Pages

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்


Thursday, October 22, 2015

Shift என்பதற்கு தமிழில்

Shift என்பதற்கு தமிழில் சொல்லென்ன என்று கேட்டிருந்தார் நண்பர் தமிழ்நாடன்.
Shift என்ற சொல், ஒரு குறிப்பிட்ட காலப்பொழுதையும், காலப்பொழுதின் மாற்றத்தையும்
தனது குணங்களாக கொண்டுள்ளது. தமிழில் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற
பகுப்புகள் இருப்பினும், அவை காலப்பகுப்பாக மட்டுமே காணப்படுகின்றன.
பணிக்காலத்தையும் அதன் மாற்றத்தினையும் உள்ளடக்கிய சொல்லை அவற்றிற்கு
வெளியேதான் தேடவேண்டியிருக்கிறது என்று கருதுகிறேன்.

தமிழிலே சாரி, சாரிகை என்ற சொற்கள் உண்டு. சாரி என்ற சொல்லிற்கு
மூன்று விதமான பொருள்கள் உண்டு. ஒன்று - அணி/வரிசை,
இரண்டு - பக்கம் (வலது சாரி, இடது சாரி என்ற தற்காலச்சொற்கள்.
அந்தரசாரி என்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சொல்லுகின்றன)
மூன்று - வட்டமாக நகர்தல் (circular movement) என்று செ.ப.பேரகராதி கூறுகிறது.
காலத்தின் நகர்வு வட்டத்துள்தானே இருக்கிறது! ஒரு நிறுவனம், மூன்று Shift
ஓட்டுகிறது என்றால், அதனை 24-மணி வட்டத்துள் மூன்று சமபாகமாக (120 திகிரியில்)
பிரிக்கலாமல்லவா? ஆக, சாரி என்ற சொல் ஆழ்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று.
சாரிகை என்ற சொல்லை சேக்கிழார் பெருமான் ஆளுவார்.
"...வன்றுணை வாளேயாகச் சாரிகை மாறி வந்து
        துன்றினர் தோளுந் தாளும்..." என்று இயற்பகை நாயனார் புராணத்தில்
இயற்பகை நாயனாரின் வாளாற்றலை சிறப்பித்துச்சொல்லுவார் சேக்கிழார்.
இங்கே சாரிகை, என்பது இட-வல, வல-இட நிலைமாற்றங்களைக்குறிப்பிடுகிறது.
வலமாக நகர்ந்தவர், மின்னலைப்போல இடமாக திரும்பி வாள்வீசுதலைக்குறிப்பிடுகிறது.
சாரி என்றால் மாறுதல், கை என்பது இடத்து நிலை என்று சொல்வர் உரைகாரர்.
சாரியை என்ற கூறு புணர்ச்சியிலக்கணத்தில் வரும். ஒன்றனை
(விகுதியையோ, வேற்றுமையையோ சார்ந்துவருவதால் அது சாரியை
எனப்படுகிறது என்பர் புலவர். ஆனால், சாரியை செய்யும் வேலையைப்பார்த்தால்
அது சொல்லில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. (மரம் + ஐ = மரமை என்பது
பொருள் தராது என்பதால் அதனுடன் அத்து என்ற சாரியை சேர்த்து,
மரத்தை என்று பொருள்படவைக்கிறது. மரமை என்று இயல்பாக வரும் சொல்
பொருளுணர்த்தாது என்பதால் அத்து என்ற சாரியை சேர்ந்து சொல்லை மாற்றி
பொருளுளர்த்துகிறது, ஆகவே, சாரி என்ற சொல்லிற்கு மாற்றுந் தன்மை
உளதாகிறது.

ஆகவே, கால எல்லையையும், அதன் மாற்றத்தையும் குறிக்கின்ற ஆங்கிலச்சொல்லான
Shift என்பதனை, தமிழிலே, சாரி/ சாரிகை என்றே சொல்லலாம்.
சாரி = Shift, சாரிகை = Shift System என்று சொல்லலாம்.
ஆயினும், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஏற்படுத்தியிருக்கும் எண்ணப்பதிவுகளினால்,
சாரி என்ற சொல்லை விடுத்து சாரிகை என்பதனை மட்டும் புழக்கலாம்.
Shift, Shift System என்ற இரண்டிற்குமே சாரிகை பொருந்திவரும் சொல்லாகும்.
முதற்சாரிகை - 1st Shift
பகற்சாரிகை  - day shift
இராச்சாரிகை  - night shift
எண்மணிச்சாரிகை - 8 hour shift
பதுமணிச்சாரிகை - 10 hour shift
பன்னீர்ச்சாரிகை - 12 hour shift
நெடுஞ்சாரிகை - long shift / big shift (in driving profession or in process plants )
சிறுசாரிகை/குறுசாரிகை - small shift ( in part time jobs)
(அல்சாரிகை, எல்சாரிகை என்று சொன்னாலுந் தகும்)
புதிய அறிவியற்சொற்களுக்குத்தேவை இருக்கிறதென்றாலும்,
பல பொதுவான சொற்களை தொன்மையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
மீட்டெடுக்க வேண்டிய சொற்கள் பல்லாயிரமாய் எண்ணிக்கையில்
கிடக்கின்றன.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, September 05, 2015

சங்க ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்

 

இன்று "சர்வ பள்ளி" ஆசிரியர் நாள் என்று ஒரே விழாக்கோலம். எனக்கு சங்கப்பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வந்தனர். கூடவே கண்ணன் பிறந்த நாள். சங்கப்பாடல்களை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களைப்பார்த்தால், கண்ணன் என்ற பெயரையோ, கண்ணன், கண்ண (கண்ணகன்) என்ற சொற்களை உள்ளடிக்கிய பெயர்களைத்தான் அதிகம் காணமுடிகிறது. என் தரவகத்தில் உள்ள ஆசிரியர்ப்பெயர்த்திரட்டு இன்னும் நிறைவடையாவிட்டாலும் சங்க, சங்க மருவிய காலப்புலவர்களின்... சுமார் 515 பெயர்கள் உள்ளன. இன்னும் சில திருத்தாமலும், கூடகுறையவோ இருக்கின்றன.  ஆயினும் இதனை tentative analysis எனலாம். இந்த எண்ணிக்கையில், 49 பெயர்கள் கண்ணனை உள் வைத்து இருக்கின்றன. (இதற்கு அடுத்தபடியாக கீர, கீரன் என்ற சொற்களை உள்ளடக்கிய பெயர்கள் 27 ஆகும்.) கிழார் என்ற பெயர் பெயரல்ல. அது அடை. அதனால் அதனை எண்ணிக்கை முதல் 5 இடத்தில் வந்தாலும் தவிர்த்துவிட்டேன். கண்ணன் என்ற பெயரைக்கொண்ட புலவர்களின் அப்பாக்களையும் கணக்கிலெடுத்தால் 60 பெயர்கள் (சுமார் 12%) வருகின்றன. கண்ணி என்ற பெயருடைய பெண்பாற்புலவர்கள் 7 பேர் வேறு இருக்கிறார்கள். இத்தனைப்பெயர்களில் கண்-ணன் ஏன் ஆட்சிசெய்கின்றான். மதுராபுரி கிருட்டிணன் எப்படி, எப்பொழுது தமிழ்நாட்டு கண்ணனானான்? என்ற கேள்வி எழவே செய்கிறது. கண்ணகியை அகண்ட கண்ணுடையவள் என்று சொல்வார்கள் (கண் + ண்+அகி?) கண்ணுக்கு, கண்ணனுக்கு சங்கத்தில் அதிக இடம் இருந்திருக்கிறது. கண்ணனுக்கும் சங்க ஆசிரியர்களுக்கும், அவர்களின் அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்.
(படத்தில் ஒட்டியிருக்கும் கண்ணன் படத்தை வரைந்தவர் கேசவ். இரவிக்குமார் முகநூலில் எடுத்தது)
அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, August 07, 2015

