Pages

Sunday, February 28, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

2.5. முன்னை மாற்றங்கள்
2.5.1 கி..பி 6 ஆம் நூற்றாண்டு

பேராசிரியர் வா.செ.கு அவர்கள் “தமிழ் எழுத்துச் சீரமைப்பு”(2) என்ற கட்டுரையில் அட்டவணை-6ல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் அணிமைக் காலம் வரையிலான எழுத்து வடிவ மாற்றங்களைக் காட்டியிருக்கிறார்,




படம்-6: பண்டைய காலத்தில் இருந்து தமிழி எழுத்துக்களின் இயல்பான மாற்றங்கள்

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து வடிவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது தெரிகிறது. ஆனால் அதற்கு அப்புறம், இதுகாறும் தமிழ் எழுத்துக்கள் அடிப்படை வடிவத்தை அடியோடு இழக்காமல் மென்மையான வளைவுகள் கூடிய மாற்றமே அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. இவை வலிந்த சீர்திருத்தமோ அன்றி அரசானையால் ஏற்படுத்தப் பட்டதாகவோ அல்லாமல் இயல்பான கையெழுத்துப் பழக்கத்தால் ஏற்பட்ட மெல்லிய மாற்றமாகவே இருக்கின்றன.

2.5.2. கி.பி 18 ஆம் நூற்றாண்டு

6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அடுத்த மாற்றம் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. ஓலையில் இருந்து மாறி, தாளும் அச்சும் தமிழகம் நுழைந்த காலத்தில் இத்தாலிய வீரமாமுனிவர் எகர ஒகர உயிரிலும், உயிர்மெய்களிலும் இருந்த புள்ளியை எடுத்து இரட்டைக் கொம்பை உருவாக்கியிருக்கிறார். அம்மாற்றம் தமிழின் மொத்த சொற்களிலும் விழுக்காட்டளவில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. ஏனெனில் அது அடிப்படை வடிவத்தைப் பெரிதும் மாற்றவில்லை. கீழே படத்தில் காணுவது போல எகர ஒகர குறிலில் இருந்து புள்ளி எடுக்கப் பட்டது. “ஏ” ஒரு சாய்கோட்டைச் சேர்த்துக் கொண்டது.
இவ்வுயிர்களில் துவங்கும் சொற்கள் மொத்தமே 2908. இவ்வெண்ணிக்கை மொத்தச் சொற்களில் 1% அளவே இருக்கக் கூடும். ஏகார ஓகார உயிர்மெய்களுக்கு இரட்டைக் கொம்பு ஆக்கினர் என்பதால் அவ்வெழுத்துக்களை நமது அட்டவனை-3ல் அளந்து பார்த்தால் தாக்கம் பெற்ற சொற்கள் 15887 மட்டுமே. அதாவது வீரமாமுனிவர் உயிர்மெய்களில் செய்த மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கம் வெறும் 6.25% மட்டுமே. அது மெல்லிய மாற்றமாய் இருந்ததால் தமிழுலகம் நாளடைவில் பழகிக் கொண்டது.



படம்-7: வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்மை (9)
(http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm)


2.5.3. கி.பி 20 ஆம் நூற்றாண்டு


பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னால், 20 ஆம் நூற்றாண்டில், அச்சில் தமிழ் பெருகிய காலத்தில் அடுத்த மாற்றம் நிகழ்ந்தது. சில அறிஞர்களும் தந்தை பெரியாரும் ”13 தமிழ் எழுத்துகளின் வடிவ மாற்றம் தமிழின் அச்சு வடிவிற்குப் பயனளிக்கும்” என்று கருதி மற்றவரும் ஏற்குமாறு பரிந்துரைத்தனர். ஏறத்தாழ 40-50 ஆண்டுகள் இந்தக் கருத்து தமிழ் உலகில் அலசப்பட்டு, ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்டு, முடிவில் 1978 - இல் தமிழக அரசின் முன்முனைப்பால் அரசாணை மூலம் நடைமுறைப் பட்டது. இஃது பெரியார் சீர்திருத்தம் என்று சொல்லப் படுகிறது. பெரியார் சீர்திருத்தத்திற்கு உள்ளான உயிர்மெய்கள் பங்கு பெறும் தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.



அட்டவணை- 4: பெரியார் சீர்மையின் உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை
படம்-8: பெரியார் சீர்மையின் மெல்லிய பரவல்

தமிழிப் பரப்பில் பெரியார் சீர்திருத்தம் கிட்டத்தட்ட 4% அளவே தாக்கம் செய்ததாலும், 1960/1970களில் கற்றோர் எண்ணிக்கை தற்போதைக்கும் குறைவாய் இருந்ததாலும், மிடையங்கள்(media) இதழ்களின் எண்ணிக்கைகள் பன்மடங்கு குறைவாய் இருந்ததாலும், இந்த வடிவமாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் புழக்கத்துக்கு வந்தது. ஓரிரு எதிர்ப்பாளர்களும் நாளடைவில் இம்மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

2.5.4 முன்னை சீர்திருத்தங்கள் எழுப்பும் சிந்தனைகள்

18 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எழுத்துமாற்றத்தை இன்றைக்கு முன்வைக்கப்படும் எழுத்துமாற்றத்தோடு ஒப்பிட்டால் ஓரிரண்டு சொல்லலாம். 6.25% சொற்களில் மட்டுமே தாக்கம் செய்த வீரமாமுனிவரின் சீர்மை பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதே போல, மொழிப் புழக்கத்தில் 4% மட்டும் தாக்கம் செய்த பெரியார் சீர்மையாலும் கூடப் பெருஞ்சிக்கல் எழவில்லை. 4% விழுக்காடு மாற்றத்திற்கு முன்னர், 18 ஆம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. இப்பொழுதோ, பெரியார் சீர்திருத்தம் முடிந்த 40 ஆண்டுகளிலேயே, இகர, ஈகார, உகர, ஊகாரச் சீர்மையால் தமிழ் மொழி/எழுத்துத் தோற்றத்தில் 59% மாற்றத்தினைச் சீர்மையாளர் ஏற்படுத்த முனைகிறார்கள். 59% தாக்கம் ஏற்படுத்தும் வடிவ மாற்றத்திற்கு, மிகச்சிறிய அளவில் மாற்றம் ஏற்படுத்திய வீரமாமுனிவரின் மாற்றமும், தந்தை பெரியாரின் மாற்றமும் ஒருபோதும் வழிகாட்டியாக இருக்கமுடியாது.

