Pages

Thursday, January 15, 2004

நிலமகளே!

(எண்சீர் விருத்தம்)

கட்டிஉறும் கரியடுக்கிக் கடுநெய்யைத் தேக்கிவைத்துக்
கண்ணேதும் காணாமல் மண்போட்டு அதைமறைத்து
முட்டிமோதி மேலேற முடியாமல் நின்வயிற்றில்
முடங்குதற்குக் கல்லாலே காவலிட்ட நிலமகளே!;
கொட்டிஉள்ளே கிடப்பதெலாம் கொடுநஞ்சென் றறியாமல்
கொடும்ஆசை தலைக்கேறக் கும்மாளம் போட்டபடி
வெட்டிவெட்டி அள்ளிவந்து வகைவகையாய்ப் பிரித்தெடுத்து
வெளியெல்லாம் அதைஎரித்து கரிகரியாய்க் கரித்துவிட்டோம்!

கன்னமிட்டுத் தங்கத்தைக் கவர்ந்துபோகு கள்வர்போல்
கல்நெய்யில் கண்வைத்துக் கைவைக்கக் காத்திருந்து,
நன்னலங்கள் யாவிருந்தும் நாணயத்தை ஒளித்துவிட்டு
நடுவுநிலை பிறழ்ந்திங்கு நகுதற்கே பொருளான
தன்னலத்தில் ஊறிவிட்ட தடித்தபல நாடுகளோ
தனதில்லா ஊர்களிலும் தன்கொடியை நடுவதெலாம்
நின்வயிற்றில் தீராமல் நெடுநாளாய் ஊறுகின்ற
நிலநெய்யை தான்கொண்டு நீள்நிலத்தை வெருட்டுதற்காம்!

கரிஅள்ளி நெய்அள்ளி வாயுவையும் தான்அள்ளி
கணக்கில்லா வண்டிகளை நிலமெங்கும் நீந்தவிட்டோம்!
கறிதின்ன, காளையெல்லாம் கொன்றுவிட்டு, உழவுஏரைக்
கல்நெய்யால் உயிரூட்டிக் கழனிதனை உழுகின்றோம்!
தறிகெட்டு ஓடிஓடித் தரணியிலே உழைத்தாலும்
தளராத வாழ்வினையே தழுவாது நிற்கின்றோம்!
வெறிகொண்டு, நாம்வாழ விரைவுமிகக் கூட்டுகையில்
வெறுஞ்செருக்கை வெள்ளமென வீதிஉலா விடுகின்றோம்!

வடித்தெடுத்த நெய்யெல்லாம் வண்ணவண்ணப் புகையாகி
வையகத்தைத் தனக்குள்ளே முடிந்துவைத்த வேதனையில்,
மடிதிறந்த மண்மாதா மூச்சுவிட முடியாமல்
மண்வாரி தூற்றுதியோ மங்காத சினத்தோடு ?
கொடியசைந்து, கூடவரும் குளிர்தென்றல் வழியின்றி
குழைத்துவரும் தூசியையும் கூடவே புகையையும்;
குடிபிழைக்கப் பொழிகின்ற மாமழையும் இந்நாளில்
கொடும்மாசு கண்டஞ்சி அண்டுதில்லை இம்மண்ணை!

மாட்டுவண்டி பூட்டிஅதை மைல்தொலைவு ஓட்டிப்போய்
மாசில்லா வயல்வெளியில் பயிரோடும் பச்சையோடும்
ஈட்டுகின்ற செயலிலெலாம் கால்நடையின் கூட்டுவைத்து
ஏச்சறியா பறவைகளின் ஏற்றமிகு நட்புகொண்டு
பாட்டுநல்ல ஆட்டுடனே பந்தமுடன் கும்மிகொட்டி
பாழான தூசுதள்ளி தூயஇடம் நானொதுங்கி
வாட்டுகின்ற பேரிரைச்சல் பேராசை போக்கிவிட்டு
வாழுகின்ற பெருவாழ்வு வேண்டுகிறேன்; அருள்தாயே!

மனையாட்டி மக்களுடன் நீர்வாங்கி நான்குடிக்க
மாசத்தில் காற்பவுனை செலவாகச் செய்கின்றேன்!
எனைநம்பி வருகின்ற எம்பசு,ப றவைகட்கும்
ஏருழுவும் காளைகட்கும் என்னபவுன் ஆகும்பார்!
அனைத்திற்கும் என்கணக்கில் ஆகுசெலவு ஓர்பவுனாம்;
ஆகட்டும்; காணிபயிர் தான்குடிக்கக் கணக்கைப்பார்!
நினைவேண்டி நிற்கின்றேன்; நீள்நிலத்தில் எந்நாளும்
நீரெல்லாம் பரிஎன்று நிலைத்திடவே நீதியிடு!

(வெண்பா)

ஞாலத்தின் செல்வமெலாம் தான்கொள்ளப் பூமாந்தர்
கோளத்தின் மேனியெலாம் மாசுபூச - காலத்தின்
கோலமெனக் காற்றும் குடிநீரும் காசுஆகி,
சீலமின்றி வாழும் உலகு.

குறிப்பு:- பரி = free = இலவயம் (நன்றி: முனைவர் இராம.கி)

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: