Pages

Saturday, December 04, 2010

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-3/3

ஆக, தமிழுக்குள் கிரந்த நுழைப்பு தவிர்க்கப் பட்டது;
கிரந்தத்துக்குள் தமிழ் நுழைப்பு மட்டுமே
தற்போதைய இன்னல் ஆகும்.
அதுவும் வேண்டும் என்றே ஒரு தனி
மனிதரால் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்ட இன்னலாகும்.

இதில் எப்படிக் கிரந்த அரசியல் நடக்கிறது
என்று பார்ப்பது மிக அவசியமாகும்.

1)
முதலில் இந்தக் கிரந்தச் சிக்கல்
ஒரே நேரத்தில் மூன்று நிலைகளில் தாக்கியதால்
பலருக்கும் இதனைப் புரிந்து கொள்வதில்
சிக்கல் இருந்தது.

தமிழ்நாட்டரசு பெற்றுத் தந்தக்
காலநீட்டில் ஒவ்வொன்றாக நுணுகிப்
பார்க்கையில் சிக்கல் எங்கே முளைத்தது
என்றும் அது தற்போது எங்கு
போய்க் கொண்டிருக்கிறதென்றும்
தெள்ளென விளங்குகிறது.
அதற்காகத் தமிழ்நாட்டரசிற்குப்
பாராட்டுச் சொல்லவேண்டும்.

நாசா கணேசனின் உந்துதலால்
நடுவணரசு ஏற்படுத்திய முன்மொழிவைப்
பாதுகாக்க கணேசன் பலருடன் அணிசேர்ந்து
பல்வேறு கூட்டணிகளை
உருவாக்கியிருக்கிறார்கள்.

அதன் முதற்கட்டமாக பேராசிரியர் வா.செ.கு
அவர்களை வைத்து "தமிழ் எழுத்துக்களில்
கிரந்த எழுத்துக்கள் வந்து கலப்பது தவிர்க்க
வேண்டியது. தவிர்த்தாயிற்று.
ஆனால் கிரந்த எழுத்துக்களில்
தமிழ் போய் கலப்பது ஒன்றும் தவறில்லை"
என்றவாறு கருத்தை
வெளியிட வைத்து விட்டார்கள்.

நமது தமிழை பிறர் பயன்படுத்துவது
நமக்குப் பெருமைதானே என்ற
பொய்யான ஒரு மாயை கிளப்பி
விடப்பட்டிருக்கிறது.

இந்த மாயையை விலக்கிப் பார்த்தால்
"கிரந்த எழுத்துக்களைக் கொண்டு வந்து
தமிழுக்குள் கலப்பது தீது; தவிர்த்து விட்டோம்.
ஆனால் தமிழ் எழுத்துக்களைக்
கொண்டுபோய் கிரந்தத்துள் கலப்பது
தீதில்லை என்று எப்படிக் கருதுவது?

பாலில் தண்ணீரைக் கலந்தால் என்ன?
தண்ணீரில் பாலைக் கலந்தால் என்ன?
இரண்டும் ஒன்றுதானே?

தமிழ் போய் கிரந்தத்தில் கலக்கலாம்
என்று சொல்லும் அறிஞர்கள் இதை
எப்படி மறக்கிறார்கள்?

வடமொழிக் கலப்பின் பாதகங்களை உணர்ந்த
பேரா.வா.செ.குவின் கண்களையும் கட்டியது
நா.கணேசனிடம் அவருக்கு உண்டான உறவுமுறை
அல்லது நட்பும், நா.கணேசனின் சொற்களை
நல்லது என்று எண்ணும் அவரின் நம்பிக்கையும்
ஆக இந்த இரண்டாக இருக்க முடியும் என்று
சிலர் சொல்வதை எண்ணிப்பார்க்காமல்
இருக்க முடியவில்லை.

தமிழ்ப் பற்றாளரான வா.செ.கு அவர்களின்
அரிய பணிகளுக்கிடையே கணேசன் அணியினர்
திருகுதாளம் ஆடி அவரை நம்ப வைத்திருக்கிறார்கள்.
அதில் வா.செ.கு அவர்களும் ஏமாற்றப் பட்டிருக்கிறார்
என்றே கருத முடிகிறது. வா.செ.குவின் ஏமாற்றம்
அப்படியே அரசையும் ஏமாறச் செய்கிறது..

2)
அடுத்ததாக, "கல்வெட்டுக்களைப் படிக்க முடியாது,
பழைய ஆவணங்களைப் படிக்க முடியாது"
ஆதலால் நடுவணரசின் (+கணேசன்) முன்மொழிவை
மறுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை அடிப்படையாகக்
கொண்டு வேறு சிலர் அணியமாக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது.

கல்வெட்டு, பழைய ஆவணங்களைப் படிக்க வேண்டும்தான்.
அவற்றை அச்சில் வைத்துப் படிக்க வேண்டும் என்பதும்
பிழையான பார்வை. காலஓட்டத்தின் கணிநுட்ப வளர்ச்சியில்
இந்தக் காப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

ஆனால், கிரந்தத்தோடு தமிழைக் கொண்டு போய் கலக்காமலே
கல்வெட்டுக்களையும் பழைய ஆவணங்களையும் படிக்க
முடியும் எனும் நிலை இருக்கும்போது, தொழில் நுட்ப வளர்ச்சியில்
அதனை வளர்த்துக் கொள்ளமுடியும் எனும்போது
ஏன் கிரந்தத்துடன் தமிழைக் கலக்க வேண்டும்?

கிரந்தக் குறியேற்றம் அதுபாட்டுக்கு ஒரு மூலையில்
ஒருங்குறிக்குள் கிடந்தால் இரண்டையும் கலக்காமல்
கல்வெட்டுக்களைப் படிக்கவும் செய்யலாம்; தமிழை
வதைக்காமலும் இருக்கலாம்.

கணிச்சூழல் அப்படி இருக்கையில், அதையெல்லாம்
பொருட்படுத்தாது, வெறும் தமிழ் தமிழ் தமிழ் என்று
மட்டும் சிந்திப்பதும், கலவை கலவை கலவை என்றும்
சிந்திப்பதும் எதற்கு?

சவகர்லால் நேரு பல்கலையில் தமிழ்த்துறைப்
பேராசிரியராக இருக்கும் கி.நாச்சிமுத்து அவர்களுக்கு
கல்வெட்டுக்கள், பழைய இலக்கியங்களில்
இருக்கும் தேர்ச்சியை முன்வைத்து அவரிடம் இருந்து
கிரந்தத்துக்குள் தமிழை நுழைக்க
ஆதரவாகக் கருத்துக்கள் பெறப்படுகின்றன.

அதற்குச் சான்றாகத் தமிழக
சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவிக்குமார் அவர்களின்
"நிறப்பிரிகை" என்ற இணையத்தளத்தில் இடப்பட்டிருக்கும்
"தமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்சிமுத்து"
என்ற தலைப்பில் "http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_8125.html"
என்ற முகவரியில் இடப்பட்டிருக்கும் கட்டுரையைக் காட்டலாம்.

கட்டுரை வழியே நாச்சிமுத்து அவர்களின் தமிழறிவைப்
புரிந்து கொள்ளமுடிந்தாலும், அவரிடம் மொழிபெயர்ப்பு,
சொற்பெயர்ப்பு, குறிபெயர்ப்பு போன்ற கணி,
யுனிகோடு நுட்பங்களில் சிறிதும் தெளிவைக்
காண முடியவில்லை.

அடுத்ததாக இந்தக் கலவையை ஆராய்ந்து
சொல்லத் தக்கார் என்று அரசு கருதுவது
திரு.மணவாளன் என்ற அறிஞரை.

நா.கணேசன், வா.செ.கு ஆகியோரின்
பேரன்பைக் கொண்டவர்கள் என்ற தகுதியிலும்,
தமிழ் கல்வெட்டுக்களில் தேர்ச்சியுடைய
தமிழ் அறிஞர்கள் என்ற தகுதியில் மட்டுமே
அவர்கள் பணியாற்றுவாரெனின்
"அதற்குப் பதில் தமிழக அரசு கிரந்த, தமிழ்க் கலவை
முன்மொழிவைக் கண்டு கொள்ளாமலேயே
விட்டிருக்கலாம்" என்றே சொல்லலாம்.

ஏனென்றால் வா.செ.கு அவர்கள்
கணேசனை நம்பிச் சொன்ன கருத்தையே
இவர்கள் எதிரொலிப்பார்கள் அன்றி
வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

இந்த ஆய்வுகளில் பங்குபற்றும்
இன்னொருவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
மிகச்சிறந்த கல்வெட்டுப் பேரறிஞராக
இருப்பவர்களுக்கு, வரலாறு அறிந்த அறிஞர்களுக்கு,
கணியிலும், யுனிக்கோடுவிலும் புலமை தானாகவே
வந்துவிடும் என்று அரசு கருதி விட்டதைப்
போன்று பெரும்பாலும் கிரந்தச் சார்பாளர்
அணியாகவே இந்த ஆய்வுக்குழு அமைந்து வருகிறது.

ஆகவே, கணேசனின் கிரந்தச் சேவையைக்
காப்பாற்றும் கணேசனின் அணியினரையே
தமிழக அரசு முழுக்க முழுக்க கிரந்தக்
கலவை ஆய்விற்குத் தேடிக் கொண்டிருப்பது
ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.

மீண்டும்:
கிரந்த, தமிழ்க் கலவைக்கு மூல காரணமே நாசா கணேசன்.
நாசா கணேசன் கிரந்தக் கலவை பற்றி இணையத்தில்
என்ன சொல்கிறாரோ அதை எதிரொலிக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கும் வா.செ.கு.
வா.செ.கு மற்றும் கணேசனின்
அன்பைப் பெற்ற மணவாளன், நாச்சிமுத்து;
அனைவருக்கும் அன்பான ஐராவதம். இவர்களினால்
தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்குமா அல்லது
தீராப்பழி கிடைக்குமா என்பதனைக் காலம்தான்
சொல்ல வேண்டும்.

3)

மூன்றாவதாக, கிரந்தச் சிக்கலைச்
சரியாக உணர வாய்ப்பில்லாதவர்களிடையே
சிறீரமணசர்மா சார்ந்திருக்கும் சாதியை
மட்டும் காட்டி எல்லாச் சரவலையும்
அவர்பக்கம் திசை திருப்பி விட்டு விட்டுக்
கணேசனின் முன்மொழிவின்பால்
பார்வை திரும்பாமல் பார்த்துக்
கொள்ளப்படுகிறது.

தமிழ்ப்பற்றாளர்களை "இதோ பார்
இன்னார் இன்னைதைச் செய்தார்"
என்று முடுக்கிவிட, அந்த ஓசையில்
நா.கணேசனின் முன்மொழிவுகள்
கண்டு கொள்ளப்படாமல் காக்கப்
படுகின்றன.

4)
நான்காவதாக, பன்னாடுகளைச் சேர்ந்த
பிற நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள்
தேவையில்லாமல் நுழைக்கப் படுகின்றன.

காட்டாக, சியார்ச் ஆர்ட் என்ற அமெரிக்க அறிஞர்
ழான் - லக் செவ்வியார் என்ற பிரெஞ்சு அறிஞர்,
அறிஞர் சிப்மென் மற்றும் வெளிநாடுகளில் இருந்து
செம்மொழி மாநாட்டில் சங்கப்பாட்டுக்களைப் பாடி மகிழ்வித்த
எல்லாருக்கும் தமிழில் புலமை இருக்கலாம்.
தமிழ் மேல் மதிப்பு இருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கெல்லாம்
தமிழைக் காக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாக
எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னால்
தொங்கிக் கொண்டு இருந்தால்
தமிழர்களை விட தமக்குத் தவறிழைத்துக்
கொள்பவர்கள் வேறு யாருமாக இருக்க முடியாது.

முக்கியமாகத் தமிழ்ப் புலமை கொண்ட
எல்லா வெளிநாட்டு அறிஞர்களும்
சமற்கிருதத்தின் மேல் இந்தையீரோப்பிய
மொழி அடிப்படையில்
பாசமும் நேசமும் கொண்டவர்கள்.