இதே 20 ஆம் நூற்றாண்டில் அண்டை மாநிலமான கேரளத்தில் 1969 இல் திரு. அச்சுதமேனன் அமைச்சரவையால் மலையாள எழுத்துச் சீர்திருத்தம் அரசாணை மூலம் கொண்டு வரப்பட்டு, ஏற்கப்பட்டது. இந்த மாற்றத்துள் உகர, ஊகாரச் சீர்திருத்தமும் இருந்தது. இன்றைக்குத் தமிழில் உகர, ஊகாரச் சீர்திருத்தம் வேண்டுவோர், மலையாளத்துச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் காட்டுவர். ஆனால் மலையாளச் சீர்திருத்தம் வந்த போது, கணிவழி எழுத்துக்களை உள்ளிடும் முறை கிடையாது. வெறும் அச்செழுத்து உள்ளீடே இருந்தது. இன்றோ, தமிழியில் கணிவழி உள்ளீடு பரவலாகிப் போனது. எழுதுவது குறைந்து கொண்டே வரும் நிலையில், உகர, ஊகாரச் சீர்திருத்தம் தேவையா என்னும் கேள்வி முற்றிலும் புதிய பார்வையைக் கொடுக்கும். ஒரு காலத்தில் சரியென்று தென்பட்டது எல்லாக் காலத்தும் அப்படியே இருக்கத் தேவையில்லை. இடம், பொருள், ஏவல் பார்த்து ஒன்றை முடிவு செய்யவேண்டியது இன்றியமையாதது அல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:।com/2010/02/3।html"> http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html


பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

2.4. 11 உயிர்மெய் வரிசைகளின் பயன்பாடு பற்றிய பார்வை:

தமிழில் அகரம் தவிர்த்த ஒவ்வோர் உயிர்மெய்யும் எத்தனைச் சொற்களை உருவாக்கியிருக்கின்றன அல்லது பங்களித்திருக்கின்றன என்ற புள்ளிவிவரம் கீழே அட்டவணை-3 இல் கொடுக்கப் பட்டிருக்கிறது. காட்டாக, “தி” என்னும் எழுத்து, 12642 சொற்களில் பயிலுவதாய்க் கூறுகிறது. அதைப்போன்று “கு” 10220 சொற்களிலும், “ஞூ” 2 சொற்களிலும், “ழீ” 5 சொற்களிலும் பயிலுகின்றன. இவ்வட்டவணையில் உயிரில் தொடங்கும் சொற்களும், மெய்யடக்கிய சொற்களும் கணக்கில் எடுக்கப் படவில்லை. அகர உயிர்மெய்கள் பயிலும் சொற்களை, ஒருங்குறியேற்றம் பயிலும் தேடுநிரலால் பிழையின்றி சலித்துத் தர முடியவில்லை. அதனால் அவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை. அஃகானும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. உயிர்மெய்க் குறியீடுகளை ஆயும் கோணத்தில் உருவாக்கிய இந்த அட்டவணையைச் செய்யப் பெரிதும் உதவியது சிக்காகோ பல்கலைக் கழகத்தின் உழைப்பால் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியாகும்.(8)




அட்டவணை-3: உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை

( இதுபற்றிய தொகுப்பு உயிர்மெய் சொல்வளம் என்ற கட்டுரையாக உயிர்மெய் சொல்வள அட்டவணை-2007ஐ உள்ளிட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது;
)

இந்த அகராதியில் கடைசியாகச் சொற்கள் ஏற்றித் திருத்தப் பட்டது 19-சூலை-2007 ஆகும். கணிசமான சொற்களைக் கொண்ட இவ்வகராதி புழக்கத்தில் இருக்கும் மொத்தத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிராவிடினும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதே அறிஞர்களின் துணிபாகும். அட்டவணையில் காணும் எண்ணிக்கைகளில் கட்டுரையாளரின் தேடுபிழையும் எண்ணுப் பிழையும் 1-2% ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது. அட்டவணை-3 ஐ நோக்கிக் காணுங்கால் எண்ணற்ற தரவுகள் கிடைக்கின்றன. அந்தத் தரவுகள் தரும் செய்திகளில் முகன்மையான செய்தியினைக் கீழேயுள்ள எண்ணுப்படமாகக் காணுவோம்.



இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களின் வடிவங்கள் மாறினால், தமிழ்ச்சொற்கள் 59% மாற்றம் அடையும் எனும்போது, பெரிதும் அதிர்ந்துபோகிறோம்। இந்த மாற்றம் வந்தால், தமிழ்ச் சொற்களும் எழுத்துகளும், படிக்கவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் செய்வதில் கடும் மாற்றம் அடையும். வெறுமே மேலோட்டமாய் எண்ணுங்கால் ஏற்படாத அதிர்வு, விழுக்காட்டை உன்னும் பொழுது ஏற்படுவது தெளிவு. இவ்விழுக்காட்டைப் பார்த்தபின் நம் முன் எழும் வினா, “தமிழ் மொழி/எழுத்துப் பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட வகையில் இது போன்ற பெரும் மாற்றத்தைத் திணிப்பது வலிந்ததில்லையா?” என்பதுதான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

அன்புடன்

நாக.இளங்கோவன்



Saturday, February 27, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

2.2 இ, ஈ, உ, ஊ வரிசைகளுள் 72 வகை குறியீடுகள் இருக்கின்றனவா?

பேரா. வா.செ.கு தன் ”தமிழ் வரிவடிவச் சீரமைப்பு”(1) என்ற கட்டுரையில் அட்டவனை-1 -இல், இகர, ஈகார, உகர, ஊகார வரிசையில் வரும் 72 உயிர்மெய் எழுத்துக்களையும் 72 குறியீடுகள் என்று சொல்லி, அவற்றை 4 குறியீடுகளாய்க் குறைப்பதே எழுத்துச் சீரமைப்பு என்று நுவல்வார். அக்கட்டுரையைப் படிக்கும் நாமும் ”72 குறியீடுகளா?” என்று துணுக்குறுவோம்.



அட்டவணை-1 இல் உள்ள எழுத்துத் தரவுகளை வகைபிரித்து, கீழே அட்டவணை 2 இல் உள்ளது போல் பட்டியலிட்டால், இகர ஈகார உகர ஊகாரங்களை 72 குறியீடுகள் என்று சொல்வது மிகைப்படுத்தல் என்பது புரியும். உண்மையில் 9 குறியீடுகளையும், அடிப்படை அகரவடிவங்களையும் வைத்தே இந்த 72 உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கப் படுகின்றன. அட்டவணை-2 என்பது “இ, ஈ, உ, ஊ” உயிர்மெய் வரிசைகளில் இருக்கும் குறியீடுகளை வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது.



2.2.1 அட்டவணை-2 இன் விளக்கம்


கொக்கியும், சுழிக்கொக்கியும் இகர ஈகார உயிர்மெய்களில் அகர வடிவின் தலை அல்லது முடிப்பில் இருந்து தொங்கவோ, உயரவோ செய்கின்றன.

சுற்று, விழுது, இருக்கை என்பவை உகரக் குறியீட்டையும் கூட்டு, சுழிச்சுற்று, இருக்கைக்கால், கொண்டை என்பவை ஊகாரக் குறியீட்டையும் குறிக்கின்றன.

சுற்றுக் குறியீடு அகர உயிர்மெய்யைச் சுற்றித் தழுவி உகரம் காட்டும் குறியீடாகும். இந்த வகை எழுத்துக்கள் வடிவிலும் பயனிலும் ஒத்திருப்பது காணத்தக்கது. விழுதுக் குறியீடு அகர உயிர்மெய்யின் இறுதியில் கீழ்நோக்கி வீழும் சிறு கோடாகும். இக்கோடு அளவிலும் திசையிலும் ஒத்து இருப்பது காணத்தக்கது. இருக்கைக் குறியீடு அகர உயிர்மெய்யின் அடியில் இருக்கை போல் அமைத்து உகரம் ஆகிறது.

கூட்டுக் குறியீடானது அகர உயிர்மெய்யின் முடிவில் உகரவடிவம் ஒட்டியவாறு தனித்தன்மையுடன் விளங்குகிறது. சுழிச்சுற்று என்பது முன்னே சுற்றில் வந்தது போல் அகர உயிர்மெய்யின் நிறைகோட்டு அடிப்பகுதியில் தொடங்கிச் சுற்றிப் பின் சுழித்து முடிகிறது. இருக்கைக்கால் என்பது இருக்கையும் காலும் சேர்ந்து, இருக்கைக் குறியீட்டிற்கு நெடிலாய் அமைந்து ஊகாரம் தந்தது. கொண்டை சுழிச்சுற்றைப் போலவே தோற்றி, ஆனால் தலைப்பக்கம் சுற்றிக் கொண்டை போல அமைந்து, சுற்றுகரங்கள் சிலவற்றின் நெடிலாகி ஊகாரம் தந்தது.

அட்டவணை-2 இன் படி, இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களை உருவாக்க 9 துணைக் குறியீடுகள் தான் இன்று பயன்படுகின்றன। 18 அகர உயிர்மெய்களும், 9 குறியீடுகளும் பெருக்கி 72 எழுத்துக்கள் உருவாகின்றன. இந்நிலையில், பேரா.வா.செ.குவின் கட்டுரை ”72 குறியீடுகள்” இருப்பதாய்ச் சொல்லுவது எங்ஙனம் சரியாகும்?


२.3: மாற்றம் என்பது 14 குறியீடுகளில் இருந்து 9 குறியீடுகளா? 72 இல் இருந்து 9 ஆ?


இன்றைய நிலையில் அகர உயிர்மெய் தவிர்த்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் தமிழியில் எழுதும் போது, அந்தந்த அகர உயிர்மெய் வடிவோடு,

• 9 துணைக் குறியீடுகள் சேர்த்து இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களையும், • கால், ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு ஆகிய 4 குறியீடுகள் சேர்த்து ஆகார, எகர, ஏகார, ஐகார உயிர்மெய்களையும்,
• புதுக் குறியீடுகள் இன்றிக் மேற்சொன்ன குறியீடுகளால் ஒகர, ஓகார உயிர்மெய்களையும்,
• ஒற்றைக் கொம்போடு சிறகுக் குறியீட்டைச் சேர்த்து ஔகார உயிர்மெய்களையும்,

எழுதுகிறோம். மொத்தத்தில் (9+4+1=) 14 குறியீடுகளை, அகர உயிர்மெய் வடிவோடு சேர்த்தெழுதி எல்லா உயிர்மெய்களையும் உருவாக்குகிறோம்; இவற்றையே சிறாருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம்।



[தமிழில் 247 எழுத்துக்கள் என்பது அடிப்படையான உயிர், மெய்யெழுத்துக்களோடு, புடைப்பு எழுத்துக்களான உயிர்மெய்களையும் சேர்த்துச் சொல்வதாகும்.]

தற்போது, பேரா. வா.செ.கு.வும் அவர் கருத்தாரும் 4 குறியீடுகளில் இ-ஈ-உ-ஊ உயிர்மெய்களை எழுதலாம் என்பாராயின், கால், கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, சிறகு ஆகிய 5 குறியீடுகளுடன் புதிய 4 ஐச் சேர்ந்து 9 குறியீடுகளில் எல்லா உயிர்மெய்களையும் எழுதலாம் என்று சொல்வதாய்ப் பொருள்படும். அதாவது 14 குறியீடுகளை இவர்கள் 9 குறியீடுகள் ஆக்கமுற்படுகிறார்கள் என்றே பொருள் கொள்ள முடியும். இதை விடுத்து, (72+5) குறியீடுகளை 9 குறியீடுகள் ஆக்குவதாய் நவில்வது எங்ஙனம் சரியாகும்?


