் பாடலைப் பாடும்போது, அதுவும்
பொருள்செலவில், நிறைய ஆள்கள் துணையுடன் பாடப்படும்போது
தகுந்த கவனம் செலுத்தப் பட்டிருக்க வேண்டும்.
இது ஆயிரம் தாமரை மொட்டுக்களும் இல்லை;
அந்தி மழையின் பொழிவும் இல்லை.
இது போன்ற பிழைகளைக் களைவதில் இளையராசா தனக்கே உரித்தான
ஞான முதிர்வுடன் இதைச் செய்யவேண்டும். தருமியாக நின்றுவிடக் கூடாது.
இப்பிழைகளுக்கு, இளையராசா பயன்படுத்தும் நூல் அல்லது நூல்களும்
காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிடும்
நூலில் தம் பங்குப் பிழைகளை சேர்த்திருக்கும். திருவாசகத்தையும்
ஏகப்பட்ட பேர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் பணிக்கு
குறைந்தது நான்கைந்து பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்கனவே
சிவப்பண்டிதமும் தமிழ்ப்பண்டிதமும் கொண்டவர்களின் பார்வைக்கும்
வைத்து பின் பாடலாக்கும் முறைமை(methodology) அல்லது செலுத்தத்தை(process) இளையராசா கையாளவேண்டும். முனையலின் (project) அளவு பெரியது. அதனால்
நூலின் தகுதியை எண்ணி அதனைத் துல்லியமாக இசைக்க எல்லா
முறைகளையும் அவர் கையாள வேண்டும்.
4) சிவபுராணம்:
அ) சிவனை வழிபடுபவர்களிடைப் பரவலாக அறியப்பட்டதும் பாடப்படுவதும்
சிவபுராணம்தான். அதில்தான் பெருந்தவறுகளைக் காணமுடிகிறது.
முக்கியமாக அதனை முதலில் இருந்து கடைசிவரை அடிமாறாமல் பாடவேண்டும்.
ஆனால், தன்னால் முடிந்த மட்டும் அதனை மாற்றிப் பார்த்திருக்கிறார் இளையராசா!
இப்படிப் பாடினால் என்ன என்று யாரும் கேட்கக் கூடும்.
அடிப்படையில் சிவபுராணம் என்பது என்ன ? சிவனின் அநாதியான, பழமையான
முறைமையைச் சொல்வது சிவபுராணம். புராணம் என்றால் அதில் முறைமை
முக்கியமல்லவா ? முறைமை என்றால் படிப்படியாக வரிசையாக ஆதி முதல் ஈறாக முடியவேண்டாமோ ? அதைத்தானே 95 அடிகளில் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
அதன் எளிமையும் முறைமையும்தானே பலரைக் கவர்ந்து பாடவைக்கிறது ?
பின்னர் அதில்போய் எல்லாவற்றையும் ஏற இறங்கச் செய்தால் எப்படி ?
பிற பாடல்களில் அப்படிச் செய்யலாம். யாத்திரைப் பத்திலோ அச்சப்பத்திலோ
பாடல்களில் வரிசையையோ அல்லது அடிகளையோ மாற்றிப் போட்டால் பொருளும் தன்மையும் ஏதும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் அங்கெல்லாம் விட்டு விட்டு எதில் மாற்றக் கூடாதோ அதில் புதுமை செய்வதாக எண்ணி அடிகளையும் பகுதிகளையும் முன் பின்னாக்கி விட்டிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக 'செத்திலாப் பத்தில் ' ஒரு பாடல்:
'அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறையாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. '
(திருவாசகம் - செத்திலாப்பத்து - பாடல் 4)
எண்சீர் விருத்தமான இப்பாடலை அரை அடிகளாக வெட்டி 8 அடிகளாக ஆக்கி
ஏறத்தாழ தலைகீழாகப் படித்தால்,
'த்ிருப்பெருந்துறை மேவிய சிவனே
தென்பராய்த் துறையாய் சிவலோகா
மரக்கண், என் செவி இரும்பினும் வலிது
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
என்பராய் நினைவார்,
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்,
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்,
எனைப்பலர் நிற்க,
இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய் ?... '
பலவரிகள் கீழிருந்து மேல் போட்டாலும் பொருள் அல்லது செய்தி
ஏதும் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதே போல ஆறாவது பாடலான
'அறுக்கிலேன் உடல் துணிபட.... ' என்ற பாடலையும் இம்மாதிரி அடிகளை
மாற்றிப் பாடுதலுக்கு காட்டாகச் சொல்லலாம்.
