Sunday, March 05, 2006
கனவிலிது கண்டேன்!
பங்கு கொண்ட கவிதை. தன் கனவில், மங்கை ஒருத்தி கனவு, காண்பதான
கற்பனையில் எழுதியது. அய்ந்தாம் பாடல் மட்டும் கற்பனை அல்ல. பொங்கல் காலத்தில்
ஈழ மகளிர் இராணுவம் அணி வகுத்து நிற்க, அதில் ஒரு மகள் கரண்டியால் பொங்கலைப் பொங்குவது போன்று
படம் ஒன்று ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகியிருந்தது. அதையொட்டி எழுந்தது அய்ந்தாம் பாட்டு.
- நயனன்.
கனவிலிது கண்டேன்
-----------------
நித்திரையில் நினைந்திருந்து, வஞ்சமிலா
நெஞ்சில் விளைந்தன வெல்லாம்
சித்திரை முழுநிலவுத் திரையதனில்
செழுக்கமல முகநல்லாள் முறுவலித்து
எத்திரையும் கண்டிராக் காட்சியெலாம்
எழுதியோடல் கண்டாள்; கனவெனவே!
முத்திரையாய்ப் பதிந்ததுவே மனதிலிணை
மற்றிலாதென் கனவிலிது கண்டேன். (1)
கார்முகிலின் கன்னத்தில் முத்தமிட்டுக்
கூந்தலையும் கோதிவிட்டு மலையன்னை
கூர்முகடு பேறுபார்த்துக் கொட்டிவிட்டத்
தூய்வெள்ளித் துளியெல்லாம் கூட்டாகி
ஊர்முழுக்க ஓடிடினும் ஆறெல்லாம்
ஓர்கறையும் ஏறாமல் வெள்ளியேபோல்
ஆர்கடலில் அப்படியே அடைக்கலமே!
ஆரணங்கின் கனவிலிது கண்டேன். (2)
ஆழிபோன பாதையெலாம் குன்றுகுழி;
ஆடியாடி, கழுத்தெலாம் உறுத்திடவே
ஊழிஊழி வண்டியிழுத் தமாடெல்லாம்
ஓர்வலியும் இலாமலே, செந்தரையில்
வாழிவாழி சொல்லியே பார்முழுக்க
ஓடினபல் உந்துகளை முந்தியே!
தாழிநிறைத் தண்ணீர்போல் தழும்பாதத்
தாமரையாள் கனவிலிது கண்டேன். (3)
காளையவன் வந்துவிட்டான்; விழிக்கடைக்
காட்சியதில் தெரிகின்றான்; விழுங்கினள்
வேளையது வந்ததனை கால்விரலால்
வேல்விழியாள் கோலமிட்டுச் சுட்டுகிறாள்;
பாளையது பிரிந்துபூ வந்ததுபோல்
பூமகளும் கசிந்துநீர் பூக்கின்றாள்!
மூளையது மும்மழைக்கு முத்தமிட
மாமகளின் கனவிலிது கண்டேன். (4)
கண்டனன் என்கனவில் அவள்கனவை
கலங்கமிலாப் பொன்னொத்த மேனியையும்;
பெண்ஒருத்தி, தன்னைப்போல் தானிருந்தாள்;
பசுங்கொடியாள், நல்லாள்; கரமொன்றில்
விண்திரும்பு வாளொன்றை வைத்திருந்தாள்
விடுக்கென்று உறையிலே குத்திட்டு
மண்திரும்பி, பொங்கலே பொங்கினாள்!
மங்கலத்தின் கனவிலிது கண்டேன். (5)
கண்ணகிக்கும் மாதவிக்கும் பன்னிரண்டில்
கல்யாணம்; காப்பியமும் ஆனதுவே;
பெண்குலமே பகையறுக்கப் போர்முனையில்
பிறவியெலாம் நிற்கிறதே, கவலையின்றி
மண்மகிழும் மங்கையராய் அணிமணியும்
மனைமகிழ்வும் கல்வியும் துறந்துவிட்ட
திண்மனவர் திசைனோக்கித் தேம்புகிறாள்;
தாயிவளோ? கனவிலிது கண்டேன்! (6)
சாதிமத பேதமெலாம் தரித்திரமே
சோதிவந்து சொன்னதுவோ யாரறிவார்?
ஊதிவிட்டு ஒன்றுகூடி உழைக்கிறது
ஓர்குமுகம்; வஞ்சம்பொய் மதுவில்லை;
தேதிஒன்றும் தெரிகிறது தளையறுக்க!
தீதெல்லாம் திரள்திரளாய்த் தொலைகிறது;
மேதினியில் தலைநிமிர்ந்து நிற்கிறது!
மாதவத்தாள் கனவிலிது கண்டேன். (7)
எண்திசையும் எங்கேயும் எல்லாமும்
இன்தமிழே எழுதிக் கிடக்கிறது
விண்திசையில் ஒருகருடன் வியாழம்
வெள்ளிசனி கடந்து இனுமுயர
'அண்டப் பகுதியின் உண்டை'என்ற
அழகுமொழி அட்டையில் எழுதிநின்றார்;
பண்ணொப்ப சிரித்தார் மணிவாசகர்!
பண்மொழியாள் கனவிலிது கண்டேன். (8)
பணங்காய்ச்சிப் பொறியெல்லாம் எங்குமிலை
பாலோடு சோறோ தேனோ
மணமோடு கலந்துதர பரிப்பொறிகள் (பரி=free)
மண்ணெங்கும் முளைத்திருக்கும்; மாந்தர்
குணமோடு குடியிருப்பர் பொன்கூரைக்
குடிலுக்குள்; பச்சைவயல் பக்கத்தில்
கிணம்கிணமாத் தண்ணீரும் எண்ணெயும்!
குமரியவள் கனவிலிது கண்டேன். (9)
ஆதவனின் அகங்கண்டு அடங்கிப்போய்
அடைந்துகொள் வெண்மதித் திரைமறைய
மாதவளின் இமைகளுக்குள் நெளிந்து
மெதுவே உதிக்கின்ற விழிகள்;
போதவளும் எழுகின்றாள்; நிறைநீறு,
பெருந்திலகம்; போற்றி என்றேன்!
ஈதவளோ, தமிழன்னை நானென்றாள்;
யானும் மலர்ந்தேன்; வாழிஎன்றேன். (10)
- நயனன்
01-பிப்ரவரி-2006
Tuesday, July 26, 2005
இளையராசாவின் இசையில் திருவாசகம் - பழுது ?
தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு செய்தவர் என்று சொல்லப்படுபவர். அரங்கனுக்குக் கோபுரம் எடுத்தது முதல் வெகு அண்மையில் மூகாம்பிகைக்கு அணிகள் சூட்டியது வரையிலான அவரின் கடவுள் ஈடுபாடு அனைவரும் அறிந்தது.
தலைசிறந்த தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருவாசகத்தை, மேற்கத்திய இசையில், பல நாட்டுத் தமிழர்களின் ஆர்வத்திலும், ஒருங்கிணைப்பிலும் இளையராசா கொண்டுவருகிறார் என்று ஈராண்டுகளாக கேள்விப் பட்டபோதெல்லாம், அது பல எதிர்பார்ப்புகளை பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது. எனக்கும்தான்.
கடந்த மாதம் சூன் 30 ல் முதல் நெருவட்டு வெளியிடப்பட்ட மேடையில்
தேவார திருவாசகத்திற்குத் தொடர்புடையவர்கள் நிறைய பேர் மேடையில் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஏனோ, மேடை, தேவார திருவாசக உலகில் இருந்து தொலைவில் இருந்ததாகத்தான் உணர முடிந்தது. அவரின் திருவாசக வெளியீட்டை சில நாள்களாகக் கேட்டபோது உணர்ந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
பாராட்டுதல்கள் என்றால், அவரின் முயற்சிக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும். அதோடு இம்முயற்சிக்கு அடித்தளமாக இருந்த காசுபர் மற்றும் அவரோடு உழைத்தவர்களும் பாராட்டுதற்குரியவர்கள். இதற்காக செலவிட்ட நேரத்தில் இளையராசா வேறு பாடல்களுக்கு இசை அமைத்திருந்தால் நிறையவே சம்பாதித்திருக்கலாம். இதனோடு தொடர்புடையவர்கள் (குறிப்பாக திரு.காசுபர்) தத்தம் மதங்களைக் கடந்து திருவாசகத்தின் மேல் உள்ள பற்றினால் மட்டுமே இணைந்தது, தமிழும் தமிழரும் உணர்வால் மதங்களைக் கடந்தவர்கள் என்ற உண்மையைக் காட்டியது. பல நாட்டு இசை வல்லுனர்களையும் ஒருங்கிணைத்து இதனை ஆக்கிக் காட்டிய நமது இளையராசாவை நாம் உச்சிமுகரத்தான் வேண்டும்.
நிறைகள் என்றால், பலராலும் பாமரனாலும் அறியப்பட்ட ஒரு இசைமேதை இதில் ஆர்வத்துடனும், தனது வாழ்வின் குறிக்கோள் எனவும் கொண்டு ஈடுபட்டது மிகவும்போற்றத்தக்கது. ஏனெனில், 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் பட்டி தொட்டியெல்லாம் பரவிய அய்யப்பன் பாடல்கள், 20 ஆண்டுகளில் தோன்றிய பல ஆதிபராசக்தி பாடல்கள், எல்.ஆர்.ஈசுவரி குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் என பலவும் பாமரனையும் பலரையும்
எட்டியிருக்கையில் சிவ மெய்யியல் கொண்ட ஒப்பற்ற தேவார திருவாசகங்கள் பாமரனையும் படித்தவனையும் எட்டாதிருந்தது, எட்டாமலிருப்பது என்பது தமிழ்நாட்டின் வருத்து வியப்புகளில் ஒன்றாகும்.
கோயில்களில் விழாக்களில் பரவலாக ஒலிப்பவையெல்லாம் அண்மைக்கால
சாதாரணக் கவிஞர்கள் திரைப்படப் பாடல் மெட்டுகளுக்கு எழுதிய கடவுள் பாட்டுக்கள்தான். 'அப்படிப் போடு...போடு... ' என்ற மெட்டில் ஒரு அய்யப்பன் பாட்டு இருந்தால் வியப்பில்லை. அவற்றில் பல பாடல்கள் பொருத்தமில்லாமலும் வெற்று இரைச்சலாகவும் கூட இருக்கும்.
அதோடு, பலருக்கும் கந்தர் கவசம், சுப்ரபாதம், விநாயகர், துர்க்கையை போற்றும் பாடல்கள், கொஞ்சம் சிவனைபோற்றும் பாடல்கள் (எசு.பி.பியின் நமசிவாய ஒலி நாடா) அறியப்பட்டிருக்கும் அளவுக்கு திருவாசகமோ தேவாரமோ அறியப்பட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் தருமபுரம் ப.சுவாமிநாதன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பாடல்களை அற்புதமாக வெளியிட்டிருக்கிறார். திருவாசகத்தில் இருந்து சுவாமிநாதன் பாடும் குழைத்த பத்தின் 'அன்றே என்றன் ஆவியும்... ' என்ற பாடல் எலும்பைக் கரைத்து விடும்.
இதற்குக் காரணங்கள் எவையாகயிருப்பினும், தேவார திருவாசகங்கள் மிகக் குறைந்தவர்களால் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. இந்நிலையில் ஒரு இசைமேதையின் குரலாலும் இசையாலும் திருவாசகம் வருகிறது என்ற எதிர்பார்ப்பு இன்பமாகவே இருந்தது.
அந்தவகையில் தேவையான ஒரு முயற்சியை தகுதியான ஒருவர் செய்தது மிகவும் போற்றத்தக்கது மற்றும் இந்த முயற்சியையே நிறையாகத்தான் நான் காண்கிறேன்.
