Pages

Wednesday, March 03, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9

2.7.6 தமிழ் கற்க நேரம் மிச்சப் படுமா? மிச்சம் என்றால் என்ன?

”உலகில் எல்லாமே இன்று விரைவாய் நடக்கின்றன” என்ற உந்தலில், ”எழுத்து வடிவங்களை மாற்றினால், குழந்தைகளின் தமிழ் கற்றலை விரைவாக்கலாம்” என்ற கோட்பாடு சீர்மை முன்வைப்புகளில் சொல்லப்படுகிறது. அதற்கு இற்றை மேலாண்மைத் துறை அறிவுரைகள் மேற்கோளாகவும் வைக்கப் படுகின்றன.

விரைதல் என்பது மாந்த இயல்பு. இது ஒன்றும் மேலாண்மைத் துறை சொல்லும் வியந்தை அல்ல!

எந்தக் காலத்தில் மெதுவே செயல்பட உலகம் சொன்னது?

விரைதல் என்பது மாந்தரின் வாழ்க்கைப் போட்டியில் இயல்பாய் நடப்பதே. ஆயினும், தமிழைக் கற்க முனையும் ஒன்றாம் வகுப்பு ஐந்து வயது இளம் பிள்ளையிடம் கொண்டு போய் எம்.பி.ஏ படிப்பில் சொல்லப் படும் வேகத்தைக் காட்டுவது எங்ஙனம் சரியாகும்?

தமிழி எழுத்துகளை மாற்றினால் கற்கும்நேரம் மிச்சமாகும் என்பது சரியான கூற்றா என்பதை நுணுகிப்பார்க்கின் அது பிழை என்பதும், உண்மை எங்குள்ளது என்பதும் தெரியும். இருமொழிகள் கற்கும் சீன, சப்பானிய நாடுகளுடனும், தாய்மொழியை மட்டுமே கற்கும் இங்கிலாந்துடனும் ஒப்பிட்டுக் காணுவமானால், தமிழ்க்கல்வி எப்படி அமையவேண்டும் என்பது விளங்கும்.


அட்டவணை-5: சிலநாடுகளில் மொழி கற்கும் அகவைகள்
அட்டவணை-5, நான்கு நாடுகளில் துவக்கப் பள்ளிப் பிள்ளைகளின் அகவையையும், மொழிகளின் எண்ணிக்கையையும் பார்வையிடத் தருகிறது। இதில் மழலையர் பள்ளிகளையும் அவற்றின் பாடங்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, தமிழகப் பிள்ளைகள் துவக்கப் பள்ளிப் படிப்பை 5 அகவை நிறைந்து, முதல்வகுப்பில் துவக்கினாலும், இங்கிலாந்து பிள்ளைகள் ஒரு மொழி கற்பதையும், தமிழகப் பிள்ளைகள் இரண்டு மொழிகள் கற்பதையும் கண்டு கொள்ள வேண்டும்.

சப்பான், சீனாவில் பிள்ளைகள் முதல் வகுப்பிற்குச் செல்வதே 6 அகவை நிறைந்த பின்னர்தான். அப்படிச் செல்லும் சீனப் பிள்ளைகள் 3 ஆம் வகுப்பில், அதாவது 8 அகவை நிறைந்த பின்னரே ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கத் தொடங்குகின்றன. தமிழ்ப் பிள்ளைகளோ 5 ஆண்டு நிறைந்தவுடனே தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளையும் இன்று கற்கின்றன.