மொத்தமாகப் பார்த்தால்,


முதன்மைக் குறியீடுகள் = 12+18+1 (ஆய்தம்) = 31 ம்,
உயிர்மெய்க் குறியீடுகள் = 14 ம்,
சேர்த்து, தமிழில் உள்ள குறியீடுகள் 45 என்றாகும் போது, இவற்றை 107 என்று பேரா. வா.செ.கு கட்டுரை (அட்டவனை-1: தமிழ் வரிவடிவச் சீரமைப்பு) விளம்புவது ”ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்குவதாகவே” இருக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, February 26, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

எழுத்துச் சீர்மை முன்வைப்புகளில்
மறுக்கப்பட்டப் பார்வைகள்

--நாக.இளங்கோவன்

1 அறிமுகம்
1.1 எழுத்துச் சீர்மை முன்வைப்புகள்

• “ஒரு சில தமிழி எழுத்துக்களின் நிகழ்வடிவுகளை மாற்றுதலே எழுத்துச் சீர்மை” என்று பலராலும் சொல்லப்படுகிறது. [தமிழி என்ற பழஞ்சொல் இக்கட்டுரையெங்கும் தமிழெழுத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.] தமிழ் வரிவடிவச் சீரமைப்பு(1), தமிழ் எழுத்துச் சீரமைப்பு(2) என்னும் தலைப்புக்களில் சென்ற 2000, 2003 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப் பெற்ற பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் கட்டுரைகள் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வடிவங்களை மாற்றுவதையே, சீர்மையாக முன்வைக்கின்றன.(1,2)

• அதே கருத்தை ஒத்து ”தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள்” என்ற தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகனின் முகன்மையான கட்டுரையும்(3) வெளிவந்தது.

• எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைக்கும் பலரும் இக்கட்டுரைகளை முன்வைத்தே பரப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இம் மூன்று கட்டுரை முடிபுகளையும், ஏரணங்களையும், இற்றைச் சூழலில் அலசிப் பார்த்து, ”எழுத்து வடிவ மாற்றங்கள் இனியும் தமிழி எழுத்துக்குத் தேவையா?” என்று மறுபார்வைக்குத் தூண்டுதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

2 சீர்மைக்காகச் சொல்லப்படும் ஏரணங்களும், அவற்றின் மறுபக்கங்களும்
2.1. எழுத்தின் உயரம்:

பேரா. வா.செ.குவின் கட்டுரைகளில், எழுத்துச் சீரமைப்பின் அடவுக் கோட்பாடாய் (design objective) இன்றையத் தமிழி எழுத்துகளின் உயரம் முன்வைக்கப் படுகிறது.

இளமையில் நாம் எல்லோரும் தமிழியை எழுதக் கற்கும் போது, எழுத்துப் பயிற்சிப் பொத்தகங்களில் ஒவ்வோர் எழுத்தையும், 4 கோட்டொழுங்கில், 3 பட்டைகளுக்குள், எழுதப் பழகியிருப்போம். [ஓலைகளில் கீறிய அறதப் பழங்காலத்தை இன்று எண்ண வேண்டாம்.] இந்தப் பொத்தகங்களில், எழுத்துக்களின் உடல் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள்ளும், தலைப்பகுதி முதல், இரண்டாம் கோடுகளுக்குள்ளும், அடிப்பகுதி மூன்று, நாலாம் கோடுகளுக்குள்ளும் அமையும். பொதுவாய், தமிழி எழுத்துக்கள் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள் மட்டுமே அமைவதில்லை. தங்கள் உயரங்களில் மாறுபட்டு, நாலு கோடுகளுக்கும் பரவுவது உண்டு. பேரா. வா.செ.கு அப்படிப் பரவும் எழுத்துகளைத் தனது கட்டுரையில் கீழ்க்காணும் படத்தினூடே (படம் 1) எடுத்துக் காட்டுகிறார்.


படம்-1, தமிழ் வரிவடிவச் சீரமைப்பு-வா।செ.கு


இது போன்ற ”கி,கு,ணூ” போன்ற எழுத்துக்கள் 4 கோட்டொழுங்கில் (3 பட்டைகளுக்குள்) வாராமல், 2 கோட்டொழுங்கிலேயே (ஒரு பட்டைக்குள்ளேயே) அமைந்து, கையெழுத்திலும், அச்செழுத்திலும் ஒருங்கே அமையவேண்டும் என்ற விழைவைச் சுட்டிக்காட்டி, சீர்மை வடிவுகளுக்கு பேரா.வா.செ.கு ஓர் அடவுக் கோட்பாட்டை (design objective) முன்வைப்பார்.

அதே பொழுது, இத்தகைய கோட்பாட்டை மற்ற எழுத்து மரபுகள் பின்பற்றுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது। உலகில் பெரிதும் பயன்படுவதும், சிறப்பித்துக் கூறப்படுவதுமான உரோமன் எழுத்துக்களும் இரு கோட்டொழுங்கில் அமைவதில்லை. உரோமன் கையெழுத்து வடிவங்களைக் கீழே காணும் படம்-2 ல் காணலாம். ஒரே உயரம் கொள்ளாது,
· நடுவாய் இரு கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: a,c,e),
· நடுவிருந்து உயர்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: b,d,t),
· நடுவிருந்து கீழ்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: g,j,p),
· நடு,மேல்,கீழ் என முப்பட்டைகளில் (அதாவது 4 கோடுகளில்) பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: f)

என ஒரு கலவையாய் உரோமன் எழுத்துக்கள் இருப்பதைக் காணலாம்। அதோடு, உரோமன் எழுத்துக்களில், கையால் கோர்த்தெழுதும் முறை, அச்செழுத்து முறை என இரு வடிவங்கள் உண்டு. இதை படங்கள் - 2, 3 என்பவற்றால் ஒப்பிட்டு அறியலாம். குறிப்பாக உரோமன் எழுத்துக்கள் ‘f’,’z’ ஆகியவை இருவேறாய் மாறுபட்டு எழுதப் படுவதைக் காணலாம்.




படம்-2: உரோமன் எழுத்துக்களைக் கோர்த்தெழுதும் முறையின் உயர வேறுபாடு(5)(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html)



படம்-3: உரோமன் எழுத்துக்களை அச்சு முறையின் உயர வேறுபாடு(5)
(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html

இவ்வாறு இரு கோடுகளுக்கும் மேற்பட்ட ஒழுங்கில், இயல்பான எழுத்துயர வேறுபாட்டில் எழுதுவது உரோமனில் மட்டுமல்லாது, மற்ற மரபுகளிலும் உண்டு. காட்டாக, அரபி எழுத்துகளின் வேறுபாடுகளைக் கீழே படம் - 4 இல் காணலாம்.