நிறைகள் இருக்கும் அதேபோழ்து குறைகளும் அதில் இருக்கத்தான் செய்கின்றன. இளையராசா திருவாசகம் முழுவதையும் இசையோடு கொண்டுவரப் போகிறார் என்றுதான் நான் கேள்விப்பட்டது. அதனாலேயே, அவரின் முதல் வெளியீட்டில் இருக்கும் குறைகளை எடுத்துக் காட்டவேண்டியுள்ளது. இது ஒரு வேளை வரவிருக்கும் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தாலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு
மட்டுமே இதற்குக் காரணம்.
1) பிடித்த பத்து, அச்சப் பத்து என்ற இந்த இரண்டு பதிகங்களையும்
இளையராசா அருமையாகப் பாடியிருக்கிறார். பிடித்த பத்தில் 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.... ' என்ற பாடலில் திருவாசகத்தை இயல்பாகப் பாடும்போது உண்டாகும் அந்த மோன நிலைக்கே நம்மை கொண்டு சென்று விடுகிறார். அவரின் குரல் வளமும் நன்றாகவே உள்ளது. அதேபோலவே 'புன்புலால் யாக்கை.... ' என்ற பாடலிலும். பொற்சுண்ணத்தையும், மிக இயல்பான ஆனந்தத்தில் பாட வைத்திருக்கிறார்.
ஆயினும் அனைத்து பாடல்களிலும் மிகுந்து கிடக்கும் இசை, பாடலைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறது. அம்மையே அப்பா என்று உருகு உருகு என்று உருகி, உடனே மிகையான பெருகோசையைப் போட்டு, சலனத்தையும் சலிப்பையும், பல இடங்களில் எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறார். ஒரு பாட்டிற்கும் மறுபாட்டிற்கும் இடையே கிடக்கும் இந்த பெருகோசைகள் கேட்போருக்கு சலனத்தையும் அந்த இலயத்தையும் எடுத்து விடுகின்றன.
பெருகோசைக்கு எதிர்ப்பு சொல்ல அல்ல; ஆனால் எந்த பாட்டில் எந்த இடத்தில் அதை வைப்பது என்று ஒன்று வேண்டும் அல்லவா ? இந்தப் பெருகோசை, மிகு ஓசை பல இடங்களிலும் இசையாக அல்லாமல் இரைச்சலாக விரவிக் கிடக்கிறது. சிவபுராணத்தைத் தவிர்த்த (த்ிருப்பொற்சுண்ணத்தில் இசை பரவாயில்லை என்று சொல்லலாம்) மற்ற பாடல்களில் இருக்கும் பெரும் குறைபாடு இந்த இரைச்சல்தான். இது தேவையற்றது.
ஓரோ இசை அல்லது மேற்கத்திய இசை என்றால் இப்படித்தான் என்று
நான் நம்பத்தயாரில்லை. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
இலக்கண சுத்தியோடு இயல்பான பண்ணும் ஓசையும் கொண்டவை திருவாசக தேவாரப்பாடல்கள். ஒரு சில முறை இப்பாடல்களைப் படித்தாலே படிப்பவற்கு அதன் இயல்பான ஓசை அமைந்து பாட வந்துவிடும். அத்தகு பாடல்களை அதிக பக்கம் ஒரு சுருதிப் பெட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு குரல்வளமும் தமிழ்வளமும் உள்ளார் சிறப்புடன் பாடிவிடுவர்.
அவற்றிற்கு எந்த இசையும் தேவையேயில்லை. ஆயினும் பலரையும் விரைந்து
ஈர்த்து பாடல்களை நுகரத் தரும் வல்லமை இசைக்கு உண்டு. அந்த இசை,
பாடல்களின் தன்மைக்கேற்றவாறு அமையாமல் மிகையான அளவில் அமைந்துவிட்டதால் இசையின் வலியில் பாடல் இளைத்துப் போகிறது.
2) சிவபுராணத்தைத் தவிர்த்த (சிவபுராணத்தைப் பற்றிக் கீழே) மற்றவற்றில்
ஒரு சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருக்கிறார். பொற்சுண்ணம் மற்றும்
திருக்கோத்தும்பியில் தலா 20 பாடல்கள் உண்டு. அவற்றில் முறையே 7 மற்றும் 8 பாடல்களை மட்டும் பாடியிருக்கிறார். அச்சப்பத்து யாத்திரைப்பத்து பிடித்த பத்து ஆகிவற்றில் 6 அல்லது 7 பாடல்களை மட்டுமே பாடியிருக்கிறார்.
மீதியை யாருங்க பாடுறது ? எப்பங்க பாடுவாங்க ? பாடப்பட்டிருக்கும்
தேவார திருவாசகப் பாடல் ஒலிநாடா/நெருவட்டுகளின் குறையே அதுதான்.
ஒரு பதிகத்தை எடுத்துக் கொண்டு அதில் முதல் மற்றும் கடைசி அல்லது மேலும்
ஒரு பிடித்த பாடல் என்று மட்டுமே பாடி இருக்கின்றனர். முழுமையான தேவாரப்பதிகங்களோ அல்லது திருவாசகப் பாடல்/பதிகங்களோ (சிவபுராணம் தவிர்த்து) கொண்ட ஒலிநாடா அல்லது நெருவட்டு இருந்தால் அரிது. தேவார திருவாசகம் ஓரளவு ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதென்றால் அது தருமபுரம் ப.சுவாமிநாதனால்தான். அப்படி ஒரு குரல்வளம் மற்றும் நேர்த்தி. ஆயினும் அவரும் பதிகத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் என்ற மட்டிலேயே
நிறைய பாடியிருக்கிறார்.
இந்நிலையில் இளையராசாவிடம் எதிர்பார்த்த முக்கியமான ஒன்று இதுவே.
ஒரு தலைப்பு அல்லது பதிகம் என்று எடுத்துக் கொண்டால் அதன் அனைத்து பாடல்களையும் பாடவேண்டும். அப்பொழுதுதான் அதன் இனிமை, மென்மையும்
உண்மையும் உணரமுடியும். இல்லாவிடில் அது பெருங்குறை மட்டுமல்ல தீராக் குறையாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. இந்தக் குறையோடு இளையராசா திருவாசகம் முழுமையையும் பாடிவிட்டதாக எண்ணிவிடல் ஆகாது.
3) பிழைகள் மலிந்து கிடக்கின்றன.
அச்சப்பத்தில் 'புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்... ' என்பது
'புற்றில் வாளரவும் அஞ்சேன் ' என்று இருக்க வேண்டும். நெருவட்டோடு
கொடுக்கப் பட்ட கையேட்டிலும் 'வாழ் ' என்றுதான் போட்டிருக்கிறது.
பாடலில் உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.
பொற்சுண்ணத்தில் ஒரு பாடலில் 'பை அரவு அல்குன் மடந்தை.... '
என்பது 'பை அரவு அல்குல் மடந்தை.... ' என்று இருக்க வேண்டும்.
கோத்தும்பியில் 'சீயேதும் இல்லாத செய்பணிகள்... ' என்றிருப்பது
'சீயேதும் இல்லாதென் செய்பணிகள்... ' என்றிருத்தல் வேண்டும்.
யாத்திரைப்பத்தில் 'பெறுதற்கரியன் பெருமானே ' என்பது
'பெறுதற்கரியன் பெம்மானே ' என்று இருத்தல் வேண்டும்.
'மிகவோர் காலம் இனுமில்லை ' என்பது 'மிகவோர் காலம் இனியில்லை '
என்றிருக்க வேண்டும்.
சிவபுராணத்தில் 'ஓங்காரமாய் நின்ற மெய்யே! ' என்றில்லாமல்
'....மெய்யா! ' என்றிருக்க வேண்டும். 'நீள்கழல்கள் காட்டி ' என்பதில்
'காட்டி ' என்பது அளபெடுத்து வரும். பாடலில் கூட அந்த இடத்தில்
'காஅட்டி ' என்பது சாதாரண நெடிலாக வந்துவிடுகிறது.
'நாற்றத்தின் நேரியாய் ' என்பதற்கு பதில் 'ஆற்றத்தின் நேரியாய்.. '
என்றிருக்கிறது. நாற்றத்துக்கும் ஆற்றத்துக்கும் வேறுபாடு இல்லை ?
பிழைகளுள் பெரும்பிழை மற்றும் பொருள் பெருமளவு திரியும் பிழை இது.
ஒரு சில பாடல்களிலேயே என் கண்ணுக்கும் காதுக்கும் எட்டினவை
இத்தனைப் பிழைகள். நன்கு ஆய்ந்தால் மேலும் பிழைகள் இருக்கக் கூடும்.
இப்பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்டு
காலங்காலமாய் நிலைத்து வரும் பாடலைப் பாடும்போது, அதுவும்
பொருள்செலவில், நிறைய ஆள்கள் துணையுடன் பாடப்படும்போது
தகுந்த கவனம் செலுத்தப் பட்டிருக்க வேண்டும்.
இது ஆயிரம் தாமரை மொட்டுக்களும் இல்லை;
அந்தி மழையின் பொழிவும் இல்லை.
இது போன்ற பிழைகளைக் களைவதில் இளையராசா தனக்கே உரித்தான
ஞான முதிர்வுடன் இதைச் செய்யவேண்டும். தருமியாக நின்றுவிடக் கூடாது.
இப்பிழைகளுக்கு, இளையராசா பயன்படுத்தும் நூல் அல்லது நூல்களும்
காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிடும்
நூலில் தம் பங்குப் பிழைகளை சேர்த்திருக்கும். திருவாசகத்தையும்
ஏகப்பட்ட பேர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் பணிக்கு
குறைந்தது நான்கைந்து பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்கனவே
சிவப்பண்டிதமும் தமிழ்ப்பண்டிதமும் கொண்டவர்களின் பார்வைக்கும்
வைத்து பின் பாடலாக்கும் முறைமை(methodology) அல்லது செலுத்தத்தை(process) இளையராசா கையாளவேண்டும். முனையலின் (project) அளவு பெரியது. அதனால்
நூலின் தகுதியை எண்ணி அதனைத் துல்லியமாக இசைக்க எல்லா
முறைகளையும் அவர் கையாள வேண்டும்.
4) சிவபுராணம்:
அ) சிவனை வழிபடுபவர்களிடைப் பரவலாக அறியப்பட்டதும் பாடப்படுவதும்
சிவபுராணம்தான். அதில்தான் பெருந்தவறுகளைக் காணமுடிகிறது.
முக்கியமாக அதனை முதலில் இருந்து கடைசிவரை அடிமாறாமல் பாடவேண்டும்.
ஆனால், தன்னால் முடிந்த மட்டும் அதனை மாற்றிப் பார்த்திருக்கிறார் இளையராசா!
இப்படிப் பாடினால் என்ன என்று யாரும் கேட்கக் கூடும்.
அடிப்படையில் சிவபுராணம் என்பது என்ன ? சிவனின் அநாதியான, பழமையான
முறைமையைச் சொல்வது சிவபுராணம். புராணம் என்றால் அதில் முறைமை
முக்கியமல்லவா ? முறைமை என்றால் படிப்படியாக வரிசையாக ஆதி முதல் ஈறாக முடியவேண்டாமோ ? அதைத்தானே 95 அடிகளில் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
அதன் எளிமையும் முறைமையும்தானே பலரைக் கவர்ந்து பாடவைக்கிறது ?
பின்னர் அதில்போய் எல்லாவற்றையும் ஏற இறங்கச் செய்தால் எப்படி ?
பிற பாடல்களில் அப்படிச் செய்யலாம். யாத்திரைப் பத்திலோ அச்சப்பத்திலோ
பாடல்களில் வரிசையையோ அல்லது அடிகளையோ மாற்றிப் போட்டால் பொருளும் தன்மையும் ஏதும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் அங்கெல்லாம் விட்டு விட்டு எதில் மாற்றக் கூடாதோ அதில் புதுமை செய்வதாக எண்ணி அடிகளையும் பகுதிகளையும் முன் பின்னாக்கி விட்டிருக்கிறார்.
