Tuesday, May 02, 2006
பாவேந்தர் கவிதைகள் பற்றி புதுமைப்பித்தன்!
தள்ளி வைத்திருந்த அவர்காலத் தமிழ்க்கவிக்்குமுகாயத்தினை
விமர்சிக்கிறார் புதுமைப்பித்தன்.
அதைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் தன் வலைப்பதிவில் நண்பர் வாசன்.
படிக்க வேண்டிய ஒன்று. காண்க http://vassan.kollidam.com/?p=24
அன்புடன்
நாக.இளங்கோவன்
Friday, April 28, 2006
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!
குகைவாழ் ஒரு புலியே, உயர் குணம் மேவிய தமிழா!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனை,
அவ்வப்போது, தேவைப்படும்போது,
பயன்படுத்திக் கொண்டு,
பின்னால் சொகுசாக மறந்துவிடும் தமிழர்களே!
திராவிடர் முன்னேற்றத்திற்கான கழகங்களே!
பெரியாரின் பேரப்பிள்ளைகளே!
கவிஞர் பெருமக்களே! கவிதாயினிக் குயில்களே!
தமிழ் ஆசிரியர்களே! உழவர்களே, தொழிலாளிகளே!
தமிழ் இணைய மடற்குழுக்கள் மற்றும் வலைப்பதிவுகள்,
இதழ்கள் முதற்கொண்டு எல்லா மூலைகளிலும்
தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கும் எழுத்துப் புலிகளே!
என் உயிரினும் மேலான கோழைக் கூட்டங்களே!
இரத்தத்தின் இரத்தமான இழிகுலமே!
இனம் என்றொன்றிலாத இனமே!
இது கேளீர்!
இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள்! (29-ஏப்ரல்)
"உலகாள உனது தாய் உயிர் வாதை அடைகிறாள்,
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா'
என்று ஒரு தடவையேனும் தமிழ் மக்களை எழுப்பி விட்டவர் பாவேந்தர்.
எழுப்பி விட்டும் எழாத,
எழும்பியும் மற்றவர்களை எழுப்பாத,
எழும்பியது போல் நடிக்கின்ற "தமிழர்களை என்ன சொல்வது?" என்று
யோசித்த போது, நினைவுக்கு வந்தவை மீண்டும் பாவேந்தரின் சொற்கள் மட்டுமே!
அவர் சொல்வார் தமிழர்களைப் பார்த்து!
"பள்ளம் பறிப்பாய்! பாதாளம் நோக்கி அழுந்துக அழுந்துக!,
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே, தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்க வை!
ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி, அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ!
குனிந்து தரையைக் கெளவி, ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே, அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே!"
இந்த வரிகளைப் படிக்கும் போது, ஏதாவது ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் அல்லது அவரின் தொண்டர்
நினைவில் வருவர். அவரும் தமிழ், திராவிடர் என்றெல்லாம் குதிப்பவராக, குதித்தவராக
இருப்பர். குதித்து விட்டு மீண்டும் பாவேந்தரின் மேற்சொன்ன வரிகளுக்கு
ஒப்பாகிப் போவதும் நாம் கண்டு வருவது.
ஒரு தமிழ்நாட்டில் சாதீயமும், சழக்கும், சந்தர்ப்பவாதமுமே என்றும் அரசோச்சும்.
ஒரு தமிழ்நாட்டில் தமிழினத்தையே வேரோடு அழித்துக் கொண்டிருப்பார் பகைவர்.
தமிழர் தன்னையே அழித்துக் கொள்வர். பகைவராலும் அழிக்கப் படுவார். :-(
தமிழர்களின் பேனாக்களும் தட்டச்சுப் பலகைகளும் பஞ்சாரக் கோழிகளாகப் படுத்துத்
தூங்கும். மீறி வெளியே வந்தால் காற்றிலே வாள் வீசிக் களித்திருக்கும்!
நாக்குகள் நட்டுக் கொள்ளும்! குரல்கள் குன்றிப்போகும்!
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த/நினவு நாளிலே,
அவரை மறந்து விட்ட தமிழ் பேசும் அனைவரையும்
பாரதிதாசனின் மேற்கண்ட வருணனைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதை ஒரு ஆய்வாகக் கொள்கிறேன்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
29-ஏப்ரல்-2006
Friday, April 21, 2006
எழிற் கொள்ளை! (செங்காந்தள் மலர்) - (உரை வீச்சு)
கொல்லையிலே கையும் குலுக்கும்.
உன் வீடு நான் வந்தால்,
அங்கேயும் என்னை வரவேற்கும்;
சாலையிலே நான் போயின், அங்கங்கே,
தன்னை என்னிடம் காட்டிக் கொள்ளும்;
கோயிலுக்குப் போயந்தக் குமரனைக் கும்பிட்டால்,
கும்பிட்ட கைகளில் குமரன் தருவான் அதை;
அது அவனுடையதாம்!
ஆறுமுகன் அள்ளித்தருவதில்
கொள்ளை ஆசை ஆருக்கில்லை?
இந்தக் கோடைகாலத்தில் கூதிர்கால நினைவுகள்!
கண் எட்டிய தொலைவு வரை ஒரே நிறம்.
காணும் திசைகளிலே பூரிப்பின் பொரிப்பு.
பச்சை வண்ணத்தின் மச்சியிலே செவ்வடுக்கு.
அதைக் கொஞ்சி விடத் துடிக்கின்ற என் குருதி!
அவற்றின் உச்சி முகர்கின்ற
உள்ளங்களின் முகங்களில் விதவிதமான ஒளி!
காலையில் பிறந்து மாலையில் மறைவதல்ல!
ஏழு மாலை மாறா வாழ்க்கை, மென்மை, உறுதி!
என் காதலியின் கண்வரிகளில் யான் கண்டு
கொள்ளை போன அதே நிறம்.
என் தாய் என்னைச் சிந்தியபோது சிந்திய அதே நிறம்.
என் மண்ணின் மைந்தர்கள், மண்ணில் கொட்டிய அதே நிறம்!
அழியாத வரலாற்றில்,
அத்தி சூடியவன் சோழன்;
பனை சூடிய சேரன்;
வேம்பு சூடிய பாண்டியன்;
"கார்த்திகை அழகன் காந்தள் சூடினன்!"
தமிழ்ப் பூவே! தமிழர்ப் பூவே!, தமிழ் நிலத்தின் பூவே!
செங்காந்தள் பூவே!
கவர்ந்திழுத்த கார்த்திகைப் பூவே!!
அன்றவள் கண்வரிகளில் கண்டபோது
களவு போய்த் தொலைந்தேன் - சொன்னேனன்றோ?!
"இன்றிவர் விதைத்ததெலாம் முளைப்பது" சொல்ல
ஏழு மாலை எழுந்து நிற்கும் இக்குலத்தின் பூவே!,
பூப்பது மென்மை! பூத்து நிற்பது வீரம்!
உன் எழிலை இன்று கொள்ளை கொள்கின்றேன் -
உன்னிடம் சொல்லிவிட்டே!
என் நெஞ்சள்ளும் கொள்ளையை எது தடுக்கும்?
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே" என்றவன் பாவேந்தன்!
கார்த்திகை மலரே, காந்தள் குலமே,
"எங்கு பூப்பினும் எங்கும் நிறைகவே" என்றனன் கேள்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏபரல்-2004
பாரதிதாசனுக்கு என் வீரவணக்கம்! (உரை வீச்சு)
பாரதிதாசனே,
எமது சொற்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்தவன் நீ!
தமிழின் காலமெல்லாம் உன் காலம்.
எமது கொம்புகளுக்குக் கூர் சீவியவன் நீ!
அவற்றில் வண்ணம் தீட்டாமல் விட்டு வைத்தனையே! புரிகிறது.
எமது சுண்டிப் போன குருதியையும் சுழியிட்டு ஓட வைத்தவன் நீ!
மதகுகள் அதற்கு மணல் மேடு.
எமது திசைகள் நூறெனினும், உன் திசையில் ஒன்றச் செய்தவன் நீ!
காண்கிறது தமிழ் மண் அவ்வப்போது.
எமது அகத்துக்கு முகம் கொடுத்தவன் நீ!
அங்கு வாழ்வது தீ!
எமது சிந்தைக்கு செயல் கொடுத்தவன் நீ!
தெளிவு கொண்டோ ம் யாம்.