சப்பானியப் பிள்ளைகள் 4 ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஆங்கிலமோ பிற மொழிகளோ கற்பிக்கப் படுவதேயில்லை. 5 ஆம் வகுப்பிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாய் இல்லாமல் தேவையான பாடமாய்க் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

உலக நாடுகளில் அறிவியல் உள்ளிட்டப் பலதுறைகளில் உயர்ந்து நிற்கும் நாடுகளில் மொழி கற்பித்தல் இவ்வாறிருக்கையில், தமிழ்ப் பிள்ளைகளின் தலையில் இன்னும் எதை நுழைப்பது? இவ்வளவு இளமையில் 2 மொழிகள் படிப்பவர்கள் நமது பிள்ளைகள். முதல் வகுப்பு படிக்கும் 5 அகவைப் பிள்ளைகள் பயிலும் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி இன்னும் நேரத்தைக் குறைப்பதாகச் சொல்லி, அப்படிச் சேமித்த நேரத்தில் வேறெதை நுழைக்கப் போகிறோம்? அப்படி குறைக்கப் படும் நேரத்தின் அளவு என்ன? அதற்கான ஆராய்ச்சி என்ன? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விடைகள் சொல்லுவதில்லை. பேரா. வா.செ.குவின் கட்டுரையும் சரி, அவரின் கருத்தை ஒப்பும் பிறரும் சரி இவ்விதயத்தில் போதிய ஆராய்ச்சிகள் இன்றி கட்டுரை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அட்டவணை-6: சப்பான், தமிழகப் பள்ளிகளின் பாட நேர அளவு (ஆண்டிற்கு, மணிகளில்)

அட்டவணை-6, இரு மொழிகள் கற்றலை உடைய சப்பான் தமிழக நிலங்களில், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை நான்காக வகைப்படுத்தி, அவற்றிற்காக அரசுகளால் பரிந்துரைக்கப் பட்டிருக்கிற கால அளவை பார்வையிடவும் ஒப்பிடவும் தருகிறது. சப்பான் நாட்டின் துவக்கப் பள்ளிக் கட்டகத்தையும், பாடத் திட்டத்தையும் (Primary School system and Syllabus) ஆய்வு செய்த அமெரிக்கக் கல்வித் துறை (U.S Department of Education, http://www.ed.gov ), மேற்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. (பார்க்க: http://www.ed.gov/pubs/ResearchToday/98-3038.html ).

தமிழகக் கல்வித்துறையின் துவக்கப் பள்ளிப் பாடத் திட்டமும், அரசின் பரிந்துரைகளும் நூலாக அச்சிடப்பட்டுப் பள்ளிகளுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் அரசு, மடிக்குழைப் பள்ளிகளுக்கு (Matriculation schools) அளித்த திட்டத்தில் இருந்து தமிழகம் சார்ந்த தரவுகள் மேற்கண்ட அட்டவணையில் எடுத்தாளப் பட்டிருக்கின்றன. அதில் உள்ள அரசின் பரிந்துரைப் பக்கத்தினை பின்-இணைப்பு-1இல் பார்க்க. [மடிக்குழைப் பள்ளிகள் தேவையா என்ற வாதத்திற்குள் இப்பொழுது போகவேண்டாம்.]

மேற்கண்ட அட்டவணை-6 இல் இருந்து கிடைக்கின்ற தரவுகளும் செய்திகளும் பலவாகும். அவற்றிற் சில இவண் பொருத்தமாதலால் அவற்றைக் காணுவோம்.

1) தமிழக, சப்பான் கல்வியில் பிள்ளைகளின் முதல் ஐந்து நிலைகளில் பிள்ளைகள் வருடத்தில் மொத்தம் கல்விக்குச் செலவிடும் நேரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:


அட்டவணை-7: முதல் ஐந்து வகுப்புக்களில் கல்விக்குச் செலவிடும் நேரங்கள்
சப்பானியப் பிள்ளைகளை ஒப்பிடும் போது, தமிழ்ப் பிள்ளைகள், முதல் வகுப்பில் 17.8 விழுக்காடு அதிக நேரமும், இரண்டாம் வகுப்பில் 9.9 விழுக்காடு அதிகநேரமும் கல்விக்குச் செலவிடுகின்றன. மிகவும் இளைய பிள்ளைகளுக்கு நாம் அதிகச் சுமையை ஏற்றுவது தெளிவு. அவர்களை விளையாட விடமாட்டேம் என்கிறோம். சப்பான் பிள்ளைகளுக்கு படிப்படியாய்ச் சுமையைக் கூட்டுகிற அழகு காணத்தக்கது. அதே வேளையில் ஐந்தாவது படிக்கிற 10 அகவைப் பிள்ளைக்கும், முதல்வகுப்புப் படிக்கும் 5 அகவைப் பிஞ்சிற்கும் ஒரேயளவாய் 1000 மணி நேரத்தைக் கல்வியில் நாம் ஒதுக்குவதில் ஏதேனும் ஏரணம் இருக்கிறதோ?