எடுத்துக் காட்டாக 'செத்திலாப் பத்தில் ' ஒரு பாடல்:
'அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய்
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
மரக்கண் என் செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறையாய் சிவலோகா
திருப்பெருந்துறை மேவிய சிவனே. '
(திருவாசகம் - செத்திலாப்பத்து - பாடல் 4)
எண்சீர் விருத்தமான இப்பாடலை அரை அடிகளாக வெட்டி 8 அடிகளாக ஆக்கி
ஏறத்தாழ தலைகீழாகப் படித்தால்,
'த்ிருப்பெருந்துறை மேவிய சிவனே
தென்பராய்த் துறையாய் சிவலோகா
மரக்கண், என் செவி இரும்பினும் வலிது
வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
என்பராய் நினைவார்,
அயனும் மாலும் மற்றழல் உறு மெழுகாம்,
அன்பராகி மற்றருந்தவம் முயல்வார்,
எனைப்பலர் நிற்க,
இங்கெனை எற்றினுக்கு ஆண்டாய் ?... '
பலவரிகள் கீழிருந்து மேல் போட்டாலும் பொருள் அல்லது செய்தி
ஏதும் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதே போல ஆறாவது பாடலான
'அறுக்கிலேன் உடல் துணிபட.... ' என்ற பாடலையும் இம்மாதிரி அடிகளை
மாற்றிப் பாடுதலுக்கு காட்டாகச் சொல்லலாம்.
அதனால் சிவபுராணத்தில் இளையராசா செய்திருப்பது புதுமையாக அல்லாமல்
பெரும் அடிப்படைப் பிழையாகி விடுகிறது. நிறைய அடிகளை அல்லது பகுதிகளை ஏன் இப்படிச் செய்தது பிழை என்று எளிதாய்ச் சொல்லிவிடமுடியும் - எழுதினால் அது பெருகும். அவர் செய்திருப்பதில் ஏதும் ஏரணம் (logic) காணவியலவில்லை.
ஆகவே இளையராசாவின் சிவபுராணம் ஏற்கத்தக்கதல்ல.
ஆ) 'பொல்லாவினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன்... ' என்று தன்னடக்கத்துடன்
ஆரம்பிப்பதாக எண்ணித் தவறாக ஆரம்பித்திருக்கிறார். தனது சிறுமையில்
ஆரம்பிக்கும் முன் இறைவனின் பெருமையையைச் சொல்லி அதன் பின்
தனது சிறுமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அதற்காகத்தான்
அவனை வழுத்தி, பின்னர் போற்றி, பின்னர் அவனையே சிந்தையில் இருக்கச் செய்து அவனின் பரப்பையும் சீரையும் காட்டி/சொல்லி பின்னர் சொல்லவேண்டிய தனது சிறுமையை சொல்கிறார் மாணிக்கவாசகர். அதில் புதுமை செய்வாதாக இளையராசா செய்திருப்பது புதுமை அல்ல. அதற்கு இடமும் இதுவல்ல.
அப்படித்தன் சிறுமையைக் கூறுவதாகச் சொன்னால் எவ்வளவு சிறியவர் என்று
எப்படிச் சொல்லமுடியும் ? பெருமையைச் சொன்னால்தான் அது முடியும்.
மாணிக்கவாசகரே, எடுத்தவுடன் ஈசனை வாழ்த்தி விடவில்லை.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை வாழ்த்திப் பின்னர்தான்
நாதனை வாழ்த்துகிறார். சிவபுராணத்தில் ஒரு முறைமை இருக்கிறது.
இதையே இப்படி மாற்றினால் போற்றித் திருவகவலில் சகத்தின் உற்பத்திப்
பகுதியை எப்படிப் பாடுவார் ? திருவண்டப் பகுதியை எப்படிப் பாடுவார் ?
இ) இதிலும் இசை/மிகு ஓசை இடராக இருக்கிறது. (ஆரம்பத்திலும்
ஆங்காங்கும் 'ஆவா...ஊவா.... ' என்று பின்னனி இசை வருகிறது; அதுவும்
நிறைய. தேவைக்கும் மேல் இருக்கிறது. ஓங்காரத்தைப் பிரித்து 'ஆ ' தனியே
'ஊ ' தனியே சொல்கிறாரோ என்று கூடத் தோன்றியது.)
அழகாகப் பாடிக் கொண்டே போகையில் திடீரென்று பேரோசையில்
ஆங்கிலப் பெயர்ப்புப் பாட்டு!. பின்னனியிலும் கேட்கிறது - தனியாகவும்
கேட்கிறது. பொருந்தவில்லை.
இப்பாடலில் இளையராசாவின் குரல் அருமை. ஆங்காங்கு தாண்டித் தாண்டி
வட்டமடித்துப் பாடாமலும், பின்னாடி ஆங்கிலமும் பேரிசையும் இல்லாமலும்
தனியே இதை இவர் பாடவேண்டும். மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய ஒன்றை
எப்படியோ தவற விட்டுவிட்டார்.
ஈ) சிவபுராணத்தில் பல அடிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை தவிர்த்திருக்கவே கூடாது.
'வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க... ' முதல் நான்கைந்து அடிகளைக் காணவில்லை.
வேகங்கெடாமல், இவர் எப்படி பொல்லாவினையேன் என்று உணர்ந்தார் என்று
தெரியவில்லை.
'காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா, மிக்காய் நின்ற... ' என்ற அடிகளும் காணவில்லை.
இன்னும் சில வரிகள் காணாமல் போயிருக்க,
சில இடங்களில் சீர்களையும் வசதிக்கேற்றவாறு விட்டுவிடுகிறார்.
'ஆற்றேன் எம் ஐயா அரனேயோ (ஓ) என்று என்று ' என்பதில்
'ஓ என்று என்று ' என்ற முக்கியமான அலறல்/கதறலை விட்டு விடுகிறார்.
அதேபோல 'அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று ' என்பதிலும்
அந்த 'ஓ என்று ' என்ற சொற்கள் மிக முக்கியம். அவற்றையும் அம்போ என்று
விட்டு விடுகிறார்.
சிவபுராணத்தின் தொடக்கத்தில் மாற்றம் செய்தவர் ஈற்றிலும்
பிழை செய்திருக்கிறார். அதன் ஈறு சொல்லும் சேதி உன்னதமானதும்
முக்கியமானதும் ஆகும்.
யார் சிவனடிக்கீழ் செல்வார் என்று சொல்லவேண்டியதைச் சொல்லாமலே
தாண்டி விடுகிறார். இது பழுது மட்டுமல்ல பாவமும் கூட என்பதனை யாரேனும்
ஒரு நேர்மையான சிவபண்டிதர் இளையராசாவுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இளையராசா சிவபுராணத்தில் புதுமை புகுத்த முயன்றிருப்பதாகத் தெரிகிறது.
புதுமையை எதிர்ப்பது நோக்கமல்ல. புதுமை முயற்சியில் சரியான அணுகுமுறையும் அடிப்படையும் இல்லாததால் புதுமை தோற்றுப் போகிறது.
இப்படிப் பொருள் பிழைகள், விட்ட பிழைகள், பதிப்பு பிழைகள் எல்லாம் இருந்தால் என்ன ? - ஏதோ பாடியிருக்கிறார்; நொள்ளை சொல் சொல்வதை விட - நல்லாயிருக்கு என்று கேட்டும் கேட்காமலும் சொல்லி விட்டுப் போனால் என்ன ?
திருவாசகப் பாடல்கள் ஒப்பற்ற, கிடைத்தற்கரிய தமிழ் பக்தி இலக்கியம் ஆகும்.
ஏதோ சாதாரண பாடகர் அல்லது இசையாசிரியர் தவறுகள் செய்தால் அது மக்களிடத்தில் நிலைக்காது. ஆனால் இளையராசா தமிழ்நாடு போற்றும் பெருமைப்படும் இசை ஓவர்.
இவர் செய்யும் நன்றும் பிழையும் நிலைக்கக் கூடியது. அன்றும் இன்றும் 95 அடிகளாக இருந்த, இருக்கும் சிவபுராணம் இவரால் 80+ அடிகளாகக் குறைந்தது
என்ற இலக்கியச் சிதைவு திருவாசகத்திற்கு ஏற்படக் கூடாது. மற்ற இலக்கியங்களுக்கும்தான்.
ஒரு இலக்கியமே தலை கீழாக மாற்றப்பட்டிருக்கிறது. பொருள் சிதைந்து போய்க் கிடக்கிறது.
இதற்கு அணுகுமுறைப் பிசகு என்று சொல்லலாம். இதைப் பார்த்து நாம் இளையராசாவிற்கு எடுத்துச் சொல்லாமல் வாளாவிருத்தல் அடாத செயல். இப்படி வாளாவிருந்து விட்டு,
'அந்த கால இலக்கியங்கள் காணாமல் போய்விட்டன - நமக்கு பொறுப்பில்லை -
நாம் மோசம் - ஓலைகளை எல்லாம் கரையான் உண்டு விட்டன - யாரோ கொளுத்திட்டாங்க,- யாரோ ஆற்றிலே போடச் சொல்லிட்டாங்க - மதச் சண்டையில் காணமற் போய்விட்டது - நூலகத்தைக் கொளுத்திட்டாங்க ' என்றெல்லாம் நாம் பழங்காலச் சங்கதிகளைப் பற்றிப் புலம்பினால்,
அது எப்படிப் பொருந்தும் ?
இப்படித்தானே இலக்கிய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படுகின்றன!
பரவாயில்லை - இளையராசாவின் சிவபுராணப் பிசகுகளை அப்படியே விட்டு விடலாம் என்று சொல்பவர்களுக்கு என் கேள்வியெல்லாம் இதுதான்:
'பரித்ரானாய சாதூநாம்
வினாசாய சதுசுகிர்தம்
தர்மசம்சுதா பனர்த்தாய
சம்பவாமி யுகே யுகே '
என்ற பகவத்கீதையின் பாடலை, ஏதாவது ஒரு பெரிய இசைமேதை
தலைகீழாகவோ, அல்லது சில சொற்களை விட்டு விட்டோ அல்லது
'சம்பவாமி யுகே யுகே ' க்கு பதில் 'சம்பவாமி புகே புகே ' என்று பாடினால்,
அதற்கு வைதீகர்களின் விமர்சனமும் சமக்கிருதப் பண்டிதர்களின் விமர்சனமும்
எப்படியிருக்கும் ?
இதனை அனைவரின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இளையராசாவின் முயற்சி பாராட்டத்தக்கது - ஆனால்
அதன் விளைவு 'சிவபுராணத்தில் பழுது ';
'மற்றவற்றில் சில போக்கத்தக்க குறைகள் '.
யாரும் இந்த நெருவட்டையோ ஒலிநாடாவையோ ஓசிப்படி எடுக்காதீர்கள் -
காசு கொடுத்து நேர்மையாக வாங்குங்கள் என்ற விடப்பட்ட அந்த செவ்விய தூய்மையான வேண்டுகோள் புனிதமானது.
அதுபோல அந்த வட்டின் உள் இருக்கும் சங்கதியின்
புனிதமும் காக்கப் படல் வேண்டும்.
ஆதலின் சில வேண்டுகோள்களை இளையராசாவிற்கு வைப்பது நம் கடமையாகிறது.
இதைச் சொல்வது அவரின் மேல் உள்ள பேரன்பினால் மட்டுமே.
1) முதல் வெளியீட்டில் சிவபுராணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்.
2) அதன் திருத்திய வெளியீடாக ஏனைய பாடல்களில் பிழைகளைக் களைந்து
சிவபுராணத்தை உங்கள் குரலிலும், உங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுக் குரல்களிலும் அடிமாறாமல் கொண்டு வாருங்கள்.