இப்படிப் பல்வேறு மரபுகளில் எழுத்துயர வேறுபாடுகள் இயல்பாய் ஏற்கப்படுகையில், தமிழி எழுத்து உயர வேறுபாடுகளைப் பெருங்குறையாய்ச் சொல்லி, புதிய அடவுக் கோட்பாட்டை முன்வைத்து, அதைச் சீரமைப்பு என்பது எங்ஙனம் சரியாகும்? எழுத்தின் உயரத்தை நறுக்குதல் எழுத்துச் சீர்மை ஆகுமோ?

(தொடரும்)

முந்தைய பகுதி : http://nayanam.blogspot.com/2010/02/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் நெடுங்கணக்கின் எழுத்து வடிவங்களை,
குறிப்பாக இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்
எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டும்
என்ற முன்வைப்புக்கள் 2000மாம் ஆண்டில் இருந்து
இணையத்தில் காணப்படுகின்றன.

தமிழ் இணைய மாநாடு என்று உத்தமம் அமைப்பு
(http://infitt.org) கடந்த பல வருடங்களாக
நடத்தி வருகின்ற மாநாடுகள், எழுத்துச் சீர்திருத்தச்
சார்பு கொண்ட பொருண்மை அல்லது கருத்தியல்
கொண்ட கட்டுரைகள் பலவற்றைப் படைக்க வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்தக் கருத்தியல்
தமிழ் இணைய உலகில் அறியப்பட்டது.

தமிழ் இணைய மாநாடுகளில் படைக்கப் பட்ட
எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புக் கட்டுரைகளுள்
குறிப்பிடத்தக்கன இவை:

கி.பி 2000:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி,
2. முனைவர் கொடுமுடி சண்முகன்,
3. திரு.வீ.கே.ஏரம்பமூர்த்தி,
4. திரு.ச.ஆ.கோபாலமூர்த்தி ஆகிய நால்வரின் கட்டுரைகளும்
(http://infitt.org/ti2000/papers/paperlist.pdf)
எழுத்துச் சீர்மையை முன்வைக்கின்றன.

கி.பி 2002:
திரு.சின்னத்துரை சிறீவாசு ஆக்கிய சீர்மை
முன்வைப்புக் கட்டுரை
(http://www.infitt.org/ti2002/papers/70SRIVAS.PDF)

கி.பி 2003:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின்
மற்றுமொரு கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

2. முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்களின் முன்வைப்பு:
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf

3. திரு.சின்னத்துரை சிறீவாசு அவர்களின் கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf

சீர்மையை முன்வைக்கும் இக்கட்டுரைகளைக்
கடந்த 2009ன் சூலை ஆகத்து மாதங்களில் ஆய்வு
செய்தபோது எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில்
இருக்கின்ற "மறுக்கப்பட்ட பார்வைகள்" அணிவகுத்து
நிற்பது புலனாயின.

எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில் இருக்கும்
மறுக்கப்பட்ட பார்வைகளையும், இம்முன்வைப்புகள்
செயலாக்கப்பட்டால் தமிழ்மொழி சந்திக்கக்கூடிய
பேரழிவினையும் இயன்றவரை அளவிட்டு, தொகுக்க
அஃது "எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்" என்ற
கட்டுரையாய் ஆகியது.

கடந்த 19-செபுதெம்பர்-2009 அன்று, திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்,
"தமிழ் மேம்பாடு, கற்பித்தலில் எளிமை, சீர்மை, விரைவு"
என்ற தலைப்பில், பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய
கருத்தரங்கில் பங்குகொண்டு இக்கட்டுரையை அங்கு
படைக்க வாய்ப்பமைந்தது.

அங்கு பேராசிரியர்களும், துணைவேந்தர்களும்,
மாணவர்களும் இருந்த மன்றத்தில்
தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்யவேண்டும்
என்ற கருத்தினை மீள்பார்வை பார்க்கச் செய்வதாய்
இக்கட்டுரை அமைந்தது.

அந்தக் கட்டுரையை இங்கே அப்படியே பதிகிறேன்.
தமிழ் இணைய உலகினர்க்கு எழுத்துச் சீர்திருத்தம்
பற்றிய கருத்தியலை மீள்பார்வை பார்க்கவும்
மறுக்கவும் இது உதவுமாயின் பெரிதும் மகிழ்வேன்.

இக்கட்டுரை தொடர்பதிவாக,
சிலபகுதிகளாகத் தொடரும்.

இது தொடர்பில் படிக்க வேண்டிய பிறரின் கட்டுரைகள்:

திரு.பெரி.சந்திரசேகரன் அவர்களின் கட்டுரை
http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கட்டுரை:
http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_31.html

பேராசிரியர் செல்வா அவர்களின் கட்டுரை:
http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

இனி கட்டுரை அடுத்த பகுதியில்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சோதிப்பு - பிப்பிரவரி 2010

வெறுஞ் சோதனைதான் - கொஞ்சகாலம் பதிவு எழுதாமல் விட்டால் திருப்பி எழுதும்போது எல்லாம் புதிதாகத் தெரிகிறது.

Tuesday, December 30, 2008

புலம்பெயர்வு இலக்கியங்களில் சிங்கையில் தோன்றிய காப்பியம் 'சங்கமம்'.

சொல் நேர்மை, பொருள் நேர்மை,
மொழி நேர்மை, குமுக நேர்மை,
என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
இழிவான படைப்புகளை எழுதித் தள்ளும்
எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்ற
தமிழ்ச் சூழலிலே, பிறமொழி முக்கால்
தமிழ் மொழி கால் என்ற அளவிலே
அருவெறுக்கத்தக்க நடையில் வெளிவரும்
படைப்புகளுக்கு இடையே,
சிறந்த பாக்களால் சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
(pathenralmurugadiyan.blogspot.com)
அவர்களால் யாக்கப்பட்ட
செந்தமிழ்க் காப்பியமான சங்கமத்தைப்
படித்த போது எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தேன்.