சியார்ச் ஆர்ட்டுவாக இருந்தால் என்ன?
ழான்-லக் ஆக இருந்தால் என்ன?
அவர்கள் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் ஆய்வு
செய்கிறார்கள் என்றால், அவர்கள் மேல் நமக்கு
மதிப்பு உண்டு. நமது போற்றுதற்குரியவர்கள் அவர்கள்.

ஆனால் நமது மொழியைக்
காப்பதற்கு இவர்களின் உள்ளத்தையும்
உணர்வையும் சார்ந்திருத்தல் முட்டாற்றனம் ஆகும்!

அந்த முட்டாற்றனமும் முன்னெடுக்கப் படுகின்றது.

"நம் மொழியிலே பிற மொழியைக் கலக்க வேண்டுமா?
வேண்டாமா? என்பதை நமக்கு முடிவு செய்ய துப்பில்லை
என்றால், நம் மொழியறிஞர்களிடமும் அரசியலாரிடமும்
துப்பில்லை என்றால், நம் மொழியும் நாமும் இல்லாது
போகத் தகுதியாயினவையே என்று சொல்லுவன் யான்!"

மனதுக்குள் அவர்களும் அப்படி எண்ணினால் வியப்பில்லை.

5) குழப்பம் 1:

இரண்டு வாங்கினாய் ஒன்று எங்கே? என்ற
கவுண்டமணி செந்தில் ஆகியோரின் புகழ்பெற்ற
திரைநகையைச் சற்று நினைவுக்கு கொண்டு
வந்து பார்க்க வைக்கிறது கிரந்த
ஆதரவாளர்களின் குழப்பத் திருப்பணிகள்.

நாமும் இங்கே சொல்லிப் பார்ப்போம்!

எத்தனைப் பிரச்சினையைச் சொல்கிறார்கள்?

இரண்டு பிரச்சினைங்க!

ஒன்று என்ன?

ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!

சரி இன்னொன்று என்ன?

ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!

சரி அதைத்தான் முன்னாடியே சொல்லிவிட்டீரே?
இன்னொன்று என்ன? அட அதாங்க இது!!

இப்படிப் போகிறது குழப்பம்.

எப்படி என்கிறீர்களா?

ஒருங்குறி என்பது தமிழுக்கு மட்டுமேயான
ஒரு குறியேற்றம் என்பதான ஒரு
உருவகம் ஏற்படுத்தப் படுகிறது.
அது பன்னாடுகளின் பல மொழிகளின்
எழுத்து அடுக்குகளைக் கொண்ட கோர்வை.
அதில் தனியாகக் கிரந்தம் இருந்தால் என்ன?
சீனம் இருந்தால் நமக்கென்ன?

அதில் வருகின்ற கிரந்தத்தில் கொண்டு போய்
தமிழை நுழைக்கக் கூடாது; என்பதை மறைக்க
முயலுமாறு, பலரை "ஒருங்குறிக்குள்ளே
கிரந்தம் நுழையவிடக்கூடாது" என்ற புரிதலுக்குள்
தள்ளிவிடுகிறார்கள். அப்படிச் செய்தால்
அது செல்லாத வாதமாகப் போய்விடும்;
அந்தச் சந்தடி சாக்கில் கிரந்தத்தில் தமிழை
நுழைத்து விடலாம் என்ற அரசியலும்
ஆங்காங்கு ஓடுகிறது.

அதனால் "ஒருங்குறியிலே கிரந்தம்
நுழைவது என்பது வேறு";

"கிரந்த ஒருங்குறிப் பாத்தியிலே
தமிழை நுழைப்பது வேறு" என்ற தெளிவு
எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

சிறீரமணசர்மாவையே கருவிக் கொண்டு
இருந்து விட்டு கணேசனின்
முன்மொழிவைக் காப்பதற்கே இந்தக்
குழப்பம் வழிவகுக்கும்.

6) குழப்பம் 2:

தமிழ்த்திறன் அல்லது வரலாற்றுத் திறன்
அல்லது தமிழ் சார்ந்த நிர்வாக அல்லது
ஆட்சித் திறன் கொண்டவர்களுக்கு
கணித்திறன், யுனிக்கோடு திறன் என்ற இரண்டும்
தானாகவே இருக்கும் என்று பலரும் கருதிக்
கொண்டிருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அது உண்மை என்றால் "தமிழ் இணையப் பல்கலைக் கழகம்"
என்று ஆரம்பித்த ஒன்று இன்று தேய்ந்துபோய்
"தமிழ் இணையக் கல்விக் கழகம்" என்று ஆகியிருக்காது.

பலரும், கணித்திறன் கொண்ட கணியறிஞர்கள்
அல்லது கணிப்பணியில் இருப்பவர்களுக்கெல்லாம்
இந்த யுனிக்கோடுச் சரவல் நன்றாகத் தெரியும் என்று
மிகத் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

கணித்திறன் வேறு யுனிக்கோடு பற்றிய புலமை வேறு.

கணிப்பணியில் இருக்கும் ஆயிரத்தில் யாரோ
ஒருவருக்கு மட்டுமே ஓரளவு இந்தச் சரவல் புரியும்.

பல்லாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதில்
புலமையும் தெளிவும் இருக்கும்.
தற்போதைய நிலை அதுதான்.

இதை மறந்துவிட்டு தடிஎடுத்தவர் எல்லாம்
தண்டல் காரர்தான் என்று சொல்வது போல
கணிப்பணியில் இருப்பவர்க்கெல்லாம்
இந்தச் சரவல் நன்றாகத் தெரியும் என்று கருதிக்
கொண்டால் அது அறியாமை அன்றி வேறல்ல.

ஆகவே தமிழறிஞர், கணியறிஞர்,
யுனிக்கோடு அறிஞர் எல்லாரும்
சேர்ந்து முதலில் எங்கே சரவல்
என்பதைத் தெளிந்து செயல்திட்டம்
செய்ய வேண்டும்.

தமிழக அரசு காலநீட்டு
வாங்கிக் கொடுத்து
மாதமாகியும் அப்படியான
ஒரு ஒருங்கிணைவு
ஏற்பட்டக் காட்சியேதும்
கிடைக்கவேயில்லை.

எல்லாமே இன்னாருக்குத் தெரியும்
இன்னார் சொன்னால் சரி என்று போனால்
தமிழ் இல்லாது போய்விடும்.

அதுமட்டுமல்ல, பல தமிழறிஞர்கள்,
கணி அறிஞர்கள், யுனிக்கோடு
அறிஞர்கள் என்ற இவர்களின்
கருத்துக்களை எல்லாம் எதிரொலித்த
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
முயற்சியும் அரைக்கிணறு தாண்டிய
கதையாய்க் காகிதங்களோடு முடிந்துவிடும்.

ஆகவே, தமிழக அரசு செய்யும் பிழைகளில்
முக்கியமானவையாக நான் கருதுவது:

1) கிரந்தச் சேவைகள்மேல் மென்மைப்
போக்கினைக் கொண்டவர்களையே
கிரந்த, தமிழ்க் கலவைகளை ஆய்வு
செய்யப் போடுவது

2) தமிழறிஞர், புகழ் பெற்ற படைப்புகள்
செய்தவர் என்ற தகுதியெல்லாம்
அச்சில் வரும் தாள்களுக்குப் பொருந்தும்;
அதன் காலங்களிற்குப் பொருந்தும்.
ஆனால் யுனிக்கோடு சிக்கலுக்கு அது பற்றாது.
அவ்வறிஞர்களோடு, கணி நுட்பமும்,
யுனிக்கோடு நுட்பமும் அறிந்த, தமிழும்
அறிந்த யுனிக்கோடு அறிஞர்களையும் சேர்த்து
நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்காமல்
மேம்போக்காக "இவர் சொன்னார் அவர் சொன்னார்"
என்று முடிவெடுப்பதும்
பெரும்பிழையில் போய் முடியும்.

"இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே"
என்ற பாடல்வரி நினைவுக்கு வருவதை
தவிர்க்கமுடியவில்லை.

நிறைவு.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: அடியேனின் இந்த எழுத்துக்கள் தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்றியிருக்கிற
பல அறிஞர்களையும் பெரியவர்களையும் கிடுக்குவது போல இருந்தாலும்,
கிரந்தம் தவிர்த்த மற்ற விதயங்களிலும் எனக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு உண்டு.

கிரந்தத்தில் அவர்களின் செயற்பாடுகள் தமிழுக்கு ஊறு சேர்த்திடுமோ என்ற
அச்சத்தில் கோர்க்கப்பட்டது இக்கட்டுரையன்றி வேறு யாதொன்றுமில்லை.
கணேசன் என்ற ஒருவர் செய்யும் தமிழ்க்கேட்டிற்குப் பலரும் தவிக்க வேண்டிய
சூழல் கவலைஏற்படுத்தும் ஒன்றன்றி மற்றோர்பால் எனக்கு யாதொரு மதிப்புக் குறையும் இல்லை என்று மீண்டும் அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-2/3

ஆக, சிறீரமணசர்மாவின் முன்மொழிவுகளில்
ஒன்றான கிரந்தத்தைத் தமிழில் கலக்கும் முன்மொழிவு
தள்ளுபடியாகிவிட்டது. இனி அடுத்த சரவலுக்கு வருவோம்.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களில்
கலப்பதை ஒருங்குறி சேர்த்தியம் புறந்தள்ளி விட்ட
போதும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டுபோய்
புதிதாக உருவாக்கப்படும் கிரந்தக் குறிகளில்
கலக்கும் முன்மொழிவை ஏற்கவிருந்த சூழலில்
தமிழக அரசு விரைந்து செயற்பட்டு, இது பற்றி
நன்கு கலந்தாலோசித்துக் கருத்துரைக்க
மேலும் ஏறத்தாழ மூன்றுமாத காலம் வேண்டும்
என்று நடுவணரசைக் கேட்டுத் தமிழ்
அறிஞர் உலகிற்குப் பெற்றுத் தந்தது.

அவசரப்பட்டு எதுவும் செய்யாமல்,
அந்தக் காலநீட்டில் தக்க அறிஞர்கள்
கொண்ட குழுவை நியமித்து ஆராய்ந்து
தெளிவான முடிவை எடுப்பதே அரசின் எண்ணம்.

ஆனால் கிரந்த வியாபாரிகள் இந்த
இடைவேளையில் படுசுறுசுறுப்பாக
இதிற்செயற்பட்டு அரசின் தடத்தினை
மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்கு ஏற்ற கூட்டணிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் இந்தக் கிரந்த மறுப்பு முயற்சி மழுங்கிப்போக
செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

சூழல் என்ன?

இதுவரை யுனிக்கோடுவில் கிரந்தக்
குறிகளுக்கென்று தனியான குறியேற்றம் கிடையாது.

பல மொழிகளும் குறிகளும் சின்னங்களும்
இடம்பெற்றுள்ள யுனிக்கோடுவில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம் வேண்டும்
என்று சிறீரமணசர்மா வேறொரு
முன்மொழிவை வைக்கிறார்.

யுனிக்கோடுவில், உலகில் இருக்கின்ற
மொழிகளுக்குள்ள எழுத்துகளுக்கெல்லாம்
அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்துச்
சிறியதும் பெரியதுமான
தனித்தனிப் பாத்திகள்(blocks) உள்ளன.

தமிழ் அப்படியான பாத்தியொன்றில் இருக்கிறது.
மலையாளம், வங்காளம், அரபி, சீனம்
என்ற ஒவ்வொன்றும் அவற்றின் பாத்திகளில்
இருக்கின்றன.

இந்திய நடுவணரசு சர்மாவின் முன்மொழிவைக்
கையில் எடுக்கையில் நாசா விஞ்ஞானி
நா.கணேசனின் முன்மொழிவு
ஒன்று அவர்களை இடர்கிறது.

நாசா கணேசன் - "கிரந்தக் குறிகள்
உருவாக்குகிறபோது தமிழின்
7 எழுத்துக்களையும் கலந்து உருவாக்க
வேண்டும்" என்று போட்ட
முன்மொழிவே இதற்குக் காரணம்.

சர்மா கேட்டிருந்தது, பல மொழிகளிலும்
காணப்படுகிற சின்னங்கள்,
பழைய கால எழுத்துக்கள்,
தற்போது வழக்கில் இல்லாத குறிகள்,
குறைவாகப் பயன்படுகிற குறிகள்
ஆகியவையெல்லாம் யுனிகோடுவில்
வைக்கப்படுகின்ற பாத்திகள் வரிசையில்தான்.