3) ஆங்கில சிவபுராணத்தை தனிப்பாடலாக வையுங்கள்.
4) நீங்கள் படிக்கும் திருவாசக நூலினை மறுபரிசீலனை செய்யுங்கள். வேறு பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
5) திருவாசகத்தை உணர்ந்த நல்ல சிலரின் (ஒற்றிகளையும், துதிபாடிகளையும்
கைவிடுங்கள்) கூட்டை வைத்துக் கொள்ளுங்கள்.
மாணிக்கவாசகரே,
'என்னைக் கோதுமாட்டி, நின் குரைகழல் காட்டி,
குறிக்கொள்க என்று நின் தொண்டரின் கூட்டாய்... ' என்றுதானே வேண்டுகிறார் ?
அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: ஓவர், ஓவம் = ICON, செலுத்தம் = process, முனையல் = project,
ஏரணம் = logic ( நன்றி: valavu.blogspot.com ).
Wednesday, April 20, 2005
பாவேந்தரின் பதறல்கள்!
தமிழ் என்பதைத் தவிர நெஞ்சத்தில் மற்றோர்
குறிக்கோளுக்கு இடம் தரா நெஞ்சினர் பாவேந்தர்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான
ஏப்ரல் 21க்கும், பிறந்தநாளான ஏப்ரல் 29க்கும் இடைப்பட்ட
நாள்களில் ஒன்றேனும் தமிழ் உள்ளங்களை பாரதிதாசனை
நினைவு கூர வைத்துவிடும். இந்த வருடம் அவரின் நினைவு
வந்தபொழுது இன்றைய தமிழ், தமிழர் நிலையை 1950களோடு
ஒட்டிப் பார்க்க வைத்தது.
1950களை எண்ணும்போது பாவலரேறு பெருஞ்சித்திரனார்
என்ற அந்த மாசு மறுவற்ற தமிழ் வெள்ளத்தையும்
எண்ணிப் பார்க்க வைத்தது.
அவரை எண்ணிப் பார்க்கையிலே, அவருக்கு முந்தைய ஆயிரத்தி
சொச்சம் ஆண்டுகளுக்கு முன் (7,8,9 ஆம் நூற்றாண்டுகளில்)
தமிழ் வளர்த்த பலரையும் குறிப்பாக தேவார மூவரையும், அவர்கள்
காலத்துக்கும் முற்பட்டவர் என்று சொல்லப்படுகிற மாணிக்க
வாசகப் பெருமானையும் எண்ணிப் பார்க்க வைத்தது.
அப்பர் பெருமான் இறைவனை எண்ணி, இறையே
உனக்குப் பிடித்த நீராட்டு, மலர் அருச்சனை,
தூபம்(ஒளி/தீபம்) இவற்றை நான் செய்ய தவறியதேயில்லை;
அது மட்டுமல்ல நீ உகக்கும் தமிழிசைப் பாடலை ஆக்கவும்
பாடவும் தவறியதேயில்லை - இப்படியான எனக்கு என் வயிற்றில்
ஏற்பட்டிருக்கும் சூலை நோயை நீ போக்கியருள வேண்டும்
என்று உருகிப் பாடுவார்.
'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைப் பாடல் மறந்தறியேன்.... '
அப்பர் பெருமான், நீர் என்பதற்கு சலம் என்ற சொல்லை
பிற மொழிக் கலப்பில்லாமல் பேணியிருப்பதுவும்,
இறைவனுக்கு ஏற்றவை பிடித்தவை
சலம், பூ, தீபம் மற்றும் தமிழ் என்று மிக இயல்பாகச்
சொல்கிறார். அது மட்டுமல்ல, தமிழ்ப் பா ஆக்கி
அதனை இறைவனிடம் பாடி தன் குறைகளையும்
போக்கிக் கொள்கிறார்.
மறைஞான ஞானமுனி சம்பந்தரும், சுந்தரரும்
இறைவனை தமிழ்ப்பாக்களால் பாடி இன்பம்
அடைவது மட்டுமல்லாமல், தாம் பயன் அடைவது
மட்டுமல்லாமல், இந்தப் பதிகத்தை ஓதுபவர்களுக்கும்
அவர்கள் பெற்ற பயன் விளையும் என்று ஆணை யிட்டுச்
சொல்லியிருக்கிறார்கள்.
'காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே '
'தானுறும் கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே '
- சம்பந்தர்
தான் பெற்ற இன்பம் மற்றோருக்கும் கிடைக்கச்
செய்வது மட்டுமல்லாமல், சுந்தர மூர்த்தி நாயனாருக்குத்
தனிச் சிறப்பே இருக்கிறது. சிவபெருமானைக் கெஞ்சுவார்,
அவரிடம் உருகுவார், நெகிழ்வார், நன்றிசொல்வார்; திடாரென்று
பிடித்து ஏசுவார், மிரட்டுவார், கடிவார், இழிவாகவும்
பேசுவார்.
'திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்
திருமேனி வருந்தவே வலைக்கின்றேன், நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா.. '
என்று சொல்லும் துணிவு சுந்தரருக்கு மட்டுமே வரும்.
இறைவனோடு அவர் காட்டாத குணங்களே கிடையாது.
இறைவனை என்ன திட்டினாலும், இறைவனும் அதைக் கேட்டுக்
கொண்டு இவர் கேட்பதையெல்லாம் கொடுத்தும் விடுவார்;
அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் என்று சிவநெறியாளர்கள்
சொல்வார்கள்.
இறந்து சாம்பராகிப் போன பெண்ணை (பூம்பாவாய்) பிழைக்க
வைத்தவர் என்று சம்பந்தரை (மயிலையில்) சிவநெறியாளர்கள்
சொல்லிப் பெருமைப்படுவார்கள். (மட்டிட்ட புன்னையங்கானல்...)
இந்த மூவர் பெருமக்களும் ஆக்கியவை அனைத்துமே
தூய தமிழ்ப் பாக்கள். ஒன்றா இரண்டா ? ஆயிரக்கணக்கான
பாடல்கள். அவற்றை சிவபெருமானும் அப்படியே
ஏற்றுக் கொண்டார்.
அதேபோலத்தான், நாம் வாழும் காலத்தில் நம் முன் வாழ்ந்து
மறைந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழகத்தில் ஆரவாரக்
கவிதைகளையும், திரைப் பாடல்களையும் இயற்றும் எல்லாக்
கவிஞர்களையும் நமக்குத் தெரியும்.
20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் யார் என்று கேட்டால்
கண்ணதாசன், வைரமுத்து, பட்டுக்கோட்டையார் போன்ற
கவிஞர்களை பலரும், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களை
சிலரும் சொல்லக் கூடும். ஆனால் விரல் விட்டு எண்ணிவிடலாமோ
என்றளவில்தான் பவலரேறு என்ற ஒப்பற்ற பாவாணரை
தமிழகம் நினைவில் கொண்டிருக்கிறது. இவரின் தமிழ்ப்பாக்களில்
புற/அக நானூறின் செறிவும் சிந்தனையும் விரவிக் கிடக்கும்.
அப்படிப் பட்ட பாவலரேறு தம் மகள் கடுஞ் சுர நோயால்
பாதிக்கப் பட்டுக் கிடந்தபோது, சரியான மருத்துவம் அளிக்க
முடியாததோர் வறுமை நிலையில் விடிய விடிய தமிழ் அன்னையை எண்ணி
நைந்து, உருகி பா இயற்றிப் பாட (தமிழ்த்தாய் அறுபது),
ஓரிரு நாள்களில் நோய் முற்றும் நீங்கி அவரின் மகள் சாவினின்று மீண்டது.
'ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறுப் போந்து திங்கள்
நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த
தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்
வள்ளன்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்! '
'சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்
மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்
ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்
காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா! '
(கனிச்சாறு - 3 - தமிழ்த்தாய் அறுபது - பெருஞ்சித்திரனார்)
தேவார மூவர்கள் சிவபெருமானை வேண்டிப் பாடினார்கள் என்றால்,
பாவலரேறு தமிழன்னையை வேண்டினார். மூவர்களையும்
பாவலரேறையும் ஒப்பிடுவது நமது நோக்கல்ல - ஆனால் ஒரு
ஒற்றுமை என்ன வெனில் இவர்கள் யாவரின் வேண்டு பொருள்
வேறாயிருப்பினும் வேண்டிய வழி தமிழ். அதனை இறைவனும்
ஏற்றுக் கொண்டான்; தமிழன்னையையே இறைவியாகக் கொள்ள
பெருஞ்சித்திரனாரின் பாவை இறைவியும் ஏற்றுக் கொண்டார்.
அத்தகைச் சிறப்பும், தமிழும் கொண்ட பெருஞ்சித்திரனார்
1950களிலே பதறினார் தமிழின் நிலை கண்டு. எதற்காகவென்றால்,
தற்போதைய ஆண்டுகளிலே, தமிழகத்திலே ஆட்சி அதிகாரத்தில்
இருக்கின்றோர் தமிழகத்தின் சட்ட மன்றத்திலே தமிழ் மொழி
காக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை எப்படி நையாண்டி
செய்கிறார்களோ, 'சைக்கிளுக்குத் ' தமிழ் தெரியுமா ?
வேட்டி கட்டினீர்களா ? என்றெல்லாம் கேட்டு எள்ளி நகையாடி
விளையாட்டுக் காண்பிக்கிறார்களோ அதேபோல 1950 களில்
சட்ட மன்றத்திலே, கங்கு கரையின்றி அக்காலத்தில்
புழங்கிய வடமொழிச் சொற்களில் சில சொல்லி
'இந்தச் சொல்லுக்குத் தமிழ் இருக்கா ?
இந்த எழுத்துக்குத் தமிழ் இருக்கா ? ' என்றெல்லாம்
தமிழைக் காக்க எழுந்தோரையெல்லாம்
கேட்டு நகையடித்தார்கள். அது மட்டுமல்ல,
மொழியாராய்ச்சியிலும் குளறுபடி.
அப்போது பதறினார் பாவலரேறு!
'பழிவாங்கிக் கொண்டார் இந்நாட்டை ஆள்வார்!
பைந்தமிழ்க்குத் தீங்கு செய்தார்; நஞ்சைச் சேர்த்தார்!
விழியற்ற அறுவர் போய் யானை கண்ட
வினைதவிர வேறென்ன ? உணர்வீர் நன்றே!....
மகிழ்ச்சி எனும் சொல்லிருக்க 'சந்தோசம் ' ஏன் ?
மக்களரசு இருக்க 'சனநாயகம் ' ஏன் ?
புகழ்ச்சி பெறும் 'புத்தகம் ' இருக்க 'புசுத்தகம் ' ஏன் ?
இகழ்ச்சி தரும் 'அட்சரம் ' ஏன் 'எழுத்து ' இருக்க ?
'இழிமலடி ' வெறுவயிறி வடவர் மூளி
புகழ்ச்சி பெறும் மங்கைக்குத் தருமாம் பிள்ளை;
பைந்தமிழ்த் தாய்க் காணையிட்டு நிற்பீர் மக்காள்! '
(கனிச்சாறு-16)
50 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியால் வாடிய
தமிழை செழிக்கச் செய்ய பாவலரேறு போன்றோரும்
பாவேந்தர் போன்றோரும் ஆற்றிய பணிகள் ஏராளம்.
தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், வணிகம், நுட்பம்,
கலைகள் போன்ற பல்துறைகளிலும் தமிழ் மறுமலர்ச்சி
அடைய வேண்டும் என்று அவர்கள் ஆற்றிய பணிகள்
அளவிடற்கரியது.
ஆயினும், 50 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலையை
நோக்கினால், இன்றும் அந்த முயற்சிகள்
முழுமையடையாததோடு, மேலும் சீர் கெட்டுக்
கிடப்பதைத்தான் காண முடிகிறது.