எமது கரங்களில் வாள் தந்து சென்றவன் நீ!
இன்னும் உறை போகவில்லை அது.
எமது அறிவிற்கு, பகை அறியும் பாடம் தந்தவன் நீ!
களை அரியவும் கற்றுக் கொண்டோ ம் யாம்.
உன்னைக் கசடறக் கற்றவர் கையளவு;
கற்க வேண்டியோர் தமிழளவு.
கற்போர் தமிழர்;
கற்பார் தமிழர்!
நிற்பார் தமிழர்!
நிற்கிறேன் உன் திசை தொழுது!
விரைத்த என் விரல்கள் என் நெற்றிப் பொட்டிலே;
வீர வணக்கம் சொல்கின்றேன் உன் நாளில்! ஏற்றுக் கொள்.
வாழ்க நின் புகழ். வளர்க தமிழகங்கள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-200
பாரதிதாசனின் குடியானவன் - பாரதிதாசன் வாரம் (April21-29)!
பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி
ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000 அளவில்
இருந்தது.
அசித் பிரேம்சிக்கு கடந்த 2005-6 ஆம் ஆண்டு நிகர இலாபம் மட்டும்
2205 கோடி உரூவாய். முகேசு அம்பானியின் ரிலையன்சு பெட்ரோலியத்தின்
பங்குச் சந்தை மதிப்பு நேற்று 143,000 கோடி உரூவாய்! அவர் தம்பி
அணில் அம்பானியின் சந்தை மதிப்பு 75,000 கோடிகளுக்கும் மேல்.
அமெரிக்க அதிபர் சியார்ச் புஃச், இந்தியர் சீனர் போல படியுங்கள்.
இல்லாவிடில் உங்கள் வேலையெல்லாம் அவர்களுக்குப் போய் விடும்
என்று பெருவிரலால் தனது மூக்கைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி
அமெரிக்க இளையர்களுக்கு பயங்காட்டியிருக்கிறார். இந்தியர்கள்
படிக்கும் சேவைப் படிப்பை தமது இளையரும் படிக்க வேண்டும்,
மேதாவிகளைப் போல புறந்தள்ளக் கூடாது என்பதே அதன் சாரம்
என்பது எனது கருத்து. ஆயினும் இந்தியப் படிப்பாளிகள், இதோ பார்
நாங்கள்தான் படிப்பாளிகள்; அமெரிக்காவே எங்களைப் போல படியுங்கள்
என்று சொல்கிறது என்று மார்தட்டி நமது பெருமையை மின்னஞ்சல்கள்
வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கக்கூடும்.
மிகவும் மகிழ்ச்சியான சேதிகள்தான்! மறுப்பதிற்கில்லை.
இவை இப்படியிருக்க, தமிழகத் தேர்தலில், அரசியல் கட்சிகள்
பல தம்மையும் அறியாமல் உண்மை பேசிக் கொண்டிருக்கின்றன.
ஒரு கட்சி உருவாய்க்கு அரைக்கிலோ அரிசி போடுவோம் என்கிறது.
இன்னொரு கட்சி 10 கிலோ பரியாய்த் தாரோம் என்கிறது.
இன்னொரு முளைக் கட்சி 15 கிலோ பரியாய்த் தருவன் என்கிறது.
இந்த அறிவிப்புகள் நாட்டில் பொருளாதாரத்தைக் கெடுக்கும் முட்டாள்தனம்
என்பது சிலரின் கருத்து.
இல்லை இல்லை, ஏழையின் வயிற்றிலும் புளி ஏப்பம் வரும் பார்!
இதுவன்றோ சீரும் சிறப்பும் என்று சமத்துவம் பேசுவோர் உண்டு.
ஆகா! ஏழையின் சிரிப்பில்தானே இறையைக் காணமுடியும்!
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரன்றோ? என்றுருகும்
ஆன்மீகர்கள் உண்டு!
ஆனால் உற்று நோக்கினால், இதில் கிடக்கும் ஞாய அஞ்ஞாயங்கள்
பல தளங்களிலும் பரந்து கிடக்கின்றன.
6.25 கோடி தமிழக மக்கள் தொகையில் ஏறத்தாழ 1.5 கோடி குடும்பங்கள்
உள்ளன. ஒரு குடும்பத்திற்கு 4 பேர் சராசரி என்று வைத்துக் கொண்டால்
6 கோடி மக்களும் குடும்ப அட்டைகளுள் உண்டு; கணக்கு ஏறத்தாழ
சரியாகவே வருகிறது.
கணக்குப் படி ஒவ்வொரு குடிக்கும் (குடிமகன்/குடிமகள்) 5 கிலோ அரிசி.
இதை 10 உரூவாய்க்குக் கொடுக்க ஒரு கட்சி, எட்டே முக்கால்
உரூவாய்க்கு கொடுக்க ஒரு கட்சி, 4.40க்கு கொடுக்க ஒரு கட்சி
இன்று முன் வந்திருக்கின்றன.
இப்படிக் கொடுக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லாருமே
கோடீசுவரர்கள்!
இதில் எது சிறந்தது என்று தீர்மானித்து வாக்களிக்க வேண்டியது
திருவாளர் வாக்காளார் என்று சொல்லப் படுகிற திருவாளர் குடிமகனின்
வேலை.
பொங்கலுக்குப் பொங்கல் மாட்டுப் பொங்கலும் வரும்.
மாட்டுப் பொங்கலன்று மாடுகள்தான் நாயகர்கள். அந்த மாடுகள்
குளிப்பதென்ன? கொம்புகளை சீவிக் கொள்வதென்ன? அதில்
வண்ணமும் சுண்ணமும் பூசிக் கொள்வதென்ன? முதலாளியையும்
சற்றே சீறிப் பார்ப்பதென்ன?!
அதைப்போலவே, அப்படியேதான், அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை
(இப்பொழுது அடிக்கடி வரும்) வரும் தேர்தல்களில் திருவாளர்
குடிமகன்தான் நாயகர். அவருக்கு அரசமரியாதை.
எல்லாப் பணக்காரர்களும் இக்குடிமகனின் பொற்பாதங்களை
வணங்கி வணங்கி அல்லது வணங்குவதாகச் சொல்லி சொல்லி
வாக்குக் கேட்பார்கள்.
பொற்பாதங்களை வணங்கி வாக்குக் கேட்க
நாவும் கூசாது! தன்மானமும் தடைசொல்லாது!
பெரியார் சீடர்களும் இதில் அடங்குவர் என்பது வெட்கக் கேடு!
ஞாயம் செய்பவர்கள் ஏன் வாக்காளர்களின் பொற்பாதங்களை
வணங்க வேண்டுமென்று எனக்குப் புரியவே மாட்டேன்கிறது!
நாளைக்கு 10 உரூபாய் சம்பளம் வாங்கும் உணவக மேசைத்
துடைப்பவன் கூட அவன் முதலாளியின் பொற்பாதங்களை
வணங்குவதில்லை.
அரசியலில் வருமானம் அதிகமாக அதிகமாக வறுமையிலும்,
புழுதியிலும் வாழும் மனிதன் இந்தப் ஆசைக்காரப் பிசாசுகளுக்கு
எசமானனாகி பொற்பாதங்களை நீட்டுகிறான் போலும்! விந்தை!
இந்தக் குடிமகன் தான் பாரதிதாசனின் குடியானவன்!
பாரதிதாசனின் "குடியானவன்" இன்றைக்கு
அரசர், செல்வர், எதிரி என்ற யாவரும் வணங்கும் மாவரசன்!
எல்லோருமே அவனின் ஒற்றை வாக்குக்காக அவன் காலடியில்!
இவனின் எட்டி உதைப்பில் மேற்சொன்னவர்கள் இவனைப்போல
தரித்திராண்டியாகப் போய்விடக் கூடும்!
சொல்ல மறந்துவிட்டேன் குடியானவனுக்கு மற்றொரு பெயர்
தரித்திராண்டி!
இந்தக் குடியானவனுக்கு இலக்கணமென்ன?
அவனின் உடலில் பரவிக் கிடக்கும் வியர்வையும், குருதியும், பூழ்தியும்
(புழுதியும்) இலக்கியமாகிக் கொண்டிருக்கும் பலரால்!
அவனின் இலக்கணம் என்று வரையறுத்தவர் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன் மட்டுமே என்றால் அது மிகையல்ல!