ஆனால் கணேசன் சூழ்ச்சி முன்மொழிவோ,
"மொழியின் முகன்மை எழுத்துக்கள்
வைக்கப் படுகின்ற முகன்மைப் பாத்திகளில்
தமிழ் மொழிக்கு ஊறு நேருகின்ற விதமாகவும்,
கிரந்தக் குறிகளுக்குள் தமிழின் 7 எழுத்துக்களைக்
கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் கிரந்தக்
குறியேற்றத்தை மட்டுமே பயன்படுத்தினால்
போதும் - தமிழ்க் குறியேற்றமே தேவையில்லை
என்று நாளடைவில் எண்ண வைக்கின்ற
இடத்தில் அல்லது பாத்தியில்
கிரந்தக் குறிகளை வைக்கச் சொல்கிறது".

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி"
என்பது போல கணேசனின் கிரந்தச் சேவை
அமைந்துவிட்டது.

தலையைப் பிய்த்துக் கொண்ட நடுவணரசு
சர்மாவின் கருத்துக்களில் சிலவற்றை
மட்டும் எடுத்துக் கொண்டு கணேசனின்
முன்மொழிவைப் பெருமளவும் உள்வாங்கி
தானே ஒரு தமிழ் கலந்த கிரந்த
முன்மொழிவை உருவாக்கி விட்டது.
இதுதான் இன்றைக்குப் பூதமாகியிருக்கிறது.

உலகில் உள்ள மொழிகளின் எழுத்துக்கள்,
பழங்காலக் குறிகள், சின்னங்களுக்கெல்லாம்
இடம் ஒதுக்கி பன்னாட்டு மொழிகள் ஒருங்கிய
குறியேற்றமாக இருக்கும் ஒருங்குறி என்கின்ற
யுனிக்கோடுவில் கிரந்தக் குறிகளுக்கென
ஒரு ஓரப் பாத்தி கட்டுவது யாருக்கும் இழப்பல்ல.

தமிழுக்கும் அது எந்தவிதத்திலும் நட்டமல்ல.
உலகின் ஆயிரக்கணக்கான எழுத்துக்களில் குறிகளில்
கிரந்தக் குறிகளே இருக்கக் கூடாது என்று
சொல்ல நாம் ஒன்றும் சட்டாம்பிள்ளை அல்ல.
நமக்கு அது தேவையுமில்லை. கவலையுமில்லை.
அது முறையுமில்லை. அப்படிச் சொன்னால்
அது முட்டாற்றனமும் கூட.

ஆனால், "வேலியிலே போகின்ற ஓணானை
வேட்டிக்குள் எடுத்து விடுவது போல",
கிரந்தக் குறியேற்றத்தை ஒரு ஓரப்பாத்தியில்
தனியே செய்யப் போந்த யுனிக்கோடு
சேர்த்தியத்தையும், நடுவணரசையும்,
இரமணசர்மாவையும் இடைமறித்து,
"தமிழ் விஞ்ஞானி நான் கூறுகின்றேன் -
7 தமிழெழுத்துக்களையும் எடுத்து
கிரந்தத்தோடு ஒட்ட வையுங்கள்" என்று
குழப்பி திசை திருப்பிய தமிழ்க்கேட்டைச்
செய்தவர் நாசா விஞ்ஞானியும்
இணையத்தில் தனது கிரந்தச் சேவைகளுக்காக
ஒரு கிரந்தக் குழுவினரிடம் இருந்து
"மரபுச் செல்வர்" என்ற பட்டத்தையும்
வாங்கிக் கொண்ட மாண்புமிகு நா.கணேசன் ஆவார்.

நா.கணேசனே நடுவணரசு இப்படியான
முன்மொழிவைச் செய்வதற்கு முழுக்காரணமுமாக,
பின்னணியுமாக இருந்தவர். இதனை அவரே பல
இணையக் குழுக்களிலும் எழுதிப் பெருமையும்
பெற்றுக்கொண்டவராவார்.

இப்படியான சூழலில் தமிழ்நாட்டரசு
பெற்றுத் தந்த காலநீட்டில் என்ன நடக்கிறது?

கணேசனைக் காப்பாற்ற தமிழ் எழுத்துக்களைக்
கிரந்தத்தில் கலக்கலாம் என்ற பரப்புரை
எப்படி நிகழ்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால்
கவலையளிக்கின்ற காட்சிகளே கிடைக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-1/3

யுனிக்கோடுவை தமிழ்நாட்டரசு ஏற்றுக் கொண்ட
செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, உடனடியாக,
ஏறத்தாழ ஒரே நேரத்தில், கிரந்தம் தொடர்பான
மூன்று முயற்சிகள் நிகழ்ந்தன.

1) உலகளாவிய மொழிகளின் எழுத்துக்கள்
அத்தனைக்கும் குறியேற்றம் தருகின்ற
குறிக்கோளுடைய யுனிக்கோடு என்கின்ற
ஒருங்குறியில் 68 கிரந்தக் குறிகளைப்
புதியதாக தனியான இடத்தில் உருவாக்குவது.

2) இருக்கின்ற தமிழ்-யுனிக்கோடுவில்
68 கிரந்தக் குறிகளில் 27ஐக் கொண்டு வந்து நுழைப்பது.

3) புதிதாக உருவாக்கப் படுகின்ற கிரந்த-யுனிகோடுவில்
7 தமிழ் எழுத்துக்களையும் சேர்த்துவிடுவது.

இந்த மூன்று செய்திகளும் தமிழக அரசிற்குத்
தக்கவண்ணம் சென்று சேராதவாறு பார்த்துக்
கொள்ளப்பட்டது. அப்படி இருந்த போதும்,
கணித்தமிழ் ஆர்வலர்களின் முயற்சியாலும்,
நல்ல அறிஞர்களின் முயற்சியாலும்,
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழக
முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லியும்,
விடுதலையில் அறிக்கை விடுத்தும்
ஆற்றிய அரும்பெரும் தொண்டாலும்
தமிழக அரசு நிலைமையை அறிந்து
விரைந்து செயற்பட்டது.

இந்தச் செயற்பாடு ஒருபுறம் கிளர்ந்து எழ,
எதையும் நுட்பியல் ஏரணங்களோடு
முடிவெடுக்கும் பன்னாட்டுப் பெருங்கணி
நிறுவனங்களின் கூட்டுச் சேர்த்தியமான
யுனிக்கோடு சேர்த்தியத்தினர்க்கு (Unicode Consortium),
முன்மொழிவுகளை ஏற்கவோ தள்ளவோ
ஒவ்வொன்றிற்கும் நுட்பியல் ஏரணங்கள்
(Logical Technical Reasoning) தேவைப்பட்டது.

தமிழ்-யுனிக்கோடுவில் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்க வேண்டும் என்று மேலே
இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும்
திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு,
சரியான ஏரணம் முன்வைக்கப்படாவிட்டால்
ஏற்கப் பட்டிருக்கக் கூடிய நிலையில்,
யுனிக்கோடு அறிஞர்களான
திரு.முத்து நெடுமாறன் (மலேசியா),
திரு.மணி.மு.மணிவண்ணன் (தமிழ்நாடு)
ஆகியோரின் நுணுக்கமான,
ஆழ்ந்த நுட்பியற் கருத்துக்கள்
ஒருங்குறி சேர்த்தியத்திற்குத் தெளிவாகப் புரிந்தன.

தெளிந்த யுனிக்கோடு புலமை கொண்ட
அவர்கள் சொன்னது பெரிதாக ஒன்றுமில்லை.

"தமிழ்-யுனிகோடுவிற்குள் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்காமலேயே சிறீரமணசர்மா,
அவர் விரும்பும் வடமொழி நூல்களை எப்படி
எழுத, படிக்க இயலும்" என்பதே.

திரு.முத்து நெடுமாறன்,
இமைப்பொழுதிலா நொடிப்பொழுதிலா
என்று அறிய முடியாத விரைவில்
அக்கருத்தைச் செயலாக்கித் திரையிலும்
காட்டிவிட்டார். அதன் அடிப்படையை
உணர்ந்து கொண்ட ஒருங்குறி
சேர்த்தியத்திற்கு திரு.இரமணசர்மாவின்
முன்மொழிவை நிராகரிக்க அதிக நேரம்
பிடிக்கவில்லை.

மேலே கூறிய 3 கிரந்த முயற்சிகளில்
2ஆவது முயற்சி தமிழக அரசு, ஆசிரியர்.கி.வீரமணி மற்றும்
ஆர்வலர்கள், யுனிக்கோடு அறிஞர்கள் ஆகியோரின்
செயற்பாட்டால் தகர்ந்து போனது. (அல்லது தமிழ் தப்பித்தது).

இங்கே விதயத்தை நன்கு உள்வாங்கி ஒத்திசைவுடன்
அவரவர் ஆற்றிய பணிகள் தமிழைக் கரை சேர்த்தன.

ஆக ஒரு விதயத்தில் தமிழர்களால் தமிழைக் காக்க முடிந்தது.
ஆக, மீதி இரண்டு விதயங்கள்.

இவை எத்தகையன? அதில் நடப்பது என்ன?

(தொடரும்)

குறிப்பு: கிரந்த, தமிழ்க் கலவை பற்றிய சிக்கலான நுட்ப விதயங்களில் மேலும் தெளிய முனைவர் இராம.கி அவர்களின் http://valavu.blogspot.com/2010/11/1.html ல் அவர் எழுதியிருக்கும் கட்டுரைத் தொடரைப் படிக்கவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, October 23, 2010

காஞ்சி காமகோடிப் பீடத்தின் ஆசியில் தமிழ்-யுனிகோடு படுகொலை

இணையத்தில் தமிழ் வளர்கிறது வளர்கிறது
என்ற பேதைத்தனமான போதையை ஏற்றி விட்டு
எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ
அத்தனையும் இணையத்தில் அரங்கேறுகின்றன.

தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய்,
ஏதோ தமிழ் இணையத்தில் நடக்கிறது என்று
பல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய
மாநாடு நடத்தவும் செய்தது. ஆனால் அந்த
மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட
4 அரங்கங்களும் 5 நாள்களிலும்
ஈயோட்டிக் கொண்டிருந்தன.
அமைச்சர்கள் கலந்து கொண்ட
உரைகளில் மட்டும் அவர்களோடு
வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது.
இது குறித்து எழுதினால் நீளும். சுருக்கமாகச்
சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்”
தமிழக அரசாங்கம் ஏமாற்றப்படுவதுடன்
அரசாங்கத்தின் கண்களையும் கட்டிவிட்டு
பயங்கர தமிழ் மோசடிகள் நடக்கின்றன என்பதைப்
பலரும் அறிவர்.

இது கணி சார்ந்தது, இணையம் சார்ந்தது
என்பதால் அரசினர்க்கு இது பற்றி
அறிவிக்கும் நிலையில் உள்ளவர்கள்
செய்யும் ஏமாற்று வேலைகளால் மட்டுமே இந்த மோசடிகள்
நடக்கின்றன என்பது இன்னும் அரசு உணராமல் இருக்கின்றது.

அப்படிப் பட்ட மோசடிகளில் மிகப்பயங்கரமான
மோசடி நாம் அனைவரும் இணையத்தில்
பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும்
மோசடி. சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும்
தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத
எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று
செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu
எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா?

அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே
யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட
இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட
இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.

தமிழக அரசு வழியாக இதைச் செய்ய முடியாது
என்று கொல்லைப்புறமாக நுழைகிறது சமசுக்கிருதம்.
யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக
யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும்
தமிழோடு சேர்த்து விட்டு, அதனை "Extended Tamil"
என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும்,
“ஆகா தமிழ் என்று இருந்தது
இப்போது Extended என்ற சொல்லையும்
சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே
காட்டுகிறது” என்று மகிழ்வார்கள் அல்லது
மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு
இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது.

யுனிகோடு சேர்த்தியத்தோடு நெருக்கத்தில்
இருக்கும் தமிழ் இணையம் சார்ந்த
சில அமைப்புகளின் உறுப்பினர்களும்
இந்தத் தமிழ்ப் படுகொலைக்கு உடந்தையாக உள்ளனர்
என்ற செய்திகள் கவலைக்குள்ளாக்குகின்றன.