புலம்பெயர் தமிழரின் இலக்கியங்களில்
ஒரு சிறந்த காப்பியம் உருவாகியிருப்பது
தமிழ்க் குமுகத்திற்கு
நம்பிக்கையையும் உணர்வையும்
அளிப்பதாக இருக்கிறது.

தமிழ்க்குடியின் புலம்பெயர் வாழ்வு
பல்வகையது; அதிலே சிங்கப்பூருக்குப்
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளின்
அமைவை, ஒரு எளிய தமிழனின்
இன்னல் மிகுந்த
வாழ்வை கருவாகக் கொண்டு
காப்பியமாக யாத்திருக்கிறார் பாத்தென்றல்.

சிங்கப்பூரில் தமிழர் வாழ்வியலை அறிய வேண்டுமா?
"இந்தாப்பிடி சங்கமம் என்ற இந்த நூலை" என்று
தமிழ் படிக்கத் தெரிந்த எந்தத் தமிழரிடமும் எடுத்துக்
கொடுத்து விடலாம். வரலாறு, அரசியல், வாழ்வியல்
என்று கோர்க்கப் பட்ட இந்த நூல் சிங்கைத் தமிழர்
வளர்த்த தமிழுக்கு மணிமகுடம்.

மாபெரும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம்
எங்கு தொடங்கியதோ அங்கேயே சங்கமமும் தொடங்கி,
மதுரைப் பக்கம் போகாமல் மலாயா சிங்கப்பூர் பக்கம்
வந்துவிடுகிறது. ஆம் - புகாரில் தொடங்கி, சிங்கையை
நடுவமாக வைத்து மலாயாவையும் அணைத்து எழுதப்
பட்டிருக்கிறது.

செல்வமும் கல்வியும் சிறிதாகவேக் கொண்டு ஆனால்
உணர்வுகளிலும் பழைமைகளிலும் ஊறிய பெற்றோரையும்
உற்றாரையும் கொண்ட எளியனின் பிழைப்பு தேடிப் புலம்
பெயர்ந்த வாழ்வில் களிப்பும் துயரும் மாறி மாறி வந்து
இறுதியில் படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கும் புரிதலுக்கும்
தள்ளிவிடுவது இக்காப்பியத்தின் வெற்றி!

எளிய மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய காப்பியம்
என்பதால் பல முறை காப்பிய ஆசிரியரைப்
பாராட்டத் தோன்றுகிறது. எளியரைப் பாடும்
இந்நூலால் பெருவாரியான
மக்களின் வாழ்வியலை எளிதாகப் புரிய வைக்க முடிகிறது.
புலம் பெயர்ந்த குமுகத்தின் போக்கைப் பெரிதும்
புரிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தமிழ் தேனருவியாக காப்பியம் முழுமையும்
பல்வேறு பாக்களாக பல்வேறு பாவகைகளாக சீராக
ஓடி இன்பம் சேர்க்கிறது. கவிஞரின் ஆழ்ந்த நெடுங்கால
பாப்புலமையை எண்ணி வியக்க வைக்கிறது ஒவ்வொரு
பாட்டும்.

சிங்கை வரலாறு, புகார் சிறப்பு, மலாயாக் குறிப்புகள்,
சிங்கை அரசியல், தமிழ் நாட்டின் குமுக மாற்றங்கள்,
சிங்கையில் தமிழர்கள் குமுகமாக ஆகித் தமிழ்
வளர்த்தது, தமிழ் விழாக்கள் செய்தது,
சிங்கைத் தமிழரின் ஒற்றுமை வேற்றுமைகள்,
பிற இன மக்களோடு ஒப்புவித்து
தம் மக்கள் பெற வேண்டிய திறன்கள்,
சீன மலாய் மக்களின்
பழக்க வழக்கங்கள், சிங்கை வளர்ச்சியில்
தமிழர்களின் பங்களிப்பு, அளித்த பங்கிற்கேற்ப அளித்த
தமிழர்கள் பெற்றதன் அளவீடு, சிங்கையில்
தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள்,
சிங்கையைக் கட்டி வளர்த்த பெரியார்கள்,
அவர்தம் சீரிய தொண்டு,
சிங்கையின் சமய நல்லிணக்கமும்,
சட்ட/காவற் சிறப்பு, தமிழ் மொழியின்
ஏற்றமும் தாழ்வும், தத்துவம், ஆன்மீகம்,
தமிழ்ச் சமய நெறிகள், என்ற இவற்றோடு
தமிழனாய்ப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்த
ஒரு தமிழனின் தனிமனித வாழ்க்கையையும் அவன்
தமிழ்க் குமுகத்தோடு ஆற்றிய பணிகளையும், அடைந்த
சரவல்களையும் வாழ்க்கையாக கதையாகக் குழைத்துக்
கொடுத்துள்ள பாங்கு மிகப் பாராட்டத் தக்கது.

தமிழவேள் கோ.சாரங்கபாணியார் தமிழ் மக்களை
அரவணைத்து ஆற்றிய தமிழ்த் தொண்டோடு
அவர் ஆற்றிய பாங்கு, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
ஊன்றிக் கற்க வேண்டிய ஒன்று.
அதற்கு இந்நூல் பெரும்
உதவியாக இருக்கும். அது தமிழ்ச் சங்கங்கள்
என்ற பெயரில் தமிழ்ப்பணிகள் செய்ய முனையும்
புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு கூடுதல்
கல்வியாக இருக்கும்.

காப்பியத்தின் பகுதி-4 பகுதி-5 (இயற்கும்மி, ஒயிற்கும்மி)
சிங்கையில் தமிழையும் குமுகத்தையும்
வளர்த்த பாங்கினை அழகுறச் சொல்கிறது.
பிற பகுதிகளும் இயம்புகின்றன.
பாக்களின் சந்தங்கள் மதி மயக்க வைக்கின்றன.