// "ஏலாது படுக்கும் எண்சாண் உடம்பை",
நாலுசாண் அகன்ற ஓலைக் குடிசையில்
முழங்கால் மூட்டு முகம்வரச் சுருட்டி,
வழங்கு தமிழரசு வளைத்த வில்லெனக்
"கிடப்பவன்" பகலெல்லாம் கடுக்க "உழைப்பவன்"
"குடியானவன்" எனக்கூறு கின்றனர்
முடிபுனை அரசரும், மிடியிலாச் செல்வரும்.
- பாரதிதாசன் கவிதைகள் - குடியானவன்
//
ஏலாது படுப்பார் எல்லோரும் இரவில்! எல்லோருக்கும் உடல்
எட்டு சாண் உயரம்தான்.
ஆனால், குடியானவனின் படுப்பிடத்தின் அகலம் நாலே சாண்!
நிழல்தருவதுவோ ஓலைக் குடிசை! வில்லென உடலை வளைத்து,
முழங்கால் மூட்டு முகத்தில் முத்தமிடச் சுருட்டிப் படுத்துக்
கொண்டிருப்பவன் குடியானவன்! இவன் பகலெல்லாம் கடுமையாக
உழைப்பான். அல்லது உழைக்க வைக்கப் படுவான்.
இந்த உழைப்புக் கூட்டத்தில் சின்ன சின்ன மாற்றங்கள்
இருக்கக் கூடும். ஓலைக் குடிசைக்குப் பதில், ஓட்டையும்
விரிசலும் ஆன, ஓடு அல்லது சிமிட்டித் தளம் போட்ட
வீடாக இருக்கலாம். நகரமாக இருக்கலாம் கிராமமாக இருக்கலாம்.
ஏன் வெளிநாடாகக் கூட இருக்கலாம். ஆனால், அவனுக்கு,
வீட்டிற்குள், எல்லோருக்குமாய் இடத்தைப் பிரித்துக்
கொடுத்து, கொசுவுக்கும் கொஞ்சம் இடம் போனதற்குப் பின் கிடைக்கக்
கூடிய இடத்தில் முழங்காலைச் சுருட்டிக் கொண்டுதான்
படுக்க முடிவதாய் இருக்கும்.
அந்தக் குடியானவனை நோக்கி அரிசிப் பைகள் நீட்டப் படுகின்றன.
இவனுக்கு மாட மாளிகைகள் கிடைக்கப் போவதில்லை. மாடு கூட
மற்றவரைச் சுமக்கும்போழ்துதான் அதனை ஓட்டும் இவனைச் சுமக்கிறது.
இன்றைக்கு இந்த அரிசிப் பைகள் வாக்குகளை வாங்கிக் குவிக்கும்
என்று சமர்த்தாக அரசியல் கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன என்றால்,
இது சிறப்பா? அல்லது சீரழிவா?
இந்த வழங்கலினால் வாக்குகள் ஏதோ ஒரு கட்சிக்குக் குவியும்
என்றால் அது அந்த நாட்டின் செல்வ நிலையைக் காட்டுமா
அல்லது வறுமை நிலையைக் காட்டுமா?
அந்த நாட்டில் செல்வ நிலை என்றால்,
யாருக்கு அரிசி ஓசியில் வேண்டும்? தேவையிருக்காதே!
இன்றைக்கும் வயிற்றுச் சோற்றுக்கு அரிசிக்கு ஆளாய்ப் பறக்க வேண்டிய
நிலையில் இருக்கும் குடியானவர்கள், வயல்வேலைகள்
மட்டும் செய்பவர்கள் அல்லர். பெட்டிக் கடை, சாலையோரக் கடை,
கறிகாய் விற்றல், புலால் விற்றல், சிறு வணிகர், சாலைப்பணியாளர்கள்,
வாசற்காவலர்கள், வாகன் ஓட்டிகள், சமையற்காரர்கள் என்று
எத்தனையோ வகை உண்டு.
எத்தனையோ கோடீசுவரர்கள் உருவாகும் நாட்டில்,
அரசோச்சுவர்களும், செல்வந்தர்களும் அண்டிப் பிழைப்பது
இந்தக் குடியானவர்களைத்தான் என்பதையே இத்தேர்தலும்
காட்டுகிறது!
இந்தக் குடியானவர்களை வைத்துத்தான் அரசராக முடியும்!
செல்வந்தர்களாக முடியும்! ஏன் போராட்டம் நடத்தினால்,
போர்கள் வருமானால் அங்கேயும் இம்மறக் குடிகள்தான்
போர்முனையில் நிற்க வேண்டி இருக்கும்! மெத்தப் படித்தவரும்,
பணக்காரரும் தங்கள் ஆதரவுகளை வலைப்பதிவுகளிலோ,
ஏடுகளிலோ எழுதிவிட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்! இயன்றால்,
சிறு நிதியளித்து விடுவர்; அல்லது இறைவனிடம் வேண்டிக் கொள்வர்
நாட்டைக் காப்பாற்ற!
பாரதிதாசன் குடியானவனின் உழைப்பைக் கண்முன் நிறுத்துவார் -
அது கண்ணை விட்டு அகலாது!
"விடியுமுன் எருதின் வால் அடி பற்றிப் பகல்
முடிவினில் எருதின் முதுகிற் சாய்ந்து
வருங்குடியானவன்......"
இப்படி வரும் குடியானவனிடம் போர் பற்றிச் சேதிவரும்! போருக்கு
அழைக்கப் படுவான்! போர் என்பது எதிரி நாட்டை எதிர்த்தோ
அல்லது உள்நாட்டு அரசியல் எதிரிகளைப் பொருதவோ இருக்கக்கூடும்.
உரிமைப் போராட்டமாகக் கூட இருக்கும்! அல்லது அரசியல் கட்சி
ஊர்வலமாகவோ, பொதுக் கூட்டமாகவோக் கூட இருக்கும்!
காசு கொடுத்தோ அல்லது ஓசியாகவோ போக வேண்டி இருக்கும்!
பாரதிதாசன் இருவரிகளில் இதைச் சொல்லும் போது பளீரென்று
அறைந்தால் போல இருக்கும்!
"எழும் அரசர், செல்வர், எதிரி இம்மூன்றுக்கு
உழைக்க வேண்டும் அவ் வோலைக் குடிசை.."
அப்படி உழைக்கும் குடிசையின் குடி, நாடு காக்க அல்லது செல்வந்தர்
காக்க, அல்லது உரிமை காக்க எழுகிறான்! எப்படியென்றால்,
"உச்சியி னின்றும் ஓராயிரம் அடிக்கீழ்
வைச்ச கனலும் மலைமேல் வழிதல் போல்,
அந்த நெஞ்சத்தில் ஆயிரம் ஆண்டுமுன்
குவியப் புதைந்த அவியா மறக்கனல்,
அக்குடியானவனின் அழகிய தோளிலும்
விழியிலும் எழுந்து மின்ன .... எழுந்தான்! "
அப்படி எழுபவன் சற்றே தடுமாறி நிற்கிறான்! ஏன்? அதையும்
பாரதிதாசன் விளக்குகிறார்.
"..........அவனுக்கு, இதற்கு முன் வைத்த
இழிநிலை, அதன்பயன் என்னும் வறுமை
இவை, அவன் காலை இழுத்தன கடித்து!"
இன்றுவரை உணவுக்கே அல்லல் பட்டு வாழ்ந்தவனின்
நிலை இழிந்து வறுமையில் வாடுகையில், நெஞ்சில்
புதைந்து கிடக்கும் மறக் கனல் வரும்போது
அந்த வறுமையில் விளைந்த இழிபயன் காலைக் கட்டி இழுக்கிறது!
நாளை சோற்றுக்கு என்ன செய்வார்கள் வீட்டில் என்ற நினைவு
வந்து விடக் கூடும் அல்லவா? கவிதையை நிறைவு செய்யும் போது
பாரதிதாசனார், அந்த வறுமையையும் இழிநிலையையும் கடந்து
மறத்தினைக் காட்ட போரிலே கலந்தான் என்று முடிப்பார்.
அது இன்றைக்கும் பொருந்துமன்றோ?
அரசோச்சியவர்களை ஆதரித்தோ, எதிர்த்தோ நடத்தும் போர்கள்,
அரசைப் பிடிக்க அரசியலார் செய்யும் தந்திரங்கள், வாக்குறுதிகள்
இவைகளை மட்டுமே நம்பி இவர்களுக்குப் பல்லக்குத் தூக்கி,
இவர்களைக் கோடீசுவரர்களாக்குவதே குடியானாவனின் பணியாக
காலகாலமாய் இருந்து வருகிறது.