இது பற்றிக் கவலைப்படுவது போல,
தமிழ் இணைய மாநாட்டினை, செம்மொழி மாநாட்டுடன்
நடாத்திய உத்தமம் (INFITT.org) என்ற குழு
காட்டிக் கொண்டாலும் யுனிகோடு சேர்த்தியத்துக்கு
ஒரு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட யுனிகோடுவிற்கு
விழப்போகும் மரண அடியை
தமிழக முதல்வர், தமிழக தகவல்+கணித்துறை
அமைச்சர், தமிழகக் கணித்துறைச் செயலர்
போன்ற யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள்
உத்தமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பலர்
சொல்கிறார்கள். தமிழகக் கணித்துறைச் செயலரோ, அல்லது
அமைச்சரோ ஒரு வரி மறுப்பை யுனிகோடு
சேர்த்தியத்திற்குச் சொன்னால் போதும்
இந்தப் பச்சைப் படுகொலை நிகழாது.

ஆனால் அரசாங்கம் யாரையெல்லாம்
கணித்தமிழ்க்காவலர் என்று எண்ணியுள்ளதோ
அந்த அதிகாரிகளும் ஆர்வலர்களும் அரசிடம்
இதனை எடுத்துச் சொல்லாமல்
மறைக்கிறார்கள் என்ற செய்திகள் இணையம்
பற்றியும் யுனிகோடு பற்றியும்
அறிந்த வல்லுநர்களைத் துயரமடையச் செய்கின்றன.

மரணப்பள்ளத்தாக்கில் இருக்கும் தமிழ்
யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக
அரசு அங்கீகரித்தது என்பது கவனிக்கத்தக்கது.
அணிமைய செம்மொழி மாநாட்டின் போதுதான்
தமிழக அரசு அங்கீகரிப்பை
வெளியிட்டது. ஆனால் அது முடிந்த
3 மாதங்களிலேயே யுனிகோடுவை
சமசுக்கிருதமயமாக்கும்
முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற
நிலையில் இருக்கின்றது கவலைப்பட
வைக்கும் விதயமாகும்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய
பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்,
தமிழுக்கு ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களைப் பற்றி
விரிவாகப் பேசினார். அவரின் அச்சங்களை
உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது
இந்தப் பேராபத்து. Sanskritizing Tamil Unicode என்ற
பல்நோக்குத் திட்டத்தின் கீழ்
செயப்படும் இந்தச் சமசுக்கிருதமயமாக்கலின்
மூலக்கடிதம் (இணைப்பில் காண்க)
யுனிகோடு சேர்த்தியத்திற்கு எழுதப்பட்டதாகும்.
இதைத் தொடர்ந்து காஞ்சி காமகோடிப் பீடம்
தொடர்புடைய பல மேற்கோள்களும் ஆதரவாளர்களும்
இதற்குப் பெருகிவருகின்றன.

யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை
தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள்
25 அக்டோபர் 2010. அதற்குள் மறுப்பு போய்ச்
சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி,
Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள்
இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா
சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி
அழியத் தொடங்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கும்.

தமிழக அரசால் வளர்க்கப்பட்ட யுனிகோடு,
அரசு அறியாமலேயே அழியத் துவங்குதற்கு
இன்னும் இருக்கின்ற நாள்கள் இரண்டு மட்டுமே.

http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n30/mode/1up

மேற்கண்ட சுட்டியில், அடையாளம் இன்னதென்று
தெரியாமல் இருக்கும் எழுத்துக்களைக் காண்க.
அவையெல்லாம் தமிழில் புகக் காத்திருக்கும்
அலங்கோலங்களில் சில.

கீழே இணைப்பில் இந்த முனையலின் ஆதாரக்
கடிதத்தைக் காண்க.

இப்பொழுது வேண்டும் என்றே விட்டு விட்டு
இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆரியத்தைத்
திட்டி அரசியல் செய்வதற்குப் பதில் தமிழ்க்காவலர்கள்
விழித்துக் கொள்ளட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, August 16, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-3

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகள்:
http://nayanam.blogspot.com/2010/08/1.html
http://nayanam.blogspot.com/2010/08/2.html

முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட
வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்குப்
பதிலாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும்
இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ
காரட்டு குறியையோ அல்லது டில்டா குறியையோ
போடலாம் என்று உகர ஊகார துணைக்குறியீடாக
அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர்
போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த
முன்வைப்பின் உச்சம் எனலாம்.

பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும்
எழுத்துக்களிற்குப் பல்வேறு வேடங் கட்டி
பிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து
வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ
இன்னொரு போட்டியாளர் தனது எழுத்து
வடிவ மாற்றச் சரக்கைச் சந்தையில் திணிக்கிறார்.
அமைதி ஆனந்தம் என்பார் பரிந்துரைக்கும்
வடிவ மாற்றங்களை இங்கு பகிர்கிறேன்.

இவரின் கொள்கை:"ஆங்கில மொழி எப்படி
ஒற்றைக் குறிகளாக இருக்கின்றனவோ
அதே போல தமிழ் எழுத்துக்களையும்
ஒன்று விடாமல் நசுக்கி ஓருருவாக
ஆக்கினால்தான் தமிழ் வாழும். இல்லாவிடில்
நாசமாகப் போய்விடும்” என்று சொல்வதோடு
தமிழர்களுக்கு இருக்கின்ற பிற நாட்டினருக்குப்
போற்றி பாடும் உளப்போக்கை பாங்குற
எதிரொலிக்கின்றார்.

அமைதியானந்தரின் தமிழ்ப்பற்று ஓங்கி உயர்ந்தது.
தமிழ் மொழிமட்டுமல்ல தமிழ் மண்ணில் காணக்கூடிய
விலங்குகளிடமும் அவர் கொண்டுள்ள நேயம் ஒப்பற்றது.
காங்கேயம் காளைகளின் கொம்புகளை இங்கே தமிழ்
எழுத்துக்களுக்கு வரைந்து அழகு பார்க்கிறார்.

நான் காங்கேயம் காளைகளின் கொம்பு வாகைப்
போட்டிருக்கிறார் என்று சொன்னதும் நண்பர் ஒருவர்
வெகுண்டு - உனக்குக் காங்கேயத்தைத் தாண்டி எதுவும்
தெரியாது, உண்மையில் அந்தக் கொம்புகள் சிந்துசமவெளி
கல்வெட்டுக்களில் காணப்பட்ட காளையின் கொம்பாகும்,
என்று சொன்னபோது, என்னே தமிழ்ப்பற்று என்று
வியந்துபோனேன்.

அவரின் பார்வையில் கா,ஙா,சா,ஞா, டா,ணா, தா,நா
என்ற ஆகார உயிர்மெய் வரிசை இப்படித்தான்
இருக்க வேண்டுமாம். கீழே உள்ள படத்தில் இருப்பன
தற்போது ஞா, டா, ணா முதலான எழுத்துக்களை
மாற்றும் அவர் பரிந்துரை. இதேபோல அவ்வரிசையின்
பிற எழுத்துக்களுக்கும் போட்டு விட்டிருக்கிறார்.


திராவிடக் காளையின் கொம்புகளைத் தமிழ் மொழியோடு
பிணைத்துக் களிக்கிறார் கா,ஙா,சா வரிசையில் என்றால்,
கெ, ஙெ, செ வரிசைக்கு யானையின் தும்பிக்கையை
ஒட்டி விட்டு மகிழ்கிறார் அமைதியானந்தர்.

யானை என்பது தமிழனின் தொன்மையான விலங்கு
மட்டுமல்லாது போர்த்தொழிலில் இருந்து பிச்சை
எடுக்குந்தொழில் வரை யானை தமிழனுக்குப்
பயன்படுவதை என்றென்றும் நெஞ்சில் வைக்க
இந்தச் சீர்திருத்தமாகும் என்பதே அவர்
கட்டுரைகளின் உட்பொருளாக எனக்குக்
கிடைக்கிறது.


இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது
அந்த ”ணை” என்ற எழுத்தை அவர் மாற்றுவதாகும்.
இவ்வெழுத்து பெரியாரால் மாற்றப்பட்டது இன்னும்
பலருக்கும் நினைவிருக்கும். ஏறத்தாழ அதே
எழுத்தை மீண்டும் கொண்டு வருகிறார்
அமைதியானந்தர்.

”மாற்றம் தேவைதானே! ஒரு 30 வருடத்திற்கு
முன்னே அப்படி எழுதினோம். அப்புறம் இப்படி
எழுதினோம். சரி மறுபடி அப்படியே எழுதுவோம்” –
இப்படி மாறிக்கொண்டே இருந்தால்தானே தமிழ் வாழும்.
மாற்றம் என்பது மாறாததல்லவா? என்பது
அமைதியானந்தரின் கோட்பாடு ஆகும்.


மேலே உள்ள எழுத்துக்களைக் காட்டி இதைப் படியுங்க
என்றார் ஒரு நண்பர்– நானும் சி, ஞி என்று சொன்னேன்.
அவருக்கு வந்ததே கோபம் – சி,ஞி என்பது அந்தக்காலம்;
உங்களைப்போல பழமைவாதிகளால்தான் தமிழின் வளர்ச்சி
அழிந்துபோகிறது என்றார். திகைத்து ஏனென்று கேட்டேன்.
பின்னர் சொன்னார் – “அது சி,ஞி இல்லைங்க – புதிய சே, ஞே என்றார்”.

ஆகா, தமிழ் என்னமா வளருது என்று நானும்
எண்ணியபோது, “ஐயம் இருந்தால் அமைதியானந்தரைக்
கேளுங்கள் என்று சொல்லிவிட்டு, பழமைவாதிகளிடம்
பேசினாலே தமிழ் தேய்ந்துபோகும் என்பதுபோல நகர்ந்தார்”.

புரட்சித் தமிழர்களின் புரட்சித் தமிழில் இதோ கே,ஙே,சே,ஞே.


கி,ஙி,சி,ஞி எப்படி இருக்கும் என்பதனைக் கேட்டுவிட்டால்
நம்மைப் பழமைவாதிகள் என்று சொல்வார்களோ என்று
அஞ்சி இந்த எழுத்துச் சீர்திருத்தப் படையிடம் நான்
கேட்கவேயில்லை. அதுமட்டுமல்ல அச்சத்திற்குக் காரணம்,
படை என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதாலும்.

சகலகலா வல்லவர்களான எழுத்துச் சீர்திருத்தவாதிகளின்
கலைநயத்திற்கும் அறிவியல் அறிவிற்கும் வரம்பே
கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்தது
ஐகார உயிர்மெய்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கின்ற
மாற்றங்கள்தான்.

தமிழை கைதூக்கி விடுவதற்காக அவர்கள் செய்யும்
முயற்சிகளில் ஒன்றுதான் ஐகார வரிசை எழுத்துக்களில்
அவர்களின் கைவண்ணம். ஐகார எழுத்துக்களை
அறிவியல் முறைப்படி ஆக்கியிருக்கிறார்கள்.

ஆர்க்கிமிடிசின் நெம்புகோல் தத்துவத்தை எளிதில்
தமிழ்க் குழந்தைகள் கற்றுக் கொள்ளுமாறு
அமைத்திருக்கிறார்கள். ஐகார வரிசையின்
ஒவ்வொரு எழுத்துக்களின் அடியிலும்
ஒரு நெம்புகோலைப் போட்டுவிடுகிறார்கள்.

கீழே உள்ளவை ”கை” வரிசையாகும்.
”டை” என்ற எழுத்திற்குக் கருணை காட்டும்
அவர்களின் வடிவ மாற்றம் உற்றுக் கவனிக்கத்தக்கது.



அறிவியல் தமிழ் வளர்ப்பதென்றால் இப்படித்தான்
வளர்க்கனும் – அதற்குக் கிடைத்த இடம் தமிழ்
எழுத்துக்கள்தான். அதைவிட்டு விட்டு பேசிக் கொண்டு
இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்
சீர்திருத்தவாதிகள்.

அதுமட்டுமா? நோயாளிகள், முதியோரிடம்
நேயம் காட்டவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றவாறு
ஒளகார உயிர்மெய்வரிசைகளுக்குப் புதிய குறிகள் இடுகிறார்கள் சீர்திருத்தவாதிகள். “டெள” என்ற எழுத்தே இதற்குச் சான்று.