இன்றும் அன்றைப் போலவே, ஆங்கிலச் சொல் கலப்பைப்
பற்றி சட்ட மன்றம் நகையாடுகிறது. எங்கு நோக்கினும்
வணிகப் பலகைகள், கல்வி, கலை, நுட்பம், இல்லம்
எல்லாவற்றிலும் தமிழ் முழுமையாக இல்லவே இல்லை.
50 ஆண்டுகள் கடந்த பின்னரும், வடமொழிக்
கலப்பும் வடசொல் புழக்கமும் பெருமளவு குறையவில்லை.
அதோடு சேர்ந்து ஆங்கிலமும் தமிழை மிதித்துக் கொண்டிருக்கும்
இக்கால கட்டம் நேர்மையாக சிந்திப்போரை பதறத்தான்
வைத்திருக்கிறது.
ஏனிந்த நிலை ? பாரதிதாசனின்
பதறல்களும் சாடல்களும் இவை:
'வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ ? அரசியல்சீர்
வாய்க்கப் பெற்றோர்
ஆணிகர்த்த பேடிகளோ ? அரும்புலவர் ஊமைகளோ ?
இல்ல றத்தை
பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ ?
பெருவாழ் வுக்கோர்
ஏணிபெற்றும் ஏறாத தமிழர் உயிர் வாழ்வதிலும்
இறத்தல் நன்றே.
மிகுகோயில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர்
விழாவெ டுப்போர்
தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர்
தம்மா ணாக்கர்
நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ ?
நல்வாழ்வுக்கோர்
புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர் உயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.
மகிழ்ச்சிசெய வருங்கூத்தர் மாத்தமிழை மாய்ப்பதுண்டோ ?
வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ ? இசைப்பாடல் ஆக்குபவர்
இழிவேன் ஏற்றார் ?
நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ ?
வாழ்வுக் கான
புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழ்ருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.
கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும்
கூட்டம் ? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ ?
சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார் ? துண்டறிக்கையாளருமோ
தீயர் ? வாழ்வில்
ஏற்றமூற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே. '
--தமிழியக்கம் - பாரதிதாசன்
பாவேந்தர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின்
ஒவ்வொரு துறையினரையும் வினவுகிறார், சாடுகிறார்
சாபமும் விடுகிறார்; பாவேந்தர் வாழ்க என்று கூறிவிட்டு
அவர் கடிந்துரைத்த அத்தனை பாதகங்களையும்
தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழர்கள்.
வணிகம், அரசியல், இல்லம், அச்சகம், ஏடுகள், மிடையங்கள்,
பட்டிமன்ற, சொற்பொழிவாளர்கள், அறநிலையங்கள், புலவர்கள்
எல்லோரிடமும் இன்று நாம் காணும் குறைகளை அன்றே
கண்டவர்கள் பாவேந்தர் உள்பட பல பேர்கள்.
ஆயினும் எல்லோரும் 'தமிழ் வாழ்க ' என்று
சொல்லிவிட்டு, அந்தச் சொற்களைத் தவிர
அத்தனையையும் பிறமொழிகளில் புழங்குகிறோம்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைக் கூட
'Wish you a happy Tamil New Year ' என்று
கூறி கோமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
துறைதோறும் ஊழல், ஒழுக்கமின்மை மற்றும் தமிழின்மை
என்ற நிலையில் தமிழர்களின் வாழ்வு நிச்சயம்
கேள்விக் குறிதான் என்பதில் அய்யமில்லை.
எது செய்யக் கூடாதோ அதை செய்வதில் வல்லவர்கள்
தமிழர்கள். அண்மையில் இவர்களின் இடக்கு முடக்கு
என்னவென்றால் கணினி உலகில், தமிழ் எழுத்துரு,
மற்றும் குறியீட்டு குளறுபடிகள்.
தமிழர்களுக்கு தமிழும் ஒழுங்காகத் தெரியாது!
அதோடு கணினியையும் ஒழுங்காகத் தெரியாது
என்று சொல்லுமளவுக்கு இவர்கள் நடந்து
கொண்டிருக்கிறார்கள்.
காட்டுமிராண்டித் தனமாக இவர்கள்
குறியீட்டுக் குறைகளை புறம் தள்ளிவிட்டு,
இருப்பதே போதும் என்று குறைச் சிந்தனையால் வறட்டு
வீராப்பும் பெருமையும் பேசித் திரிகிறார்கள் இன்றைய
தமிழ்க் கணினிச் சொவ்வறையாளர்கள்.
தமிழகத்திற்கு மத்திய அரசிலே சரியான பங்கில்லை,
அதுவும் கணினி தொடர்பான அடிப்படை விசயங்களில்
தமிழ்க் குறியீட்டிற்காக குரல் கொடுக்க ஆளில்லை
என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள்,
இன்று நடுவண் அரசிலே பலம் பொருந்திய அமைச்சராக
அதுவும் கணினித் துறையைக் கையில் வைத்திருக்கும்
தமிழர் ஒருவர் அமைச்சர் இருக்கையிலே கூட,
எதிர்காலம் பற்றிய செறிவான சிந்தனையைச்
செய்யாமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு
தமிழ்க் குறியீட்டை கோட்டை விட்டு, பின் ஏப்பம் விட்டு
இருக்கும் தமிழர்களைத்தான் 'ஏணிபெற்றும் ஏறாத தமிழர் '
என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறினார் போலும்!
பாவேந்தர் பாரதிதாசன் அன்று பாடினதும் பதறியதும்,
இன்றும் பாடலாகவும் பதறலாகவுமே நிலைத்து
வருங்காலத்துக்கும் பொருந்தி விடுமோ என்ற
அய்யம் இருக்கவே செய்கிறது.
தேவார மூவர்கள், பாவலரேறு, பாரதிதாசன்
போன்ற எவ்வளவோ பேர்கள் தமிழுக்கு
மறுமலர்ச்சியைக் கொடுத்தும் 'ஏணிபெற்றும்
ஏறாத தமிழர்களை ' என்ன சொல்ல ?
பாவேந்தர் தெளிவாகத்தான் அவர் பாட்டில்
சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னது போல் ஏன் என்னால் சொல்ல முடியவில்லை ?
என்ற சிந்தனையோடே, 'பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்த களிரென்னும் அவாவிடை.... ' என்ற மாணிக்கவாசகரின்
சொல்லையும் எண்ணிப் பார்க்கிறேன்.
'பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்த களிரென்னும் அவாவிடை.... ' பிழைக்காது தமிழ்
என்ற ஏக்கத்துடன் பாரதிதாசனை நினைவு கூர்கிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
20-ஏப்ரல்-2005
திண்ணையில் நாக.இளங்கோவன்
Thursday, July 22, 2004
கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!..
அஞ்சலி செலுத்த அலுக்காத குமுகாயம்! (சமுதாயம்).
அஞ்சலி செலுத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் குமுகாயம்!
அஞ்சலி செலுத்திவிட்டால் பொதுநலப்பணி ஆற்றிவிட்டதாகக் கருதும் குமுகாயம்!
அஞ்சலி செலுத்துவதற்கென்றே காத்துக் கிடக்கும் குமுகாயம்!
அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை ஆசையுடன் பயன்படுத்திக் கொள்ளும் குமுகாயம்!
அஞ்சலி ஒன்றை மீண்டும் செய்த குமுகாயம் சற்றே களைத்துப் போய்க்கொண்டு இருக்கிறது!
அஞ்சலிகள் இன்னும் சில நாள்கள் நீடிக்கக் கூடும்!
அஞ்சலிகளுக்குப் பஞ்சமில்லா இந்நாட்டில்,
அஞ்சலி செலுத்தப் படவேண்டியவை அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும்!
அஞ்சலி முடிந்ததும் அடுத்த அஞ்சலிக்கு குமுகாயம் தயாராகிவிடும்!
'அஞ்சலிக்கும் அஞ்சலிக்கும் இடைவெளி அஞ்சலிகளே! '
அஞ்சலிகளுக்கு மட்டும் இந்நாட்டில் தடையே கிடையாது!
நீண்ட காலத்திற்குப் பின் அல்ல!
எண்ணிப் பார்த்தால் நினைவுகளில்
அண்மைய காலத்திய கோரச் சாவுகள் எத்தனையோ
நினைவுக்கு வருகின்றன.
நித்தம் ஒரு காரணம்! ஏடுகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்
அஞ்சலி செலுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்.
இயற்கையின் அழகை வருணிப்பது போல
அந்தக் கொடுமைகளை வருணிக்கிறார்கள்! ஒருமுறையல்ல,
மணிக்கொருமுறை தொலைக்காட்சியும், நாளுக்கொருமுறை ஏடுகளும்!
கேட்டால் பத்திரிக்கை தருமம் என்று சொல்லக்கூடும்!
ஆனால் சொல்லக்கூடிய சேதிகளில் ஏதேனும் புதிது உண்டா என்றால்
இல்லவே இல்லை.
ஒரே ஒரு ஆங்கில ஏடு மட்டும்
இப்படிப் படமும் எழுத்தும் போடுவதற்காக வருந்தியிருந்தது.
வேறுவழியில்லாமல் இந்தக் கொடுமையை இப்படி நாங்கள்
போடுகிறோம் என்று எழுதியிருந்ததில் ஒரு முதிர்வும் வேதனையும்
தெரியத்தான் செய்தது.
சேதிகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை.
ஆனால் பல ஏடுகள் அவற்றை எழுதிய முறைகள் அருவருப்பைத் தந்தன.
எழுத்தாளர்கள் பலரும் கொஞ்ச நாள்களுக்கு
இந்தத் தீவிபத்தைப் பற்றி நிறைய எழுதக் கூடும்.
சிறுகதை பெருகதை ஆளர்களுக்கும், திகில் கதை எழுதுவோருக்கும்
நல்ல வரும்படி உண்டு சில நாள்களில்!
கவிஞர்கள் ?
ஓ..இதுவும் ஒரு கவிதைக் காலம்!
சில வெகுசன ஏடுகள், தமிழகத்தின் பெருமை
சொல்லும் ஏடுகள், அந்தப் பள்ளியில்
ஏதாவது கிசுகிசு கிட்டுமா ? கவர்ச்சிக் காட்சிகள் கிடைக்குமா
என்று கூட தேடி அலையக்கூடும்!!
திடாரென்று சட்டங்கள் பாய்கின்றன.
சில பேர்கள் பதுங்குகிறார்கள்!
சிலர் பதுங்குவதாலேயே பலர் பாய்கிறார்கள்!
நகைப்புதான் வருகிறது!
'தாளாளரைக் கைது செய்!
ஆசிரியர்களுக்குப் பார் ஒன்றுமே ஆகவில்லை! ' என்ற குரல்கள்.
அவர்களும் போய் இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி
செய்திருப்பார்கள்! அவ்வளவுதான்!!
இந்தச் சினங்கள் ஒரு அரசியல்வாதியின் கள்ள அணைப்பில்
அணைந்து போய்விடும் சினங்கள்!
அந்தச் சினங்களில் கூட நேர்மை இல்லை! அல்லது,
'சினப்படக் கூடத் தெரியவில்லை '.
எதன்மேல் எல்லாம் சினம் பாருங்கள்!
அந்தப் பள்ளியின் தாளாளர் மேல் சினம்!
அங்கே பாடம் சொல்லிக் கொடுத்த
வாத்தியார்கள் மேல் சினம்!
உண்மையில் இந்நாட்டில் பாடமே சொல்லித்தரத் தெரியாத
வக்கற்ற வாத்தியார்கள்தான் முக்கால்வாசிக்கும் மேல்;
வேற எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் வாத்தியார்
வேலைக்கு வருபவர்கள்தான் அதிகம்.
அப்படிப்பார்த்தால் அந்தப் பள்ளி வாத்தியார்களிலும்
வக்கற்ற வாத்தியார்கள்தான் மிகையாக இருந்திருப்பர்.