இவற்றையும் விட, சப்பான் பிள்ளைகள் இந்தக் காலத்தில் ஒரு மொழியை மட்டுமே கற்கிறார்கள் என்பது எண்ணிப் பார்க்க வேண்டியது. (குறைந்தது நாலாவது வரையிலாவது); ஆனால், தமிழ்ப் பிள்ளைகளின் தலையிலோ இரண்டு மொழிகள் புகுத்தப்படுகின்றன. ஆயினும், இன்னும் நேரத்தைக் குறைத்து, வேறெதையோ புகுத்துமாப் போல எழுத்து வடிவங்களை மாற்றப் புகுவது இன்னும் வேடிக்கை. இது எங்ஙனம் சரியாகும்?

2) அட்டவணை-6 இல் தாய்மொழிக்கு சப்பானியர் கொடுக்கும் நேரத்தில் சரி பாதி கூட, நாம் நம் பச்சிளம் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்..


படம்-10: தாய்மொழி கற்பிக்கும் நேரம் (மணிகள்/வருடம்)

தாய்மொழிக்கு சப்பானியர் அதிக காலம் ஒதுக்குவதையும், அதோடு முதல் இரண்டு வகுப்புகளில் பச்சிளங் குழந்தைகள் ஆழக் கற்கும் வகையில் அதிகமாகக் கொடுக்கப் படுதலையும், பின்னர் படிப்படியாக நேரத் தேவை குறைவதையும் படம்-10 விளக்குகிறது. அதே வேளையில் முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒரே அளவாக மிகக் குறைந்த நேரமான 150 மணிகளைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாம் கொடுத்து அவர்களைப் பிழிந்து மனப்பாடம் பண்ணிக் கக்கும் பொறிகளாக மாற்றுதலையும் படம் விளக்குகிறது.

3) பிள்ளைகளுக்கு விரைந்து பாடம் சொல்லித் தருதல் நலந்தானே? - என்று கேட்டால், நமது பிள்ளைகளுக்கு இன்னும் நேரம் மிச்சப்படுத்தினால் அவர்கள் இன்னும் நிறைய படிக்கலாமே என்று கேட்டால், ”அவர்கள் கற்பதையும் நாம் காணத்தானே வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது.

சப்பானியப் பிள்ளைகள் முதல் வகுப்பில் கற்றுக் கொள்ளும் எழுத்துக்கள் மொத்தம் 80.(பார்க்க:- http://wiki.answers.com/Q/First_grade_japanese_kanji ) அவற்றைக் கற்க எடுத்துக் கொள்ளும் காலம்: 306 மணிகள். நிரவலாக ஒரு சப்பானிய எழுத்தைக் கற்க, ஒரு சப்பானிய முதலாம் வகுப்புப் பிள்ளைக்குக் கிடைக்கின்ற காலம் 3.825 மணிகளாகும். அதாவது 229.5 நுணுத்தங்கள் (minutes).

நம் தமிழ்ப்பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பில் 150 மணி நேரத்தைக் கொடுத்து 247 எழுத்துகளைப் பயிற்றுவிக்கிறோம். நிரவலாக ஒரு தமிழ் எழுத்தைக் கற்க முதலாம் வகுப்புத் தமிழ்ப் பிள்ளைக்குக் கிடைக்கின்ற காலம் 0.607 மணியாகும். அதாவது 36.44 நுணுத்தங்கள்.

