இது தமிழ்மன்றம் மடற்குழுவில், திரு.நூ.த.லோகசுந்தரம் அவர்கள் "கோகழி" என்பது கருநாடகத்தின் ஊர் என்று கருத்துச் சொன்னபோது எழுந்த உரையாடல். இதேப் போல வேறு சிலரும் சொல்கிறார்கள் என்பதாலும், இந்த உரையாட்டு மேலும் தொடரும் என்பதாலும், இங்கே இதைப் பதிவு செய்து வைக்கிறேன்,
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,
வணக்கம்.
தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
1) “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )
2) தாங்கள் மேற்காட்டிய
http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search
இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.
அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன்.
3)
ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது?
திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!
ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத ஊரை சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றதுஎன்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.
4)
முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.
(பார்க்க :-
http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D )
பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும்.
திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.]
கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.
5)
திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும்
திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.
திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.
கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),
கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)
கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)
கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை)
கோகழிக்கரசை (பண்டாய நான்மறை)
இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின்
திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின்
திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன. இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.
ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.
6)
தங்களின் கூற்று:
“குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில்
குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”
எனது கருத்து:
எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?
ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும் இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.
7)
தங்கள் கூற்று:
"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “
எனது கருத்து:
இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.
“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”
இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)
“சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும். (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)
குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.
பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே.
குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.
8)
தங்கள் கூற்று:
"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர்
எனது கருத்து:
தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:
61....புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
62....சிவனென யானுந் தேறினன் காண்க
63....அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
64....குவளைக் கண்ணி கூறன் காண்க
65....அவளுந் தானும் உடனே காண்க
66....பரமா னந்தப் பழங்கட லதுவே
67....
கருமா முகிலின் தோன்றித்
68....
திருவார் பெருந்துறை வரையி லேறித்
69....
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
70....ஐம்புலப் பந்தனை வாளர விரிய
71....வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
72....நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள். இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.
மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.
இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார். “கருமா முகிலின் தோன்றி - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.
வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,
நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.
ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.
9)
தங்கள் கூற்று:
மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி
எனது கருத்து:
மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?
மடல்-2:
1) கல்வெட்டைப் பார்த்ததில்லை.
அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.
ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள்.
இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
2) தங்கள் கூற்று:
//எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள்
வாய் வழி ழங்கும் மொழி //
எனது மறுமொழி:
இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.
3)
தங்கள் கூற்று:
// கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும் ழகரம் உண்டு
//
எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள்,
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.
4) தங்கள் கூற்று:
// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //
எனது மறுமொழி:
ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.
ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.
இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.
"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
குரு பரனாகி அருளிய பெருமை...."
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.
"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
========================================================================