அந்த வக்கற்ற வாத்தியார்கள் மேல் சினம்!
அரசாங்கத்திற்கு, கல்வி, பள்ளி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய
அதிகாரிகள் மேல் பொத்துக் கொண்டு வந்தது சினம்!
அந்தச் சினத்திற்கு இலக்கு சில வகையற்ற அதிகாரிகள்; அவ்வளவுதான்!
மிஞ்சிப் போனால் 100 கி.மீ தொலைவிற்கு
இடமாற்றம் செய்யப் படுவர்.
அப்புறம் எதன்மேல் சினம் ?
அங்கே சமையல் செய்யப் போன சமையல் காரர் அல்லது
சமையல் கார அம்மையாரின் மேல் சினம்!
இப்ப சாகவா நாளைக்கு சாகவா என்று அரசு மருத்துவமனையே
அல்லாடுகையில் திடாரென்று திரண்டு வந்த சாவுகளைக்
கவனிக்க முடியாததால் மருத்துவமனையின் மேல் சினம்.
அப்புறம் ?
இடவேண்டியவர்கள் இட்டார்கள்!
சுடவேண்டியவர்கள் மேலும் சுட்டார்கள்!
ஊரிலே இழவு என்றால் தப்புக்குப் பிடிக்குமாம் சனி!
அதுபோல, அத்தனைப் பிணங்களையும் எரிக்க முடியவில்லை/ஆளில்லை
என்று சுடுகாட்டு வெட்டியானின் மேல் சினம்!
சரி சினம் இன்னும் அடங்கவில்லையே என்ன செய்வது ?
பிடி அந்த அரசியல்வாதிகளை!
திட்டித் தீர்க்கலாம் வாருங்கள் என்று ஒரு படை.
அரசியல்வாதிகள் இந்த ஒரு முறை மட்டும் யாரும் யாரையும்
குறை சொல்லிக் கொள்ள வில்லை. (ஆயினும் சில ஏடுகள் அந்தத் திரித்து விடும்
திருப்பணியை செய்தன) அடடா, என்ன ஒரு நல்ல மனம் என்று
எண்ணத் தோன்றுகிறதா ? அதுதான் இல்லை.
55 ஆண்டுகளில்,
பெருங்காலம் இந்தியாவை ஆண்ட பேராயக்கட்சிக்கும்,
இடையில் ஒரு 5/6 ஆண்டுகள் ஆண்ட அழுக்கு மூட்டைகளுக்கும்,
தமிழகத்தில் ஆண்ட பேராய (காங்கிரசு),
திராவிட (திமுக), எந்தக் கணக்கிலும் சேராத அ.தி.மு.க என்ற
எல்லா கட்சிகளுக்கும், இந்தச் சாவில் சம பங்கு உண்டு என்பதால்
யாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவில்லை.
அந்தப் பள்ளியின் வயதும் 50 ஆண்டுகளாம்! புகழ் பெற்ற பள்ளியாம்.
இன்னும் பாருங்கள் வேடிக்கையை. கும்பணிகள் தங்கள்
வணிகத்திற்கு ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள். அதில்
தங்கள் வருத்தத்தை வடிவான வார்த்தைகளில் கொட்டி,
அஞ்சலியை செலுத்தி, வாசகனை கவர்வதில் முனைப்பு
காட்டுகிறார்கள்.
இன்னும் சில சினங்கள் உண்டு!
ஊர்வலங்கள் நடக்கின்றன!
அதிலே 'தீயே உனக்கு இரக்கம் இல்லையா ? '
என்று ஒரு வாசகம்.
தீயிடம் சினம் கொள்கின்றனர்! தீயிற்கு இரக்கம் வேண்டுமாம்!
அப்புறம் பாருங்கள்! சினம் அதிகமாகி அதிகமாகி
கடைசியில் 'எல்லாத்துக்கும் காரணம் இந்தக் கூரைகள்தான் '
என்று கூரையைப் பிரித்து எறிய ஆரம்பித்து விட்டார்கள்!
குரங்குகள்தான் சினம் வந்தால் கூரையில் ஏறி பிய்த்து எறியும்.
அப்படிப் பட்ட குரங்குத்தனம்தான் தற்போது கூரைகளைப்
பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறதே தவிர,
திட்டமிட்ட மதியின் செயல்பாடாய் இது தெரியவில்லை.
சரி - கூரையைப் பிய்த்தாகிவிட்டது. மின் கோளாறால்
தீ விபத்து ஏற்பட்டால் மின்சாரம் முழுவதையும் பிய்த்து விடுவார்களா ?
நான் ஒன்றும் கூரைகளுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை.
தங்கள் சினத்தை காட்டத் தெரியாத,
தங்கள் சினத்திற்கு வடிகால் இல்லாத
இந்தக் குமுகாயம் எதன் மேல் எல்லாம் சினம் கொள்கிறது
என்று சொல்லத்தான்! இந்தக் கூரைகளைப் பிய்த்துப் போடுவதோடு
தன் சினத்தை முடித்துக் கொண்டு அடுத்த வேலையில் தங்களை
மறந்துவிடுவார்களே, அதை எண்ணித்தான் எனது சினமெல்லாம்.
40000 பள்ளிக்கூடங்கள் இருக்கும் தமிழ் நாட்டில்,
கல்வித்தலங்கள் கழிவறைகள் போல் இருக்கின்றன.
இதை மிகக் குறைவான செலவுகளில் சிறப்பான
தலங்களாக மாற்ற முடியும். ஆனால், அதைச் செய்யப் போவது யார் ?
அரசாங்கம் ? எத்தனை அதிகாரிகளிடம் நேர்மையிருக்கிறது ?
அரசியல் வாதிகள் ? காவல் துறையினர் ? சட்டம் ? நீதி ? எல்லாமே பழுது.
அப்படியென்றால் பொது மக்கள் ஞாயமானவர்களா ?
தமக்கு சாதகம் என்றால் எந்த அரசியல் வாதிக்கும்,
அதிகாரிக்கும் தர வேண்டியதை தரத் தயாராக இருப்பவர்கள்தான்
பெரும்பாலான மக்கள். ஞாயமானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும் ?
போபால் விசவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட 5+ இலக்கம்
மக்களுக்கு நிவாரணத்தொகை 20 ஆண்டுகள் கழித்துக் கிடைக்கிறது.
அதுவும் எவ்வளவு என்றால் ஒரு ஆளுக்கு குத்து மதிப்பாய 30 ஆயிரம் உரூவாய்.
இந்த 30 ஆயிரம் உரூவாய் என்பது ஒரு இந்தியப் பிச்சைக்காரன்
இரண்டு வருடங்களில் சம்பாதித்து சேமித்து விடக் கூடிய காசு.
இதற்காக இவர்கள் காத்திருந்தது 20 வருடங்கள்.
இவர்களது சினத்தின் விலை 30 ஆயிரம் உரூவாய்.
அதாவது 650 அமெரிக்க வெள்ளி!
3 வருடங்களாக காவிரியில் தண்ணீர் வரவில்லை.
பொதுமக்கள் பலே கில்லாடிகள்.
பழியைத் தூக்கி செயலலிதா மேலும் கருணாநிதி மேலும்
போட்டு விட்டு தங்கள் பிழைப்பைப் பார்ப்பார்கள்.
கருணாநிதி, செயலலிதா ஒரு புறம் இருக்கட்டும்.
திங்க சோறில்லாமல் 3 வருடம் சரவல் பட்டும்
விவசாயிக்கு இன்னும் சினமே வரவில்லைங்க!
காவிரியை நம்பி வாழும் ஏறத்தாழ 1 கோடி பேர்களில்
வெறும் 1 இலக்கம் பேருக்குக் கூட சினம் வரவில்லை!
சினம் வந்து காவிரிக்கரையில் அணிவகுத்து
போராட்டத்திற்கு செல்லத் தோன்றவில்லை!
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம்
கேட்கவும் வேண்டாம், கேட்கப் படவும் வேண்டாம்
என்று பொறுப்பற்று வாழும்போது கொடுக்கப் பட வேண்டிய விலை
மிகப் பெரிதாகத்தான் இருக்கும்.
தஞ்சை இராச இராசன் கோயிலில் பெருந் தீவிபத்து
நடந்தது 97/98 ஆம் ஆண்டு வாக்கில். அது நம் நினைவை
விட்டு அகன்று விட்டது. அங்கேயும் கூரைதான் எரிந்தது.
அங்கேயும் தப்பிக்க இடமில்லாமலே பலர் மாண்டனர்.
ஈராண்டுகளுக்கு முன்னர் திருவரங்கத்திலே திருமணக்
கூடத்திலே பல பேர் மாண்டனர். அங்கேயும் கூரை எரிந்தது.
காரணம் மின்கசிவு என்றார்கள்.
தற்போது கல்விக் கூடத்திலே கூரை எரிந்து பலர் மாண்டிருக்கின்றனர்.
வாழ்க்கைத் தரமும், நுகர்வோர் தரமும் சீரழிந்து
கிடக்கிறது. ஏன் எதற்கு என்று வாயெடுத்து கேட்கத் தெரியாத
மக்கள் கொண்ட குமுகாயம். உரிமையைக் கேட்பது அநாகரிகமாகக்
கருதும் குமுகாயமாக ஆகி முழு அடிமைகளாக ஆகப் போகின்ற
குமுகாயமாக இது தெரிகிறது.
செய்தித்தாள்களை எடுத்தால் காவல் துறையினரின் ஒழுக்கக்
கேடுகள்தான் தினச் சேதிகளாக வந்து கொண்டுள்ளன.
பண்ணையாருக்குச் சினம் வந்தால் பண்ணையாள்களின் குடிசைகளை
கொளுத்தி விடுவார். பெரிய ஆலை அல்லது நிறுவனம் கட்ட வேண்டுமானால்
அங்கிருப்பவரை காலி செய்ய குடிசைகளை கொளுத்தி விடுவார்கள்.
இங்கே எங்கேயும் கொளுத்திக் கொள்ளவில்லை என்றால்,
இருக்கவே இருக்கிறது மதச் சண்டைகள். மதம் கொண்டு
கூரைகளை மட்டுமல்ல, கோபுரங்களையும் கொளுத்தி அல்லது
இடித்து விடக் கூடிய சக்தி தீராத மத வெறிக்கு உண்டு.
அது சற்று ஓய்ந்தால், சாதி வெறி பற்றிக் கொள்ளும்.
அப்போது எரியும் கூரைகளிற்குக் கூட சாதி உண்டு!
அய்யோ எரிகிறதே என்றால் இன்றைக்கு அதை அணைக்கக் கூட
தண்ணீர் இல்லை தமிழகத்தில்.
அரசு, அரசியல், சட்டம், காவல், நீதி, கல்வி, வேலை, உணவு,
மருத்துவம், சாலை, வணிகம், என்று எல்லா நிலைகளிலும்,
துறைகளிலும் ஒழுக்கமும் நாணயமும் கெட்டுப் போய் கிடக்கிறதென்றால்
அதற்கு வெறும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மட்டும்
காரணமாகி விட முடியாது.
ஒட்டு மொத்த குமுகாயமும் தன்னைத் தானே
ஏய்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே இந்தத் தீவிபத்தில் பொதுமக்களிடம் மற்றும் அரசுகளிடம்
இன்று வெளியாகி இருக்கும் அஞ்சலிகளும் சினங்களும் வெறும் சம்பிரதாயங்கள்.
இந்த அஞ்சலிகளை வெளியிட்டிருக்கும் பலர்
கூட அரசையும் பொதுமக்களையும் ஏதோ ஒரு வகையில்
ஏமாற்றி இருப்பார்கள் என்று நம்புவது கடினமல்ல.
ஏற்றத்தாழ்வுகள் பெருகும் போது தன் நலம் பெருகிப் போகிறது.
தன் நலம் பெருகும் போது கடமைகள் காணாமற்போகும்.