"அள்ளிக் கொடுத்தனர் பள்ளிக்கென மக்கள்,
ஆர்வம் மிகுந்தது கல்விக்கென
அமுதத் தமிழ் அறிவைப் பெற
குமுகக் குரல் குரவையிடத்
துள்ளிக் குதித்தனர் தொல்தமிழால்"

தமிழரைப் பிடித்த பெருஞ்சழக்கான
சாதீயமும் புலம் பெயர்ந்த சான்றுகளும் நூலில்
மிகச்சரியாகப் பதிந்திருக்கிறது. கீழே ஒரு சான்று:

"பாழை விளைத்திட்ட சாதியைப் பாய்மரக் கப்பலேற்றிக்
கீழை திசைக்கெலாம் கொண்டுவந்தாரந்தக் கீழ்மையாலே
வாழை மரத்துக்குத் தாரீன்ற காய்களே கூற்றமாப் போல்
மோழை மனங்களும் ஏழை நிறங்களும் மூண்டதிங்கே!
"
(பகுதி-9)

சுவையான காதல் பாட்டுகள், வாழ்க்கை பாட்டுகளுக்கிடையே
தமிழுக்கு ஏற்பட்ட சோதனைகளை அடுக்கடுக்காய்
செருகிய பாங்கு கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கு
எடுத்துக் காட்டு மட்டுமல்ல, கல்வி கற்ற நேர்மையான
தமிழருக்கு இருக்கும் நேர்மையான எதிர்காலக் கவலையும்
அக்கறையும் ஆம்.

"தென் புலத்தாரைப் பெண்கள்
திருடராய்க் குரங்காய்த் தீய
வன்புலனரக்கர் போன்ற..."

"மறைகளை ஆற்றில் போட்டோம்
மண்டிய சாதித் தீயின்
குறைகளைக் களைய மாட்டோம்
*குலத்தையே குலத்தார் வெட்டும்*
பறைகளைத் தட்டிக் கொட்டிப்
பார்ப்பனர் வேதங் கேட்டோம்
உறைகளில் வைத்த வாள் போல்
உறங்கினோம் தமிழா மீட்டோம்?"

ஆழ்ந்த குமுக அக்கறையில் காப்பியத்தின்
வரிகளில் பாத்தென்றல் புயலை எழுப்புகிறார்.

"சீனரின் கோவில் சென்றால்
சீனமே வழிபாட்டோசை
ஆனதோ அரபி மண்ணில்
அதுகேட்கும் பள்ளிவாசல்
ஊனமுற்றழிந்த பாடைக்கு
உயிர்தர உழைக்குஞ் சூதர்
ஆணையில் அடங்கும் நம்மை
அடிமையாய் நினைக்கின்றாரே!.."

பகுதி-17ல் கவிஞர் புயலாகச் சுழல்கிறார். தெறிக்கிறது
அவரின் வேதனைகள்.

தமிழ்நாட்டிலே கோயில்களில் தமிழ் இல்லை;
அதற்குக் காரணமாக திராவிட தமிழ் இயக்கங்கள்
எத்தனைக் காரணங்கள் சொன்னாலும், அத்தனைக்
காரணங்களையும் தமிழ் மக்கள்
புலம் பெயர்ந்து போகையிலும் கட்டித் தூக்கிப்
போகவேண்டியதில்லையே? என்ற வினாவை இவர்தம்
கவிதை எழுப்புகிறது.

ஆம் - சிங்கையிலே 1824ல் சுமார் 500, 600 தமிழர்களே
இருந்துள்ளனர் நூலின் படி. 1860ல் சுமார் 10000 தமிழர்களே
இருந்துள்ளனர்.

இவர்கள்தான் பெருகி இன்றைக்கு
சில இலக்கங்கள் அளவில் இருக்கிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் சமைத்த
இவர்கள் ஏன் சாதிக்குள் அமிழ வேண்டும்?

இவர்கள் வேர்வை சிந்தி உழைத்து ஏன்
நஞ்சான சமற்கிருதத்தைக் கோயிலுக்குள்
கூட்டிப் போக வேண்டும்?

ஒரு புதுக் குமுகத்தைக் கட்டி எழுப்பிய தமிழர்களின்
உழைப்போடும் வேர்வையோடும் முக்கியமான மடமையும்
சேர்ந்து கொண்டதைக் காப்பியம் பண்புடன் விளக்குகிறது.
இதற்கு முற்றும் தமிழ் மக்களே காரணம் என்று தெள்ளென
விளங்க வைக்கிறது.

இப்படிக் கட்டப்படும் புதுத் தமிழ்க் குமுகங்கள் எப்படி
எதிர்காலத்தில் சரவல் படும் என்பதனையும் சிங்கையில்
தமிழர் வரலாறு கூறுகிறது.

தமிழர் விழாக்களுக்கான விடுமுறைகள் என்றால்
அது தீபாவளிக்கு ஒருநாளும் விசாக நாள் என்ற நாளுக்கும்
ஆகிப் போனதை காப்பியம் காட்டுகிறது. விசாக நாள்
என்றால் தமிழர் விழாவா என்பதனை தமிழர்கள்தான்
சிந்தித்து விடை காண வேண்டும்!

"பாதகந் தமிழுக்கென்றால் பல்லிளித்து இருந்திடாதே!
நீ தவம் செய்க நாளை நிமிர்ந்தெழும் தமிழர் வாழ்வே!"

என்ற இவ்வரிகளும் இன்ன பிற வரிகளிலும் பாவேந்தரே
நிமிர்ந்து நிற்கிறார்!

"உலவுந்தன் மதத்தை மட்டும் உயிராக நினைப்பாருண்டு
கலகத்தார் இவரே தங்கள் கட்சிக்கே மேன்மை செய்வார்"
என்ற இவ்வடிகள்,

"அவரவர் தத்தம் மதங்களே அமைவதாக
அரற்றி மலைந்தனர்..." என்று
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
அடிகளை ஒட்டி வருகின்றன.

காப்பியத்தில் காதலைப் பாடும்போதும்,
கவலையைப் பாடும் போதும், துயரைப் பாடும் போதும்,
ஏற்றத்தைப் பாடும் போதும்,
தெருவீதியைப் பாடும் போதும் எங்கும் பாத்தென்றலொடு
தமிழர் கவலையும் அவர்தம் மொழிக் கவலையும்
சூறாவளியாய் சுழன்று கொண்டே இருக்கின்றன.

தமிழ் மொழிபால் தூய அக்கறை கொண்ட
தூய தமிழ்ச் சிந்தை பாத்தென்றலுடையது.