தமிழ் மண்ணின் காளைகள், யானைகளின்
மேல்மட்டுமா பரிவு?. பெரிய உயிரினங்களைத் தாண்டி,
நத்தை போன்ற சிறிய உயிரினங்களின்மேல் உள்ள
பரிவையும் அன்பையும் விளக்குவதாக
ஓகார வரிசை அமைகிறது.


தமிழி நெடுங்கணக்கின் 247 எழுத்துக்களில்
60 எழுத்துக்களை நீக்கிவிடவேண்டும் என்பது
உள்ளிட்ட வடிவமாற்றிகளின் பரிந்துரைகளில்
இதுவரை தப்பித்திருப்பன 18 மெய்யெழுத்துக்கள்
மட்டுமே. எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில்
பேசப்படுகின்றவற்றின் தன்மையையும்
அளவையையும் கண்டு என்ன செய்யலாம்
என்பதை வாசிப்பவர் முடிவு செய்துகொள்க.

தமிழ்நாட்டில் ஆக்கங்கள் இல்லை.
அதற்கு வாய்ப்புகளும் இல்லை.
அறிவியல் கண்டுபிடிப்புக்கள் என்று ஏதும்
இல்லை. எல்லாம் பிறநாட்டுக்
கண்டுபிடிப்புக்களின் புகழ்பாடிப் பிழைக்கும்
பிழைப்புதான். அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில்
தமிழே இல்லை. கல்விக்கூடம் முதல் சுடுகாடு
வரை ஆங்கிலத்தில்தான் பெயர்ப்பலகை இருக்கின்றன.

இந்த அழகில் எங்கே போய் அறிவியல் தமிழ் வளர்ப்பது
என்று, தமது திறமையையெல்லாம் தமிழ் எழுத்துக்கள் மேல்
காட்டுகிறார்கள் - அதற்குப் பெரியாரின் முகமூடியை
எடுத்து மாட்டிக்கொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றவுடன் ஏதோ மிகப்பெரிய
மொழியியல் சங்கதி என்று எண்ணி யாரும் விலகிப்
போகக்கூடாது. ஏனென்றால் அதில் மொழியியல், இலக்கணம்
என்று ஒன்றும் கிடையாது. ஒரு வெற்றுப் படம்.

நாம் அன்றாடம் புழங்கும் எழுத்தை ஏன் மாற்றவேண்டும்?
எதற்கு மாற்றவேண்டும்? என்று வினாவெழுப்பிச்
சிந்திக்க வேண்டும்.

நிறைவு.

அன்புடன்
நாக.இளங்கோவன்







Saturday, August 14, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-2


இக்கட்டுரையின் முந்தைய பகுதி:
http://nayanam.blogspot.com/2010/08/1.html

வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால்,
காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்
ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்
சூட்டி விடுகிறார். இது வட்மொழி அடியொற்றியது.

மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகார
உயிர்மெய் எழுத்துக்களை மாற்றி விட்டால்
கணிக்கு ஏற்றது போல தமிழை மாற்றிவிடலாம்
என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்கு
என்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறை
என்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்து
விடுவது வியப்புக்களில் ஒன்று.

உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களை
இப்படி மாற்றிவிடலாம் என்று சிலர் கிளம்புகையில்
இன்னுஞ் சிலர் உயிரெழுத்துக்களை
எப்படியெல்லாம் மாற்றலாம் என்று சொல்கிறார்கள்
என்று கவனிப்பது மேலும் நமது தமிழறிவை
வளர்த்துவிடும் என்று நம்பலாம். இதோ பாருங்கள்,
தமிழ் உலகில் உலவுகின்ற உயிரெழுத்துக்களின்
மாற்ற வடிவங்களில் ஒன்றனை.


கா, ஙா, சா விற்கு மட்டும் கால் வாங்குவிங்களா?
உயிர் நெடில்களுக்கு வாங்க மாட்டிங்களா?
என்று வினவும் உயிரெழுத்து நெடில் மாற்ற விரும்பிகள்
மேலெ படத்தில் சொல்வது ஒருபுறமிருக்க,
இது என்ன பெரிய சீர்திருத்தம்? கால் வாங்குவதென்ன -
இ-னா ஈயன்னாவையே எப்படி மாற்றலாம் தெரியுமா?
என்றவாறு இ, ஈ எழுத்தின் வடிவத்தையே
முற்றாக மாற்றிவிடுகின்றனர் சிலர்.

மேலே படத்தில் உள்ளன தமிழின் உயிர்களான இ, ஈ என்ற
எழுத்துக்களுக்குப் பரிந்துரைக்கப் படுகிற
மாற்று வடிவங்கள். இப்படிப் பரிந்துரைப்பவர்களிடம்
போய் ஏன் மாற்றவேண்டும்?, இப்படி மாற்றினால்
என்ன பயன்? என்று கேட்டால், உடனே கேட்பவரை
“பழமைவாதிகள்” என்று சொல்லிவிட
நன்கு பயின்றிருக்கிறார்கள். இ-ஈ இப்படி என்றால்
உயிர்கள் உ, ஊ எப்படி இருக்கும்? இதோ கீழே
இருப்பதைப் போலத்தான்.

இ, ஈக்கு புது உருவம் கொடுத்தது போல
உ, ஊக்கும் புதுவடிவம் கொடுத்து இந்த
வரிவடிவச் சீரமைப்பு அவசியம் என்று
வலியுறுத்துகிறார் பொறிஞர் செ.குமார்.
இவை மட்டுமா உயிரெழுத்து வடிவ மாற்றங்கள்?
இதோ கீழே இருப்பவை பிற உயிரெழுத்துக்களின்
வடிவ மாற்றங்கள்.

இது எந்த எழுத்துக்களுக்கான புதிய வரிவடிவம்
என்று இக்கட்டுரையை படிப்பவர்கள்
கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு,
சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

ஒ, ஓ, ஒள ஆகியன கீழ்க்கண்டவாறு
காட்சியளிக்க வேண்டும். இப்படி இல்லாவிடில்
செம்மொழியான தமிழ்மொழி தமிழர்களின்
நாவில் இருந்தும் கைகளில் இருந்து
காணாது போய்விடும் என்ற அச்சத்தை
இம்முன்வைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

”ஐ” என்ற எழுத்துதான் கீழுள்ளவாறு மாற்றப்பட
வேண்டிய ஒன்றாகிறதாம்.

இவை மட்டுமா மாற்றத் துடிப்பவர்களின் மனவோட்டங்கள்?

தமிழ் மொழியில் ந, ன, ண என்று எதற்கு
மூன்று வகையான ஒலிகள்? ழ, ல, ள என்று
மூன்று ஒலிகள் எதற்கு? ர, ற என்ற இரு ஒலிகள் எதற்கு?
என்று ஆழ்ந்த புலமையோடு கேட்பதாய் எண்ணி
பலர் இவற்றைச் சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்கள், இப்படிக் குறைத்தால் 5 x 12 = 60
எழுத்துக்களைத் தமிழில் இருந்து குறைத்து
சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஐ = அய், ஒள = அவ்
அதனால் ஐயும் ஒளவும் தமிழி நெடுங்கணக்கில்
இருந்து நீக்கப்பட வேண்டியவை என்றும்
ஃ என்ற அஃகானை யாரும் அதிகமாகப்
பயன்படுத்துவதில்லை எனவே
கொசுறாக அதனையும் நீக்க வேண்டும்
எனவும் கொடிபிடிக்கின்ற மேதைகள் தமிழ் உலகில்
இன்று நிறைந்திருக்கிறார்கள்.

உகர ஊகார வரிசைகளுக்கு வா.செ.கு, கொடுமுடியார்
போன்றோர் சொல்வது போல புதுக்குறிகள்
போடக்கூடாது என்று, மிகுந்து போன தமிழ்ப்பற்றின்
காரணத்தால் தமிழெழுத்தான ”உ” என்ற எழுத்தையே
பயன்படுத்த வேண்டும் என்று எழுதுகிறது
மக்களோசை என்ற மலேசிய ஏடு.
அதன் கட்டுரையாளர் பரிந்துரைக்கும்
ஒரு எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு என்ற சொல்லை இப்படி எழுத வேண்டும்.
கூண்டு என்ற சொல்லை இப்படி எழுதவேண்டும். கூ என்ற
நெடிலுக்கு மறக்காம நெடில் ஊ போட்டுவிடுவது அவரின்
சீர்மையின் சிறப்பு.
உங்களுக்கு அறிவியல் தமிழில் பற்றிருந்தால்
சீதோண்ணத்திற்குப் போடும் திகிரி உருண்டையை
ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று அறிவியல் தமிழ்
வளர்க்கச் சொல்கிறார். அறிவியல் தமிழ் எப்படியெல்லாம்
வளர்க்கலாம் என்று அவரவர் வேறு இடம் கிடைக்காமல்
தங்கள் அறிவியல் திறனை தமிழ் எழுத்துக்களில்
பாய்ச்சுகிறார்கள் இன்று
இதுவரை வந்த எழுத்து வடிவ மாற்ற முன்வைப்புக்களில் மெய்யெழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 என்ற
19 எழுத்துக்களை ஏனோ தெரியவில்லை விட்டுவிட்டார்கள்
என்று வருந்தியோருக்கு ஆறுதலாக உகர ஊகார
உயிர்மெய்கள் எழுதுவதற்குக் குறியீடாக அந்த ஆய்தத்தையே போட்டுவிடலாம் என்பது அவர் முடிபு.

கீழே இரண்டு ஆய்தங்களைப் போட்டு நான்
எழுதியிருக்கிறேன். ஆனால் அவரின் முன்வைப்போ
தலைகீழாகப் போட்ட ஆய்தம். அதாவது தலைகீழாக
ஆய்தம் போட்டால் அது ஊகாரம். அப்படியே
நேராகப் போட்டால் அது உகரம்.

தலைகீழாக எப்படி ஆய்தத்தை எழுதுவது
என்று எனக்குத் தெரியாததால் நான்
இரண்டைப் போட்டிருக்கிறேன் என்றறிக


(மேலும் ஒரு பகுதி வரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, August 13, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-1

இன்றைக்கு இருக்கின்ற 247 தமிழ் எழுத்துக்களில்
239 எழுத்துக்களை மாற்றுவதற்கு நடக்கும்
பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்).

தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றி
உருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதி
தமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகை
தமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்
உண்டு. தீப்பெட்டிக்கு பெயர் ஒட்டும் தொழில்,
தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில்,
பீடி சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டு
பொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்று
உயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்
மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கை
குறைப்புத் தொழில் போன்று பல்வேறு கோணங்களில்
தமிழ் கூறும் மக்களிடையே புற்றீசல் போலத்
தோன்றியிருக்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில், தமிழ் எழுத பேசத்
தெரிந்தாலே எளிதில் தமிழ் அறிஞராகி
விடமுடிகின்ற சூழலும், எம்மெசு வேர்டு நிரலியில்
தமிழை எழுதவும் அட்டவணைகள் இடவும் தெரிந்து
விட்டால் அவர் கணிப்பேரறிஞராக
ஆகிவிட முடிகின்ற சூழலும் நிலவுவது இந்த
எழுத்துச் சீர்திருத்தத் தொழிலுக்கு மிகவும்
உதவியாக இருக்கிறது என்று சொன்னால்
மிகையல்ல.

என்ன இவன்? - எவ்வளவு பாடுபட்டுத் தமிழை
வளர்க்க முனைபவர்களின் செயலை
குடிசைத் தொழிலுக்கு ஒப்பிடுகிறானே என்று
எண்ணத் தோன்றும். 247 எழுத்துக்களில் 239
எழுத்துக்களை மாற்றத் துடிக்கின்ற பலரின்
கோணங்களையும் அவர்களின் ஆய்வுகளின்
அளவுகளையும் படிக்கும்போது குடிசைத்
தொழில்களுக்குத் தேவையான அடிப்படைச்
சிந்தனைகளைக் கூட எந்த ஒரு சீர்திருத்தத்
தாளும் கொண்டிருக்கவில்லை என்பதுவும்
வெற்று அட்டவணைகளால் நிரப்பப்பட்ட
இந்தத் தாள்களைச் செய்வதற்கும்
பீடி சுற்றுவதற்கும் பேரீச்சம்பழம் பொட்டலம்
கட்டுவதற்கும் செய்யும் வேலைக்கும்
எந்த வேறுபாடும் கிடையாது என்பதை
புரிந்து கொள்ள முடியும்.