சத்துச் சோறு, இலவச அரிசி, குறைந்த விலை உணவு என்பனவே
இந்நாட்டை ஆட்சி செய்கின்றன. ஏனெனில் இங்கே குடியானவர்கள்
மிக அதிகம். இந்தக் குடிகள் அரசர்கள், செல்வர்கள், அவர்களின்
எதிரிகள் என்ற மூவருக்காகவும் உழைக்கிறார்கள்.
அவர்களின் நிலையே நாட்டின் நிலை. அது தரித்திர நிலை.
12000 புள்ளிகளை அடைந்த சென்செக்சுக்கும் இவர்களின்
வயிற்றின் நிறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இருக்கப் போவதுமில்லை.
பொருளாதாரம், விஞ்ஞானம் போட்டி போட்டு வளர்ந்தென்ன?
இன்றைக்கும் கவர்ச்சிப் பொருளாக, இருப்பது "வயிற்றுச் சோறுதான்".
அதையே தேர்தல் களம் காட்டுகிறது. இது வறுமையின் தொடர் நிலை.
இதற்காக நான் அரிசி வழங்கல் பற்றிச் சொல்லும் எந்தக் கட்சியையும்
குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என்பது வேறுதளங்களில்
இருந்து பார்க்கப் பட வேண்டிய விதயம். ஆனால், கட்டாயம்
ஒரு உண்மை நம் கண் முன் கிடந்து தவிக்கிறது.
அது வறுமை. வயிற்றுச் சோற்றுக்குத்தான் இன்னும் இந்த நாட்டில்
பெரும்பான்மையினர் வாக்களிக்க வேண்டிய நிலை. உடல்நலம்,
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைக் கடந்த தேவைகளுக்கெல்லாம்
இன்னும் சிந்திக்க வாய்ப்பே வரவில்லை.
சம்பளக்கட்டுகள் அடுக்கிக் கொண்டே போனாலும், வயிற்றுக்கு
யார் சோறுபோடுவார்கள் என்ற நிலையில் நாட்டில் பெரும்பாலோனோர்!
நாடெங்கிலும் தனியாரும், அரசாங்கமும் அன்ன தானம் செய்து
புண்ணியம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை
அன்னதானத்திற்கு ஆள்கள் இல்லாவிடில் இந்தப் புண்ணியங்கள்
இவர்களுக்கு கிடைக்காதென்றே வறுமைகள் வளர்க்கப் படுகின்றனவா?
"வறுமையை ஒழிப்போம்!" என்று சொன்ன எத்தனையோ அரசர்களை
இந்நாடும் உலகமும் பார்த்திருக்கும்! நாம் பேசுவது அவர்களில்
வெகுசிலரை!
வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! "ஏனெனில் அதுவே
நாட்டை ஆள்கிறது - சில அரசர்களுக்கு பல்லாயிரங்கோடிகளைக்
கொட்டிச் சம்பளமாகக் கொடுத்து!"
வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! " ஏனெனில் அதுவே
பலரைச் செல்வந்தர்களாக்குகிறது - பலரை ஏழையாக்கித்தான்
சிலர் செல்வந்தராக முடியும்!"
வறுமையை ஒழிக்க மாட்டார்கள்! " ஏனெனில் படித்தவனும், பணக்காரனும்
கவிதை எழுதுவான் - வறுமையை ஒழித்து விட்டால் அரசனுக்கும்
செல்வந்தனுக்கும் எதிரியுடன் போரிட ஆள் கிடைக்க மாட்டார்கள்"
மாறாக, "எம்மை வள்ளலாக்கும் வறுமையாளர்கள் வாழ்க!" என்பர்.
மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு ஊட்டப்படும் பொங்கற்சோறு
போன்றது குறைந்தவிலை அல்லது பரியாய்த் தரப்படும் அரிசி.
அந்த மாடுகளுக்குப் பூசப்படும் வண்ணக் குழம்புகள் அல்லது பொட்டுகள்
போன்றது வண்ணத் தொலைக்காட்சி வழங்கல்கள் போன்ற அறிவிப்புகள்.
மீண்டும் அடுத்த தேர்தலில் அரிசி விலை புதிதாக நிர்ணயம் செய்யப்படும்.
வேறு ஒரு இலவசமும் திட்டமிடப்படும்.
அதற்குள் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அரசியலாளர்களின்
சொத்துக்கள் பல நூறு அல்லது ஆயிரம் கோடிகளை எட்டி விடும்.
ஒரு நடிகனின் விலை பல நூறு கோடிகளாகிவிடும்!
வயிற்றுச் சோற்றுக்காக குடியானவன் மட்டும் மீண்டும்
இவர்கள் தரும் அரிசிப் பைகளில் வரையப்பட்டிருக்கும்
இவர்களின் படங்களைக் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடும்!
அன்னதானம், இலவச அரிசி, காட்சிப் பெட்டி, செருப்பு, பல்பொடி,
சத்துசோறு, பாடப்புத்தகங்கள் போன்ற வழங்கல்களை எதிர்த்தோ
அல்லது எமக்கு இவையெல்லாம் சரவல் இல்லை என்ற அகத்தால்
ஏற்படும் அறிவாலோ அல்லது பொருளாதாரப் புலி என்ற நிலையிலோ
இதனை நான் எழுதவில்லை.
இவைகள் இன்றைக்கும், என்றைக்கும் பெருவாரியான மக்களுக்கும்
தேவை, தேவை என்ற நிலையே இருக்கிறதே, அதுவும் அரசாள்பவரின்
கடைக்கண்ணருளாலேயே இவை கிடைக்கும் நிலை இருக்கிறதே,
இன்னமும் இந்த அடிப்படைத் தேவை நிரந்தரமாகவில்லையே என்ற
நடைமுறையைச் சுட்டிக் காட்டுகிறேன்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாளில் அம்மாபெரும்
தமிழ்க்கவிஞனை வணங்குகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-2006
Sunday, March 05, 2006
கனவிலிது கண்டேன்!
பங்கு கொண்ட கவிதை. தன் கனவில், மங்கை ஒருத்தி கனவு, காண்பதான
கற்பனையில் எழுதியது. அய்ந்தாம் பாடல் மட்டும் கற்பனை அல்ல. பொங்கல் காலத்தில்
ஈழ மகளிர் இராணுவம் அணி வகுத்து நிற்க, அதில் ஒரு மகள் கரண்டியால் பொங்கலைப் பொங்குவது போன்று
படம் ஒன்று ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அதையொட்டி எழுந்தது அய்ந்தாம் பாட்டு.
- நயனன்.
கனவிலிது கண்டேன்
-----------------
நித்திரையில் நினைந்திருந்து, வஞ்சமிலா
நெஞ்சில் விளைந்தன வெல்லாம்
சித்திரை முழுநிலவுத் திரையதனில்
செழுக்கமல முகநல்லாள் முறுவலித்து
எத்திரையும் கண்டிராக் காட்சியெலாம்
எழுதியோடல் கண்டாள்; கனவெனவே!
முத்திரையாய்ப் பதிந்ததுவே மனதிலிணை
மற்றிலாதென் கனவிலிது கண்டேன். (1)
கார்முகிலின் கன்னத்தில் முத்தமிட்டுக்
கூந்தலையும் கோதிவிட்டு மலையன்னை
கூர்முகடு பேறுபார்த்துக் கொட்டிவிட்டத்
தூய்வெள்ளித் துளியெல்லாம் கூட்டாகி
ஊர்முழுக்க ஓடிடினும் ஆறெல்லாம்
ஓர்கறையும் ஏறாமல் வெள்ளியேபோல்
ஆர்கடலில் அப்படியே அடைக்கலமே!
ஆரணங்கின் கனவிலிது கண்டேன். (2)
ஆழிபோன பாதையெலாம் குன்றுகுழி;
ஆடியாடி, கழுத்தெலாம் உறுத்திடவே
ஊழிஊழி வண்டியிழுத் தமாடெல்லாம்
ஓர்வலியும் இலாமலே, செந்தரையில்
வாழிவாழி சொல்லியே பார்முழுக்க
ஓடினபல் உந்துகளை முந்தியே!