கடமை தவறும் போது நேர்மையும் தவறித்தான் போகும்.
நேர்மை தவறும் போது சினம் அவிந்துதான் போகும்.
சினம் அவிந்து போன குமுகாயம் சீரழிந்துதான் போகும்.
அந்தச் சீரழிவின் ஒரு துளிதான் கும்பகோண விபத்து.
இன்று கும்பகோணத்தில் சரவல்!
நாளை எந்தக் கோணத்தில் சரவலோ ?
ஆகையால்,
அஞ்சலி செலுத்துவோரும் அழுகாச்சி வந்தோரும்
அதை நிறுத்திக் கொள்வது நேர்மை.
அதைவிட நேர்மை, அவசர அவசரமாக நடவடிக்கைகள்
எடுப்பதும், சந்தடி சாக்கில் ஆலோசனைகள் கூறுவதையும்
தவிர்த்தல். இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்
என்று பேசுவதில் சுகம் காணாமல் இருத்தல் நன்று.
மாறாக ஒவ்வொருவரும் தீராத சினம் கொள்ள வேண்டும்!
அச்சினத்தில் உறுதி வேண்டும். அந்த உறுதியுடன் மதி சேரவேண்டும்.
அந்த உறுதி வேண்டுமானால், மனதில் உரோசம் வேண்டும்.
செயக் கூடாதவற்றைச் செய்யாமல் இருக்க வைராக்கியம் வேண்டும்.
அது ஒரு ஒழுக்கப் புரட்சிக்கு அடிகோலும்.
அது வருங்காலத்துக்குப் பயன்படும்.
அதைவிட்டு விட்டு 500 உரூவாய் 600 உரூவாய்
சம்பளத்துக்கெல்லாம் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை,
சமையல்காரர்களை போய்த் துரத்திக் கொண்டிருப்பது
கோழைத்தனம் மட்டுமல்ல பம்மாத்து.
அன்புடன்
நாக.இளங்கோவன்
nelan@rediffmail.com
திண்ணையில் எழுதியதுSaturday, March 20, 2004
தரிசானாலும் தாயெனக்கு!
"தாலாட்டு"
கையேந்தி நின்றதில்லை காசேதும் பெற்றதில்லை
கைகூப்பி வந்தவரை கைதூக்கி விட்டமண்ணே!
உன்வயிற்றில் விளைகின்ற ஒப்பற்ற முத்தையெலாம்
என்குதிரில் கொட்டிவைத்த என்வயலே புவித்தாயே!
கதிரறுத்துக் கட்டையிலே, கீழிறைந்த நெல்பொறுக்கி,
குதித்தாடிக் கூத்தாடிக் கூட்டுக்குள் போகையிலே,
கண்ணாலே கண்டதெலாம் பொன்னான நெல்மணியே;
உன்னாலே நான்வளர்ந்தேன், ஓய்வெடுப்பாய் என்நிலமே! (1)
சாமிகிட்டப் போகையிலும் போட்டதில்லை காலணியை;
பூமியுன்னைத் தொடுங்காலும் போட்டதில்லை காலணியை;
உனைப்பணிந்து ஊன்றிவைத்த ஒவ்வோரு நாத்துக்கும்
உனைமறந்து ஊட்டுவியே உகப்பான எம்பாட்டால்;
கணியுலகில் கழனிக்குக் கழிநீரும் கிட்டவில்லை
குனிந்திங்கு கூவுகின்ற குள்ளரோட பூமியிலே!;
ஊழ்பிடித்த உலகத்தின் ஓலங்கள் உறங்கும்வரை
யாழ்இசைப்பேன் ஓய்வெடுப்பாய், என்மடியில் கண்வளர்வாய்! (2)
அடித்துக் குவித்தகளம் ஆதவனின் கண்பட்டு
வெடித்து வாய்பிளந்து வீணாகப் போகுதென்று,
தாய்வீட்டுச் சீதனமாய்த் தந்தனுப்ப நெல்லின்றி
வாய்விட்டு அழுகிறியே, வாடிவிட்ட என்கழனி!;
ஆடியிலே காவேரி ஓடிவந்து சேர்ந்திட்டால்
அய்ப்பசிக்கே கதிரறுத்துக் களமெல்லாம் குவித்திடுவேன்;
நாலாறு மாசமாக நாதியின்றிப் போனதாயே,
ஓராறும் போகட்டும், ஊங்காமல் கண்ணுறங்கு! (3)
ஏர்முகத்தைத் தான்சுமந்து ஏராலே கோதிவிட்டு
வேர்ஓடும் பாதையெல்லாம் காற்றோட வைத்தகாளை
போய்முடிஞ்ச அறுப்புக்குப் போரடிச்ச கையோடு
போய்ச்சேர்ந்த இடம்தேடி பதைபதைச்சுத் தேடுறியே!
கோதிவிட்ட காளையிங்கே மேயுதற்கும் வாராமல்
சேதியின்றி சென்றதனை சொல்லிநீ அழுகிறியோ ?
உழவனுக்கு வறுமையின்னா காளைகளும் நெல்லாகும்;
அழவேண்டாம் கண்ணுறங்கு, அப்படியே என்மடியில்! (4)
வெள்ளாமை இல்லாமல், வெண்சோறும் இல்லாமல்
பொல்லாத பூமியிலே போக்கிடமும் இல்லாதார்,
இல்லாத உனைத்தேடி ஈட்டியதோ எலிக்கறிதான்!
சொல்லேதும் ஆடாமல் சோகமுறும் என்தாயே!;
பரப்பைச் சொல்லுகிற, பாதையெலாம் பச்சைநிற
வரப்பை வகுந்துவிட்டு வாய்க்காலை மூடிவிட
பாதையை மறந்துவிட்ட பித்தாயிப் பெண்போலே
கோதை தவிக்கிறியே, கொஞ்சமெனுங் கண்ணுறங்கு! (5)
தண்ணீரே கிடைக்காமல் தரிசாகிப் போனதினால்
கண்ணீரும் காய்ஞ்சுவிட்ட கழனியம்மை உனக்காக,
கனகவிச யனைத்தான் கட்டியிங்கு வந்ததைப்போல்
கங்கையவள் கைபிடிச்சுக் கரகரன்னு இழுத்துவாரேன்;
ஈசனிடம் கேட்டிருக்கேன் ஈசுவரி பார்த்திருந்தா;
ஆசையுடன் முடியவிழ்த்து அனுப்பிடுவான் தென்னாடு;
கண்ணுறங்கு அதுவரைக்கும், கண்ணுறங்கு என்மடியில்;
உன்கனவில் நான்வருவேன் கங்கையுடன் கைபின்னி!. (6)
அன்புடன்
நாக.இளங்கோவன்
மார்ச்-2004
Thursday, January 15, 2004
நிலமகளே!
கட்டிஉறும் கரியடுக்கிக் கடுநெய்யைத் தேக்கிவைத்துக்
கண்ணேதும் காணாமல் மண்போட்டு அதைமறைத்து
முட்டிமோதி மேலேற முடியாமல் நின்வயிற்றில்
முடங்குதற்குக் கல்லாலே காவலிட்ட நிலமகளே!;
கொட்டிஉள்ளே கிடப்பதெலாம் கொடுநஞ்சென் றறியாமல்
கொடும்ஆசை தலைக்கேறக் கும்மாளம் போட்டபடி
வெட்டிவெட்டி அள்ளிவந்து வகைவகையாய்ப் பிரித்தெடுத்து
வெளியெல்லாம் அதைஎரித்து கரிகரியாய்க் கரித்துவிட்டோம்!
கன்னமிட்டுத் தங்கத்தைக் கவர்ந்துபோகு கள்வர்போல்
கல்நெய்யில் கண்வைத்துக் கைவைக்கக் காத்திருந்து,
நன்னலங்கள் யாவிருந்தும் நாணயத்தை ஒளித்துவிட்டு
நடுவுநிலை பிறழ்ந்திங்கு நகுதற்கே பொருளான
தன்னலத்தில் ஊறிவிட்ட தடித்தபல நாடுகளோ
தனதில்லா ஊர்களிலும் தன்கொடியை நடுவதெலாம்
நின்வயிற்றில் தீராமல் நெடுநாளாய் ஊறுகின்ற
நிலநெய்யை தான்கொண்டு நீள்நிலத்தை வெருட்டுதற்காம்!
கரிஅள்ளி நெய்அள்ளி வாயுவையும் தான்அள்ளி
கணக்கில்லா வண்டிகளை நிலமெங்கும் நீந்தவிட்டோம்!
கறிதின்ன, காளையெல்லாம் கொன்றுவிட்டு, உழவுஏரைக்
கல்நெய்யால் உயிரூட்டிக் கழனிதனை உழுகின்றோம்!
தறிகெட்டு ஓடிஓடித் தரணியிலே உழைத்தாலும்
தளராத வாழ்வினையே தழுவாது நிற்கின்றோம்!
வெறிகொண்டு, நாம்வாழ விரைவுமிகக் கூட்டுகையில்
வெறுஞ்செருக்கை வெள்ளமென வீதிஉலா விடுகின்றோம்!
வடித்தெடுத்த நெய்யெல்லாம் வண்ணவண்ணப் புகையாகி
வையகத்தைத் தனக்குள்ளே முடிந்துவைத்த வேதனையில்,
மடிதிறந்த மண்மாதா மூச்சுவிட முடியாமல்
மண்வாரி தூற்றுதியோ மங்காத சினத்தோடு ?
கொடியசைந்து, கூடவரும் குளிர்தென்றல் வழியின்றி
குழைத்துவரும் தூசியையும் கூடவே புகையையும்;
குடிபிழைக்கப் பொழிகின்ற மாமழையும் இந்நாளில்
கொடும்மாசு கண்டஞ்சி அண்டுதில்லை இம்மண்ணை!
மாட்டுவண்டி பூட்டிஅதை மைல்தொலைவு ஓட்டிப்போய்
மாசில்லா வயல்வெளியில் பயிரோடும் பச்சையோடும்
ஈட்டுகின்ற செயலிலெலாம் கால்நடையின் கூட்டுவைத்து
ஏச்சறியா பறவைகளின் ஏற்றமிகு நட்புகொண்டு
பாட்டுநல்ல ஆட்டுடனே பந்தமுடன் கும்மிகொட்டி
பாழான தூசுதள்ளி தூயஇடம் நானொதுங்கி
வாட்டுகின்ற பேரிரைச்சல் பேராசை போக்கிவிட்டு
வாழுகின்ற பெருவாழ்வு வேண்டுகிறேன்; அருள்தாயே!
மனையாட்டி மக்களுடன் நீர்வாங்கி நான்குடிக்க
மாசத்தில் காற்பவுனை செலவாகச் செய்கின்றேன்!
எனைநம்பி வருகின்ற எம்பசு,ப றவைகட்கும்
ஏருழுவும் காளைகட்கும் என்னபவுன் ஆகும்பார்!
அனைத்திற்கும் என்கணக்கில் ஆகுசெலவு ஓர்பவுனாம்;
ஆகட்டும்; காணிபயிர் தான்குடிக்கக் கணக்கைப்பார்!
நினைவேண்டி நிற்கின்றேன்; நீள்நிலத்தில் எந்நாளும்
நீரெல்லாம் பரிஎன்று நிலைத்திடவே நீதியிடு!
(வெண்பா)
ஞாலத்தின் செல்வமெலாம் தான்கொள்ளப் பூமாந்தர்
கோளத்தின் மேனியெலாம் மாசுபூச - காலத்தின்
கோலமெனக் காற்றும் குடிநீரும் காசுஆகி,
சீலமின்றி வாழும் உலகு.
குறிப்பு:- பரி = free = இலவயம் (நன்றி: முனைவர் இராம.கி)
அன்புடன்
நாக.இளங்கோவன்
Thursday, January 08, 2004
பொங்கலோ பொங்கல்....!