(அதே வேளையில் எந்த ஒரு குடிசைத்
தொழிலையும் நான் இளக்காரம் செய்யவில்லை
என்பதனை வாசகர்களுக்குத் தெரிவித்துக்
கொள்கிறேன்.)

இதில் கொடுமை என்னெவென்றால் இவர்களின்
ஆராய்ச்சியற்ற எழுத்து வடிவ மாற்றங்களுக்குத்
தந்தை பெரியார் பெயரை, விளம்பரத்திற்குப்
பயன்படுத்துமாப் போல, பயன்படுத்துவதாகும்.

பெரியார் நேயர்களையும் சிந்தனையாளர்களையும்
பெரியார் பெயரைச் சொல்லி திசைதிருப்புவதே
இவர்களின் நோக்கமாக இருக்கின்றது. இதுபற்றி
விரிவாகப் பின்னர் காண்போம்.

தமிழ் எழுத்து வடிவத்தை ஏன் மாற்ற வேண்டும்,
அதற்கென்ன தேவை என்பதை வடிவமாற்ற
விரும்பிகள் ஒருவர் கூட நிறைவான
ஆராய்ச்சி செய்ததில்லை.

கற்பனைகளையும் கதைகளையும் சொல்கிறார்களே
தவிர இன்னது தேவை இன்னது சரவல்
இன்னது விளைவு இன்னது பயன் என்று
அறிவுசார் ஆராய்ச்சிகள் கொண்டாரில்லை.

இன்றைய நிலையில் தமிழ் உலகில் உலவுகின்ற
பல்வேறு வடிவ மாற்ற முனைவுகளின் தொகுப்பினை
இக்கட்டுரை (தொடர்) கொண்டுள்ளது.

இகர வரிசையில் செய்ய வேண்டிய வடிவ மாற்றத்தை எடுத்துரைக்கிறார் வா.செ.குழந்தைசாமி. மேலே படத்தில் இருப்பது போல வடிவ மாற்றம் செய்தால் குழந்தைகள் எளிதாகக் கல்வி கற்பர் என்கிறார். ஈகார வரிசைக்கும் இதே முறையில் வேறு ஒரு குறியை போட்டுவிடுகிறார் வா.செ.கு. கீழே காண்க.


என்ன இது? கி, கீ, நி, நீ எழுத்துக்களில் இருக்கும் துணைக் குறிகளை அப்படியே நகர்த்தி ஒரு மில்லி மீட்டர் தள்ளிப்போட்டுவிடுவது சீர்திருத்தமாகுமா? இதுதான் சீர்திருத்தம் என்றால் எவ்வளவோ செய்யலாமே,செய்து பெரியார் ஆகிவிடலாமே என்ற அவாவில் இன்றைக்குப் பலரும் இதனைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வியப்பு ஏற்படுவது தவிர்க்க ஏலாதது.
உகர வரிசையில் உள்ள எழுத்துக்களை இப்படி உடைத்து இரண்டு குறிகளாக்கிப் போட்டால் ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதுவாக இருக்கும் என்று சொல்கிறார் வா.செ.கு.ஊகார வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கும் அதே போல வேறு ஒரு துணைக்குறியீட்டைப் போட்டு எழுதினால் காலத்திற்குத் தக்க மாற்றம் செய்த பெருமை நம்மிடம் இருக்கும். இல்லாவிடில் தமிழே இல்லாமல் போய்விடும் என்று சொல்கிறார் வா.செ.கு.

(வா.செ.கு போன்று பலர் செய்ய முனையும் மாற்றங்கள், சிதைவுகளை வரும் கட்டுரைகளில் தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, May 18, 2010

உயர்ந்த தமிழ்ப்பணி: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குப் பாராட்டுக்கள்!

இணையத்தால் ஆக்கப்பட்ட உயர்ந்த தமிழ்ப்பணிகளில்
ஒன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தால்
16-மே-10 அன்று செய்யப்பட்டுள்ளது.


தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில்
சொல்லப்படுகின்ற சீரழிப்பை மறுத்து சிறப்பான
மாநாடு ஒன்றினை நடத்தி பலநாட்டினரையும்,
செய்தியாளர்களையும் இணைத்து
தமிழகத்தின் கவனத்தையும்
அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்த
புதுச்சேரி வலைப்பதிவர்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்களைத்
தெரிவித்துக் கொள்ள தமிழ் உலகம்
கடமைப்பட்டுள்ளது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றத்தில்
பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்
நடத்திய எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
மலேசியாவில் திரு.சுபநற்குணன் நடத்திய
எழுத்து மாற்ற மறுப்புக் கருத்தரங்கம்,
தமிழ்மணம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற
எழுத்து மாற்ற மறுப்பு விழிப்புணர்வு
ஆகியவற்றைத் தொடர்ந்து
புதுவையினர் ஆக்கிய இந்த மாநாடு
இணையத் தமிழ் உலகின் வீச்சினை
பல படிகள் உயர்த்திக் காட்டியுள்ளது.

வலைப்பதிவர்கள் பல நூறுகளாய்ப்
பெருகியிருக்கும் இணைய உலகின்
வலைப்பதிவர்கள் அடிக்கடிக் கூட்டுகின்ற
வலைப்பதிவர் சந்திப்பு தமிழ்ப்பணிக்காகவும்
நிறைய நிகழ்ந்து, தமிழ் மொழி சிதையாமல்
காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

மீண்டும் எனது நெஞ்சார்ந்த
பாராட்டுக்களையும் நன்றிகளையும்
நண்பர் திரு.இராச சுகுமாரனுக்கும்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தைச்
சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் உரித்தாக்குகிறேன்.

அவர்களின் தமிழ்ப்பணி மென்மேலும்
பெருகி உயர அனைவரும் வாழ்த்துவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, May 16, 2010

வஞ்சின விளக்கேற்றிக் காத்திருப்பேன்!

நெஞ்சில்
செஞ்சினம் சுமந்து

வஞ்சின
விளக்கேற்றிக்

காலத்தின் சுழற்சிக்குக்
காத்திருப்பேன்!

கருப்பு நாளல்ல

ஆரியமும் காந்தியமும்
ஆளுக்கொரு கையை
பின்னால் நின்று பிடித்துக் கொள்ள
சீனத்தின் சதிக்கண்கள்
சீரிளைமையில் குறிவைக்க
சிங்களத்தின் கத்தி பல
குத்திக் குத்திக் கிழிக்கின்றது அவளை
திராவிடத்தின்
உச்சிப் பொழுது உமிழ்கின்ற ஒளியில்.

காப்பியமாம் மணிமுடியும்
கலைந்து சரியச் சரிய
காலணிந்த சிலம்போடு
சங்கிலிகள் தளையத் தளைய
வளையாத வளையின்று
நெரிய நெரிய
நெற்றிச் சூடுமணி
எற்றி அலைய அலைய
சிந்தாமணிகள்
சிதறச் சிதற
சிந்துகின்ற குடர்க்கீழே
மேகலையோ மறைய மறைய

ஓலமிட்டுக் கதறுகிறாள்
ஓடிவரக் கூவுகிறாள்
நாதியில்லை நானிலத்தில்

பாரெங்கும் விண்ணெங்கும் பார்த்து நிற்கும்
ஊரெங்கும் பார்த்துப் பார்த்து அலறுகிறாள்
பேதையவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள்

சுற்றிச் சுற்றிச் சுழல்கின்றாள்
சுட்டுவிழி கொட்டக் கொட்டப்
பெற்றுவிட்ட பிள்ளைகளை
உற்று உற்றுப் பார்க்கின்றாள்.

ஓட்டைத் துலாவோடு ஊத்தை பேசும் பிள்ளைகள்
சாட்டையொன்றும் தருகின்ற தறிதலைப் பிள்ளைகள்
எந்தச் சாதிக்காரியோ ஏனிங்கு எனுங்கூட்டம்
எந்தன் மதம் இவளோவென்று எட்டிப் பார்க்க வருங்கூட்டம்
வெந்ததெல்லாம் தின்றலையும் வேடிக்கைப் பெருங்கூட்டம்
சிந்தையிலே மந்தி வளர் செந்தமிழர் இவரிங்கு
சந்தமொடு பேசிப் பேசி சாகசங்கள் செய்கின்றார்
பந்தமென படுபாவி இன்னுமவள் நினைக்கின்றாள்!

சொந்தப்பிள்ளை மந்தங்கண்டு அவளை மேலும்
சிந்தச் சிந்தக் குத்துதடி சிங்களமும்
கத்தி தீட்டித் தீட்டிக் கொடுக்குதடி காந்தியமும்
நித்தஞ் செத்துச் செத்துக் குறைகின்றாள் - மைந்தர்மேல்
பித்தம் மிகை வைத்துவிட்டப் பாவிமகள்;
பித்தர்களைப் பெற்றுவிட்டப் பெண்பாவி;
எத்தர்களை வார்த்ததனால் ஏங்கி ஏங்கி
நித்தமிவள் சாகின்றாள் பெயர் தமிழன்னை!
மொத்தமாகச் சாநாளும் ஆமாவோ? அம்மவோ
கருப்பு நாள் இல்லையடி சொல்வார்போல் - அந்த
இருண்ட காலமே மீண்டதடி! அண்டத்து
இருட்டையெல்லாம் திரட்டி வந்து சூழ்ந்ததடி!
இருள் சூழ்ந்ததடி! பேரிருள் சூழ்ந்ததடி!

------

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட என் குலத்திற்குக் கண்ணீர் அஞ்சலிகள்
...நாக.இளங்கோவன்

Saturday, May 15, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
16-05-2010 ஞாயிறு
காலை 10 முதல் மாலை 6 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................

தொடக்க நிகழ்வு
காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை

தலைமை"
திரு.இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வரவேற்பு:
திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள்,
திரட்டி

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:
முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்
திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

நூல் வெளியீடு:
தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?.
தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்

வெளியிடுபவர் :
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
முதல் படி பெறுபவர்
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம்,
(INFITT).

முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை
முதல் அமர்வு

தலைமை
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி
முன்னிலை:
திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள்
திரு ம.இளங்கோ, அவர்கள்
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,

கருத்துரை:
திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை,
முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள்
தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா,
திரு விருபா.குமரேசன் அவர்கள்
விருபா.காம், சென்னை
---------------------------------------------
உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------
பிற்பகல் அமர்வு
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை
தலைமை:
திரு.தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

முன்னிலை:
திரு.வீரமோகன் அவர்கள்
திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள்,
திரு.ஓவியர்,பா.மார்கண்டன் அவர்கள்

கருத்துரை:
பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,
வாட்டலூ பல்கலைக்கழகம். கனடா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா,
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி,
திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரி
திரு. கோ.தாமரைக்கோ அவர்கள்,
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்
தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
திரு. எழில் . இளங்கோ அவர்கள்
தமிழியக்கம், விழுப்புரம்,

நிறைவு நிகழ்வு
மாநாட்டு நிறைவுரை:
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

நன்றியுரை:
திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள்
புதுவை.காம்
----------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக
நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும்.
------------------------------------------
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasuguma...@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com
அனைவரும் வருக,

--

Saturday, April 24, 2010

சீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்!

கொளத்தூர் மணி அவர்கள் சரியாக ஈராண்டுக்கு முன்னர் சீமான் என்ற பெயர்
வடமொழிச் சொல் என்று கொளுத்திப் போட்டார். உடனே திராவிடப் பத்தர்கள்
அதனைப் பிடித்துக் கொண்டு தமிழ்ச் சொல் ஒன்றை வடமொழிக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கொளத்தூர் மணி அவர்களின் கருத்துக்கு எதிர்வினையாக
நான் அளித்த கீழ்க்கண்ட விளக்கம் அதிகாலை மின்னிதழிலும், கீற்று, பிரவாகம், தமிழ் உலகம், தமிழ் மன்றம் மடற்குழுக்களிலும் வந்தன.