சீனி நைனா முகம்மது ஐயாவிற்கு முதலாண்டு நினைவஞ்சலி




மலைசியத்தின் பொங்குதமிழ் மங்கலமே,
... மணிக்கவியே  தங்குநறு மல்லிகையே
கலைமகளின் கையாழே கற்கண்டே
... கனித்தமிழின் கட்டழகுச் சுடரொளியே
தலைமொழியைத் தடமெங்கும் தழைத்ததுவே
... தனித்தமிழே தகத்தகாய என்தங்கமே
நிலையற்ற ஞாலத்தை நீங்கிடினும்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

துறைதோறுந் துறைதோறுந் தமிழ்தன்னைத்
... தூர்ப்பாரின் முன்னெழுந்து மார்தூக்கி
இறைக்கின்ற  நீரூற்றா   யெழுதமிழால்
... இனிமொழியை எப்பரப்பும் ஏத்திவைத்து,
குறைப்பாரைக் குறைப்பாயே கூர்மதியால்
 ...குற்றமெலாங் குனிந்திடுமே என்சொல்வேன்?
நிறைத்தாலும் நின்வாழ்வை நீநிலத்தில்
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

படிக்குமொழி பலவெனினும் பாரிலுளோர்
... பாங்குடனே பிறப்புமொழி பேணிநிற்க,
பிடித்ததெலாம் புகுத்திடுவார் தமிழரிங்கே
 ...பொடிப்பொடியாய் எழுத்துவரி நூறிடுவார்
இடிக்குந் துணையாயிருந்து  தோள்தருவீர்;
...இங்கவரைத் தடுக்குவகை தானறிவீர்!
நொடிந்தனமே நும்பிரிவால்; பிரிந்திடினும்
 ...நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!


அருள்பொங்கும் கண்களிலே ஆர்ப்பரித்து
... அன்பொழுகும்; இறையன்பை அஃதொக்கும்!
திருநிறைந்த நெஞ்சில் தொல்  காப்பியமே
... தேனடையாய்த் திரண்டிருக்கும்! பாடுகின்ற
பொருட்செறிந்த பாட்டிலெலாந் தமிழ்நலமே
...  பொதிந்திருக்கும்!  பிழைகள்பாற் பீறிட்டு
நெருப்புமிழும்! நெருப்பைப்போல் தூயவரே
... நிலைபெறுமே நின்புகழ்தான் வாழியவே!

இல்லார்க்கும்  இனிக்கின்ற செங்கரும்பே
... இசுலாமும் இனியதனித் தமிழும்மாய்,
நல்லார்க்கே நல்விளக்காய் நற்றமிழாய்
... நாமலர்ந்த பாவலரே, யாம்வணங்கு
தொல்காப்புப் பெரும்புலவ, ஏச்சறியா
... துய்யதமிழ்ச் சந்தனமே தண்ணொளியே
நில்லாத யாக்கைதனை நீக்கியிங்கே
... நிலைபெற்ற சீனி ஐயா நீர் வாழியவே!



                               (நானும் சீனி ஐயாவும் - 2009 கோவை செம்மொழி மாநாடு)

நீங்கா நினைவுகளுடன்
நாக.இளங்கோவன்
7/8/2015

Sunday, July 05, 2015

பின்ன சின்ன ஒருங்குறி - துறையறிஞர் கூட்டம் 4/7/15

பின்ன சின்ன ஒருங்குறி முன்னீட்டை ஆய்வு செய்யும் கல்வெட்டு, சுவடிகள், வரலாறு, பழங்கணிதம், நாணயம் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் ஆய்வறிஞர்களின் கூட்டம் நேற்று 4/7 அன்று சென்னைப்பல்கலையில் நடந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் இத்தனைபேரை ஒருங்கே பார்த்ததிலும்,அவர்களோடு கூட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக்கருதுவேன்.

55 குறியீடுகளை ஆய்வு செய்த இவ்வறிஞர்கள், அவற்றில் 18ஐ மட்டுமே நேரடியாக சரி என்று ஏற்பு வழங்கினர். சுமார் 15-17 குறியீடுகளை "பிழை" என்று சொல்லி தள்ளுபடி செய்தனர். மீதம் உள்ள குறியீடுகளுக்கு வடிவமாற்றம் அல்லது விளக்க மாற்றம் பரிந்துரைத்துள்ளனர். கடந்த மே மாதம் ஒருங்குறியில் சேர்க்கப்படவிருந்த 55 குறியீடுகளில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இவ்வாய்வுக்கு வழிவகுத்தது. தமிழக அரசு இப்படிச் செய்திருக்காவிடில் கிட்டத்தட்ட 60-67% குறியீடுகள் தவறானவையாக ஒருங்குறியிற்சேர்ந்திருக்கும். 67% பிழைகள், அல்லது தவறுகள், அல்லது குறைகள் உள்ள ஒரு முன்னீட்டைத் தாங்கிப்பிடித்து, அவற்றைச் சுட்டிக்காட்டியமைக்காக எம்மை ஏளனம் செய்தவர்களும் இன்று அவற்றை ஏற்றுக்கொண்டது எமக்கு மனநிறைவான ஒன்றாகும்.

தொல்லியல் துறையின் புகழ்பெற்ற அறிஞர்களான முனைவர் நடனகாசிநாதன், முனைவர்.எசு.இராசகோபால், முனைவர் சு.இராசவேலு, முனைவர் விசய வேணுகோபால், முனைவர் பத்மாவதி அம்மையார், முனைவர் மார்க்சிய காந்தி, முனைவர் கலா சீதர், முனைவர் பாலாசி, முனைவர் கு.வெங்கடாசலம், முனைவர் சாந்தலிங்கம், முனைவர் தமிழப்பன், உள்ளிட்ட பல தொல்பொருள் அறிஞர்களோடு, பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன், திரு.மணிவண்ணன், திரு.சேம்சு உள்ளிட்ட பலரோடும் நடந்த இக்கூட்டம் மிகச்சீரிய பணியை செய்திருக்கிறது.
 
இதற்காக தமிழக அரசுக்கும், தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கும், சென்னைப்பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
 
கடந்த வருடம் செப்தெம்பர் மாதம் தொடங்கி 7/8 குறைகளைச் சுட்டிக்காட்டி குறைபாடுகளின் தன்மைகளை வெளியிட்டிருந்தேன். ஆனால் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் உத்தமம் அமைப்பும் அவற்றை ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆனால், இன்று மணிவண்ணன் அவர்களே முன்னின்று ஏற்றுகொள்ளும் வகையில் அறிஞர்கூட்ட முடிவுகள் அமைந்தன.
 
 
 
 
 
 
அன்புடன்
நாக.இளங்கோவன்
 

Wednesday, July 01, 2015

மணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள் – ஆசிரியர் இரவிக்குமார்

மணற்கேணி இதாழாசிரியர் திரு.இரவிக்குமாரின் வேண்டுகோள்.
===================================================

வணக்கம்


மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு  ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள்  வெளிவந்துள்ளன.

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது .

சங்க இலக்கியச் சிறப்பிதழ்; பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்பிதழ், வங்க இலக்கியச் சிறப்பிதழ், பாகிஸ்தான் இலக்கியச் சிறப்பிதழ்; தமிழும் சமஸ்கிருதமும்; செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழ் எனப் பல்வேறு சிறப்பிதழ்களை சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு தமிழ் ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவதற்கு உதவிவரும் மணற்கேணி கடந்த இரு இதழ்களாக பெண் எழுத்துகள் சிறப்பிதழாக பெண் இலக்கியவாதிகளையும் பெண் வரலாற்று அறிஞர்களையும் விரிவாக அறிமுகம் செய்துவருகிறது. 


கிரந்த யூனிகோடு பிரச்சனை; பொருந்தல் அகழ்வாய்வின் முக்கியத்துவம் முதலானவற்றை தமிழ்ச் சிந்தனை உலகின் கவனத்துக்கு மணற்கேணி எடுத்துச் சென்றது.

கவிஞர் சேரன், எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா,பா.அகிலன்,அனார்,லதா, லறீனா அப்துல் ஹக்  முதலானோரின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும், சிவா சின்னப்பொடியின் தன்வரலாற்றுத் தொடரை வெளியிட்டும் ஈழம் குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது. எம்.ஏ.நுஃமான் குறித்த சிறப்பிதழையும் கி.பி.அரவிந்தனின் நினைவைப் போற்றும் விதமாக சிறப்பிதழையும் வெளியிட்டிருக்கிறது.