அதனால் சிவபுராணத்தில் இளையராசா செய்திருப்பது புதுமையாக அல்லாமல்
பெரும் அடிப்படைப் பிழையாகி விடுகிறது. நிறைய அடிகளை அல்லது பகுதிகளை ஏன் இப்படிச் செய்தது பிழை என்று எளிதாய்ச் சொல்லிவிடமுடியும் - எழுதினால் அது பெருகும். அவர் செய்திருப்பதில் ஏதும் ஏரணம் (logic) காணவியலவில்லை.
ஆகவே இளையராசாவின் சிவபுராணம் ஏற்கத்தக்கதல்ல.
ஆ) 'பொல்லாவினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன்... ' என்று தன்னடக்கத்துடன்
ஆரம்பிப்பதாக எண்ணித் தவறாக ஆரம்பித்திருக்கிறார். தனது சிறுமையில்
ஆரம்பிக்கும் முன் இறைவனின் பெருமையையைச் சொல்லி அதன் பின்
தனது சிறுமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அதற்காகத்தான்
அவனை வழுத்தி, பின்னர் போற்றி, பின்னர் அவனையே சிந்தையில் இருக்கச் செய்து அவனின் பரப்பையும் சீரையும் காட்டி/சொல்லி பின்னர் சொல்லவேண்டிய தனது சிறுமையை சொல்கிறார் மாணிக்கவாசகர். அதில் புதுமை செய்வாதாக இளையராசா செய்திருப்பது புதுமை அல்ல. அதற்கு இடமும் இதுவல்ல.
அப்படித்தன் சிறுமையைக் கூறுவதாகச் சொன்னால் எவ்வளவு சிறியவர் என்று
எப்படிச் சொல்லமுடியும் ? பெருமையைச் சொன்னால்தான் அது முடியும்.
மாணிக்கவாசகரே, எடுத்தவுடன் ஈசனை வாழ்த்தி விடவில்லை.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை வாழ்த்திப் பின்னர்தான்
நாதனை வாழ்த்துகிறார். சிவபுராணத்தில் ஒரு முறைமை இருக்கிறது.
இதையே இப்படி மாற்றினால் போற்றித் திருவகவலில் சகத்தின் உற்பத்திப்
பகுதியை எப்படிப் பாடுவார் ? திருவண்டப் பகுதியை எப்படிப் பாடுவார் ?
இ) இதிலும் இசை/மிகு ஓசை இடராக இருக்கிறது. (ஆரம்பத்திலும்
ஆங்காங்கும் 'ஆவா...ஊவா.... ' என்று பின்னனி இசை வருகிறது; அதுவும்
நிறைய. தேவைக்கும் மேல் இருக்கிறது. ஓங்காரத்தைப் பிரித்து 'ஆ ' தனியே
'ஊ ' தனியே சொல்கிறாரோ என்று கூடத் தோன்றியது.)
அழகாகப் பாடிக் கொண்டே போகையில் திடீரென்று பேரோசையில்
ஆங்கிலப் பெயர்ப்புப் பாட்டு!. பின்னனியிலும் கேட்கிறது - தனியாகவும்
கேட்கிறது. பொருந்தவில்லை.
இப்பாடலில் இளையராசாவின் குரல் அருமை. ஆங்காங்கு தாண்டித் தாண்டி
வட்டமடித்துப் பாடாமலும், பின்னாடி ஆங்கிலமும் பேரிசையும் இல்லாமலும்
தனியே இதை இவர் பாடவேண்டும். மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய ஒன்றை
எப்படியோ தவற விட்டுவிட்டார்.