சீமான் என்பது தமிழ்ச் சொல்லே!
சீ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இலக்கியங்களில்
நுண்ணிய பொருளில் பயிலும் ஒரு அருமையான சொல்.
அவற்றுள் "திரு" என்பதுவும் "தூய்மை ஆக்கல்" என்பதுவும் "கூராக்குதல்"
என்பதுவும் உண்டு.
============================
9. சீ cī : (page 1471)
தூயதாக்குதல். (சூடா.) 5. cf. siv. To sharpen; கூர்மையாகச் சீவுதல்.
கணிச்சிபோற் கோடு சீஇ (கலித். 101).
சீ&sup5; cī
, < šrī. n. 1. Lakṣmī; இலக்குமி. சீத னங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந்.
8). 2. Light, brilliancy; ஒளி. சீவனசத்துருச்
====================================பார்க்க - செ.ப.பே.அ
சீர், சீரங்கம், சீதனம், சீவகம் (சீ அகம்), சீதை, சீதம் போன்ற பல சொற்கள்
இன்றும் பெருவலமாகப் புழக்கத்தில் உள்ளன.
சீ என்ற எழுத்திற்கு நேர், கூர், தூய என்ற பொருள்கள் இருப்பதால்தான் சீதை
என்ற சொல்லுக்கு நேரானவள், நேர்மையானவள், உறுதியானவள் என்றெல்லாம்
பொருள்களுண்டு. தமிழில் இருந்து வடக்கே சென்ற சொற்களில் இதுவும் ஒன்று
என்று அறிஞர் சொல்லுவர். இந்தியில் சீதா என்றால் நேராக, நேரான என்று
பொருள்.
(அதுபோல சீதம் என்ற சொல் வடசொல் அல்ல. அது ஒரு அருமையான
தமிழ்ச் சொல். சீதம், சீம்பால், சீக்கை, சீசீ போன்ற சொற்களைத் தனியே எழுத
வேண்டும். )
மான் என்பது ஒரு உயர்தகையைக் குறிக்கும் பின்னொட்டுச் சொல். பெயர்
விகுதி என்றும் சொல்லுவர்.
பெருமான், அம்மான், எம்மான், அதியமான், தொண்டைமான், சேரமான்,
மலையமான், மருமான் போன்ற சொற்களில் பயிலும் மான் என்ற பின்னொட்டு
மிகத் தொன்மையானது.
மான் என்றால் மகன் என்ற பொருளும் உண்டு. (மலையாளிகள் மோன்,
மோனே என்று சொல்லுதல் நோக்கத்தக்கது)
==========================================
98. வேண்மான் vēṇ-māṉ : (page 3825)
அந்துவஞ் செள்ளை (பதிற்றுப். 9-ஆம் பதி.).
வேண்மான் vēṇ-māṉ
, n. < வேள் + மான்². Male member of Vēḷir-tribe; வேளிர் குலத்து மகன்.
நன்னன் வேண்மான் (அகநா. 97).
வேண vēṇa
==========================================செ.ப.பே.அ
ஆகவே, சீமான் என்றால்
நேர்மையானவன், தூய்மையானவன், உயர்ந்த குடிமகன், ஈரநெஞ்சினன்
நன்மகன் என்ற அருமையான பொருள்களே கிடைக்கின்றன. இன்னும் பொருத்தமாகச்
சொல்லவேண்டுமானால் "திருமகன்" என்பது சரியான பொருளாக இருக்கும்
ஆகவே, சீமான் என்பது எளிமையான உயர்ந்த தமிழ்ச் சொல்லன்றி வடமொழிச் சொல் இல்லவே
இல்லை. உயர்ந்த பணிகள் செய்யும் மதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்கள்
இச்சொல்லை வடமொழி என்று சொல்வதற்குத் திராவிட பக்தி காரணமாகிவிடக் கூடாது. "சீ"
சிறீயாக விட்டு விட்டுப்
பின்னர் சீ என்று புழங்குதலை வடசொல் என்றால் யாருக்கு இழப்பு?
அன்புடன்
நாக.இளங்கோவன்
=======================================================================================
இந்த உரையாடலை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.

திராவிடம் எதை எடுத்தாலும் வடமொழி வடமொழி என்று தமிழ்ச்சொற்களையும் வடமொழிக்கு வாரிக் கொடுத்தது வரலாறு. அப்படி வாரிக்கொடுத்தத் தமிழ்ச்சொற்களையும் மீட்டெடுக்க வேண்டிய கடமை தமிழர்க்கு உண்டு.

அன்புடன்
நாக.இளங்கோவன்




Wednesday, April 21, 2010

பாரதிதாசன் வாரம் - 2010

ஏட்டுக்குள் எழுதிவைக்க எத்தனையோ தானிருந்தும் - உன்
பாட்டுப் பரம்பரையே பல்லுடைந்து நிற்குதப்பா!
பல்லுடைந்து நிற்கையிலே பாவேந்த உனைப்பாட - என்
சொல்தளர்ந்து போவதைநான் என்னெவென்று சொல்வேனோ?
சொல்லியழ சொல்லில்லை சொல்லுவதும் ஆருக்கு? - உன்
முல்லைநிகர் முகமதியை முனையளவும் மறக்கவில்லை!
மறந்திட்டேன் நீசுமந்த திரவிடத்தை; நீயிருந்தால் - என்
துறப்பை எப்போதோ செய்திருப்பாய்!; தமிழானேன்!
தமிழிழந்த தமிழாளர் தமிழாகித் தமிழ்வாழ, - உன்
தமிழீழந் தமிழாளும் தமிழ்நாளும் எந்நாளோ?
எந்நாளும் ஏந்திடுவேன் ஏய்ப்பறியா தமிழ்நெஞ்சே, - என்
பொன்னான போராளி, போற்றுகின்றேன் பூதூவி!

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-04-2010

Thursday, March 18, 2010

எழுத்துச் சீர்திருத்த மறுப்பு: தமிழ்மணத்திற்குப் பாரட்டுகள்! வாழிய!

தமிழி எழுத்துக்களின் வடிவங்களை மாற்றி அதனைச்
சீர்திருத்தம் என்று சொல்லும் நிலை தமிழ் அறிஞர்
உலகில் ஏற்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விதயம்.

காலங் கருதி அதில் தனது நிலைப்பாட்டைத்
தெளிவுறச் சொல்லியிருக்கும் தமிழ்மணத்தார்க்கு
என் மனமார்ந்த பாராட்டுகள்.

தமிழ்மணம் நண்பர்களே,
எனக்கு "இரட்டை" மகிழ்ச்சி.

தமிழ்மணம் வாசிக்கத் தந்த சுட்டிகளில் விட்டுப்போன
ஒன்று. இதனையும் வாசியுங்கள்.

பேராசிரியர் செல்வாவின், எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html
அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, March 06, 2010

எழுத்துச் சீர்திருத்தம்: இரா.இளங்குமரனார் கடும் கண்டனம்

மலேசியாவில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் நிகழ்ந்த கூட்டத்தில்முதுபெரும் தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார் எழுத்துச் சீர்திருத்தமுன்வைப்புகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் படிக்க: http://thirutamil.blogspot.com/2010/03/blog-post_06.html

Thursday, March 04, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

4 நிறைவு:

4.1: கணிநுட்பம் கைவந்தபிறகு, தனித்தன்மை நிறைந்த தமிழ் எழுத்துகளில் இன்றல்ல, இனி என்றுமே கை வைப்பது சரியல்ல. அது மொழியை மட்டுமல்லாது, குடியின் கட்டமைப்பையே கெடுத்துவிடும்.

4.2: இத்தாலியினின்று இங்கு வந்து, குறுகிய காலத்தில் தமிழ் கற்று அறிஞராகிய வீரமாமுனிவர் உரைத்த சீர்திருத்தத்தின் தாக்கம் 6-7% அளவே ஆதலால் பெரும் பாதிப்பு இல்லாது போனது.

4.3: 1978ல் பெரியார் செய்த சீர்திருத்தம் 4% அளவிற்கே தமிழ்ச்சொற்களில் மாற்றம் விளைத்தது. அந்த மாற்றத்தினால் கல்வி கற்பதில் முன்னேற்றம், குழந்தைகட்கு நேரம் மிச்சமாகிறது என்று யாரும் கூறியதில்லை. கணியால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பெரியார் காலத்தில் இருந்திருந்தால் எழுத்துச் சீர்திருத்தம் வந்தேயிருக்காது. குழந்தைகளுக்கு, அறிவியலின் துணை கொண்டு, மேலான முறையில் தமிழ் கற்றுக் கொடுப்பதைக் குறிக்கோளாய்ப் பெரியார் கொண்டிருப்பார்.

4.4: முன்னே தமிழ் எழுத்துகளில் கைவைத்து விளைந்தனவெல்லாம் தமிழ்க்கல்விக்கும், பிள்ளைகளுக்கும், அறிவியலுக்கும் எந்த பங்களிப்பையும் செய்து விடவில்லை. தற்போது முன்வைக்கப் பட்டிருக்கும் சீர்திருத்தமும் அது போன்றதே. இந்த வடிவ மாற்றங்கள், அறிவியல் வகையாலோ, ஏரண வகையாலோ, குமுக வகையாலோ, குழந்தைக் கல்வி மேம்பாட்டு வகையாலோ, ஆசிரியர் மேம்பாட்டு வகையாலோ, மெய்யியல் வகையாலோ, கணி வகையாலோ, சிறிதும் ஆராய்ச்சி அடிப்படையற்றன. இந்தச் சீர்திருத்தத்தால், தமிழுக்கு இழப்பு வரும் வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.

4.5.: குழந்தைகளுக்கும், புலம்பெயர்ந்த தலைமுறைகளுக்கும் தமிழ்கற்பிக்க ஏதுவாக, ”கற்பித்தலில் பிழையா? கற்றுக் கொள்வதில் பிழையா?” என்று முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கற்பித்தலில் உள்ள பிழைகளைப் புறந்தள்ளி, எழுத்து வடிவ மாற்றம் செய்யப் புகுவது, “பச்சைப் பிள்ளைகளின் மேல் பழிபோடும் செயலாகும்”. வள்ளுவனாரின் “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற மொழியை உணர்ந்து குழந்தைகளின் தமிழ்க்கல்வியைச் சரிசெய்ய வேண்டும்.

4.6: தமிழீழம், சிங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, பிரெஞ்சு, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் வாழ்வோரின் தமிழ்ப்படிப்பிற்கு தமிழக மொழியுலகம் வேராக இருப்பது உண்மையானால், தமிழகத்தை விட பன்மடங்கு நாகரிகத்திலும், அறிவியலிலும் உயர்ந்திருக்கும் அந்த நாடுகளின் தன்மைகளை உணர்ந்து அங்கு வாழும் தமிழர் எதிர்பார்க்கின்ற தரத்தின் அடிப்படையில், மொழி கற்றலையும் பயன்பாடும் திட்டமிட்டுச் செய்யப்படவேண்டுமே தவிர, மேலோட்டமான கருத்துகளை உலகம் முழுதும் புகுத்தி உலகத் தமிழரின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து தமிழகம் பேரெடுத்துவிட முடியாது.

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.”