தாழிநிறைத் தண்ணீர்போல் தழும்பாதத்
தாமரையாள் கனவிலிது கண்டேன். (3)
காளையவன் வந்துவிட்டான்; விழிக்கடைக்
காட்சியதில் தெரிகின்றான்; விழுங்கினள்
வேளையது வந்ததனை கால்விரலால்
வேல்விழியாள் கோலமிட்டுச் சுட்டுகிறாள்;
பாளையது பிரிந்துபூ வந்ததுபோல்
பூமகளும் கசிந்துநீர் பூக்கின்றாள்!
மூளையது மும்மழைக்கு முத்தமிட
மாமகளின் கனவிலிது கண்டேன். (4)
கண்டனன் என்கனவில் அவள்கனவை
கலங்கமிலாப் பொன்னொத்த மேனியையும்;
பெண்ஒருத்தி, தன்னைப்போல் தானிருந்தாள்;
பசுங்கொடியாள், நல்லாள்; கரமொன்றில்
விண்திரும்பு வாளொன்றை வைத்திருந்தாள்
விடுக்கென்று உறையிலே குத்திட்டு
மண்திரும்பி, பொங்கலே பொங்கினாள்!
மங்கலத்தின் கனவிலிது கண்டேன். (5)
கண்ணகிக்கும் மாதவிக்கும் பன்னிரண்டில்
கல்யாணம்; காப்பியமும் ஆனதுவே;
பெண்குலமே பகையறுக்கப் போர்முனையில்
பிறவியெலாம் நிற்கிறதே, கவலையின்றி
மண்மகிழும் மங்கையராய் அணிமணியும்
மனைமகிழ்வும் கல்வியும் துறந்துவிட்ட
திண்மனவர் திசைனோக்கித் தேம்புகிறாள்;
தாயிவளோ? கனவிலிது கண்டேன்! (6)
சாதிமத பேதமெலாம் தரித்திரமே
சோதிவந்து சொன்னதுவோ யாரறிவார்?
ஊதிவிட்டு ஒன்றுகூடி உழைக்கிறது
ஓர்குமுகம்; வஞ்சம்பொய் மதுவில்லை;
தேதிஒன்றும் தெரிகிறது தளையறுக்க!
தீதெல்லாம் திரள்திரளாய்த் தொலைகிறது;
மேதினியில் தலைநிமிர்ந்து நிற்கிறது!
மாதவத்தாள் கனவிலிது கண்டேன். (7)
எண்திசையும் எங்கேயும் எல்லாமும்
இன்தமிழே எழுதிக் கிடக்கிறது
விண்திசையில் ஒருகருடன் வியாழம்
வெள்ளிசனி கடந்து இனுமுயர
'அண்டப் பகுதியின் உண்டை'என்ற
அழகுமொழி அட்டையில் எழுதிநின்றார்;
பண்ணொப்ப சிரித்தார் மணிவாசகர்!
பண்மொழியாள் கனவிலிது கண்டேன். (8)
பணங்காய்ச்சிப் பொறியெல்லாம் எங்குமிலை
பாலோடு சோறோ தேனோ
மணமோடு கலந்துதர பரிப்பொறிகள் (பரி=free)
மண்ணெங்கும் முளைத்திருக்கும்; மாந்தர்
குணமோடு குடியிருப்பர் பொன்கூரைக்
குடிலுக்குள்; பச்சைவயல் பக்கத்தில்
கிணம்கிணமாத் தண்ணீரும் எண்ணெயும்!
குமரியவள் கனவிலிது கண்டேன். (9)
ஆதவனின் அகங்கண்டு அடங்கிப்போய்
அடைந்துகொள் வெண்மதித் திரைமறைய
மாதவளின் இமைகளுக்குள் நெளிந்து
மெதுவே உதிக்கின்ற விழிகள்;
போதவளும் எழுகின்றாள்; நிறைநீறு,
பெருந்திலகம்; போற்றி என்றேன்!
ஈதவளோ, தமிழன்னை நானென்றாள்;
யானும் மலர்ந்தேன்; வாழிஎன்றேன். (10)
- நயனன்
01-பிப்ரவரி-2006
Tuesday, July 26, 2005
இளையராசாவின் இசையில் திருவாசகம் - பழுது ?
தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு செய்தவர் என்று சொல்லப்படுபவர். அரங்கனுக்குக் கோபுரம் எடுத்தது முதல் வெகு அண்மையில் மூகாம்பிகைக்கு அணிகள் சூட்டியது வரையிலான அவரின் கடவுள் ஈடுபாடு அனைவரும் அறிந்தது.
தலைசிறந்த தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருவாசகத்தை, மேற்கத்திய இசையில், பல நாட்டுத் தமிழர்களின் ஆர்வத்திலும், ஒருங்கிணைப்பிலும் இளையராசா கொண்டுவருகிறார் என்று ஈராண்டுகளாக கேள்விப் பட்டபோதெல்லாம், அது பல எதிர்பார்ப்புகளை பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது. எனக்கும்தான்.
கடந்த மாதம் சூன் 30 ல் முதல் நெருவட்டு வெளியிடப்பட்ட மேடையில்
தேவார திருவாசகத்திற்குத் தொடர்புடையவர்கள் நிறைய பேர் மேடையில் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனோ, மேடை, தேவார திருவாசக உலகில் இருந்து தொலைவில் இருந்ததாகத்தான் உணர முடிந்தது. அவரின் திருவாசக வெளியீட்டை சில நாள்களாகக் கேட்டபோது உணர்ந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
பாராட்டுதல்கள் என்றால், அவரின் முயற்சிக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும். அதோடு இம்முயற்சிக்கு அடித்தளமாக இருந்த காசுபர் மற்றும் அவரோடு உழைத்தவர்களும் பாராட்டுதற்குரியவர்கள். இதற்காக செலவிட்ட நேரத்தில் இளையராசா வேறு பாடல்களுக்கு இசை அமைத்திருந்தால் நிறையவே சம்பாதித்திருக்கலாம். இதனோடு தொடர்புடையவர்கள் (குறிப்பாக திரு.காசுபர்) தத்தம் மதங்களைக் கடந்து திருவாசகத்தின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இணைந்தது, தமிழும் தமிழரும் உணர்வால் மதங்களைக் கடந்தவர்கள் என்ற உண்மையைக் காட்டியது. பல நாட்டு இசை வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து இதனை ஆக்கிக் காட்டிய நமது இளையராசாவை நாம் உச்சிமுகரத்தான் வேண்டும்.
நிறைகள் என்றால், பலராலும் பாமரனாலும் அறியப்பட்ட ஒரு இசைமேதை இதில் ஆர்வத்துடனும், தனது வாழ்வின் குறிக்கோள் எனவும் கொண்டு ஈடுபட்டது மிகவும்போற்றத்தக்கது. ஏனெனில், 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டி தொட்டியெல்லாம் பரவிய அய்யப்பன் பாடல்கள், 20 ஆண்டுகளில் தோன்றிய பல ஆதிபராசக்தி பாடல்கள், எல்.ஆர்.ஈசுவரி குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் என பலவும் பாமரனையும் பலரையும்
எட்டியிருக்கையில் சிவ மெய்யியல் கொண்ட ஒப்பற்ற தேவார திருவாசகங்கள் பாமரனையும் படித்தவனையும் எட்டாதிருந்தது, எட்டாமலிருப்பது என்பது தமிழ்நாட்டின் வருத்து வியப்புகளில் ஒன்றாகும்.
கோயில்களில் விழாக்களில் பரவலாக ஒலிப்பவையெல்லாம் அண்மைக்கால
சாதாரணக் கவிஞர்கள் திரைப்படப் பாடல் மெட்டுகளுக்கு எழுதிய கடவுள் பாட்டுக்கள்தான். 'அப்படிப் போடு...போடு... ' என்ற மெட்டில் ஒரு அய்யப்பன் பாட்டு இருந்தால் வியப்பில்லை. அவற்றில் பல பாடல்கள் பொருத்தமில்லாமலும் வெற்று இரைச்சலாகவும் கூட இருக்கும்.
அதோடு, பலருக்கும் கந்தர் கவசம், சுப்ரபாதம், விநாயகர், துர்க்கையை போற்றும் பாடல்கள், கொஞ்சம் சிவனைபோற்றும் பாடல்கள் (எசு.பி.பியின் நமசிவாய ஒலி நாடா) அறியப்பட்டிருக்கும் அளவுக்கு திருவாசகமோ தேவாரமோ அறியப்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் தருமபுரம் ப.சுவாமிநாதன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பாடல்களை அற்புதமாக வெளியிட்டிருக்கிறார். திருவாசகத்தில் இருந்து சுவாமிநாதன் பாடும் குழைத்த பத்தின் 'அன்றே என்றன் ஆவியும்... ' என்ற பாடல் எலும்பைக் கரைத்து விடும்.
இதற்குக் காரணங்கள் எவையாகயிருப்பினும், தேவார திருவாசகங்கள் மிகக் குறைந்தவர்களால் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. இந்நிலையில் ஒரு இசைமேதையின் குரலாலும் இசையாலும் திருவாசகம் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இன்பமாகவே இருந்தது.
அந்தவகையில் தேவையான ஒரு முயற்சியை தகுதியான ஒருவர் செய்தது மிகவும் போற்றத்தக்கது மற்றும் இந்த முயற்சியையே நிறையாகத்தான் நான் காண்கிறேன்.
நிறைகள் இருக்கும் அதேபோழ்து குறைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இளையராசா திருவாசகம் முழுவதையும் இசையோடு கொண்டுவரப் போகிறார் என்றுதான் நான் கேள்விப்பட்டது. அதனாலேயே, அவரின் முதல் வெளியீட்டில் இருக்கும் குறைகளை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது. இது ஒரு வேளை வரவிருக்கும் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தாலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு
மட்டுமே இதற்குக் காரணம்.
1) பிடித்த பத்து, அச்சப் பத்து என்ற இந்த இரண்டு பதிகங்களையும்
இளையராசா அருமையாகப் பாடியிருக்கிறார். பிடித்த பத்தில் 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.... ' என்ற பாடலில் திருவாசகத்தை இயல்பாகப் பாடும்போது உண்டாகும் அந்த மோன நிலைக்கே நம்மை கொண்டு சென்று விடுகிறார். அவரின் குரல் வளமும் நன்றாகவே உள்ளது. அதேபோலவே 'புன்புலால் யாக்கை.... ' என்ற பாடலிலும். பொற்சுண்ணத்தையும், மிக இயல்பான ஆனந்தத்தில் பாட வைத்திருக்கிறார்.
ஆயினும் அனைத்து பாடல்களிலும் மிகுந்து கிடக்கும் இசை, பாடலைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது. அம்மையே அப்பா என்று உருகு உருகு என்று உருகி, உடனே மிகையான பெருகோசையைப் போட்டு, சலனத்தையும் சலிப்பையும், பல இடங்களில் எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறார். ஒரு பாட்டிற்கும் மறுபாட்டிற்கும் இடையே கிடக்கும் இந்த பெருகோசைகள் கேட்போருக்கு சலனத்தையும் அந்த இலயத்தையும் எடுத்து விடுகின்றன.
பெருகோசைக்கு எதிர்ப்பு சொல்ல அல்ல; ஆனால் எந்த பாட்டில் எந்த இடத்தில் அதை வைப்பது என்று ஒன்று வேண்டும் அல்லவா ? இந்தப் பெருகோசை, மிகு ஓசை பல இடங்களிலும் இசையாக அல்லாமல் இரைச்சலாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தைத் தவிர்த்த (த்ிருப்பொற்சுண்ணத்தில் இசை பரவாயில்லை என்று சொல்லலாம்) மற்ற பாடல்களில் இருக்கும் பெரும் குறைபாடு இந்த இரைச்சல்தான். இது தேவையற்றது.
ஓரோ இசை அல்லது மேற்கத்திய இசை என்றால் இப்படித்தான் என்று
நான் நம்பத்தயாரில்லை. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
இலக்கண சுத்தியோடு இயல்பான பண்ணும் ஓசையும் கொண்டவை திருவாசக தேவாரப்பாடல்கள். ஒரு சில முறை இப்பாடல்களைப் படித்தாலே படிப்பவற்கு அதன் இயல்பான ஓசை அமைந்து பாட வந்துவிடும். அத்தகு பாடல்களை அதிக பக்கம் ஒரு சுருதிப் பெட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு குரல்வளமும் தமிழ்வளமும் உள்ளார் சிறப்புடன் பாடிவிடுவர்.
அவற்றிற்கு எந்த இசையும் தேவையேயில்லை. ஆயினும் பலரையும் விரைந்து
ஈர்த்து பாடல்களை நுகரத் தரும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த இசை,
பாடல்களின் தன்மைக்கேற்றவாறு அமையாமல் மிகையான அளவில் அமைந்துவிட்டதால் இசையின் வலியில் பாடல் இளைத்துப் போகிறது.
2) சிவபுராணத்தைத் தவிர்த்த (சிவபுராணத்தைப் பற்றிக் கீழே) மற்றவற்றில்
ஒரு சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருக்கிறார். பொற்சுண்ணம் மற்றும்
திருக்கோத்தும்பியில் தலா 20 பாடல்கள் உண்டு. அவற்றில் முறையே 7 மற்றும் 8 பாடல்களை மட்டும் பாடியிருக்கிறார். அச்சப்பத்து யாத்திரைப்பத்து பிடித்த பத்து ஆகிவற்றில் 6 அல்லது 7 பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார்.
மீதியை யாருங்க பாடுறது ? எப்பங்க பாடுவாங்க ? பாடப்பட்டிருக்கும்
தேவார திருவாசகப் பாடல் ஒலிநாடா/நெருவட்டுகளின் குறையே அதுதான்.
ஒரு பதிகத்தை எடுத்துக் கொண்டு அதில் முதல் மற்றும் கடைசி அல்லது மேலும்
ஒரு பிடித்த பாடல் என்று மட்டுமே பாடி இருக்கின்றனர். முழுமையான தேவாரப்பதிகங்களோ அல்லது திருவாசகப் பாடல்/பதிகங்களோ (சிவபுராணம் தவிர்த்து) கொண்ட ஒலிநாடா அல்லது நெருவட்டு இருந்தால் அரிது. தேவார திருவாசகம் ஓரளவு ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதென்றால் அது தருமபுரம் ப.சுவாமிநாதனால்தான். அப்படி ஒரு குரல்வளம் மற்றும் நேர்த்தி. ஆயினும் அவரும் பதிகத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் என்ற மட்டிலேயே
நிறைய பாடியிருக்கிறார்.
இந்நிலையில் இளையராசாவிடம் எதிர்பார்த்த முக்கியமான ஒன்று இதுவே.
ஒரு தலைப்பு அல்லது பதிகம் என்று எடுத்துக் கொண்டால் அதன் அனைத்து பாடல்களையும் பாடவேண்டும். அப்பொழுதுதான் அதன் இனிமை, மென்மையும்
உண்மையும் உணரமுடியும். இல்லாவிடில் அது பெருங்குறை மட்டுமல்ல தீராக் குறையாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்தக் குறையோடு இளையராசா திருவாசகம் முழுமையையும் பாடிவிட்டதாக எண்ணிவிடல் ஆகாது.
3) பிழைகள் மலிந்து கிடக்கின்றன.
அச்சப்பத்தில் 'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்... ' என்பது
'புற்றில் வாளரவும் அஞ்சேன் ' என்று இருக்க வேண்டும். நெருவட்டோடு
கொடுக்கப் பட்ட கையேட்டிலும் 'வாழ் ' என்றுதான் போட்டிருக்கிறது.
பாடலில் உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.
பொற்சுண்ணத்தில் ஒரு பாடலில் 'பை அரவு அல்குன் மடந்தை.... '
என்பது 'பை அரவு அல்குல் மடந்தை.... ' என்று இருக்க வேண்டும்.
கோத்தும்பியில் 'சீயேதும் இல்லாத செய்பணிகள்... ' என்றிருப்பது
'சீயேதும் இல்லாதென் செய்பணிகள்... ' என்றிருத்தல் வேண்டும்.
யாத்திரைப்பத்தில் 'பெறுதற்கரியன் பெருமானே ' என்பது
'பெறுதற்கரியன் பெம்மானே ' என்று இருத்தல் வேண்டும்.
'மிகவோர் காலம் இனுமில்லை ' என்பது 'மிகவோர் காலம் இனியில்லை '
என்றிருக்க வேண்டும்.
சிவபுராணத்தில் 'ஓங்காரமாய் நின்ற மெய்யே! ' என்றில்லாமல்
'....மெய்யா! ' என்றிருக்க வேண்டும். 'நீள்கழல்கள் காட்டி ' என்பதில்
'காட்டி ' என்பது அளபெடுத்து வரும். பாடலில் கூட அந்த இடத்தில்
'காஅட்டி ' என்பது சாதாரண நெடிலாக வந்துவிடுகிறது.
'நாற்றத்தின் நேரியாய் ' என்பதற்கு பதில் 'ஆற்றத்தின் நேரியாய்.. '
என்றிருக்கிறது. நாற்றத்துக்கும் ஆற்றத்துக்கும் வேறுபாடு இல்லை ?
பிழைகளுள் பெரும்பிழை மற்றும் பொருள் பெருமளவு திரியும் பிழை இது.
ஒரு சில பாடல்களிலேயே என் கண்ணுக்கும் காதுக்கும் எட்டினவை
இத்தனைப் பிழைகள். நன்கு ஆய்ந்தால் மேலும் பிழைகள் இருக்கக் கூடும்.
இப்பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்டு
காலங்காலமாய் நிலைத்து வரும் பாடலைப் பாடும்போது, அதுவும்
பொருள்செலவில், நிறைய ஆள்கள் துணையுடன் பாடப்படும்போது
தகுந்த கவனம் செலுத்தப் பட்டிருக்க வேண்டும்.
இது ஆயிரம் தாமரை மொட்டுக்களும் இல்லை;
அந்தி மழையின் பொழிவும் இல்லை.
இது போன்ற பிழைகளைக் களைவதில் இளையராசா தனக்கே உரித்தான
ஞான முதிர்வுடன் இதைச் செய்யவேண்டும். தருமியாக நின்றுவிடக் கூடாது.
இப்பிழைகளுக்கு, இளையராசா பயன்படுத்தும் நூல் அல்லது நூல்களும்
காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிடும்
நூலில் தம் பங்குப் பிழைகளை சேர்த்திருக்கும். திருவாசகத்தையும்
ஏகப்பட்ட பேர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் பணிக்கு
குறைந்தது நான்கைந்து பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்கனவே
சிவப்பண்டிதமும் தமிழ்ப்பண்டிதமும் கொண்டவர்களின் பார்வைக்கும்
வைத்து பின் பாடலாக்கும் முறைமை(methodology) அல்லது செலுத்தத்தை(process) இளையராசா கையாளவேண்டும். முனையலின் (project) அளவு பெரியது. அதனால்
நூலின் தகுதியை எண்ணி அதனைத் துல்லியமாக இசைக்க எல்லா
முறைகளையும் அவர் கையாள வேண்டும்.
4) சிவபுராணம்:
அ) சிவனை வழிபடுபவர்களிடைப் பரவலாக அறியப்பட்டதும் பாடப்படுவதும்
சிவபுராணம்தான். அதில்தான் பெருந்தவறுகளைக் காணமுடிகிறது.
முக்கியமாக அதனை முதலில் இருந்து கடைசிவரை அடிமாறாமல் பாடவேண்டும்.
ஆனால், தன்னால் முடிந்த மட்டும் அதனை மாற்றிப் பார்த்திருக்கிறார் இளையராசா!
இப்படிப் பாடினால் என்ன என்று யாரும் கேட்கக் கூடும்.
அடிப்படையில் சிவபுராணம் என்பது என்ன ? சிவனின் அநாதியான, பழமையான
முறைமையைச் சொல்வது சிவபுராணம். புராணம் என்றால் அதில் முறைமை
முக்கியமல்லவா ? முறைமை என்றால் படிப்படியாக வரிசையாக ஆதி முதல் ஈறாக முடியவேண்டாமோ ? அதைத்தானே 95 அடிகளில் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
அதன் எளிமையும் முறைமையும்தானே பலரைக் கவர்ந்து பாடவைக்கிறது ?
பின்னர் அதில்போய் எல்லாவற்றையும் ஏற இறங்கச் செய்தால் எப்படி ?
பிற பாடல்களில் அப்படிச் செய்யலாம். யாத்திரைப் பத்திலோ அச்சப்பத்திலோ
பாடல்களில் வரிசையையோ அல்லது அடிகளையோ மாற்றிப் போட்டால் பொருளும் தன்மையும் ஏதும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் அங்கெல்லாம் விட்டு விட்டு எதில் மாற்றக் கூடாதோ அதில் புதுமை செய்வதாக எண்ணி அடிகளையும் பகுதிகளையும் முன் பின்னாக்கி விட்டிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக 'செத்திலாப் பத்தில் ' ஒரு பாடல்:
'அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறையாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. '
(திருவாசகம் - செத்திலாப்பத்து - பாடல் 4)
எண்சீர் விருத்தமான இப்பாடலை அரை அடிகளாக வெட்டி 8 அடிகளாக ஆக்கி
ஏறத்தாழ தலைகீழாகப் படித்தால்,
'த்ிருப்பெருந்துறை மேவிய சிவனே
தென்பராய்த் துறையாய் சிவலோகா
மரக்கண், என் செவி இரும்பினும் வலிது
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
என்பராய் நினைவார்,
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்,
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்,
எனைப்பலர் நிற்க,
இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய் ?... '
பலவரிகள் கீழிருந்து மேல் போட்டாலும் பொருள் அல்லது செய்தி
ஏதும் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதே போல ஆறாவது பாடலான
'அறுக்கிலேன் உடல் துணிபட.... ' என்ற பாடலையும் இம்மாதிரி அடிகளை
மாற்றிப் பாடுதலுக்கு காட்டாகச் சொல்லலாம்.
அதனால் சிவபுராணத்தில் இளையராசா செய்திருப்பது புதுமையாக அல்லாமல்
பெரும் அடிப்படைப் பிழையாகி விடுகிறது. நிறைய அடிகளை அல்லது பகுதிகளை ஏன் இப்படிச் செய்தது பிழை என்று எளிதாய்ச் சொல்லிவிடமுடியும் - எழுதினால் அது பெருகும். அவர் செய்திருப்பதில் ஏதும் ஏரணம் (logic) காணவியலவில்லை.
ஆகவே இளையராசாவின் சிவபுராணம் ஏற்கத்தக்கதல்ல.
ஆ) 'பொல்லாவினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன்... ' என்று தன்னடக்கத்துடன்
ஆரம்பிப்பதாக எண்ணித் தவறாக ஆரம்பித்திருக்கிறார். தனது சிறுமையில்
ஆரம்பிக்கும் முன் இறைவனின் பெருமையையைச் சொல்லி அதன் பின்
தனது சிறுமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அதற்காகத்தான்
அவனை வழுத்தி, பின்னர் போற்றி, பின்னர் அவனையே சிந்தையில் இருக்கச் செய்து அவனின் பரப்பையும் சீரையும் காட்டி/சொல்லி பின்னர் சொல்லவேண்டிய தனது சிறுமையை சொல்கிறார் மாணிக்கவாசகர். அதில் புதுமை செய்வாதாக இளையராசா செய்திருப்பது புதுமை அல்ல. அதற்கு இடமும் இதுவல்ல.
அப்படித்தன் சிறுமையைக் கூறுவதாகச் சொன்னால் எவ்வளவு சிறியவர் என்று
எப்படிச் சொல்லமுடியும் ? பெருமையைச் சொன்னால்தான் அது முடியும்.
மாணிக்கவாசகரே, எடுத்தவுடன் ஈசனை வாழ்த்தி விடவில்லை.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை வாழ்த்திப் பின்னர்தான்
நாதனை வாழ்த்துகிறார். சிவபுராணத்தில் ஒரு முறைமை இருக்கிறது.
இதையே இப்படி மாற்றினால் போற்றித் திருவகவலில் சகத்தின் உற்பத்திப்
பகுதியை எப்படிப் பாடுவார் ? திருவண்டப் பகுதியை எப்படிப் பாடுவார் ?
இ) இதிலும் இசை/மிகு ஓசை இடராக இருக்கிறது. (ஆரம்பத்திலும்
ஆங்காங்கும் 'ஆவா...ஊவா.... ' என்று பின்னனி இசை வருகிறது; அதுவும்
நிறைய. தேவைக்கும் மேல் இருக்கிறது. ஓங்காரத்தைப் பிரித்து 'ஆ ' தனியே
'ஊ ' தனியே சொல்கிறாரோ என்று கூடத் தோன்றியது.)