ஈ) சிவபுராணத்தில் பல அடிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை தவிர்த்திருக்கவே கூடாது.
'வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க... ' முதல் நான்கைந்து அடிகளைக் காணவில்லை.
வேகங்கெடாமல், இவர் எப்படி பொல்லாவினையேன் என்று உணர்ந்தார் என்று
தெரியவில்லை.
'காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய் நின்ற... ' என்ற அடிகளும் காணவில்லை.
இன்னும் சில வரிகள் காணாமல் போயிருக்க,
சில இடங்களில் சீர்களையும் வசதிக்கேற்றவாறு விட்டுவிடுகிறார்.
'ஆற்றேன் எம் ஐயா அரனேயோ (ஓ) என்று என்று ' என்பதில்
'ஓ என்று என்று ' என்ற முக்கியமான அலறல்/கதறலை விட்டு விடுகிறார்.
அதேபோல 'அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று ' என்பதிலும்
அந்த 'ஓ என்று ' என்ற சொற்கள் மிக முக்கியம். அவற்றையும் அம்போ என்று
விட்டு விடுகிறார்.
சிவபுராணத்தின் தொடக்கத்தில் மாற்றம் செய்தவர் ஈற்றிலும்
பிழை செய்திருக்கிறார். அதன் ஈறு சொல்லும் சேதி உன்னதமானதும்
முக்கியமானதும் ஆகும்.
யார் சிவனடிக்கீழ் செல்வார் என்று சொல்லவேண்டியதைச் சொல்லாமலே
தாண்டி விடுகிறார். இது பழுது மட்டுமல்ல பாவமும் கூட என்பதனை யாரேனும்
ஒரு நேர்மையான சிவபண்டிதர் இளையராசாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இளையராசா சிவபுராணத்தில் புதுமை புகுத்த முயன்றிருப்பதாகத் தெரிகிறது.
புதுமையை எதிர்ப்பது நோக்கமல்ல. புதுமை முயற்சியில் சரியான அணுகுமுறையும் அடிப்படையும் இல்லாததால் புதுமை தோற்றுப் போகிறது.
இப்படிப் பொருள் பிழைகள், விட்ட பிழைகள், பதிப்பு பிழைகள் எல்லாம் இருந்தால் என்ன ? - ஏதோ பாடியிருக்கிறார்; நொள்ளை சொல் சொல்வதை விட - நல்லாயிருக்கு என்று கேட்டும் கேட்காமலும் சொல்லி விட்டுப் போனால் என்ன ?
திருவாசகப் பாடல்கள் ஒப்பற்ற, கிடைத்தற்கரிய தமிழ் பக்தி இலக்கியம் ஆகும்.
ஏதோ சாதாரண பாடகர் அல்லது இசையாசிரியர் தவறுகள் செய்தால் அது மக்களிடத்தில் நிலைக்காது. ஆனால் இளையராசா தமிழ்நாடு போற்றும் பெருமைப்படும் இசை ஓவர்.
இவர் செய்யும் நன்றும் பிழையும் நிலைக்கக் கூடியது. அன்றும் இன்றும் 95 அடிகளாக இருந்த, இருக்கும் சிவபுராணம் இவரால் 80+ அடிகளாகக் குறைந்தது
என்ற இலக்கியச் சிதைவு திருவாசகத்திற்கு ஏற்படக் கூடாது. மற்ற இலக்கியங்களுக்கும்தான்.
ஒரு இலக்கியமே தலை கீழாக மாற்றப்பட்டிருக்கிறது. பொருள் சிதைந்து போய்க் கிடக்கிறது.
இதற்கு அணுகுமுறைப் பிசகு என்று சொல்லலாம். இதைப் பார்த்து நாம் இளையராசாவிற்கு எடுத்துச் சொல்லாமல் வாளாவிருத்தல் அடாத செயல். இப்படி வாளாவிருந்து விட்டு,
'அந்த கால இலக்கியங்கள் காணாமல் போய்விட்டன - நமக்கு பொறுப்பில்லை -
நாம் மோசம் - ஓலைகளை எல்லாம் கரையான் உண்டு விட்டன - யாரோ கொளுத்திட்டாங்க,- யாரோ ஆற்றிலே போடச் சொல்லிட்டாங்க - மதச் சண்டையில் காணமற் போய்விட்டது - நூலகத்தைக் கொளுத்திட்டாங்க ' என்றெல்லாம் நாம் பழங்காலச் சங்கதிகளைப் பற்றிப் புலம்பினால்,
அது எப்படிப் பொருந்தும் ?
இப்படித்தானே இலக்கிய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படுகின்றன!
பரவாயில்லை - இளையராசாவின் சிவபுராணப் பிசகுகளை அப்படியே விட்டு விடலாம் என்று சொல்பவர்களுக்கு என் கேள்வியெல்லாம் இதுதான்:
'பரித்ரானாய சாதூநாம்
வினாசாய சதுசுகிர்தம்
தர்மசம்சுதா பனர்த்தாய
சம்பவாமி யுகே யுகே '
என்ற பகவத்கீதையின் பாடலை, ஏதாவது ஒரு பெரிய இசைமேதை
தலைகீழாகவோ, அல்லது சில சொற்களை விட்டு விட்டோ அல்லது
'சம்பவாமி யுகே யுகே ' க்கு பதில் 'சம்பவாமி புகே புகே ' என்று பாடினால்,
அதற்கு வைதீகர்களின் விமர்சனமும் சமக்கிருதப் பண்டிதர்களின் விமர்சனமும்
எப்படியிருக்கும் ?
இதனை அனைவரின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இளையராசாவின் முயற்சி பாராட்டத்தக்கது - ஆனால்
அதன் விளைவு 'சிவபுராணத்தில் பழுது ';
'மற்றவற்றில் சில போக்கத்தக்க குறைகள் '.
யாரும் இந்த நெருவட்டையோ ஒலிநாடாவையோ ஓசிப்படி எடுக்காதீர்கள் -
காசு கொடுத்து நேர்மையாக வாங்குங்கள் என்ற விடப்பட்ட அந்த செவ்விய தூய்மையான வேண்டுகோள் புனிதமானது.
அதுபோல அந்த வட்டின் உள் இருக்கும் சங்கதியின்
புனிதமும் காக்கப் படல் வேண்டும்.
ஆதலின் சில வேண்டுகோள்களை இளையராசாவிற்கு வைப்பது நம் கடமையாகிறது.
இதைச் சொல்வது அவரின் மேல் உள்ள பேரன்பினால் மட்டுமே.
1) முதல் வெளியீட்டில் சிவபுராணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.
2) அதன் திருத்திய வெளியீடாக ஏனைய பாடல்களில் பிழைகளைக் களைந்து
சிவபுராணத்தை உங்கள் குரலிலும், உங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுக் குரல்களிலும் அடிமாறாமல் கொண்டு வாருங்கள்.
3) ஆங்கில சிவபுராணத்தை தனிப்பாடலாக வையுங்கள்.
4) நீங்கள் படிக்கும் திருவாசக நூலினை மறுபரிசீலனை செய்யுங்கள். வேறு பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
5) திருவாசகத்தை உணர்ந்த நல்ல சிலரின் (ஒற்றிகளையும், துதிபாடிகளையும்
கைவிடுங்கள்) கூட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
மாணிக்கவாசகரே,
'என்னைக் கோதுமாட்டி, நின் குரைகழல் காட்டி,
குறிக்கொள்க என்று நின் தொண்டரின் கூட்டாய்... ' என்றுதானே வேண்டுகிறார் ?
அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: ஓவர், ஓவம் = ICON, செலுத்தம் = process, முனையல் = project,
ஏரணம் = logic ( நன்றி: valavu.blogspot.com ).
No comments:
Post a Comment