பெண்களின் படைப்புகளுக்கான வெளியை விரிவுபடுத்தும் நோக்கோடு மணற்கேணியின் இணையாசிரியர் தேன்மொழியின் ஒருங்கிணைப்பில் ‘ஆயம்’ என்ற பகுதியில் அயல்நாடுகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நேர்காணலை வெளியிட்டுவருகிறது. ஆங்கிலத்தில் வெளியான நேர்காணல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதே தமிழ்ச் சிற்றிதழ்களின் வழக்கம். ஆனால் மணற்கேணியில் வெளியான பாகிஸ்தான் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் நேர்காணலின் ஆங்கில வடிவத்தை இந்தியாவின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான ’தி இந்து’ தனது ’லிட்டரரி ரெவ்யூ’ பகுதியில் அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியிட்டது.
இது தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் பெருமைப்படத்தக்கதொரு நிகழ்வாகும்.

திரு.இ.அண்ணாமலை, திருமதி.வீ.எஸ்.ராஜம், பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் கி.நாச்சிமுத்து, முனைவர் விஜயவேணுகோபால், எம்.ஏ.நுஃமான், பேராசிரியர் ராஜ்கௌதமன்,பேராசிரியர் வீ.அரசு,பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் பெ.மாதையன்,பேராசிரியர் கார்த்திகேயன், பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் அ.ராமசாமி  உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும்,கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி,தேன்மொழி, ஆசை,இமையம் உள்ளிட்ட படைப்பாளிகளும் மணற்கேணியில் தொடர்ந்து பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.


மொழிபெயர்ப்புகளின் வாயிலாக இதுவரை தமிழில் அறியப்படாதிருந்த எடுவர்டோ கலியானோ, எலியா கனெட்டி, பியர் பூர்தியூ, பர்ட்டன் ஸ்டெய்ன், ரணஜித் குஹா முதலானோரின் சிந்தனைகளையும்; எதுமோன் ழாபேஸ், நிக்கனோர் பர்ரா, எதெல்பர்ட் மில்லர், அஃபூவா கூப்பர் உள்ளிட்டோரின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியது மணற்கேணி.


தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ செய்யவேண்டிய இந்தப் பணியை மணற்கேணி செய்துவருகிறது. ஆனால், மணற்கேணி இதழுக்கு சந்தாசெலுத்தி வாங்குவதற்குக்கூட இந்த நிறுவனங்கள் முன்வருவதில்லை. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களின் விளம்பர உதவி இல்லாமல், இலக்கியத்தின் மீதும் தமிழ் ஆய்வுகளின்மீதும்  மதிப்புகொண்ட நண்பர்களின் ஆதரவை மட்டுமே நம்பி மணற்கேணி நடத்தப்படுகிறது.

மணற்கேணி இதழின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால், இது தொடர்ந்து சிறப்பாக வெளிவரவேண்டுமென நீங்கள் விரும்பினால்


மணற்கேணி புரவலர் :
மணற்கேணியின் புரவலராவதற்கு நீங்கள் ரூ. ஐந்தாயிரம் செலுத்தவேண்டும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பிவைக்கப்படுவதோடு மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்கள் யாவும் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


மணற்கேணி குழாம் :

மணற்கேணி குழாமில் சேர நீங்கள் ரூ.மூவாயிரம் செலுத்தவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மணற்கேணி இதழ் அனுப்பப்படுவதோடு மணற்கேணி பதிப்பக வெளியீடுகள் விலையின்றி அனுப்பிவைக்கப்படும்.


ஊருணி :

இந்தத் திட்டத்தின்மூலம் நீங்கள் நூலகங்களுக்கோ, பள்ளிகளுக்கோ, படிப்பகங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கோ மணற்கேணியைப் பரிசளிக்கலாம். ரூ.ஆயிரம் செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இதழ் அனுப்பப்படும்.