அழகாகப் பாடிக் கொண்டே போகையில் திடீரென்று பேரோசையில்
ஆங்கிலப் பெயர்ப்புப் பாட்டு!. பின்னனியிலும் கேட்கிறது - தனியாகவும்
கேட்கிறது. பொருந்தவில்லை.
இப்பாடலில் இளையராசாவின் குரல் அருமை. ஆங்காங்கு தாண்டித் தாண்டி
வட்டமடித்துப் பாடாமலும், பின்னாடி ஆங்கிலமும் பேரிசையும் இல்லாமலும்
தனியே இதை இவர் பாடவேண்டும். மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய ஒன்றை
எப்படியோ தவற விட்டுவிட்டார்.
ஈ) சிவபுராணத்தில் பல அடிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை தவிர்த்திருக்கவே கூடாது.
'வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க... ' முதல் நான்கைந்து அடிகளைக் காணவில்லை.
வேகங்கெடாமல், இவர் எப்படி பொல்லாவினையேன் என்று உணர்ந்தார் என்று
தெரியவில்லை.
'காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய் நின்ற... ' என்ற அடிகளும் காணவில்லை.
இன்னும் சில வரிகள் காணாமல் போயிருக்க,
சில இடங்களில் சீர்களையும் வசதிக்கேற்றவாறு விட்டுவிடுகிறார்.
'ஆற்றேன் எம் ஐயா அரனேயோ (ஓ) என்று என்று ' என்பதில்
'ஓ என்று என்று ' என்ற முக்கியமான அலறல்/கதறலை விட்டு விடுகிறார்.
அதேபோல 'அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று ' என்பதிலும்
அந்த 'ஓ என்று ' என்ற சொற்கள் மிக முக்கியம். அவற்றையும் அம்போ என்று
விட்டு விடுகிறார்.
சிவபுராணத்தின் தொடக்கத்தில் மாற்றம் செய்தவர் ஈற்றிலும்
பிழை செய்திருக்கிறார். அதன் ஈறு சொல்லும் சேதி உன்னதமானதும்
முக்கியமானதும் ஆகும்.
யார் சிவனடிக்கீழ் செல்வார் என்று சொல்லவேண்டியதைச் சொல்லாமலே
தாண்டி விடுகிறார். இது பழுது மட்டுமல்ல பாவமும் கூட என்பதனை யாரேனும்
ஒரு நேர்மையான சிவபண்டிதர் இளையராசாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இளையராசா சிவபுராணத்தில் புதுமை புகுத்த முயன்றிருப்பதாகத் தெரிகிறது.
புதுமையை எதிர்ப்பது நோக்கமல்ல. புதுமை முயற்சியில் சரியான அணுகுமுறையும் அடிப்படையும் இல்லாததால் புதுமை தோற்றுப் போகிறது.
இப்படிப் பொருள் பிழைகள், விட்ட பிழைகள், பதிப்பு பிழைகள் எல்லாம் இருந்தால் என்ன ? - ஏதோ பாடியிருக்கிறார்; நொள்ளை சொல் சொல்வதை விட - நல்லாயிருக்கு என்று கேட்டும் கேட்காமலும் சொல்லி விட்டுப் போனால் என்ன ?
திருவாசகப் பாடல்கள் ஒப்பற்ற, கிடைத்தற்கரிய தமிழ் பக்தி இலக்கியம் ஆகும்.
ஏதோ சாதாரண பாடகர் அல்லது இசையாசிரியர் தவறுகள் செய்தால் அது மக்களிடத்தில் நிலைக்காது. ஆனால் இளையராசா தமிழ்நாடு போற்றும் பெருமைப்படும் இசை ஓவர்.
இவர் செய்யும் நன்றும் பிழையும் நிலைக்கக் கூடியது. அன்றும் இன்றும் 95 அடிகளாக இருந்த, இருக்கும் சிவபுராணம் இவரால் 80+ அடிகளாகக் குறைந்தது
என்ற இலக்கியச் சிதைவு திருவாசகத்திற்கு ஏற்படக் கூடாது. மற்ற இலக்கியங்களுக்கும்தான்.
ஒரு இலக்கியமே தலை கீழாக மாற்றப்பட்டிருக்கிறது. பொருள் சிதைந்து போய்க் கிடக்கிறது.
இதற்கு அணுகுமுறைப் பிசகு என்று சொல்லலாம். இதைப் பார்த்து நாம் இளையராசாவிற்கு எடுத்துச் சொல்லாமல் வாளாவிருத்தல் அடாத செயல். இப்படி வாளாவிருந்து விட்டு,
'அந்த கால இலக்கியங்கள் காணாமல் போய்விட்டன - நமக்கு பொறுப்பில்லை -
நாம் மோசம் - ஓலைகளை எல்லாம் கரையான் உண்டு விட்டன - யாரோ கொளுத்திட்டாங்க,- யாரோ ஆற்றிலே போடச் சொல்லிட்டாங்க - மதச் சண்டையில் காணமற் போய்விட்டது - நூலகத்தைக் கொளுத்திட்டாங்க ' என்றெல்லாம் நாம் பழங்காலச் சங்கதிகளைப் பற்றிப் புலம்பினால்,
அது எப்படிப் பொருந்தும் ?
இப்படித்தானே இலக்கிய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படுகின்றன!
பரவாயில்லை - இளையராசாவின் சிவபுராணப் பிசகுகளை அப்படியே விட்டு விடலாம் என்று சொல்பவர்களுக்கு என் கேள்வியெல்லாம் இதுதான்:
'பரித்ரானாய சாதூநாம்
வினாசாய சதுசுகிர்தம்
தர்மசம்சுதா பனர்த்தாய
சம்பவாமி யுகே யுகே '
என்ற பகவத்கீதையின் பாடலை, ஏதாவது ஒரு பெரிய இசைமேதை
தலைகீழாகவோ, அல்லது சில சொற்களை விட்டு விட்டோ அல்லது
'சம்பவாமி யுகே யுகே ' க்கு பதில் 'சம்பவாமி புகே புகே ' என்று பாடினால்,
அதற்கு வைதீகர்களின் விமர்சனமும் சமக்கிருதப் பண்டிதர்களின் விமர்சனமும்
எப்படியிருக்கும் ?
இதனை அனைவரின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இளையராசாவின் முயற்சி பாராட்டத்தக்கது - ஆனால்
அதன் விளைவு 'சிவபுராணத்தில் பழுது ';
'மற்றவற்றில் சில போக்கத்தக்க குறைகள் '.
யாரும் இந்த நெருவட்டையோ ஒலிநாடாவையோ ஓசிப்படி எடுக்காதீர்கள் -
காசு கொடுத்து நேர்மையாக வாங்குங்கள் என்ற விடப்பட்ட அந்த செவ்விய தூய்மையான வேண்டுகோள் புனிதமானது.
அதுபோல அந்த வட்டின் உள் இருக்கும் சங்கதியின்
புனிதமும் காக்கப் படல் வேண்டும்.
ஆதலின் சில வேண்டுகோள்களை இளையராசாவிற்கு வைப்பது நம் கடமையாகிறது.
இதைச் சொல்வது அவரின் மேல் உள்ள பேரன்பினால் மட்டுமே.
1) முதல் வெளியீட்டில் சிவபுராணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.
2) அதன் திருத்திய வெளியீடாக ஏனைய பாடல்களில் பிழைகளைக் களைந்து
சிவபுராணத்தை உங்கள் குரலிலும், உங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுக் குரல்களிலும் அடிமாறாமல் கொண்டு வாருங்கள்.
3) ஆங்கில சிவபுராணத்தை தனிப்பாடலாக வையுங்கள்.
4) நீங்கள் படிக்கும் திருவாசக நூலினை மறுபரிசீலனை செய்யுங்கள். வேறு பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
5) திருவாசகத்தை உணர்ந்த நல்ல சிலரின் (ஒற்றிகளையும், துதிபாடிகளையும்
கைவிடுங்கள்) கூட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
மாணிக்கவாசகரே,
'என்னைக் கோதுமாட்டி, நின் குரைகழல் காட்டி,
குறிக்கொள்க என்று நின் தொண்டரின் கூட்டாய்... ' என்றுதானே வேண்டுகிறார் ?
அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: ஓவர், ஓவம் = ICON, செலுத்தம் = process, முனையல் = project,
ஏரணம் = logic ( நன்றி: valavu.blogspot.com ).