"தெருப்பக்கம் குரைக்கின்ற நாயாகப் பேயாக
திரிகிறோம் எச்சில் உண்டு!
தென்னாட்டுச் சிவன் தந்த தென்மொழி வழிபாடு
திருக்கோவில் வாழவிலையே!"

"தேய்பிறையாக்குவார் தேன்மொழியை - மொழித்
திருடர்கள் மாற்றிடார் தம் வழியை"

"சாதிக் கலப்பை வெறுப்பவர்கள் - மொழி
பாதிக்குப் பாதிக் கலப்பவர்கள்..."

தென்றலா கவிஞர்? என என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

மறைமலையாரும் நீலாம்பிகை அம்மையாரும்
தேவநேயரும் சித்திரனாரும் பாவேந்தரும் பாரதியாரும்
அண்ணாவும் திரு.வி.கவும், பிற பெரியார்களும்
நீங்காமல் நிறைந்திருக்கிறார்கள் இந்நூலில்.
நாயன்மார்களும் அறவோர்களும் தமிழ்நெறியும்
சிறப்பிடம் பெருகிறது நூலில்.

"அருட்கவி அருணகிரியார்
அருந்தமிழ்க் குமர குருபரர்
மருட்புவி மயக்கந் தீர்த்த
மாமுனி தாயுமானார்...."

பகுதி-40ல் கற்றுணை பூட்டிய பெருமான்
கடலில் மிதந்ததை ஏத்தி செய்திருக்கும் வாதம் அருமை.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார்
ஒரு சமணர் என்று விளம்பரம் செய்வோரை
கண்டிக்கிறார் சங்கமக் காப்பிய
ஆசிரியர். இதற்காகவே அவரைப் பல முறை
பாராட்ட வேண்டும்.

"சிலப்பதி காரத் துக்குள்
சென்றவர் பலபேர்! அந்த
அளப்பரும் அமுதம் உண்ட
அறிஞரோ சில பேர்! இன்னும்
களப்பிரர் பின்னே செல்லும்
கயமைகள் கண்கள் மூடிக்
குழப்புவார் அதையே நம்பிக்
குலக்குணம் விட்டார் கோடி!"

காப்பியமெங்கும் தமிழர்களிலே இருக்கும்
சிறுமதியாளர் வளைந்து நெளிந்து நத்திப் பிழைத்து,
எப்படித் தமிழுக்கும் இனத்திற்கும்
தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதனை ஆங்காங்கு
பல காட்டுகளோடு விவரிக்கிறார்.
எல்லா தமிழ் நிலங்களுக்கும் இது மிகப் பொருந்தும்.

"நல்ல தமிழில் பெயரிருந்தாலும்
கொல்ல நினைப்பது உன் குலத்தானே"

"அன்று வந்தவர் அருந்தமிழ் காத்தனர்
இன்று வந்து அவர் இனம் மொழி கொல்கின்றனர்"

"சீனர்களின் கடை முகப்பில் செழுந்தமிழும் எழுதுகிறார்
மானமில்லாத் தமிழர் பலர் மருந்தளவும் தமிழ் எழுதார்"

காப்பிய நாயகனான செந்தில் என்ற தமிழுணர்வு குன்றாத
ஒரு எளிய தமிழனின் வாழ்வு இன்னல் மேல் இன்னலுறும்;
வளர்ச்சியும் தளர்ச்சியும் காணும்; அவன் சிங்கை வருவது
முதல் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் காட்டிக் காட்டிக்
கடைசியில் கண்ணையும் மூடிவைக்கும் காப்பியத்தில் தொட்ட
இடமெல்லாம் தென்றலும் புயலுமாய் தமிழ் நடம் புரிகிறது.

மொழிப்பற்று உடையவருக்குத்தான் சிறந்த நாட்டுப்பற்று
இருக்கும். தமிழ் மொழிப் பற்றோடு சிங்கப்பூர் என்ற தனது
தாய்நாட்டின் மீதும், தாய்த்தமிழ் நாட்டின் மீதும் கவிஞர்
பேரன்பு பொழிந்து உறவுகள், காதல், மணம், படிப்பு,
வேலை, மகிழ்ச்சி, துயர், தொண்டு, அறம்,
தத்துவம், இறை, தமிழ், அரசு, நாடு, இனம்,
சட்டம் என்ற பலவற்றையும் பாடி, கீழ்பட்டிருக்கும்
உலக வாழ் தமிழ்க் குமுகத்தை நோக்கி அடிப்படை
வினாக்களை வைத்துக் குமுறுகிறார் இறுதியில்.

"சீரிலங்கை நாட்டில் எங்கள்
செந்தமிழர் கொல்லப் பட்டால்
ஓரிரங்கல் உரை ஏன் இல்லை?...."

"ஒரு பத்துக் கோடி மக்கள்
உலகத்தில் இருந்தும் கூட
ஒரு பற்றும் இல்லார் போன்றும்
உணர்வற்றும் எழுச்சியற்றும்
மறுவுற்ற மந்தையாக மாய்வதுமேன்...?"

தமிழறியாரும், தரங்கெட்ட தமிழரும் குமுகத்தின்
முன்னணியில் இருந்தால் அந்தக் குமுகத்தின்
மொழியுணர்வும், இனவுணர்வும் நீர்த்துப் போகும்;
அதுவே தமிழ்க்குடிகளுக்கு உலகெங்கும் நடந்து
வருகிறது. காப்பிய நாயகனோடு கவலையோடும்
இந்தக் கவலையோடும் காப்பியம் நிறைவுறுகிறது.

ஒவ்வொரு தமிழரும் இந்த உயர்ந்த படைப்பினைப்
படிக்க வேண்டும்; தமிழ் உணர்வூட்டும் இந்நூலை
பலருக்கும் அளிக்கவும் வேண்டும். புலம் பெயர்ந்த
மக்களின் நூலகங்கள் இதனை ஏற்றி வைக்க வேண்டும்.

பொத்தகத்தில் காணும் நூல் கிடைக்குமிடங்கள்:
தென்றல் பதிப்பகம், சிங்கப்பூர். தொ.பேசி 68996319
தமிழ்நிலம், சென்னை. தொ.பேசி 94444 40449
திரு.அருகோ, சென்னை. தொ.பேசி 2472 1009

அன்புடன்
நாக.இளங்கோவன்