ஆண்டு சந்தா:

ரூ.420/- செலுத்தி சந்தாதாரர் ஆகிறவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இதழ் எமது சொந்த செலவில் அனுப்பப்படும்.


தொகையைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் நீங்கள் நேரடியாகவே செலுத்திவிடலாம் :

Manarkeni Publication

Overdraft account : 960114000000398
Syndicate Bank, Pondicherry Branch , IFSC Code : SYNB0009601
 
 


 

Thursday, May 21, 2015

தமிழுக்குச் சமயம்செய்யும் கொடை - ஒருமறுபார்வை:

தமிழ்நாட்டில் ஒரு மாயை இருக்கிறது. தமிழில்
ஒரு நூல் எழுதிவிட்டால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகவும் தொண்டாகவும் மாறிவிடுகிறது.
அதையே "இன்னமதம்" தமிழுக்குச்செய்த கொடை
என்று சொல்ல எந்த மதத்துக்காரரும் வெட்கப்படுவதில்லை.

காட்டாண்டியாக ஒலிக்கத் தொடங்கியதில் இருந்து
தமிழ் முளைத்துத் தழைத்தது. அதனை இன்றைக்கு
தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் தான் தமிழுக்குச்
செய்யும் கொடையாகவும் தன்சமயம் தமிழுக்குச்செய்த
செய்கின்ற கொடையாகவும் கருதிக்கொள்வது
வெட்கக்கேடான செயல்.

தமிழனாய்ப்பிறந்து, தமிழைக்கற்று, தமிழில்
எழுதினால் அது தமிழுக்குச்செய்த
கொடையாகிவிடுமா? தமிழ் என்ற ஒன்று
ஒவ்வொருவரிடம் பிச்சைப்பாத்திரத்தை
ஏந்தி நிற்கிறதா என்ன?

ஆங்கிலத்தில் நூலெழுதும் ஒவ்வொருவரும்
இப்படித்தான் ஆங்கிலத்திற்கு இன்னார் அல்லது
இன்ன மதம் செய்த கொடை என்கிறாரா? இந்தியர்கள்
பலபேர் ஆங்கிலத்தில் நுட்பநூல்கள் எழுதியுள்ளனர்.
உடனே அவற்றையெல்லாம் இந்தியர்கள் ஆங்கிலத்திற்குத்
தந்த கொடை என்கிறார்களா?

சமயவரலாற்றை எடுத்துக்கொண்டால்,
செயினம், பௌத்தம், வைதீகம், கிறித்தவம், இசலாம்
என்ற ஐந்து சமயங்களுமே வெளிநாட்டில் இருந்து
வந்தவையே. ஆரியத்தின் திசை வடக்கு என்றால்,
இவை அனைத்துமே ஆரியசமயங்கள்தான்.
(திராவிடத்தின் கண்ணுக்கு வைதீகம் மட்டுமே
ஆரியமாகத்தெரியும். அது தனிக்கதை)
இவற்றைப்பின்பற்றியவர் யாவருமே
தமிழர்கள்தான். அப்படி, தமிழரால்
எழுதப்படுகின்ற நூல், எப்படி அவர் சார்ந்த
சமயம் தமிழுக்குச் செய்த கொடையாக
மாறிவிடும் என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு மதம் இங்கே வருகிறதாம்.
அதைச் சிலர் பின்பற்றுகிறார்களாம்.
உடனே அம்மதம் தமிழுக்கு கொடை செய்கிறதாம்.
கொஞ்சமாவது ஏரணம் வேண்டாமா?
என்னைப்பொறுத்தவரை இதுவொரு பித்துக்குளி
சிந்தனை என்பேன். இந்தப்பித்துக்குளிப்போக்கைத்
தொடக்கியவர்களும் நாடு போற்றும் அறிஞர்கள்தான்.
இவர்கள் எழுத்து வள்ளலாக இருக்கலாம் -
ஆனால் தமிழ்மொழியை பிச்சைப்பாத்திரத்தோடு
நிற்கவைத்தவர்கள். இந்தச்சிந்தனைப்போக்கு மாறவேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்