ஆதாரங்கள்:

1) தமிழ் வரிவடிவச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
2) தமிழ் எழுத்துச் சீரமைப்பு --- பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
3) தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் --- முனைவர் கொடுமுடி சண்முகன் http://infitt.org/ti2000/papers/papersA.pdf (2000ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
4) Tholkaapiyam Reviewed --- முனைவர் கொடுமுடி சண்முகமன் http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf (2003ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப் பட்டது)
5) உரோமன் எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html
http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html)
6) அரபி எழுத்து ஒழுங்கு: (எழுத்துக்களின் உயரவேறுபாடு)
http://www.guidedways.com/lessons/unit1_writing.php
7) தொல்காப்பியமும் குறியேற்றங்களும் - முனைவர் இராம.கிருட்டிணன்
http://valavu.blogspot.com/2006/11/5.html
http://valavu.blogspot.com/2006/11/6.html
http://valavu.blogspot.com/2006/12/7.html
8) Digital South Asia Library: Tamil Lexicon -- University of Madras http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex
9) தமிழ் இணையப் பல்கலைக்கழகம்:
http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm
10) தமிழ் எழுத்துமுறை: தமிழ் விக்கிப்பீடியா: தமிழ் எழுத்துமுறை">http://ta.wikipedia.org/wiki/தமிழ் எழுத்துமுறை
11) மொழி கற்றல்: ஆங்கில விக்கிப்பீடியா http://en.wikipedia.org/wiki/Language_acquisition
12) நன்னூல் இலக்கணம்
13) தொல்காப்பியம்
14) தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் [The Tamil Alphabet: Its Mystic Aspect] -- பொறிஞர் பா.வே.மாணிக்க நாயகர், (கழக வெளியீடு)
15) அமெரிக்கக் கல்வித் துறை -- http://www.ed.gov/
16) தமிழக அரசின் 2007 ஆம் ஆண்டின் கல்வித் திட்ட அறிவுறுத்தல்
17) தமிழக அரசு பாட நூல் நிறுவனத்தின் ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்: http://www.textbooksonline.tn.nic.in/Books/01/Tamil/Front%20Pages%20&%20Contents.pdf

பின்-இணைப்பு-1:

தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு வழங்கிய பாடத் திட்டம், கல்வி நேரத் திட்டம் ஆகியவை உள்ளடக்கிய அறிவுறுத்து நூலின் ஒரு பக்கம்:



பாரதிதாசன் பல்கலையில் வழங்கிய இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.
=====================================================================

இக்கட்டுரை எழுத்துச் சீர்திருத்த மறுப்பின் முதல்பாகம்.
சின்னாட்களில் இரண்டாவது பாகம் வெளிவரும்.
படித்தோர்களுக்கும் பின்னூட்டு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html

பகுதி-11: http://nayanam.blogspot.com/2010/03/1112.html

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

3.1 எழுத்து வடிவம் மாறினால் தமிழ் எப்படியிருக்கும்?

தமிழ் மொழியின் திருவே கெட்டழியும் காட்சியைக் காணுக. ஊர், பேர், பண்பாட்டுத் தொன்மங்கள் என்ற அனைத்தும் சீரழிவதைக் காணுக! இது சீர்திருத்தமா? சீரழிப்பா?
(படத்தின் மேல் மூசியை வைத்துச் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்ம்)




(அடுத்த பகுதியொடு நிறைவுறும்)
முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html

பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-போஸ்ட்.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html

பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html

பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html

பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html

பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html

பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html

பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

பகுதி-௧0: http://nayanam.blogspot.com/2010/03/1012.html

அன்புடன்

நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

3 எழுத்துவடிவ மாற்றத்தின் பின்விளைவுகள்

1) 20 ஆம் நூற்றாண்டின் துவக்கில் தமிழரில் படிப்போர் தொகை 2 விழுக்காடு அளவிலேயே இருந்த நிலை, 21ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் ஏறத்தாழ 80 விழுக்காடாகியிருக்கிறது. தமிழ்மக்கள் தொகையும் பெருகியிருக்கிறது. ஆகவே மொழியின் பயன்பாடும் கடலெனப் பெருகி இருக்கிறது. அதில் 59 விழுக்காட்டுச் சொற்களை மாற்றினால் குழப்பம் பெருகி தமிழ் மொழியின் தரமும், வளர்ச்சியும் குன்றிப்போகும்.

2) இந்த மாற்றத்தைக் கற்பிக்கப் போகும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தலே மிகப் பெரிய இடையூறாகும். கொடுமுடியாரே, தனது நண்பரான கவிஞருக்கு இம்மாற்றம் பிடிபடவில்லை என்று எழுதியிருக்கிறார். பின்னை எங்ஙனம் ஆசிரியர்கள் தரமாக மாணாக்கருக்கு எடுத்துச் செல்வர்? அஃதன்றி, தற்போது 50 நாடுகளில் பரவியிருக்கும் தமிழர்களுக்கெல்லாம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு இந்தளவு மாற்றத்தினை எங்ஙனம் கற்பிப்பது? தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரியருக்குக் கற்பித்தால் போதுமா? வளமான தமிழ்கற்பித்தலுக்கு வழிகுறைந்த வேளையிலே இம்மாற்றம் உலகளாவினால் தமிழ் குன்றிப்போகும் அன்றி பெருகாது.

3) “மாற்றம் என்பதே மாறாதது” என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், எவ்வகைப் பலனையும் தர வாய்ப்பில்லாத இந்த எழுத்துவடிவ மாற்றத்தினால் பயனில்லை. மாற்றம் என்பது வலிந்து திணிப்பதாய் இருக்கக்கூடாது. அஃது தாய்மொழி வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

4) தாய்மொழி எழுத்துகளைப் பிற நாடுகளில், பிற மாநிலங்களில் மாற்றியிருக்கிறார்கள் என்ற காரணத்தால் நாமும் செய்யலாம் என்பது பிழையான பார்வை. சீன, யப்பானிய எழுத்துச் சீரமைப்புகளை இம்மாற்றத்தோடு ஒப்பிடவே முடியாது. சீனம் பெருநாடாக 100 கோடி மக்களோடு கட்டி எழுப்பப்பட்ட முறையும் காலமும் அங்கே நிகழ்ந்த குமுக மாற்றத்தோடு ஒட்டி எழுந்த எழுத்துச் சீரமைப்பை, அப்படியே தமிழிற் செய்யவேண்டிய தேவை இல்லவேயில்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள சீன மொழியை, 247 எழுத்துகளைக் கொண்ட தமிழோடு பொருத்திப் பார்த்துச் செயற்படுவது தவறு. அதே நேரத்தில், சீனா செய்த முதற்சீரமைப்புக்குப் பின், கொஞ்ச காலம் கழிந்து, மீண்டும் இன்னொரு சீரமைப்பை சீர்மையாளர் முன்வைத்த போது சீன அரசு தயங்கியதை நினைவு கொள்ளவேண்டும்.
முதல் சீரமைப்பைத் தீவிரமாக நடைப்படுத்தி வெற்றிகண்ட சீன அரசு, இரண்டாம் சீரமைப்பை ஏற்காது, “மொழி விதயத்தில் எச்சரிக்கை” என்றே முடிவெடுத்தது. அதாவது மாற்றம் நாடும் பொதுவுடைமைச் சீனம் கூட, ”எடுத்ததையெல்லாம் மாற்ற ஓடவில்லை.” ”தேவையானால் மாற்றம். இல்லையேல் வலிந்து திணிக்க மாட்டோம்” என்பதை சீனா உணர்ந்திருந்தது.

5) ”உலகம், அறிவியல், கணி, குழந்தை” என்ற கோணங்களில் எழுத்து மாற்றத்தை தமிழிக்குள் வலிந்து ஒருசிலர் திணிப்பது பொருத்தமேயல்ல, அது மிகையாய்ச் செயற்படுதலாகும் (Over enthusiastic).
பெரியாரைக் காட்டி வடிவமாற்றம் செய்யாமல், சீன அரசின் நிதானத்தைப் பின்பற்றி மாற்றத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமேயன்றி, சீனாவை மேற்கோள்காட்டி இதை இன்னும் மேலெடுப்பது ஆபத்தாகும்.

6) மலையாள மொழி ஒரு தமிழிய மொழிதான். நமக்கும் அவர்களுக்கும் உறவு உள்ளது தான். ஆனாலும், அங்கு உள்ள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களின் வழிப்பட்டவை. கிரந்தத்தின் அடிப்படை பெருமி எழுத்தைச் சார்ந்ததாகும். அங்கு நடந்த மாற்றம் அப்படியே தமிழுக்கு கைக்கொள்ளத் தகுந்ததன்று. அதோடு அங்கு எழுத்துமாற்றம் வந்தது நமக்குப் பெரியார் சீர்திருத்தம் ஏற்பட்டது போல், கணிநுட்பம் இல்லாத காலத்தில் ஆகும். இப்பொழுதோ, எதையும் செய்யக் கூடிய கணிநுட்பம் பழகும் காலத்தில் மலையாளச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் கொள்ளுவது சரியல்ல. தேவையான பொழுது மலையாள, வடமொழிகள் பால் பிணக்குச் சேர்ப்பதும், பின்னர் அவற்றை முன்மாதிரியாய் தமிழுலகம் எடுத்துக் கொள்வதும் தமிழருக்குப் பெருமை சேர்ப்பனவல்ல.

7) இம்மாற்றத்தினால் தாக்கமுறுவது ”மொழியியல், தமிழில் இருக்கும் அறிவியல் நூல்கள், படிப்பு, செய்தி ஏடுகள், இதழ்கள்” ஆகிய பல்வேறு துறைகள் ஆகும்., தவிர,
ஈழம், சிங்கை, மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் அலைபட்டுப் போவார்கள். காட்டாக, சிங்கப்பூரின் நாணயத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்ச்சொல்/எழுத்தின் வடிவம் மாற்ற வேண்டியிருக்கும்..

8) அறிவியல், நுட்பியல் வளர்ச்சிக்கு இப்பொழுது முன்வைக்கும் எழுத்து வடிவ மாற்றம் உதவும் என்பது நகைப்புக்குரியதாகும். அறிவியலும், நுட்பியலும் தமிழில் சொல்லித்தரும் கல்வித் திட்டம் இன்று இல்லை. அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கற்பவர்களின் நூல்களைத் தவிர அறிவியற் கல்லூரிகளிலோ, ஆய்வுப் படிப்புகளிலோ, நுட்பியல், பொறியியற் படிப்புகளிலோ, அவற்றைப் படித்துப் பணிசெய்யும் தொழிலகங்கள், ஆய்வுக் கூடங்கள், வங்கிகள், நிதித்துறைகள், சொவ்வறைக்கூடங்கள், கணிச்சாலைகள் என எவற்றிலுமோ, தமிழ் இன்று இல்லை. தமிழில் நிறுவன நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பும் திட்டமும் கூட தமிழ்நாட்டில் இல்லை. இல்லாத ஒன்றை வளர்க்க எழுத்துவடிவ மாற்றம் தேவை என்பது, “ஆளே இல்லாத் தேனீர்க்கடையில் யாருக்கு தேனீர் ஆற்றுகிறோம்?” என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகையாடலையே நினைவூட்டுகிறது.

9) சிலர் இணைய வளர்ச்சி பெருகிவருகிறது, எனவே எழுத்துமாற்றம் தேவை என்பர். இதுவும் ஒரு வெற்றுவாதமாகும். இணையத்தை வளர்க்கும் நுட்பங்கள், முழுக்க முழுக்க பிற நாட்டினர் உருவாக்கியதாகும். தமிழ் மொழிக்கு என்று ஒருசிலர் உருவாக்கிய எழுத்துருக்கள், உள்ளீட்டு நிரல்கள், திரட்டிச் செயற்பாடுகள் தவிர, இணையத்தைச் செவ்வனே பயன்படுத்தும் சில படியாக்கச் சொவ்வறைகளைத் (application softwares) தவிர இணைய நுட்ப வளர்ச்சியில் யாரும் தமிழ்வழி செயலாற்றவில்லை. எழுத்துருவாக்கம், அதையொட்டிய சொவ்வறைகள், வெறும் 50 வெள்ளிச் செலவில் இணையத்தில் பல நூறுகள் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் எல்லாம் நம்மைப் போன்றோரே,
வெறுமே வலைப் பக்கங்களையும், இணைய தளங்களையும் உருவாக்கிவிட்டு, அவற்றில் கதை, கவிதை, துணுக்குகள், செய்திகள், திரைப்படக் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றிவிடுவதால் தமிழிணையம் என்பது ”ஏதோவொரு மாபெரும் தமிழறிவியல்” என்று கருதுதலும், தமிழால் உருவாக்கப் பட்டது என்று சொல்லிக் கொள்ளுதலும் பிழையான கருத்தாக்கமாகும்.. எழுத்து மாற்றம் பெற்றால் இணையத்தில் தமிழ் எங்கோ போய்விடும் என்பது நாமே நம் காதில் பூச்சுற்றுவதாகும்।

(தொடரும்)
முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:http://nayanam।blogspot.com/2010/02/blog-post.html
பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html
பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html
பகுதி-५: http://nayanam.blogspot.com/2010/02/5.html
பகுதி-६:http://nayanam.blogspot.com/2010/03/6_01.html
பகுதி-7: http://nayanam.blogspot.com/2010/03/7.html
பகுதி-8: http://nayanam.blogspot.com/2010/03/8.html
பகுதி-௯:http://nayanam.blogspot.com/2010/03/9.html

அன்புடன்
நாக.இளங்கோவன்