மூத்தகுடியின் முன்னோர்கள் ஆக்கிவைத்த பண்டிகைக் காலம்
இந்த பொங்கல் திருக்காலம். மனித வாழ்க்கை, அடிப்படையான அல்லது
அதிகப்படியான தேவைகளை அடைய அன்றாடம் ஏதொ ஒருமுறையில்
இயங்கிக் கொண்டே இருக்கிறது. இல்லவிழாக்கள் சுற்றம் சூழ
நடைபெறும்போது அங்கே மனநிறைவும் உறவும் வளர்கிறது.
திருமணங்கள், பிறந்தநாள்கள் போன்றவை அவை.
அதேபோல் ஊர்விழாக்கள் ஊராரை இணைத்து ஒருப்படுத்துகின்றன; பெரும்பாலும் ஊர்விழாக்கள் அனைவருக்கும் பொதுவான தெய்வ விழாக்களாக அமைகின்றன. தெய்வவழிபாடு, அதை ஒட்டிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவற்றில் அனைவரும் கலந்து கொண்டு இன்பம் துய்ப்பது ஊர்மக்கள் அனைவருக்கும் மனமகிழ்வையும் புத்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.
இல்லங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து ஒரு பெரும் சமுதாயமாக
ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள்
சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப் பூர்வமாகவும்,
உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான்
பொங்கல் பண்டிகைக்காலம். எத்தனைப் பொங்கல் காலத்தை இதுவரை இந்தத் தமிழ்க்குடி பார்த்திருக்குமோ! எண்ணி வியக்கிறேன் !
'மேழிச் செல்வம் கோழைபடாது ' என்ற கொள்கையே இத்தமிழ்ச்
சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது. அரசன் மகனை வாழ்த்தவந்த ஒளவையார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! ' என்று வாழ்த்தவில்லை! அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். காரணத்தை ஒளவையார் இவ்வாறு கூறுகிறார்.
வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.
'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே '
என்கிறார் கம்பர். 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ' என்கிறார் வள்ளுவர். ஆக இந்த வேளாண்மையே (விவசாயம்) அனைத்தையும் ஆக்குகிறது, அசைக்கிறது. மனித ஆசைகள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும்.
வேளாண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. அனைவரின் பங்கும் ஏதோ ஒருவகையில் இதற்கு இருக்கிறது.
பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்
திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த, பெருமை படத்தக்க விழா அது!
அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற
முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில்
இருந்த தைமாத ஆரம்பம், விழாக்காலமாக விதிக்கப் பட்டது எத்தனை
அறிவார்ந்த பொருத்தமான செயல் என்று எண்ணி வியக்கிறேன்.
போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு
என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா.
போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது.
இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப்
படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும்
நாளாகக் கருதப்படுகிறது.
ஆனால் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
1) கவிஞர் கண்ணதாசன், தன் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில்,
'போகிப் பண்டிகை ' என்பது போகிகளின் ( சுகபோகிகளின் ) பண்டிகை
என்று எழுதியிருக்கிறார். அதை முதலாளித் திருவிழா என்று
குறிப்பதாகப் படுகிறது. அப்படியென்றால் வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல் போன்றவையெல்லாம் தொழிலாளிப் பொங்கல் என்றாகிவிடுகிறது. ஒருவேளை அவர் சொல்வதில் உண்மை யிருந்திருந்தால் அவர் 'போகிப்பண்டிகை ' யின் சிறப்புக்களும் பாடப்பட்டிருக்கும்.
( பணக்காரன் பண்டிகையென்றால் அதற்குப் பகட்டும்
அதிகமிருந்திருக்காதோ ? ) பொங்கல் நாளுக்கு இருக்கும் சிறப்பு
போகிக்கு இருந்ததில்லை. ஆகவே கண்ணதாசனின் கூற்று சரியன்று.
2) மற்றொரு கருத்து என்னவென்றால், இடையில் தமிழை அழிக்க வந்த ஆதிக்க சக்திகள், தமிழருக்கு 'பழையன கழித்தல் ' என்ற மந்திரம் போட்டு 'போகி ' அன்று 'பழைய ஓலைச் சுவடிகளை ' யும் சேர்த்து எரித்து அழிக்கச் செய்திருக்கிறார்கள். தமிழ் நிறைய அழிந்தது இதனால் என்று அறிஞர் பலர் கருதுகின்றனர். ஆடிப்பெருக்கில் ஆற்றில் வீசியும், போகியன்று தீயில் பொசுக்கியும் அழிந்த தமிழ் நூல்கள் பல. அதோடு சமணத்திற்கு எதிராக வைதீக மதம் நடத்திய போராட்டத்தில் சமண நூல்கள் பெரும்பாண்மையும்
அழிக்கப் பட்டன. போகி என்ற பண்டிகையை இப்படி தமிழ் வரலாற்றை
அழிக்க பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், போகி என்பதன் கொண்டாட்டம் இதுவாக இருக்கவே முடியாது.
3) போகி என்றால் 'இந்திரன் ' என்று ஒரு அர்த்தம் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. மேலும் ஐந்திணைகளில் ஒன்றான மருதநிலத்திற்கு ( வயலும் வயல் சார்ந்த இடமும் ) உரிய கருப்பொருள் இந்திரன் என்ற தெய்வம். ஆகவே போகி என்பது இந்திரன் பண்டிகை என்றால் அதுப் பொருத்தமானதுதான்.
ஆனால், இந்திரனுக்குத்தான் இந்திரவிழா என்று சித்திரை மாதத்தில்
கொண்டாடுவது பழந்தமிழர் மரபாயிற்றே! அப்புறம் ஏன் இந்திரனை போகியன்று கொண்டாட வேண்டும் ? என்று எண்ணினால் அது இந்திர வணக்கமாகக் கூட இருக்க முடியாது. (இந்த இந்திரன், தேவர் கோமானாக,
மாங்குடி மைனர் கணக்கில், புராணப் பெண்களைச் சுற்றி அலையும் இந்திரன் அல்ல. அவன், தமிழரின் மருத நிலக் கருப்பொருள்)
ஆதலால், கொண்டாடப் படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின்
கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி. கடந்த வருடத்திற்கு ?நன்றி சொல்லும் நாள் ? போகிப்பண்டிகை.
தற்போது கூட ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான திசம்பர்-31 முக்கியமான கொண்டாட்ட நாள் என்பது எண்ணத்தக்கது.
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல் ' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
முதல் நாள் வைகறையில், வாசல் நிலையில் பொங்கல் நிகழ்ந்து, விழா,
நிலை தாண்டி இல்லம் நுழைகிறது. இரண்டாம் நாள் வீட்டுப் பொங்கல்.
காலைக்கதிரவன் முன், புத்தாடை போர்த்தி, பொன்னகை பூட்டி, தலைவன்,
மக்கள், சுற்றத்தார் சூழ்ந்து நிற்க தலைவிப் பொங்கச் சோறு சமைக்க,
அவரின் மகள் அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருப்பார்.
கதிரவனுக்குப் பொறுமை போதாதாகையால் சற்று வெப்பத்தை
அதிகரிப்பான்! அந்த அவசரம் புரிந்தோ என்னவோ, புதுப்பானையில்
பொங்கும் சோறு!
தலைவியின் உள்ளத்திலே பதைபதைப்பு இருக்கும். பொங்கச் சோறு பொங்கிவருவது உகந்த திசையில் வரவேண்டுமாம். (இலேசாக ஒரு அடுப்புக்கல்லை அதற்கு வசதியாக ஆரம்பத்திலேயே சற்று அமுக்கி வைத்து விடுவார்களாம் சிலர் ;-) )
அத்திசையில் பொங்கல் பொங்கி வழியும் போது தலைவியின் உள்ளம் பூரிக்கும்; இந்த இரண்டு மனநிலையும் முகபாவமும் ஒரு நொடியில் நிகழ்வுறும். சுற்றியுள்ள அனைவரும் 'பொங்கலோ பொங்கல் ' என்று போற்றி, மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து சூரியனை மங்கலப் பொருள்கள் துணையொடு வணங்கிடுவர். இல்லுறை தெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்கிடுவர்.
சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், ஐவகை அல்லது எழுவகை அல்லது ஒன்பது வகைக் காய்கள் கொண்ட கறி செய்வர். வெண்சோறும் உண்டு; பழங்களும் இனிப்புகளும் மேலும் உணவிற்கு சுவை கூட்டும்.
உணவிற்கு முன்னர் தலைவனும் தலைவியும் தங்கள் மகளுக்கும் மருமகப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் அளித்து மகிழ்வர்.
குடும்பம், சுற்றம் முழுவதும் அமர்ந்து உணவுண்ணும் போது உண்டாகும்
குதூகலமானது 'மனிதவாழ்க்கையின் மையம் பேசும் '.
பிறகென்ன, கரும்பைக் கணக்காக தந்தையோ தமையனோ வெட்டிக் கொடுக்க குழந்தைகளும் பெரியவர்களும் சுவைத்து மகிழ்தல் பேரின்பமாகும்.
இந்நாளை, வயல்கள், மாடுகள் இல்லாதவர்களும் கொண்டாடுகிறார்கள்.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு ' என்ற வள்ளுவம் தமிழரிடத்து
என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை
விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள்.
மாடுகள், வயல்கள் உள்ளவர்கள் மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கலன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
வண்டியிழுக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று
எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி செய்வது மாடு; காளைமாடு.
காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு;
இவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும்.
கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; அன்று மட்டும்
மாடுகளுக்கு அடி விழாது. எருமைமாடுகளும், ஆடுகளும் கூட
கொம்புகளில் வண்ணம் பூசிக் கொள்ளும்.
பொங்கல் செய்து, பொங்கலை ஒருவர் எடுத்துக் கொண்டு,
வாழைப்பழங்களை ஒருவர் எடுத்துக் கொண்டு, ஒருவர் மணி அடித்துக்
கொண்டு ( சில இடங்களில் சங்கு ஊதுகிறார்கள் ), மாட்டின் அருகே
சென்று அதன் வாயைத் திறந்து சோற்றையும் பழத்தையும் ஊட்டி விடுகிறார்கள்.
பொங்கலோ பொங்கல் என்ற உற்சாகக் குரல்களும் கேட்கும்.
நான்காம் நாள் 'காணும் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது '.
காணும் பொங்கலன்று குடும்பம், சுற்றம் சேர்ந்து சோறு கட்டிக் கொண்டு
வண்டி ஏறி, கடற்கரையோரம் அல்லது பிற இடங்களுக்கு சுற்றுலா
போல் செல்கிறார்கள். இதைப் பெரும்பாலும் தமிழக வடமாவட்டங்களில்
காணலாம். குறிப்பாக சென்னையில் மெரீனா கடற்கரையும், சென்னை
சாலைகளும் மக்களால் நிறையும்.
அய்ந்தாம் நாள், தென்பகுதிகளில் 'மஞ்சு விரட்டு ' என்ற வீரவிளையாட்டு நிகழ்கிறது. இதில் பெண்ணும், பொன்னும் பெறுவாரும் உண்டு; குடல்சரிந்து மண்ணுக்குள் போவோரும் உண்டு. கிராமங்களில் அன்றைய தினம் சிறியவர்களை வெளியே போகக் கூடாது, மாடுகள் திசை தப்பி வரும் என்று எச்சரிப்பார்கள். நிறைய மாடுகள் பிடிபடாமல் திசைமாறி ஓடி வரும்.
பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்ப ஆரம்பிப்பர் தமிழர். வேலை செய்ய
ஆரம்பிக்கு முன் பொங்கல் நிகழ்ச்சிகளைப் பறிமாறிக் கொள்வர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த காதலியரும்
காதலரும் மணம் புரிவர்.
வாழ்க தமிழர்;
வளர்க பொங்கல்.
திண்ணையில் எழுதியது்