உலக அரங்கில் சப்பானின் அறிவியல் திறனும், பொருளியல் திறனும், அரசியல் திறனும் ஓங்கி நிற்பதை படிக்காதவரும் அறிவர். அப்படியான நாடு தனது தாய்மொழியை மட்டுமே தனது பிள்ளைகளுக்கு நாலாவது வரையில் கற்றுக் கொடுக்கிறது; ஓர் எழுத்துக்கு 230 நுணுத்தங்களைக் கொடுத்து ஆழ்ந்த மொழிக் கல்வியைத் தந்து அதனூடாகப் பிற திறன்களை வளர்த்து விடுகிறது.

அதே வேளையில், உலக அரங்கில் சொல்லிக் கொள்ளுமாறு எந்த அறிவியல், பொருளியல், அரசியல் திறனையும் காட்டாத நாமோ, 37 நுணுத்தங்களிலேயே ஒரு தமிழ் எழுத்தைப் பிள்ளைகளுக்கு விரைந்து புகுத்துகிறோம். இப்பொழுதோ அந்த 37 நுணுத்தங்களையும் குறைப்பதற்காய், எழுத்து வடிவ மாற்றங்களைச் செய்யப் புகுவது வேடிக்கையில்லையா? மேலாண்மை என்ற பெயரில் வெளியாகும் கருத்துகளை வைத்து, பச்சைப் பிள்ளைகளை மேலாண்மை செய்வது எவ்விதம் மேலான கருத்தாகும்?

ஆங்கில மொழிகற்றலை நாலாம்வகுப்பிற்குப் பின் தொடங்கி, தாய்மொழிக்கு அதுவரை நிறைய நேரம் ஒதுக்கியதால், விளையும் சப்பானியப் பிள்ளைகளின் கணித அறிவியற் திறனை தம் பிள்ளைகளோடு ஒப்பிட்டு சப்பானியப் பிள்ளைகள் உயர்ந்திருப்பதைக் கண்டு அமெரிக்கா வியந்து நிற்கிறது.

அட்டவணை-8: TIMSS Rankings
http://www।ed।gov/pubs/ResearchToday/98-3038।html

ஆனால் நாமோ ஒரு மொழிக்கு இருமொழியாய் முதல் வகுப்பிலேயே திணித்து விட்டு, இன்னமும் மூன்றாம் மொழி சிக்குமா என்றும், தமிழி எழுத்து வடிவத்தை மாற்றி இன்னும் நேரம் குறைக்க முடியுமா என்றும் மேலோட்டமாய்ப் பேசி முடிவு காண முயல்கிறோம்.

ஆகவே, கொடிவழித் தொன்மங்களைக் கண்டுகொள்ளாது, அறிவியலின் அடிப்படை வலுவின்றி, ஆய்வும் விரிவாக இன்றி, கணி மாற்றங்களுக்கு ஏற்பத் தமிழியை மாற்றவேண்டும் என்று முனைவது எள்ளளவும் நமக்குப் பெருமை சேர்க்காது. வணக்கத்திற்குரிய முன்னாள் தமிழறிஞர்கள், தந்தை பெரியார் ஆகியோரெல்லாம் இப்பொழுது குறுகிய காலத்தில் வளர்ந்து விட்ட கணியறிவியல் கிடைக்கப் பெற்றிருந்தால் அவர்கள் பரிந்துரைத்த மாற்றத்தினை செய்ய ஒட்டாரன்றி வரவேற்றிருக்க மாட்டார்கள். வலுவான ஆதாரங்கள் இல்லாமல், மேம்போக்காக, சில பக்கங்களில் பச்சைப் பிள்ளைகளின் மேல் பரிவு காட்டுவதாய்ச் சொல்லிக் கொண்டு, வெளிப்புல மண்ணில் வாழ்வோரின் உண்மையான கற்றற் சரவல்களைக் களைய முற்படாமல், அவர்களின் திறமை மேல் பழி போடுமாப்போல எழுத்துச் சீர்திருத்தம் செய்யமுனைவது வருத்தப்பட வேண்டியதாகிறது.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.हटमल

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.हटमल

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

அன்புடன்

நாக.இளங்கோவன்

No comments: